• சேதன வடிவாக்கம் – புஷ்ஷின் உளறல்

    by  • August 4, 2005 • அறிவியல்/நுட்பம் • 19 Comments

    நேற்று திருவாளர் புஷ் இன்னொரு முறை திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார் . இந்த முறை பள்ளிக்கூடங்களில் பரிணாமக் கோட்பாட்டின் கூடவே சேதன வடிவாக்கக் கொள்கை (Intelligent Design Theory) யையும் சேர்த்து அறிவியல் பாடமாகப் படிப்பிக்க வேண்டும் என்று சொல்கிறார்.

    கொஞ்சம் நாட்களாகவே (கிறிஸ்துவ)மதவாதிகளின் கை அமெரிக்காவில் ஓங்கி வருகிறது. ( என்னுடைய பழைய பதிவு ) 9/11-க்குப் பின்னான சூழலைப் பயன்படுத்தி தங்கள் கொள்கைகளை உயர்ந்ததாகப் பறைசாற்றிக் கொள்ளவும், பரப்பவும் அடிப்படைவாதிகள் தீவிரமாக முயன்று வருகிறார்கள். முந்தைய போப் ஒருவழியாக “பரிணாமக் கொள்கையை முற்றாக ஒதுக்கக் கூடாது” என்று அரைமனதோடு அங்கீகரித்திருந்தார். பின்னர் புதிய போப் கார்டினல் ராட்ஸிகராக இருந்தபொழுது பரிணாமத்தை ஒத்துக் கொள்வதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று சொன்னதாகப் பரவலாக அறியப்பட்டது. ஆனால் இந்தப் போப்பின் ஆட்சியில் முக்கிய இறையியல் தத்துவவாதிகளுள் ஒருவராகக் கருதப்படும் ஆஸ்திரிய கார்டினல் கிறிஸ்டோஃப் ஷோன்போர்ன் (Cardinal Christoph Schonborn) போப் பெனிடிக்டின் வார்த்தைகளுக்குச் சென்ற மாதம் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் “அப்படியெல்லாம் இல்லை. மனிதனின் படைப்பு உன்னதமானது, தனித்துவமானது என்பதில் இன்றைய போப்பிற்கு எந்தவித மறுகருத்தும் கிடையாது” பரிணாமம் எல்லாம் குப்பை என்று வியாக்கியானம் எழுதினார் .

    வாஷிங்கடன் போஸ்ட்டில் ;

    “Both sides ought to be properly taught . . . so people can understand what the debate is about,” he said, according to an official transcript of the session. Bush added: “Part of education is to expose people to different schools of thought. . . . You’re asking me whether or not people ought to be exposed to different ideas, and the answer is yes.”

    என்று புஷ் சொன்னதாக வெளியாகியிருக்கிறது. சமீபகாலத்தில் அமெரிக்க அடிப்படைவாதிகள் கருத்துரிமை என்ற பெயரில் படைப்பாக்கம் (Creationism) என்று அறியப்பட்டிருந்த பழைய கள்ளு இறையியல் கொள்கையை சேதன வடிவாக்கம் என்ற புதிய போத்தலில் அடைத்து பரபரப்பாக விற்பனை செய்துவருகிறார்கள். இவர்கள் பரிணாமம் அறிவியல் இல்லை என்ற ரீதியில் பரப்பி வருகிறார்கள். அமெரிக்க அறிவியல் காட்சிசாலைகளில் படைப்பாக்கம் பற்றிய கருத்துக்களை “அறிவியல் மாற்றுக் கொள்கை” (Alternate Scientific Theory) என்று சிறுவர்களுக்குப் போதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில்தான் பெரியவர் புஷ் அரசு ரீதியாக இதற்கு அங்கீகாரம் கொடுத்திருக்கிறார். உண்மையில் பரிணாமத்திற்கு அபரிமிதமான அறிவியல் சான்றுகள் இருக்கின்றன. மாறாக படைப்பாக்கத்திற்கு அறிவியல் சட்டகத்தில் இடமேயில்லை. பல கேள்விகளை அது தவிர்க்கிறது.

    மாறு கருத்துக்கள் வரவேற்கப்பட வேண்டியவைதான். ஏற்கனவே இந்த மாறு கருத்தான படைப்பாக்கத்தை இறையியல் வகுப்புகளில் உரக்கவே போதித்து வருகிறார்கள். இதைத் தவிர தேவாலயங்களும் இவற்றைத் தீவிரமாகப் பரப்பிவருகின்றன. இதற்கெல்லாம் யாரும் மறுப்பு சொல்லப் போவதில்லை. ஆனால் இதை அறிவியல் என்று அடையாளம் காட்டுவது முழுப் பம்மாத்து.

    தான் ஆட்சியை விட்டுப் போவதற்குள் புஷ் அமெரிக்காவை ஒரு பத்துவருடமாவது பின்னால் தள்ளிவைத்து விட்டுத்தான் போவார். ஆச்சரிமான விஷயம் என்னவென்றால் இதற்கு அமெரிக்காவில் உள்ள அறிவியலாளர்கள் பொங்கியெழவில்லை. இன்றைய அமெரிக்காவில் அரசிற்கு எதிர்கருத்து சொல்வது மிகவும் கஷ்டமாகிவருகிறது.

    அமெரிக்காவை ஆண்டவன்தான் இரட்சிக்க வேண்டும்.

    19 Responses to சேதன வடிவாக்கம் – புஷ்ஷின் உளறல்

    1. .:dYNo:.
      August 4, 2005 at 5:09 pm

      >>>>இதற்கு அமெரிக்காவில் உள்ள அறிவியலாளர்கள் பொங்கியெழவில்லை. இன்றைய அமெரிக்காவில் அரசிற்கு எதிர்கருத்து சொல்வது மிகவும் கஷ்டமாகிவருகிறது.

      புஷ்ஷைத் திட்ட முடிவு பண்ணீட்டு அதற்கு இத ஒரு காரணமாய் பயன்படுத்தின மாதிரி தெரியுது!

      எதிர்கருத்து சொல்ல கஷ்டமானதினாலா வாஷிங்டன் போஸ்ட் எடிட்டோரியல் எழுதியிருக்கு? ஆமா பொங்கியெழறதுன்னா என்ன? குகிள் நியூஸ்ல தேடினாலே பல பத்திரிக்கை செய்திகள் வெளியானது தெரியுது… அப்புறம் எதவச்சு கஷ்டம்னு சொல்லியிருக்கீங்க?

      .:டைனோ:.

    2. August 4, 2005 at 6:15 pm

      [1] டைனோ,

      >புஷ்ஷைத் திட்ட முடிவு பண்ணீட்டு அதற்கு இத ஒரு காரணமாய் பயன்படுத்தின மாதிரி தெரியுது!

      இந்தப் போக்கைத்தான் நான் கருத்துச் சொல்வதைக் கடினமாக ஆக்கியிருக்கிறது என்று குறிப்பிட்டேன். நியாயமான காரணங்களுக்காக மறுகருத்தைச் சொன்னாலும் இப்படித் திரித்துவிடுவது வழக்கமாகிவிட்டது.

      இப்படிச் சொல்லிச் சொல்லி ஆதரவு திரட்டுவதற்கென்றே புஷ்ஷிடம் ஒரு குழு இருக்கிறது :)

      கூகிள்ல தேடி…, வாஷிங்டன் போஸ்ட்… எல்லாம் சரிதான் அமெரிக்காவில் எத்தனையோ தொழில்முறை அறிவியல் குழுமங்கள் இருக்கின்றன (Evolutionary Biologist, Developmental Biologists Associations, American Physical Society,…) ஆனால் இவற்றில் ஒன்றுகூட முறையாக அரசின் இந்தப் பேத்தல்களை நேரடியாக எதிர்க்க முயற்சி செய்யவில்லை. ஏனென்றால் வருங்காலத்தில் அரசு மானியங்கள் நிறுத்தப்படும் என்ற பயம் இருக்கிறது. இதுபற்றி நிறைய Whilstle Blowers ஏற்கனவே சொல்லியிருக்கிறார்கள்.

    3. bb
      August 4, 2005 at 8:03 pm

      Ross: You don't believe in evolution?
      Phoebe: I don't know, it's just, you know…monkeys, Darwin, you know, it's a, it's a nice story, I just think it's a little too easy.
      Ross: Too easy? Too…. The process of every living thing on this planet evolving over millions of years from single-celled organisms is… is too easy?
      Phoebe: Yeah, I just don't buy it.
      Ross: Uh, excuse me. Evolution is not for you to buy, Phoebe. Evolution is scientific fact, like, like, like the air we breathe, like gravity.
      Phoebe: Oh, okay, don't get me started on gravity.
      Ross: You uh, you don't believe in gravity?
      Phoebe: Well, it's not so much that you know, like I don't believe in it, you know, it's just…I don't know, lately I get the feeling that I'm not so much being pulled down as I am being pushed.

    4. bb
      August 4, 2005 at 8:03 pm

      PHOEBE: Uh-oh. It's Scary Scientist Man.

      ROSS: Ok, Phoebe, this is it. In this briefcase I carry actual scientific facts. A briefcase of facts, if you will. Some of these fossils are over 200 million years old.

      PHOEBE: Ok, look, before you even start, I'm not denying evolution, ok, I'm just saying that it's one of the possibilities.

      ROSS: It's the only possibility, Phoebe.

      PHOEBE: Ok, Ross, could you just open your mind like this much, ok? Wasn't there a time when the brightest minds in the world believed that the world was flat? And, up until like what, 50 years ago, you all thought the atom was the smallest thing, until you split it open, and this like, whole mess of crap came out. Now, are you telling me that you are so unbelievably arrogant that you can't admit that there's a teeny tiny possibility that you could be wrong about this?

      ROSS: There might be, a teeny, tiny, possibility.

      PHOEBE: I can't believe you caved.

      ROSS: What?

      PHOEBE: You just abandoned your whole belief system. I mean, before, I didn't agree with you, but at least I respected you. How, how, how are you going to go into work tomorrow? How, how are you going to face the other science guys? How, how are you going to face yourself? Oh! That was fun. So who's hungry?

      :) )

    5. .:dYNo:.
      August 4, 2005 at 9:27 pm

      வெங்கட்,
      >>>>இப்படிச் சொல்லிச் சொல்லி ஆதரவு திரட்டுவதற்கென்றே புஷ்ஷிடம் ஒரு குழு இருக்கிறது
      நல்லவேளை சிஐஏகிட்ட அண்ணாதுர மாதிரி கூலி வாங்கறதா சொல்லாம விட்டீங்களே… அதுவரைக்கும் ஷேமம்!

      >>>>இப்படித் திரித்துவிடுவது வழக்கமாகிவிட்டது.
      புஷ் சொன்னது என்ன? கல்வி பாடங்களில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடமளிக்கவேண்டுமென்பதுதானே? அதில் உங்களுக்கும் உடன்பாடுடிருப்பதாகவேபடுகிறது. பிரச்சனை இண்டலிஜண்ட் டிசைனை 'அறிவியல் பாட'மாக ஆக்குவதில்தான். அதற்கே "புஷ்ஷின் உளறல்" என்று தலைப்பிடுவதுதான் "நியாயமான காரணமோ"? இத கேட்டா திரிக்கறேன், திருப்பறேன், திருகறேன்னும் சொல்வீங்க! ;)

      bb,
      :)

      .:டைனோ:.

    6. August 4, 2005 at 9:34 pm

      பரிணாம வளர்ச்சி தத்துவம் பித்தலாட்டம் அன்றி வேறில்லை என்பதே என் கருத்து.

      மனித உருவாக்கத்தில் பரிணாம வளர்ச்சி உண்டென்றால், குறந்தபட்சம் டார்வின் உயிரோடு இருக்கும் வரை குரங்குகள் மனிதானாக பரிணாமம் பெறுவது நடைபெற்றிருக்க வேண்டும்.

      அடுத்து, மனிதன் பரிணாமம் பெற்று இயந்திர மனிதர்களைப்போல் அல்லது இயந்திரமனிதனை விட (சிந்திக்கும் ஆற்றல் உள்ளதால்) மிக வலிமையான ஒரு உயிரினம் தோன்றியிருக்க வேண்டும்.
      அல்லது பரிணாம வளர்ச்சி மனித தோற்றத்திற்குப் பின் முற்றுப் பெற்றுவிட்டது என்ற முடிவுக்கு வரவேண்டும். இந்த முடிவுக்கு வந்தால் பரிணாம வளர்ச்சி என்பதே மனித இனம் தோன்ற வேண்டும் என்ற இலக்கைக் கொண்டதாக இருக்கும். சற்று விளக்க வேண்டுகிறேன்.

    7. August 4, 2005 at 10:06 pm

      [5] டைனோ

      புஷ்ஷிடம் குழு இருக்கிறது என்றுதான் சொன்னேன். அப்பன் குதிருக்குள் இல்லை என்றெல்லாம் சொல்லவில்லைதானே. நீங்கள் ஏன் இப்படி அவசரப்படுகிறீர்கள் :)

      அடிப்படை பிரச்சனையே அறிவியல் இல்லாததை அறிவியலில் சேர்ப்பது. இதன் மூலம் அறிவியலின் முக்கியத்துவத்தை நீர்த்துப்போகச் செய்வது. பேஷாக கோவில் கட்டிக் கும்பிடலாமே, அரசாங்கம்கூட மானியம் தரும்.

      இதற்கு அறிவியல் லேபள் ஏன் தேவை, இவர்கள் ஏன் அறிவியலின் அங்கீகாரத்திற்காக அலையவேண்டும் என்று ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்தீர்களானால் என் நியாயம் புரியும்.

      இதற்கு உளறல் என்று தலைப்பிடாவிட்டால் கயவாளித்தனம் என்று தலைப்பிட்டிருக்க வேண்டும். Don't attribute to malice, what can be explained by stupidity (deja vu?) என்ற காரணத்தினால்தான் உளறல் என்றேன். நீங்கள் மாத்திரம் புஷ்ஷின் அயோக்கியத்தனம் என்று மாற்றிப் படித்துக் கொள்ளுங்கள்.

    8. August 4, 2005 at 10:08 pm

      [4] bb :)

    9. August 4, 2005 at 10:12 pm

      [6] அழகப்பன் நீங்கள் பரிணாமம் பற்றி ஒரு நல்ல புத்தகத்தைத் தேடிப் படியுங்கள். இரண்டு வரி ஆனந்தவிகடன் விளக்கமெல்லாம் உதவாது. (பரிணாமம் என்ற கொள்கையை டார்வின் சொன்னார். இதைச் சொல்வதற்கு முன்னால் அவர் கப்பலில் ஏறி ஜாலியாக நிறைய டூரெல்லாம் போயிருக்கிறார். சுருக்கமாக நாம் எல்லோரும் ஸ்ரீஆஞ்சநேயரின் வாரிசுகள் என்பதுதான் இந்தத் தத்துவம்)

      வேண்டுமானால் நான் சுட்டியிருக்கும் என்னுடைய பழைய பதிவின் கருத்துப்பகுதியில் சில புத்தகங்களின் தலைப்புகள் இருக்கின்றன. விக்கிப்பீடியாவில் கூட நல்ல கட்டுரைகள் இருக்கின்றன.

    10. August 4, 2005 at 10:31 pm

      பரிணாம வளர்ச்சி பற்றி சீரியஸா விவாதம் இங்க போய்க்கிட்டு இருக்கு. அத கொஞ்சம் சிரிப்பா பார்க்க இங்க வாங்க.

    11. August 4, 2005 at 10:33 pm
    12. .:dYNo:.
      August 4, 2005 at 11:42 pm

      [7]
      வெங்கட்,
      >>>>Don't attribute to malice, what can be explained by stupidity (deja vu?) என்ற காரணத்தினால்தான் உளறல் என்றேன். நீங்கள் மாத்திரம் புஷ்ஷின் அயோக்கியத்தனம்
      >>>>இவர்கள் ஏன் அறிவியலின் அங்கீகாரத்திற்காக அலையவேண்டும்

      ஆன்மீகத்தில் (அல்லது புராணங்களில்) அறிவியலை புகுத்தும்/புகுத்திக்கொண்டிருக்கும் உங்கள் நண்பர்களுக்கும் இந்த உளறல், கயவாளித்தனம், அயோக்கியத்தனம் எல்லாமும் பொருந்துமா? ;)

      .:டைனோ:.

    13. August 5, 2005 at 2:25 am

      [9] நன்றி வெங்கட்,

      எனது கருத்துக்கான உங்கள் பதிலைப் பார்த்துவிட்டுத்தான் இந்த வார ஆனந்த விகடன் படித்தேன். (ஆ.வி. யைப் படித்துவிட்டு இந்த சந்தேகங்களை நான் கேட்கவில்லை.இதற்கு முன்பும் இதுகுறித்து எழுதியிருக்கிறேன். பார்க்க: http://athusari.blogspot.com/2005/06/blog-post_24.html…) மற்றபடி உங்கள் பழைய பதிவுகளில் எல்லாவற்றையும் தேடிக்கண்டுபிடிக்க அதிக நேரம் எடுக்கும். உங்கள் பதிவில் தொடுப்பு கொடுத்தால் உதவியாக இருக்கும்.

    14. August 5, 2005 at 1:46 pm

      [12] டைனோ – கட்டாயம் பொருந்தும். அது புஷ்ஷாக இருந்தாலும் சரி, காவியுடுத்த சங்கபரிவாரங்களாக இருந்தாலும் சரி, இல்லை இஸ்லாமாக இருந்தாலும் சரி.

      என்னைப் பொருத்தவரை அறிவியல் கருத்துகளைப் புராணங்களிலோ, மத நம்பிக்கைகளிலோ காணும் பொழுது "அட" என்ற ஒற்றை வியப்போடு சரி. அதையே முன்வைத்து மதத்தை விற்பனை செய்வதை நான் கட்டாயம் எதிர்ப்பேன்.

      என்ன, உலகின் மிகப்பெரிய அறிவியல் திறனுள்ள நாடாகக் கருதப்படும் அமெரிக்காவின் தலைவர் சொல்லும்பொழுது கொஞ்சம் உரக்க எதிர்ப்பை வெளியிட்டாக வேண்டியிருக்கிறது.

    15. karthikramas
      August 5, 2005 at 2:14 pm

      வெங்கட் இது குறித்து நேற்று என்பிஆர் -இலே ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. சில முக்கியமான கேள்விகள் கேட்கப்பட்டது.இதில் இன்டெலிஜன்ட் டிசைனுக்கு ஆதரவாக பேசியவர் ஒர் மூன்று விஞ்ஞானிகளையே நிகழ்ச்சி முழுவது கோடிட்டுக்கொண்டிருந்தார். கடைசியில் ஏன் இந்த 3 விஞ்ஞானிகளையே பிடித்து தொங்கிகொண்டு இருக்கிறீகள் என்று ஒருவர் கேட்கப்போக, நல்ல நகைச்சுவையாக இருந்தது. :-)

      இதை ஊசியிலே வாழைப்பழத்தை ஏற்றுவது போல் செய்கின்றனர் ஆட்சியாளர்கள் என்று தோன்றியது. ஆனால் அதைக் கேட்டபிறகு நீங்கள் கொஞ்சம் ஓவர் ரியாக்ட் செய்கிறீகளோ என்றும் நினைத்தேன். :-) )

    16. August 5, 2005 at 3:09 pm

      [15] கார்த்திக் – அந்த நிகழ்ச்சியை நான் பார்க்கவில்லை.

      நான் ஓவர் ரியாக்ட் செய்வதாக நினைக்கவில்லை. ரிச்சர்ட் ஃபெய்ன்மானின் The Pleasure of Finding Things Out புத்தகத்தில் Pseudoscience (இதற்கு நான் பொய்வியல் என்று பெயரிடலாம் என்கிறேன். பொய்+அறிவியல்)-ஐ அறிவியல் பற்றி தெரிந்த ஒவ்வொருவரும் ஏன் தீவிரமாக எதிர்க்க வேண்டும் என்று சொல்லியிருப்பார்.

      இதேபோல ரிச்சர்ட் டாக்கின்ஸிலிருந்து ஆரம்பித்து நம்மூர் சி.வி.ராமன் வரை எல்லோருமே பொய்வியலைச் சாடுவதில் மும்முரமாக இருப்பார்கள். என்னைப்பொருத்தவரை கல்விப்பரவலாக்கமும், பொய்வியல் எதிர்ப்பும் அறிவியல் (ஓரளவுக்குத்) தெரிந்தவர்களின் தார்மீகக் கடமை.

      இது ஏன் தார்மீகக் கடமை என்று விரிவாக இன்னொரு நாளில் எழுதுகிறேன். சுருக்கமாக, பொய்வியல் மிகத் தீவிரமாக வேலை செய்யக் கூடியது, இது ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷத்தைக் கலப்பதைப் போன்றது. இன்னும் கொஞ்சம் விஷம் சேருவதற்காகக் காத்திருந்து பயனில்லை. உடனே ரீயாக்ட் செய்ய வேண்டியது முக்கியம். இந்த இடத்தில் சொன்னவர் அமெரிக்க ஜனாதிபதி. எனவே இதில் தயக்கமே கூடாது.

    17. மாண்ட்ரீஸர்
      August 5, 2005 at 3:40 pm

      புஷ்ஷைப் போர் உட்பட பெரும்பாலான விஷயங்களில் ஆதரிக்கும் சார்ல்ஸ் க்ராட்ஹாம்மர் போன்ற பத்தியாளர்கள்கூட அறிவியலையும் மதத்தையும் இணைப்பது இரண்டையும் சீரழிப்பதற்குத்தான் இட்டுச்செல்லும் என்ற ரீதியில் சொல்லியிருக்கிறார்கள்:
      http://www.time.com/time/columnist/krauthammer/article/0,9565,1088869,00.html… (தேயும் சுட்டி என்பதால் எவ்வளவு நாள் சுட்டியிலுள்ள பத்தி தெரியுமென்று தெரியவில்லை).

    18. மாண்ட்ரீஸர்
      August 5, 2005 at 3:44 pm

      இதிலாவது சுட்டி http://www.time.com/time/columnist/krauthammer/article/0,9565,1088869,00.html"“>ஒழுங்காக வருகிறதா என்று பார்க்கிறேன்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *