• தற்பால் நாட்டம் – ஒரு அறிவியல் பார்வை

    by  • February 27, 2005 • பொது • 29 Comments

    நேற்று கார்த்திக்கின் கேள்விக்கு விடை சொல்வதாக நிறுத்திவிட்டுப் போனேன்.

    ஆனாலும் ஒரே ஒரு கேள்விக்கு ஓரினர்கள் பதில் சொல்ல முடியாது. “பிறவியிலிருந்தே இப்படி உணர்ந்தீர்களா” என்கிற கேள்விதான் அது. ஏனெனில் இவ்வாறு பிறவியிலேயே அவ்வாறு இருந்திருக்க சாத்தியமில்லை என்பது அறிவியற்பூர்வமாய் ஏற்றுக் கொள்ளக்கூடிய உண்மையாம். அப்படியே இருந்தாலும் அது சற்றும் பொருட்படுத்தக் கூடிய விகிதத்தில் இருக்காது.

    இந்தக் கேள்வியின் அடிப்படையே தவறு. இது தற்பால் நாட்டத்திற்கு உயிரியல் ரீதியில் அடிப்படை கிடையாது என்பதை அறுதியிட்டுத் தீர்மானமாக மொழிகிறது. (பிறப்பிலேயே இருக்காது என்பதில் இன்னும் உயிரியல் நிச்சயமாக விடை சொல்லமுடியவில்லை). பரிணாமத்தின் அடிப்படையில் தற்பால் நாட்டத்தை எளிதாக விளக்க முற்படுகிறேன்.

    இதற்கு முதல் கட்டமாக எதிர்பாலின் மீதான நாட்டத்தைப் புரிந்துகொள்ள, ஏன், எப்படி, எவ்வளவு என்ற மூன்று கேள்விகளுக்கு விடைகாண முயற்சிக்கலாம். (ரிச்சர்ட் டாக்கின்ஸ்ஸின் The Selfish Gene, River out of Eden, Arndt von Hippel-ன் Human Evolutionary Biology Mark Ridley-ன் Evolution போன்ற புத்தகங்களைப் படித்திருப்பவர்களுக்கு என் கருத்துக்களின் அடிப்படை எளிதில் பிடிபடும்)

    ஏன்? எதிர்பாலின்மீது ஏன் நாட்டம் வருகிறது? விடை மிகவும் எளிதானது, இது நம் மரபின் அடிப்படை. எல்லா உயிரினங்களுக்கும் ஜீன்கள் என்னும் மரபுக்கூறுகள்தான் ஆதாரம். ஒரு உயிரினம், ஜனித்து, வாழ்ந்து, இனப்பெருக்கம் செய்து, மடிந்துபோவது பத்திரமாக தன்னுடைய மரபுக்கூறைத் தொடர்ச்சியாக அடுத்த தலைமுறைக்குக் கடத்தத்தான். அந்த அடிப்படையில் இந்த வாழ்வின் அனைத்து கூறுகளையுமே விளங்கிக் கொள்ள முடியும். மனிதனில் இப்படி அடுத்த தலைமுறைக்கு மரபணுவைக் கடத்த இருபால் புணர்ச்சியே வழியாக இருக்கிறது (சில விலங்குகளிலும் தாவரங்களிலும் கலவியற்ற இனப்பெருக்கம் சாத்தியம் என்பதை நாம் அறிவோம்). கலவியின் பொழுது பெண்ணிடமிருந்தும் ஆணிடமிருந்தும் மரபணுக்கள் ஒன்று கலந்து அதன் மூலம் ஜனிக்கும் உயிருக்குத் தன்னிடம் இருக்கும் மரபணுவை அளித்து மரபுத் தொடர்ச்சியை நிச்சயம் செய்வதே ‘ஏன்’ என்ற கேள்விக்கு விடை.

    எப்படி? எப்படியெல்லாம் எதிர்பால்மீதான் கவர்ச்சி வருகிறது? நம் இலக்கியங்களில் இருக்கும் ஈர்க்கிடை நுழையாத கொங்கைகள், அரசிலை அல்குல், மகரயாழின் குடமென இருக்கும் பிட்டங்களிலும் தொடங்கி, மெல்லிடை, நீளக் கூந்தல் என பெண்ணில் காணும் அழகு ஒவ்வொன்றுக்கும் அடிப்படை – அந்தப் பெண்ணுக்குத் தான் அளிக்கவிருக்கும் மரபுக்கூறைப் பத்திரமாக எடுத்துச் செல்லும் தகுதி (உடற்கூறியல் ரீதியாக) இருக்கிறதா என்ற நோட்டமே. அதாவது அழகு என்று ஆணின் கண்ணுக்குத் தெரிவதெல்லாம் அவன் விந்தினில் இருக்கும் குரோமோசோம்கள் சொல்லிக் கொடுப்பவைதான். பருத்த கொங்கைகள் – பிறக்கும் குழந்தைக்கு வஞ்சனையில்லாமல் பாலூட்ட, விரியாத அல்குலும், மெலிந்த இடையும் சிரமமின்றி பிள்ளையைப் பெற்றெடுக்க. நீள்விரி கூந்தலும் கயலன்ன மைவிழியும் பொதுவில் ஆரோக்கியத்தைக் காட்டுகிறன (குறிப்பாக புரோட்டீன்கள் குறைவின்மையை). இப்படி அடிப்படையில் மரபைச் சுமந்து செல்லும் திறமை வெளியில் பெண்ணழகாக மிளிர்கிறது.

    அடுத்தமுறை ரோட்டில் பிகரைப் பார்க்கும் பொழுது முப்பத்து மூன்றாவது குரோமோசோமை நினைத்துக்கொண்டு வாய்விட்டுச் சிரித்தாலோ, எழுதிய நிரலில் பூச்சிபிடித்துக் கொடுக்கும் சக நிரலினியைப் பார்த்து கண்மலரும்பொழுது நாணம் வந்தாலோ நான் பொறுப்பல்லன்.

    அதேபோல தின்தோளும் திரண்ட மார்பும் பெண்ணின் சுயநலமிக்க மரபணுவின் விழைவுகள்தான். பிறக்கும் குழந்தைக்கும் குழந்தையைச் சுமக்கப்போகும் தனக்கும் ஆபத்துகளினின்று காப்பாற்றும் உடல்வலிமை இந்த ஆணுக்கு இருக்கிறதா என்ற தேட்டமே அவன் அழகின் வரையறைகளாகின்றன. தனக்கு உணவிடுவானா? தன்னைக் காப்பாற்றுவானா – அவன்தான் என் மனதிற்குப் பிடித்த அழகன்.

    (பெண்ணியவாதிகள் கொஞ்சம் பொறுங்கள், மாறிவரும் இந்த வரையறைகளைப்பற்றி பின்னர் சொல்லுகிறேன்)

    இதனுடைய வேற்றுவடிவம்தான் “தோள்ல தூக்கிப்போட்டு வளர்த்த” தங்கைக்கோர் கடிதம் டி.ராஜேந்தர் “கண் கலங்காம பாத்துக் கொண்ட” பாசமலர் சிவாஜி போன்றவர்கள். இன்றைக்கும் ராக்கி கட்டி தங்கைக்கு (தன் மரபில் பாதி) ‘பாதுகாப்பாக’ இருக்க முயலும் சேட்டுப் பசங்கள் சௌகார்பேட்டைக்கருகில் ஜர்தா பீடா போட்டுக்கொண்டு சைட் அடித்து அதே மரபுக்கு மாற்றுவழி வழிதேடிக்கொண்டிருப்பதைப் பார்க்க முடியும்.

    எவ்வளவு? இந்த இடத்தில்தான் மரபணுக்கள் அற்புதமாக சமூக விழுமியங்களைச் செதுக்குவதைப் பார்க்க முடிகிறது. எளிதான ஏரணத்தின்படி கணக்கு வழக்கில்லாமல் புணர்ந்து தள்ளும் ஆணும், அதேபோல கணக்கற்றவர்களுடன் பிணைந்து தன் மரபை முன்னெடுத்துச் செல்லும் பெண்ணும்தான் உயிரியல்ரீதியாக மிகவும் வெற்றிகரமான விலங்குகளாக இருக்க வேண்டும். ஆனால், ஒரு தாரம், அளவோடு பெற்றெடுத்தல் என்பவைதான் உண்மையில் மரபணுக்கள் தங்களை வெற்றிகரமாகத் தக்கவைத்துக் கொள்ள கண்ட தீர்வுகள். ஏன்? அதிகம் பெற்றெடுத்தால் சாக்கடும் அதிகரிக்கும். அளவோடு பெற்றுவிட்டு, பின் பெற்றதை பேணி வளர்த்தெடுத்து அது அடுத்த தலைமுறைக்கும் தொடர்வதைப் பார்ப்பதில்தான் மரபணுக்களின் உண்மையான வெற்றி இருக்கிறது (இவளுக்குச் சாகறதுக்குள்ள ஒரு கல்யாணத்தப் பண்ணிவைக்கனும், போறதுக்குள்ள ஒரு பேரனை மடில எடுத்துக் கொஞ்சலேன்னா இந்தக் கட்ட வேகாது). எனவே உடனடி அடுத்த தலைமுறையைத் தாண்டி மரபின் தொடர்ச்சியை நிச்சயிக்க அளவோடு பெறுதல் முக்கியம். அதேபோல, பல இணைகளுடன் புணர்வதைக் காட்டிலும் ஒற்றைத் துணையே இந்த விளையாடில் இறுதிவரை வெற்றிபெற எளிதான வழி. தன்னுடைய கவனமும், சக்தியும் விரயமாகமல் எல்லாவற்றையும் ஒரே இடத்தில் குவித்து அதை வெற்றிகரமாக வளர்த்தெடுப்பதில்தான் மரபணுக்கள் ஆர்வமாக இருக்கின்றன.

    கவனிக்கவும், இப்படி ஒன்றிரண்டு பெறுவது கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் நடைமுறைக்கு வந்த உத்தி, இதற்குமுன் டஜன் கணக்கில் பெற்றெடுத்துக் காய்ச்சலிலும் கழிவிலும் சாகக் கொடுத்துப் புலம்பிக்கொண்டுதான் இருந்தார்கள். நவீன அறிவியல் இதைப் பெரிதும் மாற்றியிருக்கிறது. சிசுச்சாக்காடு, பிணி இவற்றைக் குறைப்பதிலும், வாழ்நாளை நீட்டிப்பதிலும் நவீன மருத்துவத்தின் வெற்றிகளின் அடிப்படையில் ஒன்றிரண்டே பெற்று அவற்றை நல்லபடியாக வளர்ப்பது சமீபத்தில் தன் விளையாட்டு உத்தியை மாற்றிக்கொண்ட மரபணுக்களின் புத்திசாலித்தனம்.

    இந்த ஒருதாரம், கற்பு, சிறு குடும்பம் இப்படித் தனி மனிதனைக் கடந்த சமூக விழுமியங்களையும் மனிதனுக்குள்ளே இருக்கும் 23 சோடி குரோமோசோம்கள் வரையறுப்பவைதான். இதையே கொஞ்சம் நீட்டித்தால் பொய்யாமை, கள்ளுண்ணாமை, பொச்சாவாமை, சுற்றம் தழால் என்று எல்லா வள்ளுவ சமாச்சாரங்களையும் பத்திரமாக அடுத்த தலைமுறைக்குத் தாம் தொடர வழி என்ன என்று மரபனுக்கள் கண்டவை என்று எளிதில் தெரிந்துகொள்ளலாம்.

    * * *

    இப்படி எல்லாமே மரபுச் சமாச்சாரம்தான் என்று ஒட்டுமொத்தமாகச் சொல்லியாகிவிட்டது, இனி இவற்றின் மாற்றங்களையும் மரபுக்கூறுகளைக் கொண்டு நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்திற்கு வந்துவிட்டேன். இப்பொழுது பெண்ணியவாதிகளைச் சமாதானப்படுத்த கொஞ்சம் திண் தோளர்களை நையப் புடைக்கலாம். மாறிவரும் விழுமியங்கள், சமூக நடைமுறைகளுக்கு ஏற்ப இப்பொழுது தனக்கான உண்டியையும் உறையுள், பாதுகாப்பையும் பெண்கள் தாமாகவே பெற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டார்கள். இந்த நிலையில் காப்பாற்ற வேண்டும், சோறிட வேண்டும் போன்ற கட்டாயங்களைக் கடந்துவிட்ட நிலைகளில் பெண்களின் ‘பார்வையிலும்’ மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இல்லாவிட்டால் என்னைப் போன்று வாங்கிய பம்பரங்களையெல்லாம் பிறருக்கு ஆக்கர் அடிக்கக் கொடுத்துவிட்டு, முட்டியால் கோலிதள்ளிக் காலம் கழித்த சோப்ளாங்கிகளுக்குக் கன்னி கழிய கட்டாயம் விடிவு கிடையாது. (மறுபுறத்தில் வெற்றி குத்துப்படாத பம்பரத்தில் இல்லை, குவாண்டம் மெக்கானிக்ஸ்க்கு மாறிவிட்டது என்று மரபும் விழித்துக் கொள்வதைப் பாருங்கள்).

    விளையாட்டின் விதிகளைப் பெண்கள் மாற்றிக் கொண்ட அளவுக்கு ஆண்கள் ஏன் மாற்றவில்லை? விடை ரொம்ப எளிது; மாற்றிக்கொள்ள அவர்கள் கையில் சரக்கில்லை. நீர்த்துப் போகாமல் சுக்கிலத்தை நிறைவடையச் செய்வதில் பெண்ணின் பங்கு இன்னும் அப்படியேதான் இருக்கிறது. எனவே, ஆண்கள் இன்னும்

    பெண்ணாகி வந்தொரு மாயப்பி சாசும் பிடித்திட்டென்னைக்

    கண்னால் வெருட்டி முலையால் மயங்கிக் கடிதடத்துப்

    புண்ணாங் குழியிடைத் தள்ளி என்போதப் பொருள்பறிக்க

    என்று பட்டினத்தார்போல அவ்வப்பொழுது புலம்பினாலும், அடுத்த நொடி குரோமோசோம்கள் “மாதர் இளமுலைகள் வாழ்க” என்று செயங்கொண்டார் ஸ்டைலில் விசிலடித்துப் பீறிடுகின்றன.

    உயிர்த்திருத்தலுக்கான தேவைகள் மாறுபட, மாறுபட அழகின் வரையறைகளும் மாறுவதைப் பார்க்கமுடியும். ஈர்க்கிடை நுழையாக கொங்களுக்க்கான தேவை போய், “உங்கள் பட்டுப்பாப்பா விரும்பிடுமே இந்த பாரக்ஸை” என்று புஷ்டியெல்லாம் புட்டியிலேயே கிடைக்கத் தொடங்கியவுடன் தானே ஈர்க்காக மாறிப்போன சிம்ரனைக் கண்டு குரோமோசோம்கள் சிலிர்த்துக் கொள்கின்றன. அதேபோல ‘விண்ணோடும் முகிலோடும்’ என்று முழங்கிக் கொண்டிருந்த ஆண்மகன் இப்பொழுது “ஹேய் அஸைந்தாடும் காற்றுக்கும் அழகான நாற்றுக்கும் காதலா, காதலா” அதிகம் அலட்டிக்கொள்ளாமல் ஈனஸ்வரத்தில் முனகியே பெண்களைக் கவரமுடிகிறது.

    டஜன் கணக்கில் பிள்ளைகளைப் பெறுவதை நிறுத்தி “இரண்டுக்குப் பிறகு இப்பொழுது வேண்டாம்; மூன்றுக்குப் பிறகு வேண்டவே வேண்டாம்” என்ற அறுபதுகளைக் கடந்து, “நாமிருவர் நமக்கிருவர்” எண்பதுகளைத் தொடர்ந்து “ஒரு குடும்பம் ஒரு குழந்தை” தொன்னூறுகள் போய், “நாமே குழந்தை; நமக்கேன் குழந்தை” என்று சொல்லும் காலம் வந்து கொண்டிருக்கிறது. இப்படிப் பிள்ளை பெறுவதற்காகப் புணர வேண்டிய தேவை குறையக் குறைய, புணரும் வழக்கத்தை அடியோடு மறந்துவிடாமல் இருக்க குரோமோசோம்கள் செய்த உபாயம் – கலவியை இன்பமாக மாற்றி அந்த விளையாட்டை வழக்கொழியாமல் காப்பாற்றியது. அதாவது மரபுக்கடத்தலுக்கான அத்யாவசியமான கலவியின் தேவை குறைந்துவிட்டது, ஆனால் அது அடியோடு நின்று போய்விடாமல் இருக்கப் புணர்தலில் மாத்திரம் இன்பமில்லை, புணர்தல் நிமித்தத்திலும் இன்பம் என்று ‘அந்த சமாச்சாரத்தை’விட்டு கொஞ்சம் வெளியே வரவைத்தது.

    இப்படிப் புணர்தல் நிமித்தத்தின் பங்கு அதிகரிக்க அதிகரிக்க, அந்தத் துளை மாத்திரம் எதுக்கு எந்தத் துளையும் இன்பத்தின் வடிகாலே என்று நீட்டிக்கப்பட்டது. சமூக மாற்றங்களுக்கேற்ப குழந்தை பெறுவது (நம் சமூகத்தில் திருமணம் என்று கொள்ளவும்) தள்ளிப்போக, கொஞ்சம் நாள் பொறு தலைவா-க்கள் தன் கையே தனக்குதவி என்று வஞ்சிக் கொடிவரும்வரை காலத்தைக் கழிக்க வேண்டியிருக்கிறது. இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக ‘ஆதி இன்பத்தின்’ தேவை மாறிப்போனவுடன் பாதி இன்பங்கள் இயற்கையாகிப்போயின. கொஞ்சம் கொஞ்சமாக இது எங்கே செல்கிறது என்று தெரிகிறதா?

    தற்பால் நாட்டம். தன் நேரடி மரபு இல்லாவிட்டாலும் தன்னைச் சார்ந்த மரபு விருத்தியாகிக் கொண்டே போகிறது என்ற தீர்மானமான நம்பிக்கையின் வெளிப்பாடே ஓரினப் புணர்ச்சி. மனிதர்களை விடுத்த பிற உயிரிகளும் இந்த விளையாட்டில் ஈடுபடுவது விஞ்ஞானிகளால் நிச்சயிக்கப்பட்டுள்ளது. (கட்டாயம், இவைகள் எதுவுமே காமசூத்ரா புத்தகங்களை படிக்கவில்லை, குறை சொல்லப்பட்டும் நவீன தொலைக்காட்சிகளைப் பார்ப்பதில்லை, எல்லாவற்றுக்கும் மேலாக இவற்றுக்கு peer pressure கிடையாது). இருபால் கலவி மரபு நீட்டிப்பின் அடிப்படைத் தேவை என்று இருந்தாலும், ஒரு சமூகத்தைச் சேர்ந்த எல்லோரும் இதில் ஈடுபடுவதைவிட சிலர் ‘விட்டுக்கொடுப்பது’ பொதுவில் அந்தச் சமூகத்தின் மரபுத் தொகுதிக்கு நல்லது. இதன் மறுவெளிப்பாட்டைத் தேனிக்களிடம் காணமுடியும், ஒற்றை இராணித் தேனிக்கு ஓராயிரம் சேவகர்கள் இருப்பது மரபுப் போட்டியைக் குறைக்கவே. எனவே, தற்பால் நாட்டம் கொண்டவர்கள் இயற்கைக்கு மாறானவர்கள் என்ற கூற்றில் எந்தவிதமான நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை. உண்மையில் உங்கள் விளையாட்டில் தலையிடாமல் “என் வழி தனி வழி” என்று போகும் அவர்களுக்கு நீங்கள் கடமைப்பட்டவர்கள்.

    இனி தற்பால் நாட்டம் பிறவியிலேயே வருவதா அல்லது பிறரைப் பார்த்து கற்றுக் கொள்வதா? இந்தக் கேள்விக்கு நவீன அறிவியல் இன்னும் தீர்மானமாக விடைகாணவில்லை. ஆனால் எப்படியிருந்தாலும் இது இயற்கைக்கு மாறானதல்ல என்பதில் அறிவியல் உறுதியாக இருக்கிறது. மாறிவரும் சமூக, பொருளாதாரக் காரணிகள், கூடவே மாறிவரும் மரபுப் போட்டியின் விதிகள் இவை எல்லாமாக தற்பால் நாட்டத்தை இயற்கையிலேயே சிலரிடம் விதைக்கின்றன. செயற்கை முறை சினையூட்டல், சோதனைக் குழாய் கருத்தரித்தல், இதையெல்லாம் இயற்கையாக ஒத்துக்கொண்டுவிட்டோம் (சாத்தான் என்று பெயர் வாங்கிய சோதனைக் குழாய் டாக்டரம்மா, ‘புள்ள இல்லாம இருந்த எம்பொன்னுக்குப் பிச்சைபோட்ட மகராசி’ என்று தொழப்படும் மாற்றத்தை யோசித்துப் பார்த்தீர்களா? இதையெல்லாம் மட்டும் வெள்ளகாரனப் பாத்து, தொலைக்காட்சியைப் பாத்து என்று ஏன் பொங்கியெழுவதில்லை). எனவே, இதை உடல்ரீதியான குறைபாடாகவோ, சமூகநோயாகவோ தற்பால் நாட்டத்தைச் சித்தரிப்பது எந்தவிதத்திலும் நியாயமானதில்லை.

    தற்பால் நாட்டம் கொண்டவர்களை யார் தீவிரமாக எதிர்க்கிறார்கள் என்று பார்த்தால் புரியும். வைதிக மதவாதிகள் – கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் குருமார்கள், பஜ்ரங்க்தள் வகையறா தீவிரவாதிகள். இதே குழுக்கள் எல்லோரும் அதேபோல் கருக்கலைப்பையும் தீவிரமாக எதிர்ப்பார்கள். ஏன், கலையும் கருக்களாலும், தற்பால் புணர்ச்சியாலும் இனப்பெருக்கம் குறைந்துபோய் தங்கள் மதத்தின் பரப்பு குறைந்துவிடுமோ என்ற அச்சம். ஆனால் உண்மையில் மாறிவரும் விளையாட்டின் விதிகளைப் புரிந்து கொள்ளாமல் இவர்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

    29 Responses to தற்பால் நாட்டம் – ஒரு அறிவியல் பார்வை

    1. Jayanthi
      February 27, 2005 at 1:42 am

      I am simply impressed and enlightened by you post. Looking forward to knowing other's comments. thanks

    2. February 27, 2005 at 1:50 am

      I am not sure much of what you say is driven by genes in such a short period. For these traits to be absorbed into genes, shouldn't it take a longer time period than 10-20-30 years?

      For example, homesexuals existed well before contraception was practiced en masse. [particularly amongst scholarly men in England in the late 19th and early 20th centuries].

      However I do agree that as sexual intercourse is separated from procreation, and hence sexual pleasure becomes the main aim, rational thought process itself could lead to anything that increases the pleasure. Male, female, animals, inanimate objects… or doing research hours on, alone in a laboratory! This, subsequently, after several years(?) will get into the genes?

    3. February 27, 2005 at 2:05 am

      [2] பத்ரி :) இன்றைக்கு நீங்கள் எழுதியிருக்கும் பதிவே கடந்த ஒரு நூற்றாண்டில் மனிதப் பரப்பின் தன்மை எப்படி மாறிப்போயிருக்கிறது என்பதை விரிவாகச் சொல்கிறது. சிசுச்சாக்காட்டின் குறைவு, ஆயுள்நீட்டிப்பு, என கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் மனிதன் என்னும் விலங்கின் வாழ்முறையே தலைகீழாக மாறிவிட்டது.

      உண்மைதான், இது பத்து இருபது ஆண்டுகளுக்குள் வந்ததில்லை. இந்தியாவை மையமாகக் கொண்ட அந்த கோஷத்தை மனித இனம் முழுமைக்குமாகக் கொள்ளக் கூடாது. ஆனால், பொதுவில் அதிகம் குழந்தைகள் பெறத் தேவையில்லை, ஒன்றிரண்டு பெற்றால் போதும் என்ற கடந்த இரண்டு நூற்றாண்டு மாற்றத்தை dramatize செய்ய அப்படி எழுதினேன். பரிணாம வளர்ச்சியைப் பற்றிப் பேசும்பொழுது நூறாண்டுகள் என்று சொல்வதுகூடத் தவறு. மரபு மாற்றாங்களின் உறுதிப்பாட்டுக்குப் பல தலைமுறைகள் எடுக்கும். ஆனால், ஒரு வகையில் கடந்த சில நூற்றாண்டுகளாக இருத்தல், இனப்பெருக்கல் போன்றவற்றின் வரையறைகள் முற்றாக மாறிப்போன நிலையில் மனித இனம் விரைவுபடுத்தப்பட்ட பரிணாமத்தில் சென்றுகொண்டிருக்கிறது.

      இந்தக் காரணிகளுக்கும் தற்பால் நாட்டத்திற்கும் நேரடித் தொடர்புகள் குறைவுதான். ஆனால் மரபுப் போட்டியைக் குறைப்பது என்ற வகையில் இது இயற்கைக்கு மாறானதல்ல என்று சொன்னேன். காமசூத்ரா காலத்திற்கு முன்பிருந்தே நடந்துகொண்டுதானே இருக்கிறது.

    4. ravisrinivas
      February 27, 2005 at 2:06 am

      your views seem to be more favorable to genetic determinism than other explanations for changes in social behavior.it is difficult to accept them although many may think that they are scientifically proven.in fact they are not.

    5. February 27, 2005 at 2:23 am

      இருபால் உறவினைப்பற்றிய கருத்துக்களோடு பெரும்பாலும் உடன்படுகிறேன்.
      //இந்த ஒருதாரம், கற்பு, சிறு குடும்பம் இப்படித் தனி மனிதனைக் கடந்த சமூக விழுமியங்களையும் மனிதனுக்குள்ளே இருக்கும் 23 சோடி குரோமோசோம்கள் வரையறுப்பவைதான். இதையே கொஞ்சம் நீட்டித்தால் பொய்யாமை, கள்ளுண்ணாமை, பொச்சாவாமை, சுற்றம் தழால் என்று எல்லா வள்ளுவ சமாச்சாரங்களையும் பத்திரமாக அடுத்த தலைமுறைக்குத் தாம் தொடர வழி என்ன என்று மரபனுக்கள் கண்டவை என்று எளிதில் தெரிந்துகொள்ளலாம்//
      இதை உங்கள் புரிதல் என்ற வகையில் ஏற்றுக்கொள்ளும் நான், இவை அறிவியல் பூர்வமானது என்ற தகுதியைக் கோராது என்றே நினைக்கிறேன். இவைகள் ஆணாதிக்க மத வழிக் கருத்தாக்கங்கள். ஒருபால் புணர்ச்சியை எதிர்ப்பது மட்டுமல்ல, கண்டிக்கப்பட்ட காமத்தை குடும்ப அமைப்புக்குள் மட்டும் அனுமதிப்பதில் இருந்து, கருச்சிதைவை எதிர்ப்பது, பெண் அடிமைத்தனத்தை, ஒழுக்கத்தை வலியுறுத்துவது இவற்றையும் கூட நீங்கள் குறிப்பிட்ட மத அமைப்புகள் செய்கின்றன. இவைகள் அனைத்தும் காமத்தை மறுப்பதால், சுயநிறைவின்றி உலகையும், உலகைத்தாண்டியும் (கடவுள்) வெல்ல நினைக்கும் ஆணாதிக்க சிந்தனையின் விளைவுகள். சிதைவடைந்த காமத்தின் விளைவாகவே கடந்த காலங்களில் (3000 வருடங்களாக) நிகழ்ந்த ஆயிரக்கணக்கான போர்களையும், இன்னும் சகல தளங்களிலும் நிகழும் வன்முறையையும் நான் புரிந்துகொள்கிறேன். நன்றி.

    6. February 27, 2005 at 5:18 am

      வெங்கட்! புகுந்து விளையாடி இருக்கீங்க! என்ன நவீன தமிழ் நடை! சுஜாதா பிச்சை வாங்கணும் :-) சபாஷ்! (உங்க வலைப்பதிவை வாசிப்பதில் என்றுமே எனக்கு பிரச்சனை. வெட்டி ஒட்டி, வாசித்து பதில் எழுதுகிறேன். பகவானே! ஒழுங்கா போய் சேரணும் :-)

    7. Padma Arvind
      February 27, 2005 at 7:15 am

      Venkat
      The follwoing and many other links do suggest a gene mechanism, though the results are still at preliminary conclusion.
      Padma
      Annu Rev Sex Res. 2002;13:89-140.

      A critical review of recent biological research on human sexual orientation.

      Mustanski BS, Chivers ML, Bailey JM.

      Department of Psychology, Indiana University, Bloomington 47405, USA. bmustans@indiana.edu

      This article provides a comprehensive review and critique of biological research on sexual orientation published over the last decade. We cover research investigating (a) the neurohormonal theory of sexual orientation (psychoneuroendocrinology, prenatal stress, cerebral asymmetry, neuroanatomy, otoacoustic emissions, anthropometrics), (b) genetic influences, (c) fraternal birth-order effects, and (d) a putative role for developmental instability. Despite inconsistent results across both studies and traits, some support for the neurohormonal theory is garnered, but mostly in men. Genetic research using family and twin methodologies has produced consistent evidence that genes influence sexual orientation, but molecular research has not yet produced compelling evidence for specific genes. Although it has been well established that older brothers increase the odds of homosexuality in men, the route by which this occurs has not been resolved

    8. February 27, 2005 at 7:30 am

      கீழே உள்ளது தோழியர் வலைப்பதிவில் எழுதியது. வெங்கட்டின் கருத்துக்கள் சிலவற்றோடு மாறுபாடு உண்டு. பிறகு எழுதுகிறேன் (அதுவரை இந்த விவாதம் தொடர்ந்தால்)

      மதி கூறியது:
      // இதுபோன்ற வி்ஷயங்கள் geneகளிலேயே இருக்கிறது என்ற வி்ஷயம் விஞ்ஞானக் கட்டுரைகளைப் படிக்கும்போதோ, விவரணப் படங்களைப் பார்க்கும்போதோ தெரிகிறது. இங்கேயிருக்கும் விஞ்ஞானிகள் ஒரு கட்டுரை எழுதினால் நன்றாக இருக்கும்(சுந்தரவடிவேல்?). //

      இதுவரை தன்பால் புணர்ச்சி விழைவுக்கு அறிவியல் அடிப்படையில் கறாரான ஆதாரம் கண்டறியப்படவில்லை. நீங்கள் பார்த்திருக்கக் கூடியது செய்தித்தாள்களில் அவ்வப்போது வெளியாகும் pseudoscience.

      1993 ம் ஆண்டில் சில அறிவியலாளர்கள் (Hamer et al. Science, 261, 321 (1993)) ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தன்பால்புணர்ச்சியாளர்களாக உள்ள சகோதரர்களின் X க்ரோசொம்களின் மரபணுத் தொடர்புகளை ஆராய்ந்து அதற்கான மரபணு Xq28 locus (இதற்கு தமிழில் என்னவென்று சொல்லத் தெரியவில்லை) இல் உள்ளதாக மொழிந்தனர். இந்த தொடர்பு பெண்களிடம் இல்லை என்றும் அவர்களே இன்னொரு ஆய்வில் தெரிவித்தனர். இந்த கருதுகோள் இரு வேறு ஆய்வுகளில் மறுதலிக்கப்பட்டுவிட்டது (Rice et al. Science 284, 665(1999)). ஆகவே தன்பால்புணர்ச்சி விழைவுக்கான உயிரியல்/உடலியல் தொடர்பு இதுவரை நிறுவப்படவில்லை என்றே கொள்ள வேண்டும் (தன்பால்புணர்ச்சியாளர்கள் விழைவுக்கும், அலிகளுக்கு ஆண்கள் மீதான கவர்ச்சிக்கும் வேறுபாடு உண்டு). சூழ்நிலைக் காரணங்களும், அவை உருவாக்கும் உளவியல் காரணங்களும் இருப்பதற்கான ஆதாரங்கள் உண்டு.

      ஆகவே ராமச்சந்திரன் உஷா தன் பிள்ளைகளை முன்வைத்துச் சொல்லும் அக்கறைகளில் நியாயம் உள்ளதாகவே படுகிறது. அதே போல அவர் சொல்வது போல ஊடகங்கள் இதை இன்னும் பரவலாக்குவதும் சாத்தியம். இப்போது பொதுத்தளத்தில் (இங்கும், பிற இடங்களிலும்) நடக்கும் விவாதத்தில் அறிவியல் சுத்தமாக இல்லை. அரசியல் தான் உண்டு. அதற்குள் செல்ல எனக்கு விருப்பமில்லை.

      சுந்தரமூர்த்தி

    9. Padma Arvind
      February 27, 2005 at 7:35 am

      Venkat
      In continuation to my earlier comment, the myth on beauty is created by cosmetic and fitness industries these days.If you look at the past beauty is more associated with physical health vs to modern physical appearances.But I dont see any connection between that any homosexuality.even in homosexual partners one act as woman an dthe other man and we see all controlling issues, violence, and arguements just as in a normal marriage. Even though they get attracted to sam esex, physchologiacally they treat the other partner belonging to opposite sex. I think the idea of mating with opposite sex is engraved in teh brain so much that even homosexual partners identify as one as man and other woman" for relationship purpose. It will be a decade before we come to a definite explanation for this.But it is sad these homosexualpeople go thorugh harrassment, unequal medical supportand other legal support.
      I enjoy reading your articles as they are thought provoking.

    10. February 27, 2005 at 8:02 am

      [4] ரவி ஸ்ரீனிவாஸ் – நான் தலைப்பிட்டது 'அறிவியல் பார்வை' என்றுதான். தீர்மானமாக அறிவியல் கருத்தாக்கம் என்றோ, அறிவியல் விளக்கம் என்றோ எழுதவில்லை.

      மரபுத் தீர்மானவழி பல்வேறு அறிவியல் கருதுகோள்களில் ஒன்றுதான். ஆனால் நான் அறிந்த வகையில் இதுதான் நடைமுறைகளைப் பெரிதும் விளக்குவதாக இருக்கிறது. இன்னும் இந்தக் கருதுகோள்கள் திரமான அறிவியல் கோட்பாடுகளாக மாற்றப்பட்டவில்லை.

      சமூக விழுமியங்களை குரோமோஸோம்களைக் கொண்டு விளக்குவது அறிவியல்பூர்வமாக அணுகுபவர்களுக்கே இன்னும் ஜீரணிக்க முடியாத சமாச்சாரமாகத்தான் இருக்கிறது.

    11. February 27, 2005 at 8:14 am

      [5] தங்கமணி – ஆணாதிக்கச் சமூதாயம் என்பது ஒருவகையில் குரோமோசோம்களால் நிச்சயிக்கப்பட்ட விளையாட்டு உத்தி என்றும் சொல்லலாமே! இப்படிச் சொல்வதால் நான் ஆணாதிக்கத்தை அறிவியல்பூர்வமாக நிலைநாட்டுவதாகவோ அல்லது ஆணாதிக்கவாதிகளூக்கு மன்னிப்புக் கோருபவன் என்றோ அர்த்தமில்லை. இப்படியொரு பார்வையும் சாத்தியம் என்றுதான் தோன்றுகிறது. தீர்மானமாக யாராவது இதை மறுதலித்தால் நான் நன்றியுடையவனாக இருப்பேன். எனக்கும் இன்னும் இதில் பல குழப்பங்கள் இருக்கின்றன. இது புரிந்துகொள்ளும் முயற்சி.

      மாறிவரும் இந்த மரபு விளையாட்டு உத்தியில் இன்னும் ஆதிக்க வழிமுறைகள் தேவையில்லை என்பது கண்கூடு. எந்த அளவுக்கு இராணித்தேனி மரபின் அற்புதமான கண்டுபிடிப்போ Alpha male monkeys, territorial imperative இதெல்லாம் மரபின் உத்திகள் என்று தோன்றுகிறது.

      எப்படி ஆணாதிக்கம் மறுதலிக்கப்படுகிறதோ அதேபோல் நூற்றாண்டுகளாக விளையாடிவந்த போர் ஆட்டம் எல்லாம் தற்கால மனித குரோமோசோம் உத்தியில் வெற்றி தரக்கூடியனவல்ல.

      மீண்டும், மதவாதிகள் (ஒரு குறிப்பிட்ட தொகையில்) கலவியின்பம் கடந்து பரம்பொருள் இத்யாதி என்று அடையத் தேடுவதுகூட ஒரு வகையில் போட்டியைக் குறைக்க குரோமோசோம்களின் சமூகவழி முறைகள்தான். அறிவியல் வளர்ச்சியில் பரம்பொருள் சமாச்சாரங்களின் பங்கு குறைந்துபோக தற்பால் உத்திகள் சமநிலைக்குப் பாடுபடுகின்றன.

      ரவிக்கு எழுதியதைப் போல மரபு ரீதியாக சமூகத்தைப் புரிந்துகொள்வதில் அறிவியல் சிந்தனையுள்ள பலருக்குக்கூட மனத்தடை இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

    12. February 27, 2005 at 8:16 am

      [7] பத்மா, சுட்டிக்கு நன்றி. நான் Science, Nature தாண்டி துறை சஞ்சிகளைப் (இந்தத் துறையில்) படிக்கும் அளவிற்கு அறிவுள்ளவன் அல்லன். நீங்கள் காட்டியதை பல்கலைக்கழ்கத்திலிருந்து படிக்க முயற்சிக்கிறேன்.

    13. February 27, 2005 at 8:24 am

      [8] சுந்தமூர்த்தி – நீங்கள் நான் எழுதியிருப்பதையெல்லாம் Pesudoscience என்று சொல்கிறீர்களா அல்லது அது மதிக்கான பதிலா என்று தெரியவில்லை. அதை வைத்துக் கொண்டுதான் மேற்கொண்டு என்னால் கருத்தாட முடியும்.

      எனக்குத் தெரிந்தவகையில் இந்த ஜீன்தான் லெஸ்பியன் ஜீன் என்று நுண்ணளவில் இன்னும் விஞ்ஞானம் அடையாளம் காணவில்லை. ஆனால் microscopic determinism விடுத்து genetic traits, behavioral theories, evolutionary approach, psychology போன்ற macroscopic hypotheses (not theories) எல்லாமே இன்றளவுக்கு ஒத்துக் கொள்ளப்பட்ட அறிவியல் முறைகளாகத்தான் இருக்கின்றன.

      ஜீன் உத்திகள் அடிப்படையிலான என்னுடைய பார்வையை மிக நீளமாக முன் வைத்திருக்கிறேன். இதில் இருக்கும் அறிவியல் நோக்கு குறைகளை யாராவது சிரமம் எடுத்து எனக்குத் தெருட்டினால் நான் நன்றியுடையவனாக இருப்பேன்.

      ஆரோக்கியமான விவாதங்களுக்கு நான் எப்பொழுதுமே தயார்.

    14. February 27, 2005 at 9:55 am

      [13] வெங்கட்:

      என்னுடைய பதில் னான் மேற்கோள் காட்டிய மதியின் வரிகளுக்கானது. னீங்கள் எழுதிய கட்டுரையில் சில கருத்துக்களில் எனக்கு வேறுபாடு உண்டு. இப்போதைய னிலையில் என்னால் விரிவான பதிலெழுத இயலாமைக்கு வருந்துகிறேன்.

      சுந்தரமூர்த்தி

    15. February 27, 2005 at 12:53 pm

      அற்புதம். இவ்வளவு தெளிவாக வேறு யாராவது எழுதியிருக்கிறார்களா என்று தேடிப்பார்த்தேன். ம்ம்ஹூம், மாட்டவில்லை. நிறைவான பதிவு. நீங்கள் சொன்னதில் ஒரு விசயத்தை எடுத்து கூகிளிட்டுப்பார்த்தேன். ஆச்சரியகரமான விசயங்கள் கிடைத்தன. தனியாக எழுதுகிறேன்.

    16. February 27, 2005 at 9:05 pm

      //ரவிக்கு எழுதியதைப் போல மரபு ரீதியாக சமூகத்தைப் புரிந்துகொள்வதில் அறிவியல் சிந்தனையுள்ள பலருக்குக்கூட மனத்தடை இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது//.

      //சமூக விழுமியங்களை குரோமோஸோம்களைக் கொண்டு விளக்குவது அறிவியல்பூர்வமாக அணுகுபவர்களுக்கே இன்னும் ஜீரணிக்க முடியாத சமாச்சாரமாகத்தான் இருக்கிறது//

      இது அந்த அணுகுமுறையின் பற்றாத்தன்மையா இல்லை மனத்தடையா? ஆனால் நீங்கள் குரோமோசோம்களை கடவுளின் இடத்தில் வைக்கிறீர்களோ என்று நினைக்கிறேன்.
      (கடவுள் எந்த இடத்தில் வைக்கப்பட்டு, சமூக காரணிகளுக்கும் மேலாக வாழ்வைப் பாதிப்பதாகச் சொல்லப்பட்டாரோ அப்படி)

      //மீண்டும், மதவாதிகள் (ஒரு குறிப்பிட்ட தொகையில்) கலவியின்பம் கடந்து பரம்பொருள் இத்யாதி என்று அடையத் தேடுவதுகூட ஒரு வகையில் போட்டியைக் குறைக்க குரோமோசோம்களின் சமூகவழி முறைகள்தான். அறிவியல் வளர்ச்சியில் பரம்பொருள் சமாச்சாரங்களின் பங்கு குறைந்துபோக தற்பால் உத்திகள் சமநிலைக்குப் பாடுபடுகின்றன.//

      இப்படி கன்வின்சிங்காக தோற்றமளிக்கும் நிறைய வரிகள் கருத்துக்கள் கட்டுரையிலும் இருக்கின்றன வெங்கட். ஆனால் அவைகளை வேறொரு பார்வையில், முற்றிலும் எதிரான முடிவுக்குக் கொண்டு செல்லும் வகையிலும் பயன்படுத்திக் கொள்ளமுடியும்.

      நன்றி வெங்கட்.

      நல்ல பதிவு.

    17. February 27, 2005 at 10:23 pm

      [16] //இது அந்த அணுகுமுறையின் பற்றாத்தன்மையா இல்லை மனத்தடையா?//

      பற்றாத்தன்மை என்று இருந்தால் தாராளமாகப் பட்டியலிடலாமே! இயன்றவ்ரை (நான் ஒன்றும் இதில் விற்பன்னன் அல்லன்) விளக்க முற்படுகிறேன். இல்லையென்றால் எல்லாருமாகச் சேர்ந்து விடைதேடலாம். குத்துமதிப்பாகப் பற்றாத்தன்மை என்பது குழப்பமாக இல்லை?

      // ஆனால் நீங்கள் குரோமோசோம்களை கடவுளின் இடத்தில் வைக்கிறீர்களோ என்று நினைக்கிறேன்.
      (கடவுள் எந்த இடத்தில் வைக்கப்பட்டு, சமூக காரணிகளுக்கும் மேலாக வாழ்வைப் பாதிப்பதாகச் சொல்லப்பட்டாரோ அப்படி)//

      தங்கமணி :) இல்லை. இதற்கு முற்றெதிரானது இந்தக் கட்டமைப்பு. கடவுள் என்பவர் பகுக்கமுடியாத ஆதியும் அந்தமுமான பரம்பொருளானவர் (அதாவது புரிந்துகொள்ள முடியாதது – தோற்றம், அமைப்பு, செயல்பாடு எல்லாமே). குரோமோசோம்கள் உயர்நிலையில் ஒன்றுக்கொன்று இயைந்தும் எதிர்த்தும் செயல்படுபவை. குரோமோசோம்களின் அந்தத்தை ஒரு இடத்தில் முடித்துக்கொண்டு phenotype, society என்ற பெருமக் கருத்துகளுக்குத் தாவ வேண்டும் (தேவைப்படும்பொழுது அந்தப் பெருமங்களில் ஒரே ஒரு இடத்தில் ஜீனைத் துணைக்கழைக்க முடியாது. கடவுள் எங்கும் வந்து காப்பாற்றுவார்). மறுபுறத்தில் குரோமோசோம்களைப் பகுத்துப் போட்டு கார்பன், நைட்ரஜன், ஆக்ஜிஸன் என்று கரியும் வளியுமாக ஆதியைக் காட்டமுடியும் (வேறு வார்த்தைகளில் சொன்னால் கரியையும் வளியையும் கொண்டு குரோமோசொம்களைப் படைக்க முடியும்) எனவே, இது கடவுள் நிலைக்கு உயர்த்தப்படுவதில்லை. இது செயலாக்கம் கருதிய இடைநிலைதான். நாளைக்கே இத்தனை வீதம் கார்பன், இவ்வளவு ஹைட்ரஜன் என்று கணக்கெழுதிவிட்டுப் போய்விடலாம்.

    18. February 27, 2005 at 10:24 pm

      [17] //இப்படி கன்வின்சிங்காக தோற்றமளிக்கும் நிறைய வரிகள் கருத்துக்கள் கட்டுரையிலும் இருக்கின்றன வெங்கட். ஆனால் அவைகளை வேறொரு பார்வையில், முற்றிலும் எதிரான முடிவுக்குக் கொண்டு செல்லும் வகையிலும் பயன்படுத்திக் கொள்ளமுடியும்.//

      உண்மைதான் ஆனால் இப்படியொரு பார்வையை (தாங்கள் சார்ந்திருக்கும் கோட்பாடுகளுக்கு இணங்க) வசதியாக முற்றாகக் கண்டுகொள்ளாமல் ஒதுக்குபவர்களைத்தான் நான் இங்கே பார்க்கிறேன். இதற்கு இன்னும் மறுதலிக்கப்படாத, சோதனைக்கு உள்ளக்கப்படவேண்டிய, திரமான கோட்பாடாகாத/ஆகச் சாத்தியமுள்ள அறிவியல் அந்தஸ்தை முற்றிலுமாக மறுக்கிறார்கள். ஏனென்றால் இந்த ரீதியில் எல்லாவற்றையும் அணுகினால் தாங்கள் சார்ந்து நிற்கும் சாதிய, பெண்ணிய, மொழி, மதம், குழு சார்ந்த வாதங்களை முன்னெடுக்க முடியாதல்லவா!

      இதுதான் சோகமான உண்மை.

      (ரெண்டாக வெட்டினால்தான் எனக்கே கருத்து உள்ளே போகிறது :) )

    19. February 28, 2005 at 3:50 am

      "உண்மைதான் ஆனால் இப்படியொரு பார்வையை (தாங்கள் சார்ந்திருக்கும் கோட்பாடுகளுக்கு இணங்க) வசதியாக முற்றாகக் கண்டுகொள்ளாமல் ஒதுக்குபவர்களைத்தான் நான் இங்கே பார்க்கிறேன். இதற்கு இன்னும் மறுதலிக்கப்படாதஇ சோதனைக்கு உள்ளக்கப்படவேண்டியஇ திரமான கோட்பாடாகாதஃஆகச் சாத்தியமுள்ள அறிவியல் அந்தஸ்தை முற்றிலுமாக மறுக்கிறார்கள்."
      I don’t know about that. But
      "ஏனென்றால் இந்த ரீதியில் எல்லாவற்றையும் அணுகினால் தாங்கள் சார்ந்து நிற்கும் சாதியஇ பெண்ணியஇ மொழிஇ மதம்இ குழு சார்ந்த வாதங்களை முன்னெடுக்க முடியாதல்லவா!"
      என்பதை,
      "(அப்படி சாதிய, பெண்ணிய, மொழி, மதம், குழு சார்ந்த வாதங்களை முன்னொடுப்பவர்கள்போல) எல்லாவற்றையும் அணுகினால் தாங்கள் சார்ந்து நிற்கும் சாதிய, பெண்ணிய, மொழி, மதம், குழு சார்ந்த எதிர்வாதங்களை முன்னெடுக்க முடியாதல்லவா!"
      என்றும் வாசிக்கலாம் என்று தோன்றிற்று. . .

    20. ரோஸாவசந்த்
      February 28, 2005 at 6:27 am

      வெங்கட், சம்பந்தமில்லாத ஒரு கமெண்ட். உங்கள் பழைய பக்கங்களில் சில பாடல்களை கண்டுபிடிக்க முடியவில்லை. உதாரணமாய் 'தட்டுங்கள் திறக்கப்படும்' தட்டினால் திறக்க மறுக்கிறது. no such item exists என்று சத்தாய்கிறது. என்ன காரணம்?

    21. February 28, 2005 at 11:30 am

      நேற்றூ ஆஸ்கார் விளம்பர இடைவெளியிலே ,ஓட்டமும் நடையுமாக வாசித்தேன். இன்று காலைதான் ஆற அமர வாசிக்க முடிந்தது.
      //பரிணாமத்தின் அடிப்படையில் தற்பால் நாட்டத்தை எளிதாக விளக்க முற்படுகிறேன்.//
      //இந்தக் கேள்வியின் அடிப்படையே தவறு.// [இதிலெல்லாம் சரியா கேள்வி கேட்கவேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்களே அதுதான் மிகப்பெரிய தவறு!! :) ]
      நீங்கள் விளக்குவதற்கு பரிணாமத்துக்கு போகும்போதே ; உயிரியல் அடிப்படை விளக்கம் இல்லையென்றுதானே ஆகிறது. [வரவே முடியாது என்று சொல்லவில்லை/இதுவரை இல்லையென்று தான் சொல்கிறேன்] நான் உங்கள் பழைய பதிவுக்கு இட்ட பின்னூடத்தில் குறித்த சுட்டிகளை வாசித்தீர்கள் என்று நம்புகிறேன்.

      மற்ற படிக்கு, ஓரினர்களைப்பற்றிய "தீண்டத்தகாத " பார்வையை உடைக்க உங்கள் "பார்வை" வெகுவாய் உதவும் என்றே நினைக்கிறேன். எனவே
      மேற்கொண்டு எதிர்வினை செய்வதில் செய்வதில் அர்த்தமில்லை. குறிப்பாய் அவசியம் இல்லை.

      நீண்ட கட்டுரைக்கு மிக்க நன்றி

      இதை திண்ணையிலோ , பதிவுகளிலோ வெளியிடலாம்.

      நீங்கள் [தங்கமணி] தொட்டிருக்கும், ஆணாதிக்கம் , சமூக விஷயங்கள் குறித்து நேரம் கிடைக்கும் போது பின்னர்.

      நன்றி.

    22. February 28, 2005 at 12:25 pm

      [20] வஸந்த் – நான் சமீபத்தில் என்னுடைய தளத்தை இயக்கும் Blog:CMS பொதியை இற்றைப்படுத்தினேன். இதனால் தரவுத்தளத்துடன் இணையாத சில படங்கள்/இசைக் கோப்புகள் தேங்கிப் போய்விட்டன. விரைவில் கவனிக்கிறேன்.

    23. February 28, 2005 at 1:51 pm

      ஹெப்பா நல்லாத் தெளிவாச் சொல்லியிருக்கின்றீர்கள் வெங்கட். இன்னும் காதல், பாலியல் சம்பந்தமான கேள்விகளை தங்களிடம் கேட்கலாமா? மாத்ரபூதத்தின் மறைவிற்குப் பிறகு வெங்கட் என்றாகி விடுமோ?

    24. February 28, 2005 at 2:52 pm

      [23] கறுப்பி யக்கோவ் :) என்ன இப்பிடி சொல்லிட்டீக. அது பூதம் நான் புல்லு. பெருசு எத எங்கென எப்புடி செய்யனும்னு வக்கெனயா சொல்லும். நாஞ் சும்மா… குரோமோஸோம், கார்பன் டபுள்பாண்ட் அப்பிடின்னு பள்ளிக்கூடப் பாடம்லா சொல்லிகிட்டிருகேன்.

    25. February 28, 2005 at 3:04 pm

      சரி இருந்தும் கேள்வி. என்னிடம் இருக்கிறது. முடிந்தவரை பதிலளியுங்கள். உண்மையாகவே கேட்கிறேன்.
      கேள்வி 1.
      எனக்கு ரவியைப் பிடிக்கிறது மோகனைப் பிடிக்கவில்லை. இருவரும் என்னோடு ஒத்துப் போபவர்களாகவும் ஒரே சிந்தனை உள்ளவர்களா இருந்த போதும். இதற்கு விஞ்ஞான ரீதியான, இல்லாவிட்டால் உளவியல் ரீதியான விளக்கம் தாருங்கள்.

      கேள்வி 2
      காதலித்துக் கலியாணம் செய்தவர்கள் நல்ல சந்தோஷமாகக் குடும்பம் நடாத்துகின்ற போதும் இன்னுமொருவர் மேல் ஈர்ப்புக் கொண்டு உறவு கொள்கின்றார்கள் இதற்கும் உங்களால் ஆன விஞ்ஞாக விளக்கம் தாருங்கள். (சளாப்ப வேண்டாம்)

      கேள்வி 3
      புலிநகக்கொன்றை கிறிஷ்ணன் எப்போது கனடா வருகின்றார். வரும் போது தயவுசெய்து எனக்கும் தெரிவியுங்கள்.

    26. February 28, 2005 at 3:24 pm

      [25] //கேள்வி 1.
      எனக்கு ரவியைப் பிடிக்கிறது மோகனைப் பிடிக்கவில்லை. இருவரும் என்னோடு ஒத்துப் போபவர்களாகவும் ஒரே சிந்தனை உள்ளவர்களா இருந்த போதும். இதற்கு விஞ்ஞான ரீதியான, இல்லாவிட்டால் உளவியல் ரீதியான விளக்கம் தாருங்கள்.//

      எனக்கும் அப்படித்தான் மோகனைப் புடிக்காது. எல்லா படத்துலயும் மைக்கோட வந்தா யாருக்குத்தான் மோகனைப் புடிக்கும். ஏதோ இளையராஜா நல்ல பாட்டெல்லாம் போட்டாருங்கறாதுனாலத்தான அவர் படம் ஓடிச்சி. ரவிக்கு நடிக்கத் தெரியாது, இருந்தாலும் கொஞ்சம் வித்தியாசமாவது இருப்பாரில்லையா?

      //கேள்வி 2
      காதலித்துக் கலியாணம் செய்தவர்கள் நல்ல சந்தோஷமாகக் குடும்பம் நடாத்துகின்ற போதும் இன்னுமொருவர் மேல் ஈர்ப்புக் கொண்டு உறவு கொள்கின்றார்கள் இதற்கும் உங்களால் ஆன விஞ்ஞாக விளக்கம் தாருங்கள். (சளாப்ப வேண்டாம்)//

      ய்யக்கோவ்வ்வ்… காதல் கீதெல்லாம் விஞ்ஞானத்துல சரியா வராதுங்கோவ். சும்மா வைரமுத்து வேணும்னா ஹார்மோன் கத்திரிக்கான்னு எங்க சமாச்சாரம்லா எடைல எடைல போட்டு லவ் ஸாங்கெல்லாம் எளுதுவாரு. அது அப்படித்தானுங்கோ.

      ஆமாம், அது கெடக்கட்டும். ரொம்ப நாளா கேக்கனும்னு இருந்தேன். ஏன் கனடாவுல இருக்கிற ஈழ வம்சாவளியினர் மாத்திரம் எல்லாத்தையும் "நாடாத்துவது"-ன்னு சொல்றாங்கோ. சும்மா நடத்துவது-ன்னு சொல்லினா போதுமில்லையா. இப்படிச் சொன்னா ஏதோ முதுகுல கைய வைச்சு "நாடாத்தி"கிட்டுப் போறமாதிரி இருக்கு.

      //கேள்வி 3
      புலிநகக்கொன்றை கிறிஷ்ணன் எப்போது கனடா வருகின்றார். வரும் போது தயவுசெய்து எனக்கும் தெரிவியுங்கள்.//

      அப்பாடி, ஒரு கேள்விக்காவது விடை தெரிஞ்சாமாதிரி கேட்டு என் மானத்தைக் காப்பாத்துனீங்களே. ஏப்ரல்/மே-ல வர இருக்கார். இன்னும் முடிவாகல.

    27. February 28, 2005 at 3:36 pm

      சமாளிக்க வேண்டாம் எண்டாப் பிறகும் சமாளித்து விட்டீர்கள் பெரிய கெட்டித்தனமாய்.

      ஒரு பேச்சுக்கு ரெண்டு பெயர்களைத் தெரிவு செய்வம் எண்டு மோகனையும் ரவியையும் தெரிவு செய்த என்னைச் செருப்பால அடிக்கவேணும். (கடைசி மாதவன். சாருக்கான் எண்டாவது இருக்கலாம்..)

      நாடாத்துவது இல்லை நடாத்துவது – சும்மா ஒரு வித்தியாசத்துக்காகத்தான். இந்தியர்களில் இருந்து ஈழத்தமிழர் வித்தியாசம் எண்டு காட்ட.

      எதற்காக பி.ஏ கிறிஷ்ணன் வருகின்றார். ஏதாவது விழா நடக்கப்போகின்றதா? இல்லாவிட்டால் தனிப்பட்ட விடுமுறை வருகையா?

      நெடுங்குருதி படித்தீர்களா?

    28. karthikramas
      February 28, 2005 at 5:15 pm

      //நாடாத்துவது இல்லை நடாத்துவது – சும்மா ஒரு வித்தியாசத்துக்காகத்தான். இந்தியர்களில் இருந்து ஈழத்தமிழர் வித்தியாசம் எண்டு காட்ட.//

      கறுப்பி, இந்த டகுல் விட்ற வேலைதானே வாண்டாங்குறது. அறிஞர் அண்ணா அந்தகாலத்திலேயே "நடாத்தினார்" நு தமிள் பொஸ்தவுத்துல படிச்சிருக்கோம்ல.

      எனக்கு தெரிஞ்சு , நடத்துறது – சாதா தமிழ்
      நடாத்துவது – கொஞ்சம் தூய தமிழ்
      நாடாத்துவது – வெங்குட்டு தமிழ் அல்லது தீய தமிழ் :)

    29. March 1, 2005 at 8:59 pm

      கறுப்பி – கார்த்திக்

      மன்னிக்கவும். ஒரு காலுக்குப் பதிலா ரெண்டு காலாப் போட்டுத்தள்ளிட்டேன். யானைக்கு நெத்தில படம் வரைஞ்சா படாம்-னு சொல்ற்தில்லையா? எச்சூஸ் மீ.

      பி.ஏ.கிருஷ்ணன் வருகைக்கு எந்தவிதமான விசேட காரணமும் கிடையாது. நாம வேணும்னா அவர் வரும்பொழுது ஒரு சின்ன கூட்டம் 'நடாத்திடலாம்' :)

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *