• திருவாசகத்தில் இளையராஜாவின் குரல்

    by  • July 20, 2005 • இசை • 25 Comments

    இளையராஜா இசையமைத்த திருவாசகத்திற்கு அவர் குரல் பொருந்தியிருக்கிறதா என்பது தீவிரமாக விவாதிக்கப்பட்டுவரும் இன்னொரு விஷயம். நான் முதல் இரண்டு தடவைகள் கேட்டுவிட்டு அவர் குரலை இந்த இசைத்தொகுப்பின் குறைபாடாகச் சொல்லியிருந்தேன். இப்பொழுது இன்னும் பலதடவைகள் கேட்டும் அதே எண்ணம்தான் இருக்கிறது. கட்டாயமாக இந்தப் பாடல்களில் பல இடங்களில் இளையராஜாவின் குரல் ஒத்துழைக்கவில்லை. ஒரு சிலரைப்போல நான் இளையராஜாவின் குரலை வெறுப்பவனல்லன்; ஆராதிப்பவன். சில பாடல்களை இளையராஜாவைத் தவிர வேறு யாராலும் அப்படிப் பாடியிருக்க முடியாது என்பது எ.தா.அ. இதற்கு உச்சகட்ட உதாரணமாக நான் அவதாரம் படத்தின் பாடல்களைச் சொல்லுவேன். சந்திரரும் சூரியரும், அரிதாரத்தப் பூசிக்கொள்ள, தென்றல்வந்து பாடல்கள் ஒவ்வொன்றிலும் இளையராஜா சிகரங்களை எட்டியிருப்பார். அவதாரத்தில் எல்லா பாடல்களையும் இளையராஜாவே பாடியிருப்பதில் எனக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. இதேபோல நான் அவருடை ஆரம்பகால சாமக்கோழி கூவுதம்மா, என்ன பாட்டு பாட, போன்று பல பாடல்களை உதாரணம் காட்டமுடியும்.

    ஆனால், இளையராஜாவின் படைப்பு அவருக்குத்தான் தெரியும், அவரைத் தவிர வேறு யாரலும் முடியாது, போன்ற முன்முடிபுகள் இல்லாமல் திறந்த மனதுடன் இந்தப் பாடல்களைக் கேட்டால் குரல் ஏமாற்றமாகத்தான் இருக்கிறது. அருள் சொன்ன

    ராஜாவின் குரல் பற்றி. முதலில் இந்தப்பாடல்களையெல்லாம் பாட தமிழை தமிழாக உச்சரிக்க வேண்டும். சமஸ்கிருதம் போலவோ, தெலுங்கு போலவோ உச்சரித்தால் நான் கேட்கப்போவதில்லை. இளையராஜா போதும். அப்புறம் பாவம் வேண்டும். இது இரண்டிலும் மற்றவர்களுக்கு ராஜா எவ்வளவோ மேல். யாராவது ஓதுவார்கள் இன்னும் மிச்சம் இருந்தால் அவர்களும் சரியாக இருக்கலாம். மஹாராஜபுரம் சந்தானம் இருந்தால் அவர் வேண்டுமானால் பொருந்தலாம். மற்றவர்கள் மேல் எனக்கு நம்பிக்கையில்லை.

    என்ற கருத்துடன் நான் முழுவதும் வேறுபடுகிறேன். தமிழைச் சரியாக உச்சரிப்பது ஒன்றுதான் இந்த இசைமுயற்சியின் குரலுக்குத் தேவையான ஒன்று (மற்றதெல்லாம் அப்புறம்தான்) என்று சொல்வது வியப்பாக இருக்கிறது. எப்பொழுது இது “மேற்கத்திய இசை அடிப்படையிலான திருவாசக முயற்சி ” என்று வரையறுக்கப்பட்டதோ அப்பொழுதே இதில் இசை முதல் முக்கியத்துவம் என்றானது. உண்மையில் இது மேற்கத்திய இசையைத் திருவாசகத்திற்குக் கொண்டுவந்து நம் மக்களுக்கு மேற்கத்திய இசையை அறிமுகப்படுத்தும் உத்தியாகத்தான் நான் அறிகிறேன். மேற்கத்திய இசையின் வீச்சைத் திருவாசகத்தின் ஆழத்திற்குப் பொருத்தி நம் மக்களுக்குத் தருவது. இதன் மறுதலையாக திருவாசகத்தின் ஆழத்தை அவர்களுக்குப் பரிச்சயமான இசைவடிவத்தில் உலகிற்கு எடுத்துச் செல்வதென்றால் கட்டாயமாக இந்த முயற்சி தமிழில் மேற்கொள்ளப்பட்டிருக்காது. மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கிலத்திலோ, ஜெர்மனிலோதான் செய்யப்பட்டிருக்கும். எனவே இசைதான் இங்கே முக்கியம், எனவே பிசிறில்லாத (இதுவரை யாரும் இளையராஜாவின் குரல் இங்கே அப்பழுக்கற்றதாக இருக்கிறது என்று சொல்லவில்லை, எல்லோரும் அதன் எல்லைகளை ஒத்துக்கொள்கிறார்கள்) குரலுக்கு நல்ல தமிழைச் சொல்லிக்கொடுத்து அழைத்து வந்திருக்கலாம்.

    இளையராஜாவைத் தவிர வேறு யாருக்கும் தமிழ் வராது என்று சொல்வது அதீதம். தமிழைத் துல்லியமாக உச்சரிக்கும் பல நல்ல பாடகர்கள் இருக்கிறார்கள். இன்னும் தமிழைத் துல்லியமாக உச்சரிக்காத (அது வணிகக் கட்டுப்பாடாக அமைந்த்போனதால்) சங்கர் மகாதேவன் போன்ற செவ்வியல் இசைப்ப்யிற்சி கொண்ட பாடகர்களைக்கூட கொஞ்சம் “பெண்டு நிமிர்த்தி” பாடவைக்க முடியும். என்னைப் பொருத்தவரை குரல் வளம்தான் முதல் தகுதி, பாடலுக்குத் தேவையான உச்சரிப்பை மாத்திரம் தீவிரப் பயிற்சியுடன் நல்ல பாடகருக்குப் புகட்ட முடியும். மாறாக மேலெழும்பாத குரலை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது.

    அப்புறம் ஸ்கேல், பிட்ச் எல்லாம் மேற்கத்திய சங்கீதத்துக்கு ரொம்ப அவசியம்தான். ஆனால் நம் கர்நாடக சங்கீதக்காரர்களுக்கு ஆர்க்கஸ்ற்றாவில் பாட தேவையான வாய்ஸ் கல்ச்சர் இருக்கிறதா? அவர்கள் நாட்டில் போய் தப்பான ஸ்கேலில் பாடி பாமரனாக காட்சியளிப்பதற்கு இளையராஜா முட்டாளா என்ன? மற்றவர்கள் பாடினால் பெரிதாக வித்தியாசம் இருக்காது என்றே அவர் நினைத்திருக்கலாம்.

    அருள் – சில இடங்களில் இளையராஜா அபஸ்வரத்தில்தான் பாடியிருக்கிறார். உம்பர்கட்கரசே பாடலைப் பொறுமையாகக் கேட்டுப் பாருங்கள். இதில்தான் நிறைய அபஸ்வரங்கள் வருகின்றன.

    கட்டாயமாக இளையராஜா முட்டாள் இல்லை. ஆனால் தீர்ந்த முன்முடிபுடன் நான்தான் பாடப் போகிறேன் என்று வைத்துக் கொண்டு, அவ்வப்பொழுது ட்யூன் போடும்பொழுது கூடவே பாடிப்பார்த்துக் கொண்டு தன் குரல் மேலெழும்பாத சமயங்களில் ஸ்கேலைத் தாழ்த்தியிருப்பார் என்றுதான் தோன்றுகிறது. இல்லையென்றால் கட்டாயமாக பல இடங்களில் உச்சத்திற்குச் செல்ல வேண்டிய பொழுது மத்யஸ்தாயியில் குரலும் அத்துடன் ஸ்கேல் பொருந்திவரும் இசையும் இருந்திருக்காது. மாறாக, இதில் இசைக்கு முக்கியவத்துவம் கொடுத்து தன்னுடைய ஸ்கோரை அவர் எழுதிவிட்டு, இந்த இடத்தில் நமக்குச் சரிவ்ராது என்று இன்னொருவரைப் பிடித்துப் போட்டிருந்தால் பாடல்கள் இன்னும் பிரமாதமாக வந்திருக்கும் என்பது எ.தா.அ.

    முழுப்பாடலையும் (குறிப்பாகப் ‘பொல்லா வினையேன்’) தானே பாடாமல் இன்னும் ஒன்றிரண்டு பாடகர்களுடன் இணைந்து பாடியிருந்தால்கூட இன்னும் கொஞ்சம் உயர்வாக இருக்கும் என்பது என் நம்பிக்கை. ‘உம்பர்கட்கரசே’ வேறு யாராவது பாடியிருக்க வேண்டும்.

    * * *

    முக்கியமான விஷயம். இது துவக்கம்தான். இதே திருவாசகப் பாடல்களை வருங்காலத்தில் அவர் பிற சிம்பொனி ஆர்கெஸ்ட்ராக்களுடன் பாட வேண்டும். (அல்லது பிற சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ராக்கள் இதை இசைக்க வேண்டும்). அண்டானின் த்வோரக் (Antonin Dvorak) -ன் Rusalka வை ப்ராஹ் பில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ரா விஸ்தாரமாக இசைத்துக் கேட்டிருக்கிறேன். அதே ருஸால்காவை நியூயார்க் பில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ரா இசைத்துக் கேட்டிருக்கிறேன். இரண்டுக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் இருக்கும். வெவ்வேறு கண்டக்ட்ர்கள் அதன் பல பரிமாணங்களை வெளிக் கொணருவார்கள். அதே போல இதுபோன்ற விஸ்தாரமான இசை முயற்சிகள் பல வடிவங்களில் மறு உருவாக்கம் செய்யப்பட வேண்டும். அந்த சமயத்தில் இதுபோன்ற நம்முடைய “இப்படி இருந்திருக்கலாம், அவர் பாடியிருக்கலாம்” போன்றவற்றுக்கு விடை கிடைக்கும். அதுவரை “இது ஒன்றுதான் குரல் இதுதான் இந்த இசைத் தொகுப்பின் ஜீவன்” என்று சொல்பவர்களும் “குரல் சில நேரங்களில் தகராறு செய்கிறது” என்று சொல்பவர்களும் ரத்தம் சிந்தாமல் சமர்த்தாக அட்டைக்கத்தி சண்டை போட்டுக் கொண்டிருக்கலாம்.

    * * *

    இளையராஜாவின் இந்த இசைத் தொகுப்பை விமர்சனக் கண்ணோட்டத்தில் அணுகுவது மிகவும் கஷ்டம். ஏனென்றால் இது முழுக்க முழுக்க மேற்கத்திய செவ்வியல் இசை அல்ல. இது மேற்கத்திய செவ்வியல், கர்நாடக சங்கீதம், திராவிட நாட்டார் இசை கூடவே நம்பிக்கையுள்ள ஒருவரின் ஆத்மார்த்தமான பக்தி முயற்சி, போன்றவற்றின் கலவை. இது வடிவங்களைக் கடந்த முயற்சி. இதை இப்பொழுதைக்கு உணர்வுபூர்வமாக அணுகி “நல்லா இருக்கு” “இல்லை” என்றுதான் மொன்னையாகக் கருத்துச் சொல்ல முடியும்.

    இசைப்பண்டிதர்களைப் பற்றி பலரும் சடாரென போகிற போக்கில் வேடிக்கையாகச் சொல்லிவிட்டுப் போகலாம். ஆனால் அந்த இசைப் பண்டிதர்கள் இதை அக்குவேறு ஆணிவேறாக அலச வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன். அப்பொழுதுதான் இது நமக்கேயான இந்த நூற்றாண்டின் புதிய இசைவடிவமாக பலமான அஸ்திவாரத்துடன் முன்னெடுத்துச் செல்லமுடியும். இல்லையென்றால் இதுபோன்ற மிகச் சிக்கலான ஆழ்ந்த இசை முயற்சிகள் நேர்மையாக எதிர்கொள்ளப்படாமல் ‘காற்றடித்து தென்னம்பழம்’ விழும் ஒற்றை நிகழ்வாக மறக்கப்பட்டுப் போய்விடும். எனவே இதைப் பலரும் பல விதமான கண்ணோட்டத்துடன் அனுக வேண்டும் என்பது என் ஆசை.

    (தொடர்ந்து வரும்)

    25 Responses to திருவாசகத்தில் இளையராஜாவின் குரல்

    1. karthikramas
      July 20, 2005 at 11:00 am

      நிறைய விசயங்களில், இருவரும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரி எழுதியிருப்பது(அருளின் பின்னூட்டத்தில் எழுதியுள்ளேன்) ஆச்சரியம்தான். (இதுலயவது ஒத்துக்குறியே என்கிறீர்களா );-)

    2. July 20, 2005 at 11:20 am

      [1] அட இன்னா தம்பி கதிர்காமராசு – நாம பல வெசயத்துல ஒத்துப்போறோம்னுதான நான் நெனச்சுருந்தேன்.

    3. July 20, 2005 at 11:23 am

      சம்பந்தமில்லாமல் ஒரு விஷயம் – நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்காக பிபிஸி சமீபத்தில் இலவசமாக வழங்கிய பீத்தோவன் சிம்பொனி 1-9 என்னுடைய வழங்கி ஒன்றில் போட்டுவைத்திருக்கிறேன். இன்னும் மூன்று நாள் வைத்திருக்க உத்தேசம். வேறு யாருக்காவது வேண்டுமென்றால் எனக்கு நேரடியாக எழுதவும். கடவுச்சொல் தருகிறேன்.

    4. karthikramas
      July 20, 2005 at 11:28 am

      வெங்கட் , எனக்கு வேண்டுமே. உங்கள் சமீபத்திய மின்னஞ்சல் எனக்கு தெரியாது.
      என்னுடையது. karthikramas@gmail.com

    5. karthikramas
      July 20, 2005 at 11:29 am

      பீத்தோவானை வழங்கியில் அடைத்ததற்கு மிக்க நன்றி . ;-)

    6. Ganesh
      July 20, 2005 at 11:34 am

      Venkat,

      unbiased review. I don't know why people are mad about one person and refuse to accept their – points.

      - Ganesh

    7. Pandi
      July 20, 2005 at 11:42 am

      பீத்தோவன் சிம்பொனி எனக்கும் கிடைக்குமா? kingpandiyaATyahooDOTcom

    8. July 20, 2005 at 11:50 am

      கார்த்திக், பாண்டி – தனி அஞ்சல் அனுப்பியிருக்கிறேன்.

      கார்த்திக் – இந்த வலைப்பதிவின் மேல் பட்டியில் இருக்கும் Contact ல் கிளிக்கி நேரடியாக மின்னஞ்சல் அனுப்பமுடியும்.

    9. July 20, 2005 at 12:20 pm

      Venkat
      This is reasonable point of view about Raja's voice, which I mostly agree with . But this is not what I wanted to do when I finished hearing it a few times and did the blog entry. The title of the blog "oru puththi illAtha pathivu" means exactly that – a non rational approach to the music. I certainly donot know who has the same timbre as Raja's voice. I mentiontioned Maharajapuram for this reason as his voice has this too.
      I am not sure about
      —–
      >>>
      இது மேற்கத்திய இசையைத் திருவாசகத்திற்குக் கொண்டுவந்து நம் மக்களுக்கு மேற்கத்திய இசையை அறிமுகப்படுத்தும் உத்தியாகத்தான் நான் அறிகிறேன்.
      —-
      I believe it is an honest attempt by Raja to score a WC piece with TV which he feels it deserves. I also think it is an act of love on his part and it shows. It is brilliant in many places, certainly moves most of the time and I am still wondering about the reach of even 'simpler' pieces like kOvEru. In my opinion this is bold, beautiful and very moving music that TV richly deserves. If someone can better this, it will be a great joy too.
      I am skeptical though about,
      "இதே திருவாசகப் பாடல்களை வருங்காலத்தில் அவர் பிற சிம்பொனி ஆர்கெஸ்ட்ராக்களுடன் பாட வேண்டும்".
      Sadly, I guess this is going to be an one time affair. Grab and enjoy for whatever it gives you, is my thinking really.

      arul

    10. Padma Arvind
      July 20, 2005 at 1:16 pm

      Venkat
      Though I agree with this article, somehow "ஒரு சிலரைப்போல நான் இளையராஜாவின் குரலை வெறுப்பவனல்லன்; ஆராதிப்பவன"I thought it was exaggerrated/funnay. I think you can like or love but worship? Not from you…

    11. July 20, 2005 at 2:03 pm

      [9] உங்களுடைய தலைப்பைப் பார்த்ததுமே நோக்கம் புரிந்தது. ஆனால் தொடர்ந்து வந்த விவாதங்களில் இது கொஞ்சம் ஆழமாகப் போகத் தொடங்கியதும்தான் எழுதினேன்.

      அப்புறம்

      I am skeptical though about,
      "இதே திருவாசகப் பாடல்களை வருங்காலத்தில் அவர் பிற சிம்பொனி ஆர்கெஸ்ட்ராக்களுடன் பாட வேண்டும்".
      Sadly, I guess this is going to be an one time affair. Grab and enjoy for whatever it gives you, is my thinking really.

      இப்படியாகாமல் இருக்கத்தான் நான் இதைப் பற்றிய தீவிரமான விவாதம், விமர்சனம் தேவை என்று சொன்னேன். பரவலாக இதை எடுத்துச் செல்ல என்ன முயற்சிகள் இருக்கின்றன என்று தெரியவில்லை. இன்னும் கனடாவில் விற்பதற்கே முயற்சிகள் இல்லை என்று தெரிகிறது. (இங்கே திருட்டு சிடிக்கள் பரபரப்பாக விற்பதாகச் சொல்கிறார்கள்).

    12. July 20, 2005 at 2:10 pm

      [10] பத்மா – அது exaggerated இல்லை. ஆனால் ஆராதிப்பது என்றால் காலில் விழுவது என்ற அர்த்தத்தில் இல்லை. விரும்புவதைக் கடந்து போற்றுவது என்ற் பொருளில். பிறரிடம் உயர்வாகப் பேசத் தோன்றும்.

      பொதுவில் விளையாட்டு/கலைத்துறையில் இருப்பவர்களை பார்த்தால் இந்த உணர்வு தோன்றும். நம்முடைய திறமைக்கு அப்பாற்பட்டு இவர்களிடம் இருக்கும் படைப்புத் திறனை கலைத் திறமையை போற்றத் தோன்றும் தோன்றும். அது நல்ல குரலோ, வயலினோ, அல்லது காலில் வந்து குத்தும் பந்தை பாயிண்ட்டில் பவுண்டரி அடிக்கும் திறனோ – நொடியில் பரவசப்பட்டுப் போவது உண்மை.

    13. மாவுருண்டை
      July 20, 2005 at 2:16 pm

      "'உம்பர்கட்கரசே' வேறு யாராவது பாடியிருக்க வேண்டும்."
      வெங்கட்,
      உம்பர்கட்கரசேயில், சிவபெருமானே…சிக்கெனப்பிடித்தேன் எங்கெழுந்து அருளுவதினியே..வரிகளுக்கு ராஜா மட்டுமே உயிர் (பக்தி,பரவசம்) கொடுக்க முடியும் (எ.தா.எ) :)

    14. July 20, 2005 at 2:51 pm

      பீத்தோவன் சிம்பொனி எனக்கும் கிடைக்குமா?
      raasubbu at gmail dot com

    15. July 20, 2005 at 4:41 pm

      //(இங்கே திருட்டு சிடிக்கள் பரபரப்பாக விற்பதாகச் சொல்கிறார்கள்).// அடக்கஷ்டமே!

      இங்கும் கடையொன்றில் இன்னும் வரவில்லை என்றுதான் சொன்னார்கள். காத்திருக்கிறேன், திருட்டு வட்டைத் தலையில் கட்டிவிடாமல் இருந்தால் சரி!

      'தூள்'-ன் தயவால் 'புற்றில் வாழ்..' மட்டும் தினமும் காதில் பாய்ந்து கொண்டுள்ளது. மதுரைத் திட்டம் சென்று இப்பாடலைப் பார்த்தேன். அதில் மொத்தமுள்ள பத்து விருத்தத்தில் ஆறை மட்டும் எடுத்துக் கொண்டு பாடியுள்ளார் ராசா. பாடலின் கடைசி இரண்டு வரிகளை அவரே சேர்த்துக் கொண்டுள்ளார் போலுள்ளது; அதுவும் நன்றாகத்தான் உள்ளது. 'வெண் குழல் வேந்தே வருக வியாபாரக் காந்தம் வருக' (அன்பே சிவம்) என்ற வரியும் அதே மெட்டிற்குப் பொருந்தியது ;-)

    16. July 20, 2005 at 5:39 pm

      வெங்கட், தங்கள் கருத்துடன் ஒத்து போகிறேன். இன்னும் ஒரு நிதர்சனமான உதாரணம் பவதாரினி. பலப்பல பாடல்களில் தன் மகள் என்பதற்காக மட்டும் வாய்ப்பு கொடுத்தது போல தெரியும். சிம்பொனியில் திருவாசகம் அப்படியே ஆளைத் தூக்கவில்லை என்பது எனது அபிப்ராயம். சுமாரான பணியாகவே இதை கருதுகிறேன். மேற்கத்திய சிம்பொனியோ இல்லை வெறும் ஒரு ஆல்பமாக பார்த்தாலும் இதைவிட அருமையான இளையராஜாவை நாம் அறிவோம்.
      அப்படியே வெங்கட், பிபிசியின் முதல் மூன்று பீடோவன் எனக்கும் வேண்டும். கடவுச்சொல் தந்தருள்க!

    17. July 21, 2005 at 12:11 am

      Venkat, I too want the Beethoven symphony (1 to 8). My mail ID is santhoshguru AT gmail DOT com.

    18. Ajoy
      July 21, 2005 at 1:50 am

      பீத்தோவன் சிம்பொனி எனக்கும்.
      g_ajoy@hotmail.com

    19. July 21, 2005 at 3:38 am

      இளயராஜா குரல் குறித்து நானும் கருத்து சொன்னதால் இந்த விளக்கம்.

      " இசையைக் கேட்காமலேயே மொழியப்பட்ட தீர்ப்புகள் " என்று வெங்கட் யாரை சொல்கிறார் என்று தெரியாவிட்டாலும் நான் முழுவதும் கேட்காமல், கேட்காததை பற்றி எதையும் சொல்லவில்லை. தூள்.காமில் (மீண்டும் மீண்டும் பலமுறை)கேட்ட பாடலை வைத்து, அந்த பாடலை பற்றி மட்டுமே நான் கருத்து சொன்னேன். சுரேஷ் கண்ணன் 'நல்ல சாப்பாட்டில் எதையோ வைத்தாற்போல' என்று உவமை சொன்னதால், அதற்கு மாற்று கருத்தாய் 'புற்றில் வாழ்..'' பாடலுக்கு வேறு குரல் எனக்கு பொருத்தமாய் படவில்லை என்று மட்டும் சொன்னேன். (மற்றபாட்ல்களை கேட்காததால் அது குறித்து கருத்து இல்லை.) 'ராஜாவின் வெறியர்கள் மன்னிக்கவும்' என்று சொன்னது, அவர் கருத்தை மறுப்பவர்களை பற்றி சொல்வதாக நினைத்து எழுதினேன். ஆனால் பிறகுதான் அவர் தன் கருத்தை 'கேனத்தனம்' என்று கோயிந்த்சாமி சொன்னதற்கு பதிலாய் அதை சொல்லியிருப்பதை வாசித்து அறிந்தேன். மற்றபடி இளயராஜா குரல் பொருத்தமாய் இருப்பது என்று நினைப்பது ஒரு கருத்து, அதை மறுப்பது இன்னோரு கருத்து. இதில் ஒருவரை புத்திசாலியாகவும் மற்றவரை முட்டாளாகவும் நான் எண்ணவில்லை.

      இளையராஜா தான் பாடி பல பாடல்களை கெடுத்து விட்டதாக ஒரு பரவலான கருத்து இருக்கிறது. 80களின் பாட்ல்களை முன்வைத்து அதை ஓரளவுக்கு நான் ஒப்புகொண்டாலும், 90களின் இறுதியில் அவர் குரலில் ஒரு மாற்றம் வந்திருப்பதாக தோன்றுகிறது. அதன் உதாரணமாக 'தென்றல் வந்து தீண்டும் போது..' பாடலை வேறு யாரும் அத்தனை சிறப்பாக பாடமுடியாது(என்று வெங்கட்டும் ஒப்புகொள்ளும்) கருத்தை முன்வைத்து மட்டுமே எழுதினேன். இது மட்டுமே நான் சொல்ல விரும்பியது. மற்றபடி சண்டை போடும் தகுதியோ, எதிர்கொள்ள இதற்கான ஒரு தர்க்கமோ இருப்பதாகவோ இந்த விஷயத்தில் தெரியவில்லை.

      நாளை நீங்கள் எழுத போவதற்கு பெரிதாய் கருத்து சொல்ல எனக்கு விஷயம் இருக்கும் என்றே தோன்றுகிறது. ஆனால் வெளியே பயணப்பட போவதால் (இந்த முறை இதை இகாரஸ் கிண்டலடிக்க முடியாது, ஏனேனில் அவருக்கு எங்கே என்று தெரியும்) அதை எழுத முடியாது. பின்னர் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

    20. Suresh Kannan
      July 21, 2005 at 4:44 am

      Dear Venkat,

      ///சம்பந்தமில்லாமல் ஒரு விஷயம் – நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்காக பிபிஸி சமீபத்தில் இலவசமாக வழங்கிய பீத்தோவன் சிம்பொனி 1-9 என்னுடைய வழங்கி ஒன்றில் போட்டுவைத்திருக்கிறேன். இன்னும் மூன்று நாள் வைத்திருக்க உத்தேசம். வேறு யாருக்காவது வேண்டுமென்றால் எனக்கு நேரடியாக எழுதவும். கடவுச்சொல் தருகிறேன்.///

      I request you to send the file to
      swastikads@touchtelindia.net

      Thanks in Advance.

    21. testing
      July 28, 2005 at 2:39 am

      Manually removed by Venkat on special request

    22. WriteFace
      August 2, 2005 at 4:40 pm

      Venkat,

      Did you read Gnani's reaction to Thiruvasagam?
      You can read it at http://www.keetru.com/literature/essays/jnani.html…

      Do you have any opinion on his essay?

      -WriteFace

    23. August 2, 2005 at 9:31 pm

      [22] WriteFace – படித்தேன். அதைப் பற்றிய விஷயம்தான் இதன் அடுத்தபகுதியாக எழுதவிருக்கிறேன் (தலித் அடையாளம்). ஆனால் திரும்பத்திரும்ப இளையராஜாவைப் பற்றியே எழுதிக்கொண்டிருக்க ஒருவித சலிப்பு ஏற்படலாமென்று இடைவெளி கொடுத்திருக்கிறேன். ஞாநியின் விமர்சனத்தின் மீது என் பார்வையைக் கட்டாயம் வைப்பேன்.

    24. August 3, 2005 at 7:39 am

      [23] நாளை (04 ஆகஸ்ட்) மறவாமல் பினாத்தல்கள்படியுங்கள் – இது விளம்பரத்துக்காக அல்ல, இந்த கருத்துக்களோடு தொடர்புடையதென்பதால்!

    25. sivalingam
      August 17, 2005 at 4:33 am

      [21]i want the email id or contact of the person who posted this message

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *