சுஜாதாவாக்கம்
by வெங்கட் • July 25, 2005 • இலக்கியம் • 33 Comments
ரவி ஸ்ரீநிவாஸ் சுஜாதா இருத்தலியல் பற்றிய இரண்டுவரி விளகத்தின் அபத்தத்தை விரிவாக எழுதியிருக்கிரார். அதை விகடன் ஆசிரியருக்கு அனுப்பவதாகவும் எழுதியிருக்கிறார். காலம் காலமாக நாமெல்லாம் இந்தச் சங்கை ஊதிக்கொண்டுதானிருக்கிறோம். ஆனால் வர்த்தக மாஃபியா அதுபாட்டுக்கு அறிவு என்ற பெயரில் அறைகுறை விளங்கங்களையும் அபத்தத்தையும் விதித்துக் கொண்டுதானிருக்கிறது. பத்மா க்ளோனிங் பற்றி விகடனுக்கு என்ன எழுதினார் என்று தெரியாது. ஆனால் நான் க்ளோனிங்க் தொடரைப்பற்றி விகடனுக்கு (ஜூனியர் என்று ஞாபகம்) மிக நீளமாக சுஜாதாவின் பல ஒற்றை வரி விளக்கங்களில் இருக்கும் அபத்தங்களைப் பட்டியலிட்டிருந்தேன். கிணறுதான்; கல்தான்.
இது விகடன் குமுதத்திற்கு மாத்திரமல்ல. உயிர்மை துவக்கப்பட்ட பொழுது அதில் கண்ணீரில்லாமல் யாப்பு, கண்ணீரில்லாமல் கர்நாடக சங்கீதம் என்ற ரீதியில் எழுதினார். அப்பொழுதும் அவரது வெண்பா பாடத்தில் இருக்கும் விஷயங்களைப் பற்றி உயிர்மைக்கு எழுதியிருந்தேன். (இதைப் பற்றிய என் பழைய பதிவு). பொதுவில் விமர்சனங்களுக்கு அஞ்சாத சிற்றிதழில்கூட இது வரவில்லை.
இவர்களிடம் கருத்துகளுக்காகக் கையேந்தி நிற்பவர்களை என்ன சொல்வது? வலைப்பதிவையும் குறுஞ்செய்தியையும் பற்றி கருத்து சொல்ல இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? தனக்குக் கருத்துச் சொல்ல இடமில்லாத இடத்தில் பெருந்தன்மையாக அதை ஒத்துக்கொண்டு விலகும் மனப்பக்குவம் இல்லாதவர்களை என்னென்று சொல்வது. வலைப்பதிவா, “ஆமா என்னமோ செய்றாங்க அதைப்படிக்க எனக்கு நேரமில்லை (இல்லை எனக்குத் தெரிந்தவர்கள் எழுதும் ஒன்றிரண்டு மாத்திரம் படிப்பதுண்டு) என்றாவது சொல்லிவிட்டுப் போகலாம். Ego trip என்று பேச நா கூச வேண்டாமோ? கடந்த முப்பது வருடமாக கணையாழியின் கடைசிப்பக்கங்களில் துவங்கி கற்றதும் பெற்றதும் வரை முழுநேர ஈகோ டிரிப்பில் இருப்பவர் இப்படிச் சொன்னால் இதற்கு ஒரே ஒரு நியாயம்தான் இருக்க முடியும். Territorial Imperative.
இனி இன்று ஒரு சொல் –
சுஜாதாவாக்கம் = எந்த ஒரு கனமான விஷயத்தையும் எடுத்துக்கொண்டு இரண்டு மூன்று குழூஉக்குறிகளையும் பெயர்களையும் போட்டு ஒன்றிலிருந்து மூன்று வாக்கியங்களுக்குள் வரையற்றுத்து விடுவது.
உதாரணமாக தனக்குப் போஸ்ட்மார்டனிஸமும் அதற்கு மேலும் தெரியும் என்று காட்டிக்கொள்ள கொஞ்ச நாட்கள் கழித்து இப்படியொரு கற்றதும் பெற்றதும் வரலாம்.
மேல்தட்டு கீழ்தட்டு போன்ற பாகுபாடுகள் ஒழிந்துவிட்டன என்று தெரிதா சொன்னார். ஆனால் அவருக்கு அப்புறம் வந்த டிபோர் டையலக்டிக் போஸ்ட்மார்டனிஸம் என்று ஒன்றை உருவாக்கினார். அதில் உண்மைக்கும் சமூகத்திற்கும் உள்ள வேறுபாடுகளைச் சொன்னார். இதைத்தான் நம்மாழ்வார்கூட
“துணையும் சார்வும் ஆகுவார் போல் சுற்றத்தவர் பிறரும்
அணைய வந்த ஆக்க முண்டேல் அட்டைகள்போல் சுவைப்பர்
கணை ஒன்றாலே ஏழ்மரமும் எய்த எம் கார்முகிலை
புணை ஒன்றுஉய்யப் போகல் அல்லவா இல்லை கண்டீர் பொருளே”என்று பாடியிருக்கிறார். அட்டைகள் போல் சுவைப்பர் – கிருமிபோஜனத்தைக் கண்டுபிடித்தவன் நானில்லை, நம்மாழ்வார். பாருங்கள் எழுதி எத்தனையோ நூறாண்டுகள் ஆனபின்னும் துணை, சுற்றத்தவர், பிறர், சுவைப்பர், பொருள் என்று நாம் இன்றைக்கு தினசரி பயன்படுத்தும் அதே சொற்கள். இதனால்தான் நம்மாழ்வார் காலத்தால் அழியாமல் நிற்கிறார். நம்மாழ்வார் பாட்டை சிம்பொனியில் நீங்கள்தான் போடவேண்டும் என்று இளையராஜாவிடம் சொல்லியிருக்கிறேன். அவரைத் தவிர வேறு யாருக்கும் அந்தத் தகுதி கிடையாது. (ஆனால் ஷங்கர் படத்துக்கு ம்யூஸிக் போடும் தகுதி ஹாரிஸ் ஜெயராஜுக்குத்தான் இருக்கிறது). ஆனால் இண்டர்நெட்டில் சில பேர் ப்ளாக் என்ற பெயரில் அவசரமாகக் கிறுக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களெல்லோரும் ஐந்து நிமிடப் புகழுக்கு அலைபவர்கள். ஒன்று மட்டும் நிச்சயமாகச் சொல்ல முடிகிறது. ஸாப்ட்வேர் எழுதுகிறேன், அமெரிக்காவில் போஸ்ட்டாக்-காக இருக்கிறேன் என்று சொல்லும் இவர்களுக்கு நெட்டில் மேய நிறைய நேரம் கிடைக்கிறது. இல்லாவிட்டால் நான் எழுதுவதில் இப்படிக் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு நோண்டிக்கொண்டிருக்கமாட்டார்கள். நான் படிக்கும் காலத்தில் கொஞ்சம் அப்படி இப்படித்தான் பெரி மேஸான், ஹெம்மிங்வே என்று படித்துக் கொண்டிருப்பேன். அப்துல்கலாம் கூட “என்ன ரங்கராஜன் இப்படி சதா கதைப்புத்தகத்தை படித்துக்கொண்டு எப்படி நீ முதல் ரேங்க் வாங்குறே” என்று கேட்பார். ஆனால் இவர்களைப் போல முழுவெட்டியாக இருந்ததில்லை என்பது நிச்சயம்.
இனி எக்ஸிஸ்டென்ஸியலிஸத்திற்கும் மெட்டீரியலிஸத்திற்கும் உள்ள தொடர்பைப் பார்ப்போம். நீட்ஷே கடவுளைக் கொன்றுவிட்டார். அதுமட்டுமில்லாமல் கடவுளைக் கொன்றதில் உங்களுக்கும் எனக்கும் பங்கு இருக்கிறது என்று வேறு பொறுப்பில்லாமல் சொல்லிவிட்டுப் போய்விட்டார். பின்னால் வந்த ஆல்பர் காம்யூவின் கதாநாயகன் அம்மா செத்த அடுத்த நாள் ஸ்த்ரீ சம்போகத்திற்காக அலைகிறான். இவர்கள் எல்லோரும் நம்ம இந்திய தர்மநெறிகளுக்கு எதிரானவர்கள். ஆனால் ஷங்கரைப் பாருங்கள் நேர்மையில்லாதவர்களை அந்நியன் மூலமாக அவ்வப்பொழுது கிருமிகளுக்குக் கிள்ளிப் போட்டுக்கொண்டிருக்கிறார்.
பின் குறிப்பு : தலைப்பைப் படித்துவிட்டு வில்லிவாக்கம் பக்கத்தில் சுஜாதா பெயரில் ஒரு புதிய ஊர் வந்திருக்கிறது என்று நினைத்தால் நான் பொறுப்பல்லன்.
பிரபலங்கள் எழுதினால் பிழைகள் கூட பிரசுரிக்கப்படும். சாமான்யர்கள் எழுதும் நல்ல படைப்புக்கள் கூட புறக்கணிக்கப்படும். பத்தைரிக்கைகளின் வெகு கால நிலை இதுதான்.
எளிமையாக கூற வேண்டும் என்று அரைகுறை கருத்துக்களளை கூறுவது ஆபத்தான விடயமே.உங்கள் கருத்துக்களுடன் உடன்படுகிறேன்.
ராஜ்குமார்
//அப்துல்கலாம் கூட "என்ன ரங்கராஜன் இப்படி சதா கதைப்புத்தகத்தை படித்துக்கொண்டு எப்படி நீ முதல் ரேங்க் வாங்குறே" என்று கேட்பார். ஆனால் இவர்களைப் போல முழுவெட்டியாக இருந்ததில்லை என்பது நிச்சயம். //
[2] நீங்கள் எழுதின சுஜாதா டைப் பத்தியை விகடனுக்கு அனுப்பிப் பாருங்கள்.
உடனே போடுவார்கள்
அச்சு அசல் அப்படியே ர.ராஜந்தான்.
உங்களை(யும்) சுசாத்தா ரொம்ப பாதிச்சு இருக்கார் வெங்ஸ்..:-)
vengkattidamirunthu oru laittAna pathivu.
உண்மையில் சுஜாதாவை லயிக்காமல் இந்த (வருங்கால) க.பெ எழுத முடியாது. உங்களை வாசிக்க ஆரம்பித்த காலந்தொட்டு – உங்களையும், சுஜாதாவையும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை – அதை இங்கு மீண்டும் நிரூபித்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.
முதல் முறை படித்தபோது "சுஜாதா"வை அப்படியே மேற்கோள் காட்டுகிறீர் என்றே எண்ணினேன். அந்த அளவுக்கு அட்சர சுத்தமான Parody.
அன்பு கூறியதிலும் உண்மை இருக்குமோ எனத் தோன்றுகிறது,
Venkat,
This sort of a PARODY, I have not read for a long, long time
வலைப்பதிவுகள் பற்றி சுஜாதா சொன்னதை அவரின் நேர்காணலில் இடம்பெற்ற வலைப்பதியும் நண்பர் ஒருவர் சொன்னார்.சிரிப்பு தான் வந்தது. இவர்களெல்லாம் தான் நவீன சினிமாவிற்கும், நவீன தமிழ் இலக்கியத்திற்கும், அறிவியல் தமிழுக்கும் அத்தாட்சியாக ஊடகங்களால் நிறுத்தப்படுகிறார்கள் என்று நினைக்கும் போது சிரிப்பினை அடக்க முடிவதில்லை.
//உயிர்மை துவக்கப்பட்ட பொழுது அதில் கண்ணீரில்லாமல் யாப்பு, கண்ணீரில்லாமல் கர்நாடக சங்கீதம் என்ற ரீதியில் எழுதினார். அப்பொழுதும் அவரது வெண்பா பாடத்தில் இருக்கும் விஷயங்களைப் பற்றி உயிர்மைக்கு எழுதியிருந்தேன்.//
எப்படி போடுவார்கள். கண்டிப்பாக மனுஷ்யபுத்திரன் போட மாட்டார். அவர் மேல் தனிப்பட்ட முறையில் மரியாதை இருப்பினும், சுஜாதாவின் கதைகளை தொகுப்பாக போடும் ஒருவரால், சுஜாதாவுக்கு எதிராக பிரசுரிக்க முடியுமா. நீங்கள் 'உண்மை, போதி, கவிதாசரண், மண் ' போன்றவற்றில் முயற்சிக்கலாம். என்ன சிக்கல், உங்களையும் பதிப்பாளரையும் சேர்த்து மொத்தம் 176 பேர் படிப்பார்கள் அவ்வளவுதான்
//மிக நீளமாக சுஜாதாவின் பல ஒற்றை வரி விளக்கங்களில் இருக்கும் அபத்தங்களைப் பட்டியலிட்டிருந்தேன். கிணறுதான்; கல்தான்//
//தனக்குக் கருத்துச் சொல்ல இடமில்லாத இடத்தில் பெருந்தன்மையாக அதை ஒத்துக்கொண்டு விலகும் மனப்பக்குவம் இல்லாதவர்களை என்னென்று சொல்வது.//
வெங்கட்
உங்கள் கற்பனையும் கட்டுரையும் நன்று.
பல காலம் முன் கிளோனிங் பற்றி சுஜாத எழுதியதை படிக்க நேரிட்டது. அதில் பல கருத்துக்கள் எனக்கு உடன்பாடில்லாததால் நான் க்ளோனிங்கில் உள்ள பல நிலைகளையும், பலவகைகளையும் அ திலும் sub cloning and CDNA cloning இவற்றுக்கிடையே ஆன வேறுபாட்டையும், அவை ஒவ்வொன்றும் பயன் படுத்தும் முறை பற்றியும், PCR பற்றிய சில கருத்துக்களுக்கு தக்க ஆதாரத்துடன் மாற்று கருத்தையும் எழுதி இருந்தேன். ஆதரமான அறிவியல் கட்டுரைகளையும் படிவெடுத்து அனுப்பி இருந்தேன்.கிடைக்கவில்லை என்று சொல்வர்களோ என்று delivary confirmation கேட்டு தனிசெலவுடன் அனுப்பி இருந்தேன். இப்போதும் விடாமல் மதனின் சில அபத்தமான கருத்துக்களை எதிர்த்து எழுதி அனுப்புகிறேன். மடலில் அல்லாமல் மின்மடலில் அனுப்புவதால் செலவு குறைவு.
ராஜ்குமார், அல்வாசிட்டி, சுதர்ஸன், அன்பு, மாயவரத்தான் – உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
[3] வளருகின்ற பருவத்தில் சுஜாதாவை நிறைய படித்ததால் பாதிப்பு இருக்கலாம். உண்மையில் அவருடைய எழுத்து நடையில் நிறைய நல்ல விஷயங்கள் இருக்கின்றன.
நான் சராசரியாக எழுதும்பொழுது அவரை மாதிரி எழுதவில்லை என்று நினைக்கிறேன். வலிந்து அவரைப் பகிடி செய்வது சாத்தியம் என்று காட்டத்தான் அதை எழுதினேன். இதேபோல அப்புஸாமி ஸ்டைல், கழுகார், தினத்தந்தி – எல்லாமே சாத்தியம்தான். ஜெயமோகனின் எழாவது கொலை படித்திருக்கிறீர்களா? முதல் அத்தியாயத்தை எழுதியவர் பெயரை எழுத்துவிட்டுப் படிக்கக் கொடுத்தால் சுஜாதா-தான் என்று துண்டைப் போட்டுத் தாண்டுவார்கள். ஒரு ஆளின் மூன்று நான்கு புத்தகங்களைப் படித்திருந்தால் அவரைப் பகிடி செய்வது சாத்தியமே.
[8] நாராயணன் – நம்ம மக்களுக்கு இதெல்லாம் தேவையாக இருக்கிறது. மன்மோஹன் சிங் அமெரிக்காவுடன் செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்ததைப் பற்றி அஜீத்குமார் கருத்தைக் கேட்பார்கள். நாஸாவின் அடுத்த ஷட்டிலைப்பற்றி திரிஷாவிடம்.
உயிர்மைக்கு அந்த மின்னஞ்சலை அனுப்பியபிறகுதான் எனக்கு அது உறைத்தது.
[10] பத்மா – உண்மையில் நாமெல்லாம் இதுபோன்ற விஷயங்களை வலைப்பதிவுகளில் விரிவாக எழுதவேண்டும் என்று தோன்றுகிறது. வாரப்பத்திரிக்கைகளின் அபத்தங்களை அடையாளம் காட்டி, அதைத்தாண்டி விரிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் துறையில் பரிச்சயமிருக்கும் ஒவ்வொருவரும் எழுத வேண்டும்.
பத்திரிக்கைகளுக்கெல்லாம் கடிதம் எழுதுவதைக் காட்டிலும் இது உத்தமமான செயல் என்று தோன்றுகிறது.
<b>பத்மா – உண்மையில் நாமெல்லாம் இதுபோன்ற விஷயங்களை வலைப்பதிவுகளில் விரிவாக எழுதவேண்டும் என்று தோன்றுகிறது.</b>
ஏற்கனவே எழுதித்தான் வருகின்றீர்கள், தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.
[12] // ஜெயமோகனின் எழாவது கொலை படித்திருக்கிறீர்களா? முதல் அத்தியாயத்தை எழுதியவர் பெயரை எழுத்துவிட்டுப் படிக்கக் கொடுத்தால் சுஜாதா-தான் //
வெங்கட், அது நான்காவது கொலை.
http://www.thinnai.com/st0805021.html…
[16] கரீட்டா ஸொன்னபா – தேங்கஸு
வெங்கட், பகிடி படுஜோர். என் கருத்துக்கள் சில இரவியின் பதிவில்: http://ravisrinivas.blogspot.com/2005/07/blog-post_25.html#c112239418042816802…
என்ன பண்றது நம்மளப் பொருத்தவரை., சுஜாதான் சிறந்த அறிவியல், புனைவு எழுத்தாளர், கணணிய நம்மூருக்கு அறிமுகப் படுத்துனதே அவர்தான்., சோ தான் சிறந்த பத்திரிக்கையாளார், அரசியல் விமர்சகர் (பின்ன நடிக, நடிகர் படமில்லாம பத்திரிக்கை நடத்துராரு தெரியுமா?)., சு.சாமிதான் அரசியல் உலகத்துலயே டாப். இப்படிப்பட்டவர்களுக்கு கிடைக்கும் வெளிச்சம்., பஞ்சு, பசின்னு எழுதரவங்களுக்கு, உயிரப் பணயம் வச்சு காட்டுல கொலைகாரன சந்திக்கிரவங்களுக்கு, விவசாய மக்களோட மக்களா உழைச்சுட்டு மிச்ச நேரத்துல அரசியல் பண்றவங்களுக்கு கிடைக்கனும்னு எதிர்பார்க்கறது ரொம்ப தப்புதான். என்னா பண்றது நமக்கே பக்கத்துல யேசனை சொல்றதுக்கு குகன் .ஐ.ஏ.எஸ்ல்ல தேவையா இருக்கு., நமக்கு மனசுல படுறத சொன்னா போதும்., எப்பிடி சொல்லலாம்னு? கூட்டமே ஓடிவந்துரும். இங்க கொடுக்கிற வெளிச்சத்தை அங்கேயும் கொடுங்க போதும்னு பத்திரிகையாளர்களை பதிவுகள் வாயிலாக கேட்டுக் கொள்வோம்., இதுதான் நான் சொல்ல வர்றது., பிரச்சனைய கிளப்ப நான் வரல.
நல்ல ந{க்}கல்.பத்மாவிற்கு பொறுமை அதிகம் என்று நினைக்கிறேன். சுஜாதா ஜீனோம் பற்றி எழுதினார். அப்போது அமெரிக்க மானுட ஜீனோம் திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஜீனோம் ஆய்வுகளை அறிமுகம் செய்வதற்காக ஒரு நூலினை ஏராளமான படங்களுடன் வெளியிட்டிருந்தார்கள். அது சுஜாதா எழுதியதை விட எவ்வளவோ மேல். அமெரிக்காவில் பள்ளி மாணவர்களுக்காக எழுதப்படும் அறிமுக நூல்கள் சிறப்பாக உள்ளன. தமிழிலும் இது சாத்தியம்.
பத்மா – உண்மையில் நாமெல்லாம் இதுபோன்ற விஷயங்களை வலைப்பதிவுகளில் விரிவாக எழுதவேண்டும் என்று தோன்றுகிறது. //வாரப்பத்திரிக்கைகளின் அபத்தங்களை அடையாளம் காட்டி, அதைத்தாண்டி விரிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் துறையில் பரிச்சயமிருக்கும் ஒவ்வொருவரும் எழுத வேண்டும்.
பத்திரிக்கைகளுக்கெல்லாம் கடிதம் எழுதுவதைக் காட்டிலும் இது உத்தமமான செயல் என்று தோன்றுகிறது.//
இது சரி. ஆனாலும் பத்திரிக்கைகளுக்கு கடிதம் எழுதத்தான் வேண்டும். அவர்களும் தெரிந்துகொள்ளவேண்டுமல்லவா?
வெங்கட்,
//ராஜ்குமார், அல்வாசிட்டி, சுதர்ஸன், அன்பு, மாயவரத்தான் – உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
//
நாங்கள் மட்டும் நன்றிக்கு உரியவர் இல்லையா, என்ன
[22] அதானே?
[23] சுரேஷ், அதே தான்
ஆலையில்லாத ஊரில் இலுப்பைப்பூ கதைதான் சுஜாதாவின் இருப்புக்குக் காரணம்! நாம் செய்யும் தவறு!
//முதல் முறை படித்தபோது "சுஜாதா"வை அப்படியே மேற்கோள் காட்டுகிறீர் என்றே எண்ணினேன்.//
நான் கூட சுஜாதா எங்கேயோ எழுதியதை இங்கே பதிவு செய்தீர் என நினைத்தேன்
[22] பாலா – இன்னா நைனா ஃபீல் ஆவுற! அத்த எளுதும்போது மேல இருக்கறவங்க பேரு இல்லாத்தையும் பீராஞ்சு எடுத்தேனா, அதுல ஒம் பேரு உட்டுப்போச்சு அண்ணாத்தே. எச்சூஸ் பண்ணிக்கோ. இதுக்கெல்லாம் ஃபீலாவாதே, உனுக்கு ஒரு தனி டாங்க்ஸு.
[23] சுரேசு, சுரேசு – பாத்தியா, எனுக்கு வரவர கண்ணு ஸர்யா தெர்ய மாட்டேனுது. உட்டுப்போச்சு வாத்தியாரே. உனுக்கும் தனி டாங்க்ஸு.
சில் ஸமயம் நெறய கருத்து சேந்துபோயிடுதா, அவஸர அவஸரமா ஏதாச்சும் எளுத வேண்டிக்கீது. அப்ப ஒன்னுத்தயும் ஸ்ர்யா கவ்னிக்க ஆவமாட்டேங்குது.
[27] சர்தான், வாத்தியாரே, அல்லாத்தையும் கண்டுகினு நம்மள கள்டி உட்டியோன்னு கொஞ்சம் ஃபீலாயிட்டேன், ஒன் டாங்ஸுக்கு ஒரு டாங்க்ஸுப்பா, வரட்டா
எ.அ. பாலா
I Enjoyed your message and style
Thanks!
சரியான நக்கல் விட்டிருக்கிறீர்கள். பின் குறிப்பும் "நச்"
பாட்டெழுதிப் பெயர் வாங்கும் புலவர்கள் சிலர்
குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்கள்தான் பலர்
[32] ஆமாம் தருமி சார்
பாட்ல பிழை இருக்குன்னு யாரும் புலம்பல. பிழையைத்தான் பாட்டுன்னு தலைல கட்றாங்கன்னு சொல்றோம். அதுக்கு என்ன செய்யலாம்?