• காகிதக் கடிகாரம்

    by  • June 19, 2005 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    flexible clock
    மின்புத்தகங்கள் (eBooks), மின்மசி (eInks), நெகிழ்திரைகள்(Flexible Displays) போன்ற நுட்பங்களில் ஏற்பட்டுவரும் வளர்ச்சியைத் தொடர்ந்து கவனித்துவருகிறேன். இதற்கு முன் என்டெர்ரா (nTera) நிறுவனத்தின் நானோநுட்பத் திரையைப் பற்றியும் சோனியின் மின்புத்தகத்தைப் பற்றியும் எழுதியிருந்தேன். மின்புத்தகத்தின் அடிப்படையில் உள்ள மின்மசி பற்றியும் அதன் இயற்பியல் அடிப்படையான மின்துளைபரவல் (electrophoresis) பற்றியும் ஏற்கனவே எழுதியிருந்தேன். இந்தக் கருவிகள் தொடரில் அடுத்ததாக வெளிவந்திருப்பது வளையும் மின்கடிகாரம் (மின் வளைக்கடிகாரம்?).

    மின்மசியை அடிப்படையாகக் கொண்ட கடிகாரத்தை ஜப்பானின் (வேறெங்கே இது நடக்கும்!) சிட்டிஸன் நிறுவனம் டி.ஐ.சி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கிறது. இது பார்க்கப் பிரகாசமானது, நெகிழக்கூடியது (இரும்பு அல்லது தோல்பட்டி இல்லாமல் நேரடியாக மணிக்கட்டைச் சுற்றி ஒட்டிக் கொள்ளலாம்), மிக மிகக் குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது.

    இப்பொழுதிருக்கும் எலெக்ட்ரானிக் கைக்கடிகாரத்தில் ஊடுஎதிரொளித்தல் (transreflection) என்ற முறை எழுத்துக்களின் கறுப்பு நிறத்திற்கும் பின்புலத்தில் இருக்கும் வெள்ளைக்கும் வித்தியாசம் காட்டப் பயன்படுத்தப்படுகிறது. காஸியோ, சிட்டிஸென் போன்ற டிஜிட்டல் கடிகாரங்களில் இருக்கும் எண்களை நேராக வைத்துப் பார்த்தால்தான் தெளிவாகத் தெரியும். ஒரு புறம் சாய்த்துப் பார்த்தாலோ, வேறு கோணத்திலிருந்து பார்த்தாலோ தெளிவாகத் தெரியாது. ஆனால் இந்த மின்மசி கொண்ட கடிகாரத்தின் எண்கள் கிட்டத்தட்ட வெள்ளைத்தாளில் அச்சிடப்பட்ட எழுத்தைப் போலத் துல்லியமாகத் தெரியும். இத்தனைக்கும் இதன் மின் தேவை வழமையான டிஜிட்டல் கடிகாரங்களில் நூற்றிலொரு பங்குதான்.

    இந்த நுட்பத்தினால் கடிகாரங்கள் உலகில் பெரிதாக மாறுதல்கள் நடக்கப்போவதில்லை. மாறாக இதை வைத்துக்கொண்டு பல பாஷன் சமாச்சாரங்களை உருவாக்க முடியும். உதாரணமாக, இதை டி-சர்ட்டில் வைத்துத் தைத்துவிட்டால் விட்டை விட்டுக் கிளம்பும்பொழுது வெறும் முதுகாகவும் பள்ளிக்கூடத்தில் நல்ல பிள்ளையாக சில வாசகங்களும் மாலையில் தெருவில் சுற்றும்பொழுது விடலைக்கேற்றபடி விவகாரமான வாசகமும், இன்னும் அருகில் நண்பன்/நண்பி வரும்பொழுது விசேட வாசகங்களையும் காட்டமுடியும். (டி-சர்ட்டை வாஷிங் மெஷினில் போடுவதற்கு முன் ஞாபகமாக உரித்துவைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்).

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *