• ஒளிரும் இந்தியாவும் உண்மைகளும்

    by  • March 15, 2005 • பொது • 23 Comments

    நாராயணனின் பெரிய பட்டியல் கவர்ச்சியாக இருக்கிறது. பொதுவில் நான் சொன்ன,

    அதற்கு அறிவுசார் துறைகளில் மாத்திரம்தான் தகுதியிருக்கிறது என்று நம்புவது தவறானது. நம்மிடையே பல துறைகளில் niche சந்தையை உருவாக்கிக் கொள்ளும், அவற்றில் இந்தியாவை வல்லரசாக்கும் திறமை இருக்கிறது. சொல்லப்போனால் அதற்கான அடித்தளங்கள் ஏற்கனவே நம்மிடையே இருக்கின்றன…

    …இப்படி ஒவ்வொரு துறையாக எடுத்துக் கொண்டால் – ஒரு விசேட இடம் இந்தியாவிற்குச் சாத்தியம். இவற்றில் பல கன முதலீடுகள் தேவையற்றவை.

    என்ற கருத்துக்குத்தான் நாராயணன், மருந்து தயாரிப்பில் தொடங்கி எண்ணெய்க் கிணறுகள் வரை உதாரணம் காட்டியிருக்கிறார்.

    அதாவது நான் பரவலாக்கம் செய்ய வேண்டும் என்று சொன்னதன் ஆரம்ப அறிகுறிகளை நாராயணன் அப்படியாகக் காட்டியிருக்கிறார். பிரகாஷ் உடனான என் கருத்தாடலுக்கு நாராயணன் மேலதிக உதாரணங்களைத் தந்திருக்கிறார். நன்றிகள்.

    * * *

    கட்டாயமாக இது நல்ல துவக்கத்திற்கான அறிகுறிதான், ஆனால் “இந்தியா ஒளிர்கிறது” என்றெல்லாம் மார்தட்டிக்கொள்ளப் போதுமானதல்ல. நாம் போகவேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது.

    ஆனால் என்னைப் பொருத்தவரை அந்தப் பட்டியல் ஒன்றும் பிரமிப்பூட்டுவதாக இல்லை. அதாவது இதில் சொல்லியிருப்பதைப் போன்று மருந்து தயாரிப்பு, எண்ணெய்க் கிணறுகள், கார் விற்பனை இதிலெல்லாம் இந்தியா முதல் பத்து (இருபத்தைந்து) நாடுகளில்கூட வராது. இன்னும் சொல்லப் போனால் இதில் இந்தியாவின் வளர்ச்சி வீதத்தைப் பிற நாடுகளுடன் ஒப்பிட்டால் இதெல்லாம் மிகமிகக் குறைவு என்பது புரியும் (பிற நாடுகளின் சந்தைகள் நிறைவடைந்துவிட்டன, இந்தியா இப்பொழுதுதான் துவங்குகிறது எனவே வளர்ச்சி வீதம்கூட இந்தியாவுக்கு எளிது). அதாவது மென்கலன் துறையில் பெயர் சொல்லும் நாடாக இருப்பதைப் போல இந்த எல்லா துறைகளிலும் இந்தியா பெயர் சொல்லத் துவங்கிவிட்டது என்று நினைத்துக் கொள்வது தவறு. இவற்றில் உலக அளவில் இந்தியா 12th man ஆகக் கூட இல்லை.

    எங்களில் பலரும் வெளிநாட்டில் வசித்துக்கொண்டு வெறும் பத்திரிக்கைகளைப் படித்து இந்தியாவைப் பற்றிய மதிப்பீட்டை உருவாக்கிக் கொள்கிறோம் என்று கூறியிருக்கிறார். நானும் இதே நிலையில்தான் இந்தியாவில் இருப்பவர்களும் தகவலைப் பெறுவதாக நினைக்கிறேன். நான் தினசரி மேயும் Times of India, The Hindu, Indian Express தொடங்கி Bussiness India, Economic Times தான் இவர்களுக்கும் தகவல் தீனி போடுகிறது. இதைத் தவிர வேறு எந்த விதத்தில் இவர்களுக்குக் கூடுதல் தகவல் கிடைக்கிறது என்பது தெரியவில்லை. இந்தியாவில் துவக்கப்பட்ட ஆர்க்கிட் மருந்து நிறுவனத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள நான் டவுன் பஸ்ஸில் உட்கார்ந்து கொண்டு ஜன்னல் வழியே பெயர்ப்பலகையைப் பார்க்க முடியாது என்பது உண்மைதான். ஆனால், பொது மதிப்பீட்டை உருவாக்க இன்றைய தகவல் உலகில் இது தேவையில்லை. கூர்மையான அவதானிப்பு வெளியில் இருக்கும்பொழுதும் சாத்தியமே. சில சமயங்களில் இன்னும் கூடுதல் தகவல்கள் கிடைக்கின்றன – உதாரணமாக இரண்டு வாரங்களுக்கு முன்னால் கார் ஓட்டிக்கொண்டிருக்கும்பொழுது ஒரு மணி நேரம் உள்ளூர் அரட்டை வானொலியில் (Talk Radio) இந்தியாவின் தகவல் துறை வளர்ச்சி பற்றிய ஒரு பேச்சு வந்தது. கனேடியர், அமெரிக்கர், பாக்கிஸ்தானியர், சீனர் எனப் பல வம்சாவளியினர், பல்கலைக்கழக மாணவர் தொடங்கி, வணிகவியல் பேராசிரியர், இல்லத்தரசி என்ற பல குறுக்கு வெட்டுகளிலும் வந்து அவர்களது மதிப்பீட்டைச் சொன்னார்கள். பிற நாட்டினர் நம்மைப் பற்றி எப்படி மதிப்பிடுகிறார்கள் என்று சில சமயங்களில் கூடுதல் தகவல்கூட நேரடியாகக் கிடைக்கிறது.

    சொல்ல்ப்போனால், வெளியில் இருந்துகொண்டு எம்மில் சிலரால் கழுகுப் பார்வை பார்க்க முடிகிறது. நாராயணனின் நீண்ட பட்டியலுக்கு இணையான சாதனைப் பட்டியலை நான் வேலை செய்யும் டொராண்டோ பல்கலைக்கழகத்திலிருந்து மாத்திரமே என்னால் காட்டமுடியும். சென்ற இடுகையிலேயே நான் எங்கள் ஆய்வகத்திலிருந்து மூன்று உயர்தொழில் நிறுவனங்களைத் துவங்கியிருக்கிறோம் என்று சொன்னேன். இன்னும் உதாரணத்திற்கு, பல்கலைக்கழகத்தின் வணிக சாத்தியங்கள், வெற்றிகள் பற்றி University of Toronto – Innovations Foundation -ல் பார்த்தால் தெரியும். (கையில் வெண்ணெய் என்று காத்துக் கிடக்கும் சந்தைப்படுத்தவல்ல தொழில்நுட்பங்களை Technology Opportunities பகுதியில் பாருங்கள்). இந்தப்பட்டியல் ஒரு கோடிகாட்டல்தான். அதிக ஆதாயம் தரும் வர்த்தக நிறுவனங்களைத் துவக்க நாங்கள் Innovations Foundations பக்கமே போவதில்லை (அவர்களுக்குப் பங்கு தரவேண்டியிருக்கும்). மிக முண்ணனி என்று பெயரெடுக்காத டொராண்டோவிலேயே இத்தனை சாதனைகள் நிகழ்த்தப்படுவதைப் பார்க்கும் பொழுது இந்தியாவிலிருந்து வரும் செய்திகளை அவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் ஒரு விசேடமாகத் தெரியவில்லை. இந்தியாவின் இத்தனை “அறிவுத்துறை” வளர்ச்சிகளையும் அமெரிக்காவில் ஒரே ஒரு பல்கலைக்கழகம் சாப்பிட்டு முழுங்கிவிடும். இந்த நிலையில் அமெரிக்கர்கள் பேசும் Knowledge based இத்யாதி குழூஉக்குறிகளால் நமக்கு நாமே வெண்சாமரம் வீசுவது மடத்தனம்.

    மீண்டும் சொல்கிறேன்; நாம் அறிவாளிகள், சீனாவில் வெறும் தயாரிப்புதான் வளர்கிறது என்ற பிம்பம் தவறு. இந்தியாவில் ஒரு காப்புரிமை பெறப்பட்டால் சீனாவில் பத்து பெறப்படுகிறது. இந்தியாவை இன்டெல் பார்க்கத் தொடங்கியிருந்தால் சீனாவில் அது ஏற்கனவே கால்பதித்துவிட்டது. மைக்ரோஸாப்ட் இந்தியாவில் செலவிடும் ஒவ்வொரு டாலருக்கும் பத்து டாலர்களை சீனாவில் செலவிடுகிறது. என்னைப் பொருத்தவரை இன்றைய நிலையில் சீனாவைத்தான் நாம் கூர்ந்து கவனித்துப் பாடம் கற்கவேண்டியிருக்கிறது. ஒரே சூழ்நிலையில் நாம் இருவரும் ஒன்றாக வளர்ந்துகொண்டிருக்கிறோம். (புலம் பெயர்ந்த சீனர்கள், புலம் பெயர்ந்த இந்தியர்கள் பற்றி ஒரு பதிவை இன்னொரு நாள் எழுத உத்தேசம்).

    * * *

    என்னுடைய முந்தைய பதிவுற்கு சுந்தரமுர்த்தி, மாண்டி (இப்படியே இவரைச் சொல்லிக் கொண்டிருந்தால் ஒரு காலத்தில் இவரது பெயர் விருமாண்டி என்ற பாடபேதம் வரலாம் :) ), தொடர்ந்து நாராயணனின் பதிவு இவற்றில் காட்டப்பட்டிருப்பதைப் போல இந்தியாவின் இந்த வளர்ச்சி சமாச்சாரங்களில் எத்தனை உண்மையில் இந்தியர்களுக்கானவை என்றும் யோசிக்க வேண்டும். லாட்டரிப் பகுதிகளும் லல்லுப் பிரதேசமும் ஒளிரும் இந்தியா கணக்கிலேயே வராது. இப்பொழுதும்கூட இந்திய நிறுவனங்கள் பிற நாட்டவருக்கான சேவைகளை அடையாளம் கண்டு கவர்வதிலேயே குறியாக இருக்கின்ற்ன. இந்த நிலை நீடித்தால் தனிப்பட்ட நிறுவனங்கள்தான் ஒளிரும் இந்தியாவல்ல. மிட்டலைப் போல காலம் கனிந்துவரும்பொழுது இந்த நிறுவனங்கள் தங்கள் தலைநகரை பாரீஸ்க்கும் , ஸாவோ பௌலோவுக்கும் மாற்றிக் கொண்டு ஓடிவிடும். (இந்தப் புலத்தில்தான் நான் லக்ஷ்மி மிட்டலின் இந்தியக் குடியுரிமையை வியக்கிறேன்).

    * * *

    இப்படியெல்லாம் சொல்வதால் நான் இந்தியாவை மிகவும் மோசமாகச் சித்தரிக்கிறேன் என்று இல்லை. உண்மையில் இந்தியா வளரத் துவங்கியிருக்கிறது. பல பழைய தவறுகள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு தவிர்க்கப்படுகின்றன. ஆனாலும் இன்னும் போக வேண்டிய தூரம் மிக அதிகம். அரசியல்வாதிகளின் ஒளிர்வுகள் எல்லாவற்றையும் அப்படியே பிரதிபலிப்பது நல்லதற்கல்ல. கறாரான சுயமதிப்பீடு நமக்கு மிகவும் அவசியம்.

    என்னைப் பொருத்தவரை இந்தக் கடுமையான மதிப்பீடு நம்மவர்கள் மத்தியில்தான். வேற்று நாட்டவரிடம் பேசும்பொழுது நானும் விட்டுக் கொடுக்காமல் இந்தியாவின் வளர்ச்சியைப் பற்றி – சரியாகச் சொல்லப்போனால் – இந்தியாவில் வளர்வதற்கான சாத்தியங்கள் பற்றி – உயர்வாகத்தான் சொல்வேன். ஆனால், இது அதற்கான இடமல்ல. பிறந்த வீட்டுப் பெருமையை ஒடப்பொறந்தானிடம் (உடன்பிறந்தவனிடம்) சொல்வது அபத்தம். ஒவ்வொருமுறையும் நான் இதையேதான் செய்கிறேன் – முன்பு ஐஐடிக்களைப் பற்றி பெரிதாகப் பேசப்பட்டபொழுதும் இப்படியான மதிப்பீட்டைத்தான் முன்வைத்தேன்.

    * * *

    எங்கோ ஆரம்பித்து எங்கோ போய்விட்டது. பிராகாஷ்க்கும் எனக்கும் இடையில் துவங்கியது “எல்லா துறைகளிலும் இந்தியா மூக்கை நுழைக்கக் கூடாது. தகவல்துறை (அவர் அறிவுசார் துறை என்று பெயரிட்டார்) ‘மாத்திரம்’ கவனம் செலுத்தினால் போதும்” என்று பிரகாஷ்ம். இல்லை இன்னும் உண்மையான வளர்ச்சியை எட்ட இந்தியா பலதுறைகளில் (கவனிக்கவும் எல்லாவற்றிலும் இல்லை) மிகத் தீவிரமாகக் கவனம் செலுத்த வேண்டும் என்றும் நான் சொன்னேன். நாராயணனின் பெரிய பட்டியலும் இதன் முக்கியத்துவத்தைத்தான் காட்டுகிறது. நான் ஆரம்பித்தது லக்ஷ்மி மிட்டலைப் போன்ற பெரும்பணக்காரர்கள் இந்தியாவை மையமாகக் கொண்டு உருவாகத் தடைகள் இருக்கின்றன என்று சொல்லி. இத்தனை உரையாடல்களுக்கும் பிறகும் என்னுடைய அந்தக் கவலை மாறவில்லை. என்னதான் நாம் டாட்டா ஸ்டீஸ் என்று மார்தட்டிக் கொண்டாலும், டாட்டா கிணற்றுத்தவளையாக எஞ்சிக் கிடக்க மிட்டல் தன்னுடைய வணிக சாத்தியங்களை உணர்ந்து இந்தியாவைவிட்டு வெளியேறியதைக் கவனிக்கத் தயங்கக்கூடாது. இந்தோனேஷியாவில் முடியும் என்றால் ஏன் இந்தியாவில் இல்லை?

    மற்றபடி இந்த ஒளிரும் சமாச்சாரத்தில் எல்லாம் எனக்கு முழுவதும் நம்பிக்கையில்லை. அரசியல்வாதிகளின் சொல்லாரங்களுக்கு அறிவுள்ளவர்கள் மயங்கிப்போய் தம்மைத்தாமே புகழ்வது நல்லதற்கல்ல.

    23 Responses to ஒளிரும் இந்தியாவும் உண்மைகளும்

    1. March 15, 2005 at 11:31 pm

      நன்றி வெங்கட். இன்னமும் போகவேண்டிய தூரம் நிரம்ப இருக்கிறது என்பதை கட்டாயமாக ஒத்துக்கொள்கிறேன். நான் குறிப்பிட்டது கண்ணருகில் நீங்கள் பார்க்கும் மாற்றங்கள். எல்லோரும் தான் செய்தித்தாள் படிக்கிறோம். இதில் மாற்றங்களொன்றுமில்லை. ஒரு அடிப்படை விசயத்தை மறந்து விட்டோம் என்று நினைக்கிறேன். இந்தியாவில் ஆங்கிலமென்பது இணைப்பு மொழி, தாய்மொழியின் வழியே நடக்கும் வியாபாரங்கள் மிகக்குறைவு. இது மிக முக்கியமான அடிப்படை. சீனாவில் அது கிடையாது. எந்த நிறுவனம் சீனா போனாலும், சீனமொழி பேசாமல் சீனாவிற்குள் வியாபாரம் செய்ய இயலாது. மேலும் சீனா உலகின் மிகப்பெரிய சந்தை. ஆகவே இந்தியாவில் இன்று ஹிந்தி ஆபிஸ் வெளியிடும் மைக்ரோசாப்ட், சில வருடங்களுக்கு முன்னரே சீனமொழியில் மைக்ரோசாப்ட் ஆபிஸ் வெளியிட்டு விட்டது.ஆக, இந்தியாவை விட சீனாவில் அதிக டாலர்கள் செலவழிக்கிறார்கள் என்பதில் வியப்பொன்றுமில்லை.

      [contd..]

    2. March 15, 2005 at 11:34 pm

      ஆராய்ச்சித்துறை மாணவன் அல்ல நான். நான் ஒரு தொழில்முனைவோன். என் கருத்துக்கள் கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் தொழில்துறையில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றங்கள். இன்னும் சீனாவுக்கு இணையாக முன்னேறவில்லை என்று சொல்லுவதை என்னவென்று சொல்லுவது என்று தெரியவில்லை. என்னை விட உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கலாம், லைசன்ஸ் ராஜ் முடிந்து இன்னும் 15 வருடங்கள் கூட ஆகவில்லை. ஆனால் சீனா தன் முன்னேற்றத்தினை 20+ ஆண்டுகளாக செய்துவருகிறது. இந்தியாவினைப் போன்று அரசியல் ஸ்திரத்தன்மை பிரச்சனைகள் (political stability)சீனாவில் கிடையாது. இங்கே ஒரு திட்டத்தை வரையறை செய்து அதனை செயல்படுத்துவதற்குள் ஏற்படும் சிரமங்கள் சீனாவில் கிடையாது. இதனால் நான் இந்தியாவிற்கு வக்காலத்து வாங்குபவன் அல்ல. இந்தியா என்பது சீனா போல் ஒரு மொழி பேசும் ஒரேவிதமான மனப்பான்மையினை கொண்ட நாடல்ல. இடதுசாரி தொழில்துறை சித்திரவதைகளை மீறி அரசாங்கமும், நிறுவனங்களும், தொழில் முனைவோரும், பணமுதலாளிகளும் இந்தியாவினைப் பற்றி முன்னேற்றத்தினைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

      [contd..]

    3. March 15, 2005 at 11:35 pm

      நீங்கள் போனபதிவிலிட்ட விசயங்களில் எனக்கும் உடன்பாடு உண்டு. இன்னமும் நிறைய துறைகளில் நமக்கு வல்லமை உண்டு, அதனை கண்டறிந்து செயல்வடிவம் கொடுத்தால் மாற்றங்கள் நிறைய நிகழும். லட்சுமி மிட்டல் வெளியேறிய காலகட்டம் வேறு, இன்று அதே லட்சுமி மிட்டல் இந்தியாவில் வந்து உட்கார்ந்து கொண்டு ஒரிஸ்ஸா அரசாங்கத்தோடும், மத்திய அரசோடும் பேசிக்கொண்டிருக்கிறார். வெளியே போன சீன டயஸ்போரா எவ்வாறு சீனாவை பெரிய சந்தையாக முன்வைக்கிறதோ, அதேப்போல் இப்போது தான் இந்திய டயஸ்போரா பேச ஆரம்பித்திருக்கிறது. அவர்களும், நீங்கள் சொல்லும் அறிவுசார் தொழில்களில் தான் ஆரம்பித்திருக்கிறார்கள். இதையும் தாண்டி ஜூனிபர் நெட்வார்க்ஸ் போன்றவர்கள், இணையத்தை & அலுவலக கணினி மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை இணைக்கும் ரொவுட்டர்களின் சந்தையில் சிஸ்கோ போன்ற மிகப்பெரும் நிறுவனங்களோடு மோதி சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

      நீங்களும் நானும் ஒரே விஷயத்தை தான் சொல்லிவருகிறோம், வெவ்வேறு விதமான விதங்களில். நீங்கள் வளர்ச்சி போதாது, இன்னமும் மாறவேண்டும் என்று வலியுறுத்துகிறீர்கள், நான் சில துறைகளில் நாம் வளர்ச்சி பெற்றிருக்கிறோம், இதனையே பிற துறைகளுக்கும் நீட்சி செய்யலாம் என்று கூறியிருக்கிறேன். இந்த நாட்டின் வளர்ச்சிக்காக இன்னமும் கூட ஆழமாக விவாதிக்கலாம், கருத்துரைக்கலாம், சண்டை போடலாம். நம் விவாதங்களினூடே தெளியும் மனங்களிலிருந்து நாளைய இந்தியாவின் தலைமுறைகள் பாடம் கற்று கொள்ளட்டும்.

      [contd..]

    4. March 15, 2005 at 11:37 pm

      சிறு திருத்தம். டாடா ஸ்டீல் பற்றிய தங்கள் குறிப்புகள் ஒரு எதிர்மறை பார்வையை வைக்கிறது. டாடா ஸ்டீலும் உலகமயமாகிவருகிறது. லட்சுமிமித்தல் போல் அடாவடியாய் எல்லா தொழிற்சாலைகளையும் வாங்கி உற்பத்திதிறனை அதிகரிக்காமல், தேர்ந்தெடுத்து தன் "வாங்குதல்களை" தொடங்கிவிட்டது. பார்க்க:The new world of Tata Steel

    5. March 16, 2005 at 2:54 am

      For information – an Article by Deepak Lal (don't know who he is)

      http://www.rediff.com/money/2005/mar/16guest.htm…

    6. March 16, 2005 at 10:20 am

      சுவாரசியமாக உங்கள் வாதங்களை கவனித்துக் கொண்டிருந்தேன். வெங்கட்டின் கவலை எனக்கு புரிகிறது. நாம் போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய. பாஸிடிவ் என்ணம் மிக அவசியம், ஆரோக்கியமான வளர்ச்சிக்கு. ஆனால் அதற்காக "நாம் அறிவாளிகள்" என்ற கண் மூடித்தனமான மிதப்பு நம்மை உண்மை நிலை உணர விடாமல் தேங்க வைத்துவிடும். கடந்த சில வருடங்களாக சீனாவிலும் மற்ற நாடுகளிலும் கிளைகள் திறந்து தொழில் செய்யும் NIIT போன்ற நிறுவனங்கள், அந்த நாடுகள் அறிவுசார் தொழில்களிலும் – "லும்" என்பதில் அழுத்தம் கொடுத்து படியுங்கள் – விரைவாக தேர்ச்சி பெற்றுக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை அடிக்கடி எச்சரிக்கை விட்டுக்கொண்டிருக்கின்றன. இருந்தாலும் நாம் போகும் திசை சரியானதுதான். என்ன… கொஞ்சம் தயங்கி தயங்கி நடக்க ஆரம்பிக்கும் குழந்தைபோல் இருக்கிறது வேகம். நாலடி நடந்தால் தொபுகடீர் என்று விழுகிறோம். அதற்குள் ஒலிம்பிக் சாம்பியனாவதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்துவிடுகிறோம்.

    7. March 16, 2005 at 10:56 am

      [1] இந்த ஆங்கில மொழி அறிவு வெறும் பஜனை. இதெல்லாம் இல்லாமல் உலகை வளைத்துப் போடமுடியும் என்றும் ஜப்பான், கொரியா, தைவான் காட்டியபிறகும் (ஜெர்மனியையும், ப்ரான்ஸையும் பற்றி சொல்லவேண்டாம்) நாம் இன்னும் காலணி கால அடிமைச் சிந்தனையை விட்டு வெளியே வர மறுக்கிறோம். பொருளாதாரம், அறிவியல் தொழில்நுட்பம் இவற்றில் வளர ஆங்கிலம் அவசியம் என்ற பஜனையை நிறுத்தும்பொழுதுதான் நாம் உருப்படுவோம்.

      சீனாவில் மைக்ரோஸாப்ட் பொதி வளர்க்க ஒற்றை மொழிதான் காரணம் என்றில்லை. அங்கே அதி விரைவாக உள்ளுர் லினக்ஸ்-ம் வளர்ந்துகொண்டிருக்கிறது. பெரிய சந்தைதான் காரணம் என்றிருந்தால் மைக்ரோஸாப்ட் செர்பிய மொழியில் வெளியிடுவதற்கு முன் தமிழில் வெளியிட்டிருக்கும். நம்முடைய ஆங்கில மோகமும் சுதேசி சிந்தனைக் குறைவும் (நம்க்கு வேண்டிய மென்கலனைக்கூட நாம் ஒருபோதும் உருவாக்கவில்லை. மாறாக சீனத்திலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கும் கையடக்க எலெக்ட்ரானிக் அகராதி ஒவ்வொரு சீன மாணவனின் கையிலும் இருக்கிறது. இதைத் தங்களுக்குத் தாங்களே வடிவமைத்துக் கொண்டவர்கள் சீனர்கள்) மைக்ரோஸாப்ட் அசிரத்தையாக இருக்கத் தூண்டுகின்றன.

    8. March 16, 2005 at 11:00 am

      [2] நீங்கள் சொல்யிருப்பதற்கு எதிர்மறையான கருத்தை கீழே அலெக்ஸ் சுட்டியிருக்கும் தீபக் லாலின் கட்டுரை சொல்கிறது. சீனர்கள் முற்றிலுமாக இடதுசாரி சிந்தனையை விட்டு வெளிவந்துவிட்டார்கள். இந்தியர்கள் இன்னும் பழமையில் மூழ்கிக் கிடக்கிறார்கள் என்கிறது அக் கட்டுரை :)

      இன்னொன்று அரசியல் ஸ்திரத்தன்மை எல்லாம் இனி தேவையில்லை. யார் வந்தாலும் இதை நிறுத்தமுடியாது (இந்தியாவிலும் சீனாவிலும்). இனி பொருளாதாரக் கொள்கைகள் வர்த்தக நிறுவனங்கள் கையில். நாளைக்கே இந்தியாவில் கம்யூனிஸ்ட்கள் ஆட்சிக்கு வந்தாலும் இது மாறாது.

    9. March 16, 2005 at 11:05 am

      [3] இதுதான் நான் வேண்டுவது. நாம் உரக்கச் சிந்திக்க வேண்டும். இதில் என்னுடைய அறியாமை வெளிப்படும் என்று எனக்கே தெரியும். நான் பொருளாதார, வர்த்தக நிபுணன் அல்லன். நான் உளறிக்கொட்டி முட்டாளாக மட்டம் தட்டப்படும் சாத்தியம் இருக்கிறது. ஆனால், இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் நாம் தைரியமாக நம் கருத்துக்களைச் சொல்வது பேசத் தயங்கும் பிற்ரையும் சிந்திக்கத் தூண்டலாம்.

      ஆமாம், நாம் இருவரும் ஒரே கருத்தைத்தான் சொல்கிறோம். இந்தியா தன் திறமைகளை "எல்லா துறைகளிலும்" கண்டறிந்து அவசரமாக முன்னேறிச் செல்லவேண்டும். இழந்த வாய்ப்புகள் திரும்பக் கிடைக்கமாட்டா. ஏற்கனவே சீனர்கள் ஐந்துவருடங்கள் முன்னால் இருக்கிறார்கள்.

      ஆனால், நாம் இருவரும் ஒத்துப்போவதை அடையாளம் காட்டுவதைவிட மாறுபடும் கருத்துகளையே நான் அதிகம் பேசுகிறேன். இது ஒருவர் முதுகை ஒருவர் சொறிந்துவிட்டுக் கொள்ளக் கிடையாதல்லவா? எனவே, உங்களுக்கு எதிர்மறையாக நான் எழுதவதைப் போல இருந்தால் என் உள்ளக் கிடக்கையை நீங்கள் அறிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

    10. March 16, 2005 at 11:09 am

      [5] அலெக்ஸ் – சுட்டிக்கு நன்றி. நீங்கள் சொல்லியிருக்காவிட்டால் நான் பார்த்திருக்க மாட்டேன். கொஞ்சம் நல்ல விஷயங்களும் நிறைய அபத்தங்களும் அதில் இருக்கின்றன. கட்டுரையாசிரியருக்கு தனியார் பள்ளிக்கூடம், இட ஒதுக்கீடு இவற்றைப் பற்றிச் சொல்ல இதைப் பயன்படுத்துகிறார் என்று தோன்றுகிறது. இதிலெல்லாம் அவர் கருத்துகள் அபத்தங்களாக இருக்கின்றன.

    11. March 16, 2005 at 12:48 pm

      [9] வெங்கட்,

      என்னுடைய நீளமான பதிவுக்கு காரணமான முக்கிய culprit :-) மித்தல் தான். அப்பேர்கொத்த ஆசாமியை, இந்தியாவில் இருந்து துரத்தி விட்டார்கள், இருந்தாலும், அவர் இந்தியக்குடிமகனாகத்தான் இருக்கிறார் என்கிற உங்கள் வியப்புதான், என்னை எழுதத் தூண்டியது, இப்போதும் எழுதுகிறேன். made in india campaign க்கும் இதற்கும் சற்றும் தொடர்பில்லை. இந்த brick & mortar vs knowledge based industries பிரச்சனைக்குப் பிறகு வருகிறேன்.

      1. பரங்கியர்கள் நாட்டை விட்டுச் சென்ற போது இருந்த நிலைமை நீங்கள் அறியாததில்லை. நூற்பாலைகள், ரசாயனங்கள் உற்பத்தி போன்ற process industries, ஆட்டோமொபைல்ஸ் போன்ற ஒரு சிலவற்றைத் தவிர்த்து நம்மிடம் கனரகத் தொழில்கள் ஏதும் இல்லை. பெரிய அணைத்திட்டங்கள் இல்லை. அடிப்படை உள்கட்டுமான வசதிகள் இல்லை. விவசாயம் மோசமான நிலைமையில் இருந்தது. அப்போதைய பிரதமர் நேருவின் சோஷலிசப் பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையில், உற்பத்தித் துறை முழுவதையும் அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஒரு தனியார் கம்பெனிக்கு இருக்கும் டைனமிஸம் , ஒரு அரசாங்கத்துக்கு இருக்காது. மிக நிதானமாக திட்டங்கள் நிறைவேறின. நடுவில் இருந்த அரசு ஊழியர்கள் மெத்தனத்தால் சிவப்பு நாடா என்ற பதம் பிரபலமானது. இந்த கட்டுப்பாடுகளால், திறமையும், பணபலமும் கொண்ட பல தொழில் அதிபர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் இந்த லட்சுமி மித்தல். அவர் இந்தியாவை விடுத்து பல்வேறு நாடுகளில் தன் தடத்தைப் பதித்ததற்குக் காரணம் இருக்கிறது. இப்போது இந்தியாவில் தொழில் துவங்க ஆசைப்படுவதற்கும் காரணம் இருக்கிறது. தன் இந்தியக் குடியுரிமையை விட்டுத் தராமல் இருப்பதற்கும் காரணங்கள் இருக்கலாம். இந்தியா தொழில் துறையில், அலட்சியமாகவும், 'தெரவுசு' பற்றாமல் இருப்பதையுன் உணர்த்த, மித்தல் ஒரு எடுத்துக்காட்டாக விளங்க மாட்டார்.

    12. March 16, 2005 at 12:51 pm

      2. பின்னூட்டங்களில், என்னை நானே ( அல்லது நம்மை நாமே ) வியந்து சுய-பாராட்டு செய்து எழுதிய மாதிரி நினைவில்லை. சொல்லப் போனால், உலகத்தை வென்று விட்டதாகவெல்லாம் நினைக்கவில்லை. விடுதலை வாங்கிய நாள் முதலாக, கடந்த பதினைந்து ஆண்டுகள் வரை, இந்தியன் என்ற சொல், பிற நாட்டவர்க்கு எதனை நினைவு படுத்தும்? பாம்புகள்? குரங்குகள்? காந்தி? ஆதிவாசிகள்? ஆனால், மேற்கத்திய நாடுகளில், to be bangalored என்ற பிரயோகம் இன்று புழக்கத்தில் வரக் காரணமாக இருந்தது எது? உலகத் தரத்துக்கு ஒரு பொருளை/சேவையை நம்மால் உருவாக்க முடியும் என்று நமக்கு நம்மை அறிமுகம் செய்த துறை எது? இந்தக் கேள்வியை சற்று பாமரத்தனமாக அணுகினால், யாருமே, " ஏதோ விசயம் இருக்குப்பா" என்று சொல்ல இயலும் இல்லையா? இப்போது கூட நாம் எல்லாவற்றையும் வெட்டி முறித்து விட்டோம் என்று சொல்லவில்லை. இந்தியத் தயாரிப்பாக ஒரு ஆபரேடிங் சிஸ்டம் கூட இல்லை என்கிற போது, நாம் இன்னும் துவங்கிய நிலையிலேயே இருக்கிறோம் என்பது புரிகிறது. ஆனால், இலக்காவது தெரிகிறது இல்லையா? இதிலே நம்மை விடவும் அறிவு அதிகம் உள்ளவர்கள் தான் நமக்கு போட்டி. இருக்கட்டும். நம்மை ஓவர் டேக் செய்துவிடுவார்கள் என்ற பயமும் நம்மிடம் இருக்கட்டும். அந்தப் அச்சம் இல்லாமல் வாழ்க்கை ஏது?
      (contd..)

    13. March 16, 2005 at 12:52 pm

      3. எனக்கு இந்த அறிவுசார் தொழில்களின் உள்விவகாரங்கள் பற்றி அத்தனை தெரியாது. நான் கேட்கிற கேள்விகள், இவர்கள் ஏன், ( இப்போது ) இந்தத் தொழிலுக்கு இந்தியாதான் வசதி என்று சொல்கிறார்கள்? அப்படிச் சொல்கிறார்கள் என்பதால், அதற்கு ஒரு காரணம் இருக்கிறது ( என்ன காரணம் என்பது பற்றிக் கூட நான் கவலைப்படவில்லை). அதை மேலும் வலுப்படுத்தி, இந்தத் அறிவுசார் தொழில் நம்மிடமே இருக்க வேண்டும் என்றால் அதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன? என்பதுதான். சென்னை ரிச்சி தெரு பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். மின்னணுச் சாதனங்கள் விற்பனைக்குப் பெயர் போனது. காலங்காலமாக மின்/மின்னணுச் சாமான்கள் விற்று வருகிறார்கள். நவீன மின்னணுச் சாதனங்கள் வந்த போது, ரேடியோ, டூ இன் ஒன் விற்றுக் கொண்டிருந்தவர்கள், ஜாகையை மாற்றிக் கொள்ளவில்லை. விசிஆரும் கலர் டீவியும் விற்றார்கள். பின் கணிணிக்கு மாறினார்கள். இன்றைக்கு ரிச்சித் தெருவில் இருக்கு 80 விழுக்காடு கடைகள், கணிணி சாமான்களைத்தான் விற்கிறது. சென்னையின் electronic hub ஆக, ரிச்சித் தெருவை, வணிகர்கள் மாற்றும் போது, அதே attitude இருந்தால், நம்மவர்கள் சேர்ந்து, அறிவு சார் துறையின் ஹப் ஆக, நம்ம ஊரை மாற்ற இயலாதா என்று தான் – அதிகாரத்துடன் அல்ல – வியப்பாகக் கேட்கிறேன். இன்னொருத்தன் வந்து நம்மை ஓவர்டேக் செய்துடுவான் என்று ஜாகையை மாற்றுவது அல்லது பலப்படுத்துவது , எது ஒரு முதலாளியின் அணுகுமுறையாக இருக்கவேண்டும்? ( இதிலே பலமாக ஊன்றிய பிறகு அல்லது ஒரே சமயத்தில் வெவ்வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவது, என்பது அந்த முதலாளியின் ஸ்ட்ராடஜியைப் பொறுத்தது. ஒன்றன் பின் ஒன்றாக, நிதானமாக என்று நான் நினைக்கிறேன். ஒரே சமயத்தில் முக்கியமானவை அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்பது நீங்கள் சொல்கிறீர்கள். இவை இரண்டைத் தவிர்த்தும் இன்னும் சிறப்பான வழிமுறை ஏதேனும் இருக்கலாம்)

      (..contd)

    14. March 16, 2005 at 12:54 pm

      3. கனரகத் தொழில்கள், தொலைத் தொடர்பு, ரயில்வே என்று நீங்கள் பட்டியலிட்டு இருந்தீர்கள். அத்தனையும் நல்ல யோசனைகள். இந்தியத் தொழில்துறையில், நடக்கிற பெருமுதலீடுகளை, என் உத்தியோகம் காரணமாக, உன்னிப்பாகக் கவனித்து வருகிறவன் என்கிற காரணத்தில், ஒன்றை உறுதியாகச் சொல்ல முடியும். நிலைமை அத்தனை மோசமில்லை. தனிப்பட்ட புள்ளிவிவரங்கள் போரடிக்கும் ( விவாதத்தின் போக்கில், பின்னால் தேவைப்பட்டால் தருகிறேன்) கடந்த பட்ஜெட்டில், உற்பத்தித் துறைக்கு என்று தனியாக ஒரு பெருந் தொகையை ஒதுக்கி இருக்கிறார். இந்தத் தொகை, தொழில் முனைவோருக்கு, புதுத் திட்டங்களுக்கான கடனுதவியாகவும், சப்சிடி களாகவும், சலுகைகளாகவும், மூடிய ஆலைகளைத் திறப்பதற்காகவும் பயன் படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஆயத்த ஆடைகள் கோட்டா முறை நீக்கப்பட்டதில் இருந்து பல மாநிலங்களில் டெக்ஸடைல் துறைகளில் புது ரத்தம் பாய்ச்சியது போல் இருக்கிறது. இவை நடக்கிற கட்டுப்பாடுகள் மிகுந்த காலங்களையே கடந்துவிட்டோம். ( பொருளாதாரச்) சுதந்திரம் கிடைத்து பதிமூன்று ஆண்டுகள் தான் ஆகின்றது. இது வரையிலும் பெரிதாக ஏதும் தவறு செய்த மாதிரி தெரியவில்லை. இன்னும் கொஞ்சம் காலம் கழித்து, மதிப்பீடு செய்தால் சரியாக இருக்கும்.

      (…contd)

    15. March 16, 2005 at 12:55 pm

      5. கவனமாகப் பார்த்து நடக்கிற வேளையில், நம்முடைய முயற்சிகளை நாமே வியந்து கொண்டால், வேலை கெடும் என்ற உங்கள் அக்கறை புரிகிறது. ஆனாலும்…

      6. எம்.பி3 ஆக இருக்கும் ஒலிக் கோப்புகளை ஸ்ட்ரீமிங் ஒலியாக வலையில் எப்படி ஏற்றுவது. அதற்கு என்று ஏதாவது இணையத்தில் செயலி இருக்கிறதா? வெகு அபூர்வமான பாடல்கள் சிலவற்றை வைத்துக் கொண்டு எப்படி வலையில் ஏற்றுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறேன்.

      (end)

    16. March 16, 2005 at 2:37 pm

      [15]

      {முதல் ஐந்தையும் சாய்சில் விட்டுவிட்டேன் :) ரெண்டுபேரும் என்ன சொல்றோம்னு ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சுகிட்டோம்தானே!}

      6. ஸ்டீரீமிங்க் ஆடியோ ஒன்னும் கஷ்டமில்லை. தனியாக எழுதுகிறேன். ஆமாம், எங்கிட்டுப் போடப் போவதாக உத்தேசம். வேணுமின்னா இங்கனயே உங்களுக்கும் ஒரு தனியிடம் போட்டாப் போவுது. நம்ம ஸர்வர்ல நெறயா எடமிருக்கு. (என் ஈமெயில் vvenkat அட் sympatico டாட் ca)

    17. March 16, 2005 at 2:39 pm

      [6] அருணா, நான் சொல்ல வந்ததை முற்றாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள். சந்தோஷம்.

    18. March 16, 2005 at 2:57 pm

      //{முதல் ஐந்தையும் சாய்சில் விட்டுவிட்டேன் ரெண்டுபேரும் என்ன சொல்றோம்னு ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சுகிட்டோம்தானே!}//

      மிகச் சரி

      //ஸ்டீரீமிங்க் ஆடியோ ஒன்னும் கஷ்டமில்லை. தனியாக எழுதுகிறேன்//

      சீக்கிரம் எழுதுங்க…

      //ஆமாம், எங்கிட்டுப் போடப் போவதாக உத்தேசம். வேணுமின்னா இங்கனயே உங்களுக்கும் ஒரு தனியிடம் போட்டாப் போவுது. நம்ம ஸர்வர்ல நெறயா எடமிருக்கு. (என் ஈமெயில் vvenkat அட் sympatico டாட் ca)//

      ஓ.. இது வேற இருக்கில்லே… நெட்டுலே நிறையா ·ப்ரீ சர்வர் இருக்காமே? அங்க இடம் புடிக்க முடியாது?…

    19. March 16, 2005 at 3:39 pm

      [18]நெறையா ஃப்ரீ ஸர்வர்லல்லாம் பாட்டுப் போட உடமாட்டனுங்க.

    20. Padma Arvind
      March 16, 2005 at 3:42 pm

      venkat
      Somehow I think you and Narayanan both discuss issues at a idealistic India when everything else remains a consatnt. Please understand politics play a big role in India along with corruption. We sell vaccines that come with WHO label, we give trouble to FORD fo rnot paying the bribe, we oppose an dreject every plan just because we are in the opposition. Do not forget taht we have problems with infrastructure too.
      Most of the time pals by experts are rejected as something else is preferred by a politicina or hi srelative. Unless we curb some currpition, we can not get anywhere.
      BTW, your thinking amazes me.

    21. March 16, 2005 at 11:00 pm

      ஒரே உரத்த சிந்தனை தான் வெங்கட் – நாம் முன்னேறிக்கொண்டிருக்கிறோம் ஆனால், முன்னேறும் வேகம் பத்தாது, கொஞ்சம் அசந்தால், சுயபெருமை பேசிக்கொண்டிருந்தால், மற்றவர்கள் நம்மை தூக்கி சாப்பிட்டு விடுவார்கள்.
      ஆங்கிலம் ஏன் இன்னமும் இங்கிருக்கிறது, ஏன் ஜப்பான் முன்னேறியது என்பதெல்லாம் தனி விவாதம். அது தாய்மொழி கல்வி வகையறா. நான் மையப்படுத்துவது சந்தையை மட்டுமே. ஒரு மொழி பேசும் மிகப்பெரிய சந்தை, அது மைக்ரோசாப்டானாலும், இண்டெல்லானாலும், லைனக்ஸ்னாலும் சரி. சந்தை இருக்கிறது. பொருட்கள்/சேவைகள் தயாராகிறது அவ்வளவுதான்.

      அலெக்ஸ் பாண்டியன் கொடுத்த ரெடிப் சுட்டி ஒரு அபத்தக்களஞ்சியம். இதே ரெடிபில் நான் பல்வேறு சுட்டிகள் காட்ட இயலும். ஆனாலும் விவாதம் திசைமாறிப்போகும் அபாயமிருப்பதால், வேண்டாம். ஓரு 3-4 நாட்கள் கழித்து வந்து எழுதுகிறேன். பத்மா அரவிந்தின் கூற்று கவனிக்கப்படவேண்டிய ஒன்று.

    22. March 17, 2005 at 1:45 am

      ஐயா – நான் சுட்டியை இட்டது – வெறும் செய்திக்காக. அதில் எழுதப்பட்டுள்ள விஷயங்கள் எல்லாம் எனக்கு உடன்பாடு என்ற கருத்தில் இல்லை. இந்த விவாதத்தில் இங்கே நடக்கும் விவாதங்கள் பல நல்ல கருத்துகளை எடுத்து வைக்கிறது.. நன்றி..!

      இதோ இன்னோர் சுட்டி :-) ) செய்திக்காக மட்டும்
      http://economictimes.indiatimes.com/articleshow/1054228.cms…
      <<<<<<<<
      ET: You have still retained your Indian passport. Does that ever cause any problems in your global operations? Have you ever thought of changing it?
      <<<<<<
      LM: Having an Indian passport causes no problem. I have no intention to change this.
      >>>>>>>>>>>

    23. March 17, 2005 at 5:59 am

      [22] ஆமாம் அலெக்ஸ். நீங்கள் சுட்டியது வெறும் செய்தியைத்தான். நான் தான் என்னுடைய விமர்சனமாக அந்த இரண்டுவரிகளை எழுதினேன்.

      இந்தச் சுட்டிக்கும் நன்றி. பார்க்கிறேன். எவ்வளவு தேடித்தேடி படித்தாலும் சமயத்தில் சில முக்கியமானவை நண்பவர்கள் வழியாகத்தான் வருகின்றன. நன்றிகள்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *