என்னுடைய இன்றைய வானொலி நிகழ்ச்சி
by வெங்கட் • January 30, 2005 • அறிவியல்/நுட்பம் • 7 Comments
இப்பொழுது கனேடியத் தமிழ் வானொலி மீண்டும் வலைவழியே கிடைப்பதால் என்னுடைய வாராந்திர அறிவியல் நிகழ்ச்சி பற்றிய அறிவிப்புகளை இங்கே தரலாம் என்று நினைக்கிறேன். இந்த அறிவியல் நிகழ்ச்சி டொராண்டோ நேரப்படி இரவு 9:00 முதல் 10:00 வரை ஒலிபரப்பாகிறது. முதல் 15 அல்லது 20 நிமிடங்களுக்கு இந்த வாரத்தில் வெளியான முக்கிய அறிவியல் செய்திகள் பற்றிய தகவல்கள் தரப்படுகின்றன. தொடர்ந்து நிகழ்ச்சியின் முக்கிய அங்கமான ‘விஞ்ஞான அலசல்’ பகுதி 25 முதல் 30 நிமிடங்கள் வரை வரும். இதைத் தொடர்ந்து மீதமுள்ள நேரத்தில் நேயர்கள் தொலைபேசி வழியே நேரடியாகக் கேட்கும் கேள்விகளுக்கு (அன்றைய நிகழ்வில் ஒலிபரப்பானவை அடிப்படையிலானவை வரவேற்க்கப்படுகின்றன. சில சமயங்களில் கடந்த வாரத் தகவல்கள் பற்றிய சந்தேகங்களும் கேட்கப்படுகின்றன) எங்களில் ஒருவர் விடைதருவோம்.
இன்றைய நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாக இயற்பியல் ஆண்டு 2005 பற்றிய விஷயங்கள் பேசப்படவிருக்கின்றன. நம் இன்றைய வாழ்வை இயற்பியல் மாற்றியமைத்திருக்கும் பாங்கை விளக்கலாமென்றிருக்கிறேன். இதைத் தொடர்ந்து பிற துறைகளுக்கு இயற்பியல் எப்படிப் பங்களிக்கிறது என்பதைப் பற்றியும் பேசவிருக்கிறேன். இயற்பியல்::2005 வலைத்தளம் பற்றியும் கூறவிருக்கிறேன். நிகழ்ச்சியின் ஒருங்கமைப்பாளர் திரு. விஜயகுலதுங்கம். எங்கள் இருவரையும் தவிர திரு மாறன் செல்லையாவும் பங்கேற்கிறார்.
இதன் நேரடி வலைபரப்பை கனேடியத் தமிழ் வானொலியில் இணைய தளத்திலிருந்து கேட்கமுடியும்.
கனேடிய அமெரிக்கக் கிழக்கு மாநிலங்களில் இரவு 9:00 முதல் 10:00 வரை.
இந்தியா, இலங்கையில் மறுநாள் (திங்கள்) காலை 7:30 முதல் 8:30 வரை
கனேடியத் தமிழ் வானொலியின் நிகழ்ச்சிகள் நேரடி வலைபரப்பு மாத்திரமே. இதன் ஒலிக்கோப்புகள் சேமிக்கப்படுவதில்லை. இங்கிருக்கும் நண்பர்களுக்கு இதில் ஆர்வமிருந்தால் நான் அவர்களுடன் தொடர்பு கொண்டு இந்த அறிவியல் நிகழ்ச்சியை மாத்திரம் பதிவு செய்து நிரந்தரமாக வலையேற்ற முயற்சிக்கிறேன்.
இருவாரத்திற்கு ஒருமுறை நான் தொலைக்காட்சியில் வழங்கி வந்த “விஞ்ஞானமும் நாமும்” என்ற அரைமணி நேர ஒளிபரப்பில் கடந்த சில வாரங்களாக நான் பங்கேற்கவில்லை. பனிக்காலம் முடிந்தவுடன் திரும்பத் தொடங்கலாம் என்று இருக்கிறேன். இதன் அமைப்பில் சில மாற்றங்கள் செய்வதுபற்றி நானும் விஜயகுலதுங்கமும் யோசித்து வருகிறோம். குறிப்பாக சிறு சோதனைகள் மூலம் அறிவியல் கருத்துக்களை எப்படி விளக்கலாம் என்பது பற்றிய ஒரு ஐந்து நிமிடப் பிரிவைச் சேர்க்கவிருக்கிறோம்.
வெங்கட் அண்ணா, உங்கள் நிகழ்ச்சியை கனேடியத் தமிழ் வானொலி மூலங் கேட்டேன். உங்கள் பதில்களில் உள்ள கனத்தை விட, உங்கள் தமிழ் மிகவும் அருமையாக இருந்தது.
எனது பேராசிரியருக்குத் தமிழ் தெரிந்து உங்கள் நிகச்சியைக் கேட்டிருந்தால் உங்களுக்கு ஒரு உம்மாவே தந்திருப்பார்( stochastic என்று நீங்கள் சொன்ன ஒரே ஒரு காரணத்திற்காக). அவர் ஒரு ஸ்டொகாஸ்டிக் (stochastic) பைத்தியம்.
Stochastic Geometry, Stochastic Processes , Stochastic Math,
stochastic Finance என்றெல்லாஞ் சொல்லுவார். ஆனால் Stochastic Physics
என்ற பதத்தினை அவர் சொன்னதாய் எனக்கு ஞாபகம் இல்லை. நாளைக்கு முதல் வேலையே அவரிடம் stochastic physics என்றால் என்னவென்று கேட்பதுதான். அப்படியாவது (உங்கள் புண்ணியத்தில்)எனக்கு bonus mark கிடைக்கட்டுமே.
வெங்கட்: இந்த வானொலி நிகழ்ச்சிகளின் ஒலிவடிவத்தினை இயற்பியல் தளத்தில் சேர்க்க முடியுமா?
எப்பொழுதும் கிடைக்கக்கூடியதாகவும் எளிதில் பெறக்கூடியதாகவும் செய்தால் அதனால் பல நன்மைகள் பலருக்கும் கிடைக்கும்.
வெங்கட்: ஆச்சிமகனின் இந்தப் பதிவைப் படிக்கவும்.
ரூ. 40க்குக் கொடுக்கும் அளவுக்குக் கிடைக்கும் இவை நிஜமாகவே லேசர் ஒளிக்கற்றைகளை வெளியிடும் விளக்குகளா? அல்லது சாதாரண ஒளிக்கற்றைகளை வெளியிடும் விளக்குகளா?
பத்ரி, தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். கடந்த இரண்டு நாட்களாக வேலை நெருக்கடி.
கனேடியத் தமிழ் வானொலி அறிவியல் நிகழ்ச்சிகளை வலையேற்ற முயற்சிக்கிறேன். இதற்கு அவர்கள் ஒத்துழைப்பும் தேவை. பார்க்கலாம். குறைந்தபட்சம் நான் முக்கியம்/சுவாரசியமாக இருக்கும் என்று கருதுவதையாவது வலையேற்ற வேண்டும்.
கிஸோ,
வாங்க, வணக்கம். நீங்கள் எங்கு, என்ன படிக்கிறீர்கள்?
Stochastic Physics பிற துறைகளில் அதனுடைய விரிவுகள் இவற்றைப் பற்றி ஒரு நாள் எழுதுகிறேன்.
பத்ரி – என் வீட்டில் எட்டு லேசர்கள் இருக்கின்றன என்ற தலைப்பில் நான் இயற்பியல்::2005ல் லேசர்களைப் பற்றி எழுதிய அறிமுகத்தைப் பார்க்கவும்.
http://iyarpiyal.org/?item=12
'இதைத் தவிர நான் டாலர் கடையில் வாங்கிய அரை டஜன் லேசர் பாயிண்டர்கள் (டாலர் கடையில் வீட்டுக்கார அம்மணி, குழந்தைகள் தவிர இப்பொழுது என்னைப் போன்ற பைத்தியங்களுக்கும் சாதனங்களை விற்கத் தொடங்கிவிட்டார்கள்) உண்டு. இதெல்லாவற்றையும் கணக்கில் காட்ட வேண்டாம். இப்படி ஒரு கனேடிய டாலருக்கு, அதாவது முப்பது ரூபாய்க்கு, தைவானில் தயாரித்து கனடாவில் விற்கும் அளவிற்கு லேசர்கள் மலிவான சாதனங்களாகிவிட்டன. (தயாரிப்பவர், இடைத்தரகர், வியாபாரி இவர்களின் லாபங்கள், கடல்வழியே அனுப்ப ஆகும் செலவு, சுங்கவரி இதெல்லாம் கணக்குப் போட்டு பார்த்தால் டாலர் கடை லேசர் பாயிண்டரின் உண்மையான தயாரிப்புச் செலவு புரியும்).
இதுதான் உண்மை, நம் கண்ணுக்குத் தெரியாமல் லேசர்கள் உலகெங்கும், ஏன் உங்கள் வீட்டுக்குள்ளும் வியாபிக்கத் தொடங்கியிருக்கின்றன. காசி சொன்னதைப் போல ஒரு காலத்தில் நூல்கட்டி கிடைமட்டம் பார்த்துக் கொண்டிருந்த கொத்தனார்கள் இப்பொழுது லேசர் லெவெல் ஃபைன்டர் என்று சட்டைப் பையில் செருகிக் கொண்டு வருகிறார்கள். ("ஏ புள்ளே, அந்தக் கலயத்தை அப்புடியே வச்சிட்டு இங்கினவந்து இந்த லேசரப் புடி, அப்புறமா கஞ்சி குடிச்சிக்கலாம்" என்று சித்தாள்கள் அழைக்கப்படும் நாள் தொலைவில் இல்லை) …'
உண்மையில் இதுபோன்ற ஒரு டாலர் லேசர் பாயிண்டர்கள் அபாயமானவைதான். இவற்றைப் பற்றி லேசர்கள் தொடரில் பாதுகாப்பு பற்றி எழுதும் பொழுது விளக்கவிருக்கிறேன்.
நான் University of Western Ontario இல் statistics பிரிவில் MSc செய்கின்றேன். காட்டுத்தீயை சமயோசிதமாக எப்படி அணைப்பது என்று ஆராய்ச்சி செய்வதாய் உத்தேசம். (கவனிக்கவும், நான் இங்கு காட்டுத்தீ என்றுதான் சொன்னேன்… வசந்தீ என்றோ அல்லது வதந்தீ என்றோ சொல்லவில்லை)
Stochastic Physics பற்றி எழுதப் போவதாகச் சொன்னீர்கள். ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றேன்.