• கண்ணில் தெரியும் கதைகள் – நானொரு பொன்னோவியம்

    by  • January 23, 2005 • இசை • 9 Comments

    ஐந்து இசையமைப்பாளர்கள் ஒரு படத்தில் ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனியாக இசையமைத்தது எனக்குத் தெரிந்த வகையில் தமிழ்த் திரையுலகில் இரண்டு முறைதான் நடந்திருக்கிறது. 2002 ஆம் ஆண்டு ‘ஹேய் நீ ரொம்ப அழகா இருக்கே’ என்று அபத்தமாகத் தலைப்பிடப்பட்டு ஒரு திரைப்படம் வந்தது. அதற்கு ஸ்ரீனிவாஸ், ராகவ்-ராஜா, முருகவேல், ரமேஷ் விநாயகம், அரவிந்த்-ஷங்கர் (அஞ்சா, இல்ல ஏழா?) ஒவ்வொருவரும் தனித்தனியே ஒரு பாடலுக்கு இசையமைத்தார்கள். கேளடி கண்மணி, ரிதம் போன்ற அற்புதமான பாடல்களைக் கொண்ட படங்களை இயக்கிய வஸந்துக்கு ஏன் இப்படி ஒரு அபத்தமான சிந்தனை வந்தது என்று தெரியவில்லை.

    பாடல் -
    நானொரு பொன்னோவியம் கண்டேன்

    படம் – கண்ணில் தெரியும் கதைகள் (1980)

    இசை – இளையராஜா

    பாடியவர்கள் – எஸ்.பி.பாலசுப்ரமணியம், பி.சுசீலா, எஸ்.ஜானகி

    பாடலாசிரியர் – புலமைப்பித்தன்

    இதற்கு முன்னால் 1980ல் திரைப்பட நடிகர் ஏ.எல்.ராகவன் ‘கண்ணில் தெரியும் கதைகள்’ என்று ஒரு படத்தைத் தயாரித்தார். சரத்பாபு, ஸ்ரீபிரியா, வடிவுக்கரசி நடித்த இந்தப் படத்திற்கு ஜி.கே. வெங்கடேஷ், டி.ஆர். பாப்பா, கே.வி.மஹாதேவன், சங்கர்-கனேஷ், இளையராஜா, என்று ஐந்து இசையமைப்பாளர்கள் இசையமைத்திருந்தார்கள். இப்பொழுது என் மனதில் இரண்டு பாடல்கள்தான் நினைவிலிருக்கின்றன. சங்கர்-கனேஷ் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம், ஜிக்கி பாடிய “நான் ஒன்ன நெனச்சேன்” என்ற இனிமையான பாடல் இன்றைக்கும் தெவிட்டாதது.

    ஆனால் படத்தில் எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னால் வந்தது இளையராஜாவின் ‘நானொரு பொன்னோவியம் கண்டேன்’ பாடல்தான். தமிழ் திரையில் ஜானகியும், பி.சுசீலாவும் இணைந்து பாடிய ஒரே பாடல் இதுதான் என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு தென்னிந்தியத் திரையுலகை ஆட்சி செலுத்திய இவர்களுடன் இன்னொரு ஜாம்பவானான எஸ்.பி.யும் இணையும் ஒரே பாடல் இது.

    நடனத்திற்காக இசையமைக்கப்பட்ட அற்புதமான பாடல். மோஹன ராகத்தில் இளையராஜா பல (பலப்பலபல என்றுதான் சொல்லவேண்டும்) அற்புதமான பாடல்களைத் தந்திருக்கிறார். இன்றைக்கும் என்னை வியப்பில் ஆழ்த்துவது அக்னி நட்சத்திரத்தின் நின்னுக்கோரி வர்ணம் பாடல். இந்தப் பாடலும் மோஹனம்தான்.

    அற்புதமான துவக்கம், சலங்கை குலுங்க நடனமாது நடந்துவருவதற்காக. தொடர்ந்து மிருதங்கம், வயலின், வீணை. எஸ்.பி.பியின் ஆரம்பமே கம்பீரமாக இருக்கும். இளையராஜாவின் முத்திரையான சேர்குரல்கள் பாடல் முழுவதும் அற்புதமாக… “பார்வை அழைப்பதும், பாவை தவிப்பதும் ஏனடி, ஏனடி பைங்கிளியே” என்ற வரியில் எஸ்.பி.பியின் குரல் நெளிவைக் கேட்டுப் பாருங்கள். இதேபோல பாடல் முடியும் வரிகளிலும்.

    புலமைப்பித்தன் பல நல்ல பாடல்களை எழுதியிருக்கிறார். சில நாட்களுக்கு முன் நான் எழுதிய ராத்திரியில் பூத்திருக்கும் பாடலும் புலமைப்பித்தன் எழுதியதுதான். நீண்ட நாட்களுக்குப் பிறகு பாரதி திரைப்படத்தில் ‘எதிலும் இங்கும் இருப்பான்’ பாடலைப் இளையராஜாவின் இசைக்காக எழுதினார்.

    இந்தப் பாடல் எப்படிப் படமாக்கப்பட்டது என்பது தெரியாது. கட்டாயம் சரத்பாபு ஆடுவதை என்னால் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை. (ஒரு மூலையில் ஜிப்பா போட்டுக்கொண்டு பேஸ்த் அடிக்க நின்று கொண்டு பாடுவார் என்று நினைக்கிறேன்). அதேபோல வடிவுக்கரசி ஆடியிருக்கவும் முடியாது. ஸ்ரீபிரியா – பரவாயில்லை. யாருக்காவது நினைவிருக்கிறதா?

    படம்.. வழக்கம்போல பெட்டிக்குள் போய் முடங்கி ஏ. எல் ராகவனை (எங்க கும்மோணத்துக்காரர்) தலையில் துண்டு போடவைத்தது. ஆனால் ஐந்து இசையமைப்பாளர்கள், இரண்டு பாடல்களில் அபூர்வ சேர்க்கை (எஸ்.பி.பி-வாணி ஜெயராம்-ஜிக்கி, எஸ்.பி.பி.-சுசீலா-ஜானகி) என்று தமிழ்த் திரையிசை உலகில் ஏ.எல்.ஆர் தனி இடத்தைப் பிடித்துக் கொண்டுவிட்டார்.

    9 Responses to கண்ணில் தெரியும் கதைகள் – நானொரு பொன்னோவியம்

    1. January 23, 2005 at 5:03 pm

      pulmaipithhan has written many beautiful songs for MGR films.the other singers in the film you have written about are TMS, trichy loganathan and ALR if i remember it right.i concur with ur views on this song.btb ps and sj have sung songs together.one i recollect is a song in karpura theepam

    2. -/r.
      January 23, 2005 at 6:41 pm

      இந்தப்பாடல் ஞாபகம் இருப்பதற்கான காரணம், அதிலே விரைந்துவரும் "இளமை அது புதுமை" என்ற தொடர் காரணமாக; இதுவெல்லாம் இலங்கையிலே ஒளியம் வந்த புதிதிலே வந்த பாடல்கள்; விழியக்கொட்டகைகளிலே முழுப்படம் ஓடமுன்னாலே, பாடற்காட்சிகளாக "ஒலியும் ஒளியும்" ஓட்டுவார்கள். அப்போது கண்டவை; (இன்ன்னுமிரண்டு பொன்னோவியம் பாடல்களும் அதேகாலத்திலே உலாவின. பாக்கியராஜின் படமொன்று; "பொன்னோவியம் ஒன்று ரதியின் வடிவிலே பூமியில் வந்தது எழில் கொண்டு." ரஜனி & ரத்தியின் கழுகிலே மற்றொன்று, இளையராஜாவு ஜானகியும் பாடிய "பொன்னோவியம்… கண்டேனம்மா."
      / தமிழ் திரையில் ஜானகியும், பி.சுசீலாவும் இணைந்து பாடிய ஒரே பாடல் இதுதான் என்று நினைக்கிறேன்/
      குறைந்த பட்சம் வேறு இரண்டு பாடல்கள் இருப்பதாகச் 'சொல்லத்தான் நினைக்கிறேன்.' "பல்லவி என்று மன்னன் கேட்கப் பாடுவேனடி", "குங்குமப்பொட்டு குலுங்குதடி." [முன்னர் இலங்கை வானொலியிலே 'மகளிர்கேட்டவை' / "இருவர் பாடியவை" இலே அடிக்கடி போவன]

    3. ரோஸாவசந்த்
      January 23, 2005 at 10:49 pm

      அற்புதமான பாடல். நன்றி!
      நல்லவேளை நானும் பாடல் காட்சியை பார்த்ததில்லை. (பார்த்திராத போது எதற்காக சரத்பாபுவை வைத்து கற்பனை செய்ய வேண்டும்? காட்சியாய் பார்த்திராத தமிழ் சினிமா பாடல்களே கற்பனையை தூண்டுவதாய், இன்னும் பிடித்தமாய் இருக்கிறது. உதாரணமாய் 'பூங்கதவே தாழ் திறவாய்' கேட்கும்போதெல்லாம் பாடல் காட்சி வந்து தொந்தரவு செய்கிறது)

      ரமணி குறிபிட்ட 'பொன்னோவியம் ஒன்று ரதியின் வடிவில்..' (SPB -வாணி) ஒரு அற்புதமான பாடல். ஆனால் அதை மலையாளத்தில் ஜேசுதாஸ் பாடி கேட்டபின் அதுதான் பிடித்திருந்தது. 'லக்ஷாட்சர்ங்ஙளில்.. ' என்று தொடங்கும். மேல் விவரம் தெரியவில்லை.

    4. ரோஸாவசந்த்
      January 24, 2005 at 3:35 am

      வெங்கட், ஏதாவது செய்தாக வேண்டும், அல்லது என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கள்.

      மேலே உள்ள தூள்.காம் சுட்டியை சுட்டினால் உங்கள் சட்டிகுள்ளேயே குதிரை ஓட்டிகொண்டிருக்கிறது. அதை வெட்டியும், ஒட்ட முடியவில்லை, வெறும் புள்ளிகள் மட்டுமே ஒட்டுகின்றன. இதை இதற்கு முன்னும் உங்க்ள் தளத்தில் அனுபவத்திருக்கிறேன்.

    5. ரோஸாவசந்த்
      January 24, 2005 at 3:38 am

      வெட்டி ஒட்ட முடிகிறது. என்ன பிரச்சனை என்று புரிந்தது.

    6. January 24, 2005 at 6:00 am

      "நானொரு பொன்னோவியம்" என்று வாசித்ததும், "இளமை அது புதுமை" என்ற குரவை(chorus)தான் முதலில் காதில் ஒலித்தது. மற்றுமொரு அருமையான பாடல். இதுபோன்ற பாடல்களைத் திருச்சி வானொலி நிலைய ஒலிபரப்பில் கேட்டதாக நினைவு. ராஜாவின் இசையின் மீதான மதிப்பு கூடிக்கொண்டேதான் செல்கிறது. நன்றி வெங்கட்!

    7. January 24, 2005 at 3:16 pm

      -/r ஜானகி-சுசீலா பாடல்கள் பற்றிய தகவலுக்கு நன்றி. இந்தப் பாடல் சேவை-2ல் மிகப் பிரபலமாக இருந்தது. ஏ எல் ராகவனின் பூர்வீக எங்களுக்கு அடுத்த தெரு, படம் வருவதற்கு முன்னால் இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு ராகவன் பணத்தை வாரிக் கொட்டப் போகிறார் என்று கனவு கண்டுகொண்டிருந்தோம். என்னுடைய நண்பன் ஒருவன் இசைத்தட்டு விற்பனையில் இருந்தான். அங்கே படம் வருவதற்குள்ளாகவே நாங்கள் இதைக் கேட்டுக்கேட்டு தட்டைத் தேய்த்திருக்கிறோம்.

      ரோ.வ. சுட்டியில் சொடுக்கினால் தூள்க்குப் போகிறதே! என்ன பிரச்சனை என்று புரியவில்லை.

    8. ரோஸாவசந்த்.
      January 25, 2005 at 2:47 am

      சொடுக்கினால் இப்போது போகிறது. அப்போது உங்கள் தளத்தின் முகப்பு பக்கத்திற்கு(மீண்டும், மீண்டும்) போனது. இதற்கு முன்பும் ஒருமுறை இதே போன்ற பிரச்சனையை கவனித்திருக்கிறேன். என்னவென்று புரியவில்லை. அடுத்தமுறை நேர்ந்தால் சொல்கிறேன்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *