தமிழ் ஈழம் குறித்த கனேடிய வானொலித் தொடர்
by வெங்கட் • March 29, 2005 • கனடா • 1 Comment
ஒன்றரை இலட்சம் தமிழ் மக்களுடன் இந்தியாவிற்கு வெளியே அதிகம் தமிழர்கள் வசிக்கும் மாநகரமாக மாறியிருப்பது டொராண்டோ. இவ்வளவு குறுகிய காலத்தில் புலம்பெயர்ந்து குறிப்பிடத்தக்க அளவிற்கான சமூகத்தை தமிழர்கள் ஒரே நகரில் உருவாக்கிய வரலாறு நானறிந்தவரை முன்னெப்பொழுதும் கிடையாது. ஒரு புறத்தில் புலம்பெயர்ந்தவர்களின் கஷ்டங்கள், இழப்புகள் போன்றவை இருந்தாலும் வந்தவர்களை வரவேற்றுக் குடியமர்த்துவதில் கனேடிய அரசாங்கமும் பல சிக்கல்களை எதிர்கொள்கிறது. நல்ல நோக்கங்களுக்குக்காக அகதிகளைக் குடிமர்த்தினாலும் இஸ்லாமிய, சீக்கிய (காலிஸ்தான்), தமிழ்த் தீவிரவாதிகளுக்கான தலைநகராக மாறியிருக்கிறது கனடா என்று பிற நாடுகளிலிருந்து, குறிப்பாக அமெரிக்காவிலிருந்து குற்றச்சாட்டு இருந்து வருகிறது (உண்மையில் செப்டம்பர் 11ல் பங்குபெற்ற தீவிரவாதிகள் யாரும் கனடாவழி போனவர்கள் அல்லர். அவர்கள் அமெரிக்காவின் உள்நாட்டுத் தயாரிப்புகள்).
ட்சூனாமிக்குப் பிறகு இலங்கையில் நடக்கும் உள்நாட்டுப் போர், தமிழர்கள் நிலை குறித்து கனடாவில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. பல ஊடகங்களிலும் அவ்வப்பொழுது இலங்கை பற்றிய செய்திகளும் தகவல்களும் ஒலிபரப்பாகின்றன. கனடாவின் அரசு மானியம் பெற்று இயங்கும் கனேடிய ஒலிபரப்புக் கழகத்தின் டொராண்டோ ரேடியோ 2 வானொலியில் சில வாரங்களுக்கு முன்பு இலங்கை குறித்த ஒரு தொடர் நிகழ்ச்சி ஒலிபரப்பானது. யாருடைய உண்மை (Whose Truth) என்று தலைப்பிடப்பட்ட இந்தத் தொடரில் ஆறு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாயின. ட்சூனாமிக்குப் பிறகு இலங்கையில் நடக்கும் உள்நாட்டுப் போர், தமிழர்கள் நிலை குறித்து கனடாவில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. பல ஊடகங்களிலும் அவ்வப்பொழுது இலங்கை பற்றிய செய்திகளும் தகவல்களும் ஒலிபரப்பாகின்றன. இந்த “யாருடைய உண்மை” தொடர் பல கோணங்களில் இலங்கைப் பிரச்சனையை அணுக முயற்சிக்கிறது. (பல நாட்களுக்கு முன்பு எழுதவேண்டும் என்று நினைத்து மறந்துபோன விஷயம்)
இவற்றை நேரடியாகத் தரவிறக்கிக் கேட்க எம்.பி3 வடிவில் இணைப்புகளைக் கொடுத்திருக்கிறேன்.
1. சிபிசி செய்தியாளர் பியா சட்டோபாத்தியாய் இலங்கையில், குறிப்பாக தமிழர்களின் பகுதிகளில் நேரடியாகக் கண்டவற்றைப் பற்றி விவரிக்கிறார்.
2. டொராண்டோவில் வசிக்கும் கிறிஸ்துவப் பாதிரியார் ப்ரான்ஸிஸ் சேவியர் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர். தன்னையே புலிகளில் ஒருவராக அடையாளம் காணுகிறார். இவர் இலங்கைக்குப் புலிகளால் மாத்திரமே தீர்வு ஏற்பட முடியும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
3. டொராண்டோவின் மெக்கின்ஸி இன்ஸ்டிட்யூட் தனியார் நிதியுதவி பெற்ற வர்த்தக நோக்கற்ற ஆய்வு நிறுவனம். இது அரசியல் நிலையின்மை மற்றும் திட்டமிட்ட வன்முறைகள் குறித்த விஷயங்களில் ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறது. இதற்கு உலக அளவில் சார்பற்ற நேர்மையான, திறமையான அரசியல் ஆய்வு நிறுவனம் என்ற பெயர் இருக்கிறது. இதன் ஜான் தாம்ஸன் கனடாவில் ஈழத்தமிழர்கள் வன்முறைகளில் ஈடுபடுவது, நிதி திரட்டுவது, திரட்டப்பட்ட நிதியை ஆயுதங்களுக்குப் பயன்படுத்துவது போன்ற விஷயங்களைப் பற்றிய கருத்துக்களைத் தெரிவிக்கிறார்.
4. டொராண்டோவில் வசிக்கும் தமிழ் பத்திரிக்கையாளர் டேவிட் ஜெயராஜ் புலிகள் தங்கள் வழிமுறைகள் நடவடிக்கைகள் குறித்த ஆத்மபரிசோதனையில் இறங்க வேண்டும் என்று கூறுகிறார். பத்திரிக்கையாளராக உண்மையை எழுத முற்பட்ட தன்மேல் தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் குறித்தும் கூறுகிறார்..
5. எல்லாவற்றையும் விட மிகவும் முக்கியமானதாக எனக்குத் தோன்றியது சமூக சேவகி “லக்ஷ்மி”யின் அனுபவங்கள். (இவர் பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஒருபுறத்தில் இலங்கை இராணுவம், மறுபுறத்தில் போராளிகள் இரண்டுக்கும் இடையில் அடிமட்டத்திலிருந்து பெண்களுக்கு எப்படி விடிவு கிடைக்கலாம் என்பதைப் பற்றி தெளிவான கருத்துக்களைச் சொல்கிறார்.
6. விடுதலைப் புலிகள் சிறுவர்களை இராணுவத்தில் பயன்படுத்துவது குறித்து லாயிட் ஆக்ஸ்வொர்த்தியின் எண்ணங்கள். ஆக்ஸ்வொர்த்தி முந்தைய ழான் க்ரெட்ச்யென் லிபரல் அரசின் வெளிவிவகார அமைச்சராக இருந்தவர். இவருடைய பெயர் சமாதானத்திற்கான நோபெல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. சிறுவர்களை வன்முறைகளில் ஈடுபடுத்துவது குறித்து புலிகளின் மீது கடுமையான விமர்சனங்களை மொழிகிறார்.
ஒலிக்கோப்புகள் ஒவ்வொன்றும் பத்து நிமிடங்களுக்குக் குறைவானவை. இறக்குவதில் பிரச்சினை இருந்தால் சொல்லுங்கள் கோப்புகளைப் பிளந்து இரண்டாக/மூன்றாக இடுகிறேன்.
நிலைசார்பற்று பிரச்சனையின் பல்வேறு கோணங்களையும் விவரிக்கிறது இந்தத் தொடர்.
நன்றி வெங்கட் இந்தச் சுட்டிகளுக்கு. நீங்கள் காண்பித்திருக்காவிட்டால் விடுபட்டுப் போயிருக்கும்.
பொதுவாகவே புலிகளுக்கு எதிரான அடிநாதம் இந்தத் தொகுப்பில் இருப்பது போல எனக்குத் தோன்றியது. அதே நேரம் வானொலியின் இணையத் தளத்தில் சில சிங்களர்கள் இந்த நிகழ்ச்சி புலி ஆதரவாக உள்ளது என்பது போல எழுதியிருந்தனர். (மொத்தமாக மூன்று கடிதங்கள்தான் இருந்தன, அனைத்துமே சிங்களர்களது கடிதங்கள்.)
இந்த நிகழ்ச்சி மிகவும் மேலோட்டமானதாக மட்டுமே எனக்குத் தோன்றியது. எதிலுமே ஆழமாக நுழையவில்லை. பிரச்னை எங்கு ஆரம்பமானது, தமிழர் பக்கம் இருந்த வெவ்வேறு குழுக்கள் – அரசியல் தலைவர்கள், போராளிகள், சிங்கள அரசியல்வாதிகள் + இன வன்முறையைத் தூண்டியவர்கள், இப்பொழுது போர் நிறுத்தத்தின் போது இருக்கும் நிலை, அமைதிக்கான புலிகளின் கொள்கைகள், இலங்கை அரசியல் கட்சிகளின் நிலை என்று எதைப்பற்றியுமே உருப்படியாகப் பேசவில்லை.
குழந்தைப் போராளிகள் பற்றி மட்டும் பெரிதாகப் பேசிப் பிரயோசனமில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. உலகில் பல இடங்களில் – எங்கெல்லாம் கொடிய இனவன்முறை ஏற்படுகிறதோ – அங்கு வயது வித்தியாசம் பார்க்காது மக்கள் போராடத் தொடங்குகிறார்கள். நேரடியாகக் களத்தில் இறங்கிப் போர் புரியாவிட்டாலும் பிற வழிகளில் போராட்டத்தில் அவர்கள் ஈடுபடுவதை யாராலும் தடுக்க முடியாது.
சிங்களர்கள் யாரையுமே ஏன் இந்த நேர்காணல்களின் சேர்க்கவில்லை? அதைப் போல இந்தியர்கள் யாரையும் காணவில்லை.
அதே போல பிற நாடுகளிலிருந்து வரும் அகதிகள் தம் நாட்டுப் பிரச்னைகளில் ஈடுபடுவதை, அதன் மூலம் கண்டாவில் சட்டம் ஒழுங்குப் பிரச்னைகளைக் கொண்டுவருவதை – அதாவது ஆயுதம் தாங்கும் குழுக்களுக்குப் பண உதவி செய்வது, அந்நாட்டுச் சண்டைகளை இந்நாட்டுக்குக் கொண்டு வருவது, மனிதர்களை அச்சுறுத்துவது, காலை உடைப்பது, கொலை செய்வது – கனேடிய மக்கள் எப்படி எதிர்கொள்கின்றனர் என்பது பற்றியும் யாரும் பேசவில்லை.