என் அறிவியல் கட்டுரைகளும் மொழிநடையும்
by வெங்கட் • May 11, 2005 • இலக்கியம் • 22 Comments
பிரகாஷ் என்னுடைய பின்னூட்டப்பெட்டியில் கேட்டிருந்த கேள்வி தொடர்பாக . (அந்தப் பதிவின் தலைப்புக்குத் தொடர்பில்லாதது என்ற வகையில் இதைத் தனியே போடுகிறேன்).
பொதுவாக அறிவியல் விஷயங்களைப் பற்றிப் பேசும் போது, ‘நீங்கள் அனைவரும்’ , எதற்காகவோ, ஒரு இறுக்கமான நடையைக் கையாள்கிறீர்கள். இசை பற்றியோ, சினிமா பற்றியோ, மற்ற பொது விஷயங்கள் பற்றியோ எழுதும் போது, இருக்கும் இளகலான, தோள்மீது கைபோட்டு அணைத்துச் செல்லக்கூடிய பாவனையை, அறிவியல் கட்டுரைகள் எழுதும் போது, வேண்டுமென்றே கழற்றி வைத்து விட்டு, கையில் பிரம்புடன் நிற்கும் கண்ணாடி போட்ட வாத்தியார் பிம்பத்தை அணிந்து கொள்ளுகிறீர்களோ என்று நினைக்கிறேன். இது உங்கள் கட்டுரைகளை, சிற்றிதழ்களில் படித்து வரும் ( இணையத்துக்கு எல்லாம் வராத ) என் நண்பர்கள் சிலரின் அபிப்ராயமும் இதுதான்.[இது மாதிரியெல்லாம் கூட தமிழ்லே வருதா.. என்று வியப்பது வேறு விஷயம்]
நான் கடந்த நான்கு/ஐந்து வருடங்களாக அறிவியல் கட்டுரைகளை எழுதிவருகிறேன். சில விமர்சனங்களையும் பொதுவில் ஊக்குவிப்புகளையும் பெற்றுவருகிறேன். நிறைய பாராட்டுகளும் வருகின்றன. (ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்ற விதத்திலேதான் இந்தப் பாராட்டுகளைப் பெற்றுக் கொள்கிறேன்).
சென்ற வாரம் பதிப்பாளர் தமிழினி வசந்தகுமார் என்னுடைய முதல்புத்தகமான “குவாண்டம் கணினி” முழுவதும் விற்றுத் தீர்ந்துவிட்டது என்று சந்தோஷமாக எழுதியிருந்தார். மனதுக்குள் மத்தாப்பாகத்தான் இருந்தது. என்னை நம்பி பதிப்பித்த வசந்தகுமாரை ஏமாற்றவில்லை என்ற நிம்மதி எல்லாவற்றையும்விட முக்கியமாக. ஒரு வயது/நான்கு வயது பிள்ளை மாத்திரமே இருந்தபொழுது இந்த விபரீத விளையாட்டுகளுக்கெல்லாம் நேரம் கிடைத்ததைப் போல நான்கு வயது/எட்டு வயது ரெட்டை வால்களை வைத்துக் கொண்டு சாத்தியமாவதில்லை. இப்போதைக்குக் காலச்சுவடில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நானோ நுட்பத்தைப் பற்றிய தொடர்கட்டுரையை மாத்திரமே ஒப்புக் கொண்டு எழுதிவருகிறேன். முன்னொரு காலத்தில் எழுதிவைத்த லினக்ஸ், தளையறு மென்கலன், திறமூலங்கள் பற்றிய கிட்டத்தட்ட முக்கால் புத்தகத்திற்கான சமாச்சாரத்தை இப்பொழுது தமிழினிக்காகச் செப்பனிட்டு விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறேன். தகுதி இருக்கிறதா இல்லையா என்று தெரியாது. நம்மூர் மக்களுக்கு இதெல்லாம் பற்றி வேறு யாரும் சொல்ல முயலாத நிலையில், நானாவது முயற்சி செய்யலாமே என்று தோன்றுகிறது.
இந்த முயற்சிகளைப் பற்றி என்னிடம் கதைப்பவர்களைச் சரியாக இரண்டு பாதியாகப் பிரிக்கலாம். ஒரு சாரார் நீங்கள் எளிமையாகச் சொல்கிறீர்கள், சொல்வது புரிகிறது, இப்படியே தொடருங்கள் வகை. இன்னொரு சாரார் “ஏன்னங்க, அறிவியல்னு வந்தாலே நீங்க இப்படிப் புரியாத பாஷைல எழுதிறீங்க” என்று சொல்பவர்கள். இவர்களில் பலர் புண்படுத்த வேண்டாமே என்று “நீங்க எழுதறது புரியுது, இன்னும் கொஞ்சம் ஈஸியா படிக்கிறா மாதிரி எழுதினா நல்லா இருக்கும்” என்று சொல்வார்கள்.
என்னைப் பொருத்தவரை நான் தமிழில் அறிவியல் எழுத முன்னோடிகளாகக் கருதுபவர்கள் யார்? வானொலி மாமா தொடங்கி, மணவை முஸ்தபாவரை, கலைக்கதிர் தொடங்கி தமிழக அரசுப் பாடநூல்கள் வரை தமிழில் நான் படித்த பல நடைகள் என்னுள் இருக்கின்றன. New Scientist, Science, Nature, Scientific American, Wired இங்கெல்லாம் வரும் பொதுமக்களுக்கான கட்டுரைகளின் பாதிப்பும் இருக்கிறது. இன்றைக்குத் தமிழில் இதெல்லாம் எழுதத் தலைப்படுபவர்கள் யாரும் சுஜாதாவை ஒதுக்கிவிட முடியாது. தமிழில் அறிவியல் கட்டுரைகளைப் பாமரர்களுக்காக எழுதி அங்கீகரிக்கப்பட்ட வெற்றியைப் பெற்றவர் அவர்தான். முதன் முதலாகப் பெரிய அளவில் வாரப் பத்திரிக்கைகளில் தொழில்நுட்ப (இவர் உண்மையான அறிவியலைப் பற்றி சொல்லிக் கொள்ளும்படி எழுதவில்லை என்பது எ.தா.அ). சமாச்சாரங்களை எழுதியவரும் சுஜாதாதான். இவருக்கு இயற்கையாக வாய்க்கப்பெற்றிருந்தது இவருடைய சுலபமான நடை. இந்த நடை பெரும்பாலும் ஆங்கிலத்திலிருந்து வருவது (இது தமிழுக்கு அவர் அளித்த பெரிய கொடை என்பதும் எ.தா.அ). இதைச் சிரத்தையெடுத்துக் கொண்டு இன்னும் கூராக்கிக் கொண்டார். நில்லுங்கள் ராசாவே, பத்து செகன்ட் முத்தம் போன்றவற்றுக்குப் பயன்படுத்தும் அதே நடையைத் தன்னுடைய நுட்பக் கட்டுரைகளிலும் பயன்படுத்தினார். இதுவே அவரை ஒரு அளவுக்கு மீறி ஆழமான விஷயங்களைப் பேசுவதற்குத் தடையாக இருக்கிறது. இந்த நடையில் படித்த தகவலைப் பரிமாறிக்கொள்ளும் ஆர்வம் இருக்குமேயொழிய தான் சிந்திப்பதைப் பற்றி பிறருக்குச் சொல்லி புரிதலை ஆழமாக்கும் நோக்கம் இருக்காது. இணையம் அகலப்பாட்டை போட்டுக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்துவிட்ட இன்றைக்கு இன்னொரு சுஜாதா தேவையில்லை. எனவே என் நடையை சுஜாதாவிற்கு மாறாக வரையறுத்துக் கொள்கிறேன் (இதுவே அவரைப் படித்ததற்கு நான் செய்யும் உண்மையான மரியாதை என்று கருதுகிறேன்).
நான் அறிவியல்/நுட்ப சமாச்சாரங்களைப் பற்றி எழுத முற்பட்ட பொழுது இதைத்தான் என்னுடைய துவக்கமாகக் கொண்டேன். என்னாலானது இதற்கு அடுத்த கட்ட முயற்சியாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய துவக்க விதி. இது கட்டுரைகளின் உள்ளடக்கம் மாத்திரமல்லாது நடைக்கும் பொருந்தும். முதன் முதலாக நான் எழுதித் திண்ணையில் பதிப்பான அறிவியல் கட்டுரையின் துவக்கத்தில் இப்படி வருகிறது:
இது அவ்வளவு எளிதான காரியமில்லை. ஒருசெல் உயிரிகளும், உயிரியல் அமைப்புவரிசையின் அடித்தட்டில் இருக்கும் நுண்ணுயிரிகளுக்கும் இத்தகைய மரபுச் சொற்றொடர்கள் பல்லாயிரக்கணக்கான எழுத்துக்களைக் கொண்டவை இதில் ஒருசில உயிரிகளுக்கே தற்சமயம் முழுமையான மரபு வரைபடம் தயாராகியுள்ளது.
இதையே சுஜாதா எழுதியிருந்தால் இப்படி எழுதியிருக்கக் கூடும்
இதைச் செய்யறது ஜல்லியடி சமாச்சாரம் இல்லை. ஒருசெல் அமீபா, சிக்கலில்லாத மைக்ரோப்ஸ் இதுக்கெல்லாமே ஜீன் ஸீக்வன்ஸ் பல ஆயிரம் அட்சரம் இருக்கும். இப்போதைக்கு இந்த மாதிரி சிம்பிளான சில ஜீவராசிகளுக்குத்தான் ஜீன் மேப் ரெடியாகியிருக்கிறது”
இதைப் படிக்கும் ஆங்கிலம் தெரியாத வாசகனுக்கு ஜீன் ஸீக்வன்ஸ்னா என்னனு தெரிந்து கொள்வது சுலபமில்லை. அதைவிட முக்கியமாக மரபுச் சொற்றொடர் அப்படீன்னா உள்ளுணர்வினால் மரபு விஷயங்களை வாக்கியமா எழுதிவைப்பது என்று புரிய சாத்தியம் இருக்கிறது. (இதுதான் தாய்மொழி வழிக் கல்வியின் உன்னதம், உள்ளுணர்வினால் கற்றுக்கொள்வது மழுங்கடிக்கப்படாமல் வளர்க்கப்படும். இதைத் தெரியாத அஞ்ஞானபீடங்களை என்ன செய்வது என்று தெரியவில்லை).
குவாண்டம் கணினி என்ற கட்டுரையில்
ஒளியணுக்களுக்குத் திசைப்பண்பு உண்டு; அது அத்துகளின் முனைப்பு எந்த திசையில் இருக்கிறது என்பது. இந்தக் கணினித் திரைக்குள்ளாகச் செல்லும் ஒளியணு இரண்டு திசைகளில் அதிரலாம் – ஒன்று இந்த வரி அமைந்த திசை (நெடுக்கு) அல்லது இவ்வரிக்குச் செங்குத்தாக (குறுக்கு). சோடிங்கரின் பூனையைப் போல இவற்றையும் நாம் அறிய முடியாது. ஆனால் ஒரு சோதனை வழியாக இதை அறிந்தால் (அறிய முடியும்; சில கண்ணாடிகள் குறுக்கு அதிர்வை முழுங்கிவிடும், நெடுக்குதான் வெளிவரும்), அதனுடன் வரும் (அல்லது கண்ணாடி வழியே வராமல் வேறு வழியே செல்லும்) இன்னொரு ஒளியணுவின் அதிர்வும் தீர்மானிக்கப்பட்டுவிடும். இதற்குத் தொலைவிருந்து செயற்படுதல் எனப் பெயர்.
இதையே
போட்டான் ஒவ்வொன்னுக்கும் ஒரு டைரக்க்ஷன் இருக்கும். போலரைசேஷன் (ஆதிசேஷன், அல்சேஷன் இல்லை)-னு சொல்லுவாங்க. இந்த சயின்டிஸ்டெல்லாம் இப்படி வாயில் நுழையாத பெயரை வைக்கக் கூடாது என்று யாராவது ஒரு அவசரச் சட்டம் போட வேண்டும். போட்டான் ரெண்டு திசைல அதிரலாம், ஒன்னு இந்த வரி இருக்கெற அதே திசைல, இன்னொன்னு இந்த மளிகை கடைல ஜாபிதா எல்லாம் ஒரு ஆணில குத்திவைச்சிருப்பாங்கள்ள அதே மாதிரி எழுதின எழுத்துக்கு செங்குத்தா இருக்கலாம். இதெல்லாம் சோடிங்கர் பூனை மாதிரி கண்கட்டுவித்தை. கண்டவர் விண்டிலர்னு திருமூலர் சொன்னா மாதிரி. ஸயின்டிஸ்டெல்லாம் சோதனை பண்ணி இதைக் கண்டுபிடிப்பாங்க. சில கிளாஸ்ல பாரலல் போலரைசேஷன்தான் வெளில வரும். பர்ப்பென்டிகுலர் கபளீகரம். ஆனா ஒரு போட்டானைக் கண்டுபிடிச்சா இன்னொன்னு என்னன்னு தெரிஞ்சுடும். இதுக்கு ‘ஆக்ஷன் அட் அ டிஸ்டன்ஸ்னு’ பேரு (ஜேம்ஸ் பாண்ட் பட டைட்டில் மாதிரி இருக்கில்ல).
என்று சொல்லலாம். ஆனால், அடிப்படை அறிவியல் சமாச்சாரங்களைச் சொல்ல முற்படும்பொழுது எளிமைப்படுத்தப்பட்ட நடை முழு அபத்தமாகப் போகிறது. அடுத்த கட்டத்திற்குப் போகாமல் சுஜாதாவை நிறுத்தி வைத்தது இதுதான்.
உடனே அடுத்த கேள்வி வரும்; “உங்களுக்குத்தான் இப்படி ஜோவியலா எழுதவருதில்ல, ஆதிசேஷன், அல்சேஷன், ஜேம்ஸ்பாண்ட் அப்படீன்னு. உங்க தமிழ்கூடவே இதையும் சேத்துக்கிட்டா என்னவாம்?”
லாம் தான். ஆனால் உடனடியாக வாசகர் கவனம் சிதறடிக்கப்படும். ஆதிசேஷனைப் பற்றி சிந்திக்க்காமல் அல்சேஷனின் குரைப்பைக் கற்பனை செய்துகொள்ளாமல் கொஞ்சம் மனக்குதிரையை இருக்கிக் பிடித்துக் கட்டுரையில் சவாரி செய்யும் பேரன்பர்கூட திருமூலரிடம் திணறிப்போவார். அடுத்ததாக ஜேம்ஸ்பாண்ட் வந்தவுடன் அறிவியலைக் காற்றில் விட்டுவிட்டுப் போய்விடுவார். முழுக்க முழுக்க பொழுதுபோக்கிற்காகச் சினிமா, இசைபற்றி எழுதும் பொழுது பிரகாஷ் சொன்னபடி தோளில் கைபோடுவது சாத்தியமாகும்பொழுது அறிவியலை எழுதும்பொழுது (புரிதலுக்காக) இது சாத்தியமாவதில்லை. இசையையோ, அல்லது சினிமாவையோ பற்றி தீவிரமாக எழுதுபவர்களுக்கும் இதனால்தான் நடையை இறுக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனந்த விகடன் சினிமா விமர்சனத்திற்கும் உயிர்மையில் வரும் திரைப்படக் கட்டுரைக்கும் இதனால்தான் வேறுபாடு வருகிறது.
இதில் குறைந்தபட்ச சாத்தியம் தோளில் கைபோட முடியாவிட்டாலும், கைகோர்த்துக் கொண்டு பக்கத்தில் நடப்பது. என்னுடைய இலக்கை இப்படித்தான் நான் நிர்ணயித்துக் கொண்டிருக்கிறேன். தொடர்ச்சியாக என்னுடைய நடையைக் கூடியவரை எளிமைப்படுத்திக் கொண்டு வருகிறேன். ஆனால் கொச்சைப் படுத்திவிடக்கூடாது என்ற கவனம் அதிகம் இருப்பதால் இந்த மாற்றம் மிக மிக மெதுவாகத்தான் நடக்கிறது.
என்னுடைய குவாண்டம் கணினி புத்தகத்தின் முன்னுரையில் இப்படி எழுதினேன்,
… தமிழில் அறிவியல், தொழில்நுட்பம் எழுதும் ஒருசிலரும் தனக்குத் தெரியும் என்று காட்டிக் கொள்வதற்காகவோ, சேதி சொல்வதற்காகவோதான் எழுதுவதாகத் தோன்றுகிறது.
இந்த நிலையில் அவர்களுக்கு பிரமிப்பூட்டுவதோ, கிளுகிளுப்பூட்டுவதோதான் இலக்காக ஆகிப்போகிறது. இப்படி மீச்சிறு வகுத்தியின் எல்லைக்குள்ளே வாசகனை நிறுத்திவைத்தும், காலம் காலமாக அந்த எல்லையைக் குறுக்கிக் கொண்டும், கனமான விஷயங்களே நம் மொழியில் இல்லாமல் போக்கிவிட்டார்களோ என்ற அச்சம் அயர்வைத் தருகிறது. இதற்குச் சற்று வெளியில் நின்று விஷயத்தைப் புரியவைக்க முயற்சி செய்திருக்கிறேன்.
எந்த ஒரு விஷயத்தையும் கற்றுக்கொள்ள ஆர்வமும் உழைப்பும் தேவை, சிரமமில்லாமல் ஒன்றையும் கற்றுக் கொள்ள முடியாது. சற்றே ஆழமான புரிதலுக்காக எழுதப்பட்ட இக்கட்டுரைகளுக்கும் அது பொருந்தும். என்னைப் படிப்பவர்களை அப்படிச் சிரத்தையில்லாதவர்களாக வரித்துக்கொள்ள எனக்கு முடியவில்லை. புரியாத விஷயங்களை அவர்கள் முயற்சி செய்து கற்றுக் கொள்வார்கள் என்று எனக்கு நம்பிக்கையிருக்கிறது. …
* * *
கொசுறு: என்னுடைய தொழில் ரீதியாக அறிவியலை எழுதினால் நான் இப்படி எழுதுவேன்.
The recent realization of distributed feedback intersub-band Quantum Cascade Lasers enable accessing mid-infrared wavelengths wtih high peak power and transverse mode stability. Unlike the bipolar diode lasers that involve transition between the conduction and valence bands, in QCLs the electron is recycled through interband tunneling into the conduction band of the next cascade stage.
இதுதான் இறுக்கமான நடை. முழுக்க குழூஉக்குறிகளால் ஆன ஒரிஜினினல் நாகப்பட்டணம் நெய் மிட்டாய். சந்தை மாறும் பொழுது சரக்கும் மாறும். ஆனால் நாட்டுச் சர்க்கரை போட்டு நல்லெண்ணையில் செய்யக் கூடாது. அப்படிச் செய்தால் அதற்கு நெய்மிட்டாய் என்று பெயர் வைக்கக் கூடாது.
வெங்கட் உங்கள் கருத்தோடு எனக்கு உடன்பாடு.
)
// ஜீன் ஸீக்வன்ஸ்னா என்னனு தெரிந்து கொள்வது சுலபமில்லை.//
இப்படித்தான் , கணிதத்திலும், அறிவியலிலும் (அறிவியல் = சயன்ஸ் என்பது சரியா?) வெறும் 'டெர்ம்' ஆக படித்த பலவற்றை ஆழமாக புரிந்து கொள்ள முடியாமல் போயிருக்கிறது என்பதை அனுபவ பூர்வமாக ஒத்துக்கொள்கிறேன். (ஆனால் அடிப்படையில் கலைச்சொற்கள் புழக்கம் அதிகரிக்கும் போது இப்படி முழுமையாக தமிழில் ஆழமாக கட்டுரை எழுதுவது சாதரணமாகிப்போகும் என நினைக்கிறேன்)
இது இப்படி என்றால், பத்துவரையில் தமிழில் படித்துவிட்டு , பதினொன்றில் ஆங்கிலத்தில், டயாமீட்டர் என்று சொன்னதுகூட திட்டுவது போல் தெரிந்தது, தவழ்ற புள்ளைய சம்மர் சால்ட் அடிக்கச் சொன்னா எப்படி? (திசை மாற்றவில்லை, எஞ்சோகம் எனக்கு
//அப்படிச் செய்தால் அதற்கு நெய்மிட்டாய் என்று பெயர் வைக்கக் கூடாது.//
அப்படிச் செய்தால் அதற்கு பெயர் பொய்மிட்டாய்.
என்னுடைய சகா ஒருவர் அலுவலக வாயிலில் தன் அம்மாவின் படத்தோடு இப்படி ஒரு வாசகத்தை எழுதிய சட்டம் வைத்திருக்கிறார்:
"When your mom asks what you do for living you don't go to whiteboard"
இன்னொரு செவிவழிச் செய்தியின்படி, சி.வி. ராமன் நோபெல் பரிசு பெற்றபோது தன் கண்டுபிடிப்பை பாட்டிக்கு விளக்கினாராம். "ப்பூ. இதுக்கா இவ்ளோ பணம் குடுத்தாங்க" என்று கேட்டாராம்.
சொல்வது எளிது. செய்வது கஷ்டமான வேலை. செய்துக் கொண்டிருங்கள். செம்மையாகும்.
////சென்ற வாரம் பதிப்பாளர் தமிழினி வசந்தகுமார் என்னுடைய முதல்புத்தகமான "குவாண்டம் கணினி" முழுவதும் விற்றுத் தீர்ந்துவிட்டது என்று சந்தோஷமாக எழுதியிருந்தார். மனதுக்குள் மத்தாப்பாகத்தான் இருந்தது.////
மனமார்ந்த வாழ்த்துக்கள் வெங்கட்!! இன்னும் நிறைய எழுதுங்கள்!!
நான் இதற்குமுன் அறிவியல் கட்டுரைகள், புனைகதைகள் அவ்வளவாகப் படித்ததில்லை. உங்களின் இப்பதிவு படித்தபின், இனிமேல் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் பிறக்கிறது. நன்றி.
சிற்றிதழ்கள் சிலவற்றில் வரும் இலக்கியக் கட்டுரைகளின் மொழியைவிடவா இவ்வறிவியல் கட்டுரைகளின் மொழி இறுக்கமாக இருக்கிறது?!
அறிவியல் கட்டுரைகள் என்பவை நேர்த்தியாக நல்ல மொழியில் இருக்கவேண்டும் என்பது என் கருத்து.
குவாண்டம் கணினி விற்றுத் தீர்ந்தமைக்கு வாழ்த்துகள்! அதன் அடுத்த பதிப்பில் முன்பு சுட்டிக்காட்டியிருந்த பிழைகள் சரியாயிருப்பின் கணக்கில் கொள்ளுங்கள்.
"குவாண்டம் கணினி" முழுவதும் விற்றுத் தீர்ந்துவிட்டது என்று சந்தோஷமாக எழுதியிருந்தார்.
வாழ்த்துக்கள் வெங்கட்.
வெங்கட், விரிவான பதிவுக்கு நன்றி.
எளிமையாக எழுதுவது என்பதை, நான் சுஜாதாவை மட்டும் வைத்துச் சொல்லவில்லை. சுஜாதா, தன்னை 'ஈர்த்த' அறிவியல் விஷயங்களை, தனக்குத் தெரிந்த பாணியிலே , தகவல்களாகப் பகிர்ந்து கொண்டார். ஆனால், உங்கள் நோக்கம், அறிவியலுக்கு என்று தனிப்பட , தமிழிலே content உருவாக்குவதாக இருக்கலாம். [ இதிலே பிடித்த/பிடிக்காத என்ற அம்சமே இருக்கமுடியாது]. இதை முன்னமேயே உணர்ந்திருந்தேன். அறிவியல் கட்டுரைகளை வாசிக்க முறப்டும் ஒரு வாசகன் என்ற அடிப்படையிலே, குழூஊக்குறிகள் எனக்குச் சிக்கல் ஏற்படுத்துவதில்லை. [ எழுதுகிற விதத்திலே, அது ஆர்வத்தைத்தான் அதிகமாக்கும்] ஆனால், அந்த குறிகளை கோர்க்கிற விதமும், அவற்றின் நீளமும்தான், ஒரு விதமான ஆயாசத்தை ஏற்படுத்துகின்றன என்பதைத்தான் நான் சொல்ல வந்தேன்.
கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமிருந்தால் மொழி ஒரு தடையே இல்லை. ஆனால், படிப்பவரின் கவனத்தை சிதறவிடாமல் இருக்க எளிமை தேவை என்பது என் கருத்து. என்னைப்போன்றோருக்கும் புரியும். காசியின் சில கட்டுரைகள் படிக்கவும் எளிமையாக இருந்தது என்பது என் தனிப்பட்ட கருத்து. அப்படியும் எனது அறிவு வளரவில்லை !!
இதற்கு எழுதுபவ ரின் தனிப்பட்ட திறமை மட்டுமின்றி எழுதபோகின்ற செய்தியும் காரணம்.
உங்களின் எழுத்துக்கள் நல்ல முன்மாதிரி. ஒரு ஆங்கில கருத்துகோளை நீங்கள் தமிழில் எழுதும் பொழுது சில வேளைகளில் ஒரு புது நிலை பரிச்சியம் அக்கருத்துகோள் நோக்கி எழுகின்றது. இதைதான் நீங்கள் உள்ளுணர்வால் புரிதல் என்கிறீகள் என்று நினைக்கின்றேன். நீங்கள் ஆங்கில சொற்களை தவிர்த்து தமிழில் விளக்கி எழுதுவதே படிப்பதற்க்கும் அதே நிலையில் தமிழில் சிந்திப்பத்ற்க்கும் உதவியாக இருக்கின்றது. அறிவியல் சொற்களுக்கு இப்பொழுத்தான் பரிச்சியாமுகின்றோம், ஆகையால் ஆங்கில ஆராய்ச்சி கட்டுரைகள் போல் இறுக்கமான நடையை பின்பற்றினால் நாம் துலைந்துவிவோம் என்றே கருதுகின்றேன்.
ஆங்கிலத்தில் கூட பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கருத்துக்களை எழுதுவதை விட அடிப்படை அறிவியலை பாமர மொழியில் எழுதுவது மிகக் கடினம். ஏன், அறிவியலின் ஒரு துறையில் (உதாரணமாக இயற்பியல்) உள்ள கண்டுபிடிப்பை இன்னொரு துறையைச் (உதாரணமாக உயிரியல்) சார்ந்தவர்களுக்கு எளிமையான அறிவியல் மொழியில் விளக்குவதே கடினம்.
பாமர மொழியில் சொல்லுகிறேன் என்ற பேரில் அடிப்படை அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவகப் படுத்தி (பொய் என்று சொல்லும் அளவுக்கு) பிரபல பத்திரிகைகளே (Time, Newsweek, New York Times etc) திரித்து விடுவதுண்டு. எடுத்துக் காட்டாக ஒரு விஞ்ஞானி செல் அழிப்புக்குத் தொடர்பான வளர் சிதை மாற்றப் பாதையில் (metabolic pathway of cell death) உள்ள புரதங்களில் (protein) எதோ ஒன்றுக்குத் தொடர்பான மரபணுவைக் கண்டுபிடித்திருக்கலாம். ஆனால் அதை பாமர மொழியில் வாசகரின் கவனத்தை ஈர்ப்பதற்காக புற்று நோயைத் தடுக்க புதிய கண்டுபிடிப்பு என்று பிரபல பத்திரிகைகள் எழுதுவதுண்டு. கடந்த ஐம்பது வருடங்களில் வந்த TIME பத்திரிகை இதழ்களில் மட்டும் இது வரை குறைந்த பட்சம் 50 முறையாவது புற்று நோயைத் தடுக்க கண்டுபிடிப்புகள் வந்திருக்கும். நடைமுறையில் உருப்படியாக ஒன்று கூட ஏற்பட்டதில்லை. இதில் கொடுமை என்னவெனில் பல விஞ்ஞானிகள் இப்படிப் பட்ட செய்திகளால் உந்தப் பட்டு விளம்பரத்துக்காக சொல்லிப் போகவும் ஆரம்பித்துள்ளனர். சாதாரண வாசகனை நோக்கி எழுதப் படும் அறிவியல் கட்டுரைகளை திரிப்பில்லாமல் அழகாகச் சொல்லுவதில் முக்கியமானது Economist பத்திரிகை.
(அடுத்த பின்னூட்டத்தில் தொடர்கிறது …)
(முந்தைய பின்னூட்டத்தின் தொடர்ச்சி …)
பாமர வாசகனை விடுத்து ஓரளவு அறிவியல் ஆர்வமுள்ளவர்களை நோக்கி எழுதப் படுதுவது New Scientist. அது போலவே இந்தியாவிலிருந்து வரும் நல்ல பத்திரிகை Down To Earth. இந்தப் பதிரிகைகளில் கூட சில நேரங்களில் உண்மையைச் சாகடிக்க வேண்டி வரும். Down To Earth பத்திரிகைக்காகப் பணி புரிந்த பொழுது எனக்கு அந்த அனுபவம் உண்டு.
ஆங்கிலத்திலேயே இந்த நிலை இருக்கும் பொழுது தமிழில் அடிப்படை அறிவியல் செய்திகளை பாமர நடையில் எழுதுவது மிகக் கடினம். வெங்கட் கூறியது போல் சுஜாதா அடிப்படை அறிவியலை அதிகம் தொட்டதில்லை. அடிப்படை அறிவியல் ஆராய்ச்சியின் விளைவான தொழில் நுட்பத்தை கவர்ச்சியான நடையில் எழுதுவதில் வெற்றி கண்டவர்.
பாமர வாசகர்களிடம் பரவலாக அறிமுகமாகியுள்ள மிகச் சாதாரணமான ஆங்கில அறிவியல் சொற்கள் கூட தமிழில் அறிவியல் படித்தவர்களுக்கே அறிமுகம் இல்லை. எனவே நாம் செல்ல வேண்டிய வண்டிக்கு எந்திரம் மட்டுமல்லாமல் சக்கரங்கள் கூட இனிதான் மாட்ட வேண்டும். அந்த வகையில் வெங்கட் போன்றவர்கள் செய்யும் முயற்சியை பெரிதும் பாராட்ட வேண்டும். இருப்பினும், பிரகாஷ் போன்று விமர்சனத்தை வெளிப்படையாக வைக்கும் வாசகர்கள் மிகத் தேவை. அவர் படிக்க முயற்சி செய்திருக்கிறார் என்பது தெரிகிறது. நிறைய பேர் படிக்காமலே நன்றாயிருந்தது என்று சொல்வதுண்டு. தமிழில் இந்த வளர்ச்சிக்கு வாசகர்களும் நிறைய சிரத்தை எடுக்க வேண்டியுள்ளது.
நன்றி – சொ. சங்கரபாண்டி
வெங்கட்,
உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால் சுஜாதா எழுதுவதும், நீங்கள் எழுதுவதும் வெவ்வேறு class களுக்க்காக என்பதும் புரியும் என்று நினைக்கிறேன். சுஜாதாவின் வாசகன், வாரப்பத்திரிக்கையில் பொம்மை பார்த்துக் கொண்டு தொடர் படிப்பவன். அவனுக்கு அவர் சொல்வதற்கு மேல் அறிவியலை சொன்னால், சுஜாதாவா..அந்தாளு சயின்ஸ் வாத்தியார் மாதிரி பேசறான்யா என்று ஒதுக்கி விடுவான். உங்கள் வாசகன் தான் அபூர்வமான ஆசாமி – சயின்ஸ் ஆர்வம் கொண்ட, அதிலும் ஆழம் வேண்டுகின்ற, கவனக் கலைப்பு சாகஸமெல்லாம் தேவைப்படாத, ஜிகினா பார்த்துப் படிக்காத, அத்த்னையும் தாய்மொழியில் படிக்க வேண்டும் – ஆங்கில ஜல்லிகளை கலக்கக் கூடாது " என்று விழைகின்ற அபூர்வப் பிறவி.
well..குவாண்டம் கணிணி பதிப்பாளரை ஏமாற்றாமல் இருப்பதைப் பார்த்தால், அபூர்வப் பிறவிகள் பெருகி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது.congrats..உங்களுக்கும், முன்னேறும் தமிழ் வாசகர்களுக்கும்.
(இந்தப் பின்னூட்டத்தில் உள்ள மெலிதான கோபம், சுஜாதாவின் ( அறிவியல் எழுத்துக்களின்) சராசரிக்கும் கீழான ஒரு பாமர ரசிகனுடையது..)
வெங்கட்,
வாழ்த்துக்கள்!!!!
( புத்தகம் விற்றுத் தீர்ந்து போனதுக்கு)
என்றும் அன்புட்ன்,
துளசி.
[3]சுந்தரமூர்த்தி – அம்மாவுக்கு விளக்குவது ஒரு புறமிருகட்டும். ஒரு தடவை என் மகனை (அப்பொழுது அவனுக்கு நான்கு வயது) ஆய்வகத்திற்கு அழைத்து வந்தேன், இதுதான் superconducting magnet, laser, liquid helium cryostat என்றெல்லாம் விளக்கப்போக அவனுடைய பிரிட்ஜ் காந்தம், டார்ச் லைட், பிரிட்ஜ் இதெல்லாம் போதாது என்று வீட்டில் அழ ஆரம்பித்துவிட்டான். அப்பா மட்டும் பெரிய பெரிய விளையாட்டு சாமான்லாம் வெச்சுருகார் என்னோட மாக்னெட் ஊசியை இழுக்கமாட்டேங்குது. அப்பா மாக்னெட் பெரிய ஸ்பானரை இழுக்குது என்று ஒரே அழுகை.
[5] இராதா, அடுத்த பதிப்பெல்லாம் இருக்காது என்று நினைக்கிறேன். பதிப்பாளர் அப்படி எதுவும் சொல்லவில்லை. அவரிடம் பேசிவிட்டு, வேறு வழிகளில் இதைக் கிடைக்கச் செய்வதுபற்றி யோசிக்கவிருக்கிறேன். அப்பொழுது நீங்கள் சொன்னவற்றைக் கட்டாயம் மாற்றுவேன். உங்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டவன்.
கார்த்திக், பத்மா, நற்கீரன், துளசி, பாலாஜி சுப்ரா, செல்வநாயகி – நன்றிகள்.
நற்கீரன் – எப்படி கொச்சைப்படுத்திவிடக் கூடாது என்ற கவனம் இருக்கிறதோ, அதேபோல் இறுகிவிடக்கூடாது என்ற கவனமும் இருக்கிறது. என்னுடைய பழைய கட்டுரைகளைப் படிக்கும்பொழுது எங்கே இளகியிருக்கலாம் என்று எளிதாகப் புலப்படுகிறது. உங்கள் கருத்துக்கு நன்றி.
[10] [11] ஒரு சில சமயங்களில் பரபரப்பை ஏற்படுத்துவதற்காக புற்றுநோய்க்கு மருந்து ரீதியில் தலைப்பு வைப்பதில் தவறில்லை என்றுதான் தோன்றுகிறது. இன்றைய ஆரவார உலகில் கவனத்தைப் பெறுவது மிகக் கடினம். நல்ல விஷயங்களுக்காக இப்படிச் சொல்வது பரவாயில்லை.
மறுபுறம், இந்தக் கவர்ச்சிகளுக்கு விஞ்ஞானிகள் விலைபோவது எனக்கு எப்பொழுதும் ஒப்பானதில்லை.
எப்பொழுதும் என்னை அமெரிக்க எதிர்ப்பாளன் என்று முத்திரை குத்துகிறார்கள் என்ற பயத்துடனே நான் சொல்கிறேன். இந்தப் பரபரப்பு அறிவியல்களுக்கு அமெரிக்கா மிக முக்கியமான காரணம்.
[12] சுந்தர் – நன்றிகள்.
சுஜாதா வரையறுத்துக் கொண்ட வாசகனைச் சென்றடைவதில் கவனமாக இருந்தார். வெற்றிபெற்றார் என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த அளவில் இலக்கு தெரிந்து, இலக்கையடையும் திறமையைப் பாராட்டுகிறேன்.
என்னுடைய ஆதங்கமெல்லாம், கொஞ்சம் இலக்கை நெருங்கியவுடன் அதை நீட்டிக் கொண்டு போகவேண்டும். வளர்ச்சி மிக முக்கியம், அதிலும் அறிவியல் போன்ற துறைகளில். இன்றைக்கு எழுதியதைவிட நாளைக்கு இன்னும் ஆழமாக, துல்லியமாக இருக்க வேண்டும். ஆனால் சுஜாதாவின் ஆரம்பகால வெற்றியைத் தொடர்ந்து அவர் தன்னையும் தன் வாசகனையும் முன்னேற்றுவதில் கவனம் செலுத்தவில்லை. சுஜாதாவா, அறிவியல் படிக்கலாம் என்று ஆனபிறகு சுஜாதாவின் அடுத்த கட்டுரை இன்னும் கொஞ்சம் கஷ்டமாக இருந்திருக்க வேண்டும். அதுதான் உண்மையாகக் கற்பித்தலுக்கு (அதைச் செய்யத்தான் அவர் முயன்றார் என்று நினைக்கிறேன்) வழி.
அறிவியல் பற்றிய தகவல்களை ட்ரிவியா-வாகச் சுருக்கிக்கொண்டே போனதுதான் ஏமாற்றத்தைத் தருகிறது. அப்படியில்லாமல் தன் பலத்தைப் பயன்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக வாசகனை முடுக்கிவிட்டிருந்தால் இப்பொழுது சொல்ல வருபவர்களுக்கு எளிதாக இருந்திருக்கும். லேசரைப் பற்றி கேள்விப்படாமல், சுஜாதாவின் வாசகர்கள் லேசரைப் புரிந்துகொண்டிருந்தால் இன்றைக்கு என்னைப் போன்றவர்களுக்கு Quantum Cascade Laser ஐப் பற்றிச் சொல்லத் தைரியம் வரும். ஆனால் நாம் எல்லாவற்றையும் இன்னும் பாலபாடத்திலிருந்து துவங்குகிறோம்.
இதெல்லாம் சொல்வதால் சுஜாதாவின் பங்களிப்பு குறைத்து மதிப்பிடப்படவில்லை. ஒரு உண்மையான வாசகனாக அவரிடமிருந்து நிறைய எதிர்பார்த்ததுதான் காரணம்.
[7] ப்ரகாஷ், பாத்தீங்களா இடைல உங்கள விட்டுட்டேன். கிட்டத்தட்ட சுந்தருக்குச் சொன்னதுதான் உங்களுக்கும். இன்றைக்கு உள்ளடக்கம் உருவாக்குவதில் இருக்கும் சிக்கல்களைத்தான் சொல்கிறேன்.
உண்மையில் என்னுடைய ஆர்வம் தமிழில் மிக, மிகச் சிக்கலான விஷயங்களைப் பற்றிச் சொல்வதிலேதான் (அதாவது தமிழில் அறிவியல் கட்டுரைகளை எழுதும்பொழுதே நானும் அறிவியல் கற்றுக் கொள்ள வேண்டும்), ஆனால் குவாண்டம் கணினி என்ற கட்டுரையை எழுதும்பொழுது நான் பட்ட பாடு மிக அதிகம். இன்றைய குவாண்டம் கணிப்பை விவரிக்க எலெக்ட்ரான் சுழற்சி, ஷோடிங்கர் பூனை, ஹைசன்பர்க் நிச்சயமின்மை, என்று அடிப்படை குவாண்டம் சமாச்சாரங்களைச் சொல்லியாகக் கட்டுரை நீர்த்துப் போகிறது. முதலில் அதற்கான மொழியை வளர்க்க நாம் தலைப்படவில்லை.
என்னைப் போன்ற சிலருக்கு அறிவியலின் தொடுமுனைகளை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதைப் பயன்படுத்தி நம்மைச் சேர்ந்தவர்களிடம் இந்த 'இன்றைய' அற்புதங்களைச் சொல்ல வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. ஆனால் நேற்றைய விஷயங்களே இன்னும் நிறைய பாக்கியிருப்பது சோர்வைத் தருகிறது.
குவாண்டம் கணினி வாங்காதவர்கள் பிரதி கேட்டு பதிப்பகத்தை தொந்தரவு செய்யவும். அடுத்த பதிப்பு போடுவார்கள். வெங்கட் கங்ராட்ஸ். நடையெல்லாம் நல்லாத்தான் இருக்குது. இப்பிடியே எழுதுங்க.
உங்கள் நடையே எளிமையாகத்தான் இருக்கிறது.
நமக்கு நம் நாட்டில் அதி முக்கியமாக மாணவர்களும் மற்றவர்களும் கற்றுக்கொள்ள வேண்டியது அறிவியல் (தொழில்நுட்பத்தைக் காட்டிலும்). அதற்கு தங்களைப் போன்றோருடைய முயற்சிகள் தூண்டுகோலாக அமையும், நன்றி.
Dear Sir,
I have very much enjoyed your book ‘Quantum Kanani’.Congradulations.
What are your other books?