• இலவசம் என்பது கெட்டவார்த்தையாகிறது

    by  • July 14, 2005 • அறிவியல்/நுட்பம் • 16 Comments

    பிபிஸி மற்ற ஊடகங்களுக்கு எப்பொழுதுமே முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறது. (இதற்கு அது அப்பழுக்கில்லாத ஊடகம் என்று அர்த்தமில்லை. ஆனால் பல நல்ல விஷயங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை). இதற்கு முக்கிய காரணம் பிபிஸி செயல்படும் விதம். இது அரசாங்க மானியம் பெறுவதில்லை. மாறாக அரசியல் சட்ட அமைப்பு மூலம் பயனர்களிடமிருந்து நேரடியாகப் பயனுரிமைப் பணத்தைப் பெறுகிறது. எனவே இதற்கு எந்தவிதமான அரசாங்கக் கட்டுப்பாடுகளும் கிடையாது. (பல நேரங்களில் இதனால் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு பிபிஸி தலைவலியாக இருக்கிறது).

    சமீப காலங்களில் பிபிஸி தொழில்நுட்ப வளர்ச்சிகளை முழுவதுமாகப் பயன்படுத்தி நேயர்களைப் புதிய, பயனுள்ள, விரைவான வழிகளில் அடைய முயற்சி செய்கிறது. இந்த விஷயத்தில் எனக்குத் தெரிந்து உலகில் வேறெந்த முக்கிய ஊடகமும் பிபிஸிக்கு அருகில் கூட வர அருகதை கிடையாது. முதலில் கிரியேட்டிவ் ஆர்க்கிவ் என்ற அமைப்பின் மூலமாக தங்களுடைய பழைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளை டிஜிட்டல் வடிவமாக்கி இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்தார்கள். (இது பற்றிய பிபிஸி செய்திக் குறிப்பு மற்றும் என்னுடைய வலைப்பதிவு )

    தங்களுடைய நிகழ்சிகளை நேரடிவலை வசதிமூலம் ஒளிபரப்பாகி முடிந்தபின்னும் ஏழு நாட்களுக்குக் கணினி வழியே தரவிறக்கிப் பார்த்துக்கொள்ளும் திட்டம் அடுத்தபடியாக அறிவிக்கப்பட்டது. ( இதுபற்றிய என் வலைப்பதிவு ).

    சென்ற மாதம் The Beethoven Experience என்ற பெயரிட்டு ரேடியோ 3-ல் ஒரு வாரத்திற்கு தங்களுடைய BBC Philharmonic Orchestra இசைத்த பித்தோவனின் முதல் ஒன்பது சிம்பொனிகளை அறிமுகத்துடன் ஒலிபரப்பினார்கள். தொடர்ந்து அவற்றை இலவசமாக எம்பி3 வடிவில் தரவிறக்கும் வசதியைத் தந்தார்கள். நான் முதல் மூன்றை ஒவ்வொன்றாகப் பொறுமையாகத் தரவிறக்கினேன். பின்னர் எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாக வேறு ஒருவரிடமிருந்து பெற்றுக் கொண்டேன். (இப்பொழுதுதான் முதல் மூன்று சிம்பொனிகளைக் கேட்டு முடித்திருக்கிறேன். இவற்றை அவ்வப்பொழுது வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு குழுக்கள் இசையில் கேட்டிருந்தாலும் முறையாக ஒவ்வொன்றாகக் கேட்பது தனி அனுபவம்தான்).

    அது சரிதான். கதையெல்லாம் சரிதான்; இடைவேளை வந்தாச்சே இன்னும் வில்லன் வரவில்லையே என்று கேட்கிறீர்களா? வந்தாச்சு. இப்படி இலவசமாகக் கொடுப்பது தங்கள் விற்பனையைப் பாதிக்கிறது என்று இசை வணிகர்கள் கத்தப் போக பிபிஸி இலவசத் தரவிறக்கத்தை நிறுத்தியிருக்கிறார்கள். பிபிஸி அரசாங்க ஆதரவு பெற்ற நிறுவனம். இப்படி அரசாங்க ஆதரவுடன் இலவசமாக இசையைக் கொடுத்தால் இசை வணிகம் நசிந்துபோகும். இசைக் கலைஞர்கள் பிச்சையெடுப்பார்கள் என்று அழுகிறார்கள். முதலாளித்துவ நாடுகளில் தனியார் வியாபாரத்தைக் கெடுக்கும் எந்தச் செயலிலும் அரசாங்கமோ, அரசு ஆதரவு பெற்ற நிறுவனங்களோ ஈடுபடக்கூடாது என்று எழுதாத விதி இருக்கிறது. அதாவது வரிப்பணத்தில் செய்யப்படும் எந்த ஒரு காரியத்திற்கும் வர்த்தக நிர்ப்பந்தம் இல்லையென்பதால் அவர்கள் விலையைக் குறைத்து வைத்து விற்க் முற்படுவார்கள். அப்படிச் செய்யும்பொழுது தனியாரின் வர்த்தகம் பாதிக்கபடும் என்பதாக.

    இதில் பல அபத்தங்கள் இருக்கின்றன. முதலில் வெளியிடப்பட்டிருப்பது செவ்வியல் இசை. இசை உலகில் இரண்டு வகைக் காப்புரிமைகள் உண்டு. ஒன்று புழக்கத்தில் இருக்கும் மூலப் படைப்புக்கானது, ஒருவர் ஒரு பாடலை எழுதியோ இசையமைத்தோ, பாடியோ வெளியிட்டால் அதே பாட்லை இன்னொரு இசைக்குழு வேறொரு வகையில் பாடினாலும் முதலில் படைத்தவருக்கு காப்புரிமையீடு கொடுத்தாக வேண்டும். உதாரணமாக இப்பொழுது வெளியான இளையராஜாவின் திருவாசகத்தை வேறொரு குழு இசைக்க முடிவெடுத்தால் அதற்கு அவர்கள் இளையராஜாவிடம் அனுமதி பெற வேண்டும். அதற்கு இளையராஜா பணம் கேட்கலாம். ஆனால் பல காலங்களுக்கு முன்னால் வெளியிடப்பட்ட (காப்புரிமை காலாவதியான) இசையை ஒருவர் எந்த இழப்பீடும் இன்றி மீட்டலாம், விற்கலாம், விநியோகிக்கலாம். இப்படி மோட்ஸார்ட்டின் சிம்பொனி ஒன்றை ஒரு குழு இசைத்தால் அதற்கான காப்புரிமை அவர்களுக்கு உண்டு. பலரும் செவ்வியல் இசைகளை இசைக்கிறார்கள், விற்கிறார்கள். இந்த இடத்தில் காப்புரிமை மூலப்படைப்புக்கு இல்லை. அதை இசைப்பவர்களைச் சேர்ந்தது.

    இது 1800-ல் பீத்தோவன் வடிவமைத்தது. இதை பிபிஸி என்ற நிறுவனம் ஒரு இசைக்குழுவை அமைத்து இசைத்திருக்கிறது. அதற்கான முழு உரிமையும் அவர்களிடம் இருக்கிறது. அதைப் பொதுமக்களுடன் பகிர்ந்துகொள்ள அவர்கள் தயாராக இருக்கிறார்கள். இந்த இடத்தில் தங்கள் வணிகம் பாதிக்கப்படுவதாக அழுவது எரிச்சலைத்தான் தருகிறது. கட்டாயமாக, இதற்காக பிபிஸியின் மீது இவர்கள் வழக்கு தொடுக்க முடியாது. பிபிஸி செய்தது சட்டபூர்வமாகச் செல்லும். மாறாக இப்படி இலவசமாகத் தரவேண்டாம் என்று பிபிஸியை இவர்கள் வற்புறுத்தியிருக்கிறார்கள். பிபிஸி தற்காலிகமாக இதை நிறுத்திவைத்திருக்கிறது.

    இணையத்திலிருந்து இலவசமாக இசையைப் பெறுவது என்ற பழக்கமும், அப்படிப் பெறுவது சட்டபூர்வமானது என்ற மனநிலைக்கு பொதுமக்கள் வந்துவிட்டால் இலவசமாகத் தரவிறக்கம் செய்வது தவறில்லை என்ற மனநிலை உருவாகுமாம். அப்படி உருவானால் இசையை விலைக்கு விற்பது சாத்தியமில்லாமல் போகுமாம். இது எப்படியிருக்கிறது என்றால், எங்கள் ஊரில் மாரியம்மன் கோவில் திருவிழா கோடையில் நடக்கும். அங்கே பலதரப்பட்ட கேளிக்கைகளுடன் கடைகளும் இருக்கும். அவற்றில் குளிர்பானங்கள் விற்பார்கள். மறு முனையில் தர்ம சிந்தனையுள்ள ஒருவர் இலவசமாக நீர்மோர் ஊற்றுவார். இப்படி இலவசமாக ஊற்றுவது தங்கள் விற்பனையைப் பாதிக்கிறது எனவே உங்கள் தர்மத்தை நீங்கள் நிறுத்த வேண்டும் என்று சொல்வதைப் போல இருக்கிறது.

    நவீன காப்புரிமைச் சிக்கல்கள் எல்லாமே பெருமளவில் அமெரிக்காவிலிருந்துதான் உருவானவை. அங்கே தனியார் வியாபாரத்தைப் பாதுகாக்க அரசாங்கம் என்ன வேண்டுமானாலும் செய்யும். தொடர்ச்சியாக அரசாங்கங்களை வளைத்துப் போட்டுக்கொண்டு இப்படித்தான் மென்கலன், இசை வணிகம், திரைப்பட விநியோகம் என்று பெரும்லாபம் கண்டு கொழுத்திருக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக நியாயத்தின் வரையறைகளை இவர்கள் மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். எல்லைக்கல் இன்னும் நெருக்கி நடப்படுகிறது.

    பிபிஸி நேரடியாக அரசுப்பணம் பெறுவதில்லை. அது பிபிஸிக்கான கட்டணம் என்று வரையறுக்கப்பட்டு நேயர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு நேரடியாக அவர்களிடம் சேருகிறது. அப்படிப் பார்க்கப் போனால், பிபிஸியிடம் பொதுமக்கள் ஏற்கனவே பணம் செலுத்தி விட்டார்கள். வாங்கிக் கொண்ட பணத்திற்கு நியாயமாக எந்தெத்த விதங்களில் சேவை செய்யமுடியுமோ (இதற்கு நவீன நுட்பங்களைப் பயன்படுத்தி) அப்படிச் செய்ய முயற்சிக்கிறது. இந்த நிலையில் இதில் பேராசை வணிகர்களின் இடையூறு நமக்குக் கோபத்தைத் தருகிறது.

    இப்படியே போனால் இவர்கள் வருங்காலத்தில் ப்ராஜெக்ட் கூட்டன்பர்க்-க்கில் இலவசமாக ஷேக்ஸ்பியரை விநியோகிக்கிறார்கள். எனவே கூட்டன்பர்க்குக்கு அரசாங்கத்தின் வரிப்பணத்தின் உதவி செய்யக் கூடாது என்று சொல்வார்கள். பிறகு கொஞ்சம் நாட்கள் கழித்து தனியார் பள்ளிக்கூடம் நடத்துகிறார்கள் எனவே அரசுப் பள்ளிக்கூடங்கள் நடத்துவது கல்வி வியாபாரத்தைப் பாதிக்கிறது என்று இலவசக் கல்வியை நிறுத்துவார்கள். அப்புறம் தனியார் செக்யூரிட்டி நிறுவங்கள் இருக்கின்றன எனவே அரசாங்க போலீஸ் கூடாது என்பார்கள்.

    பேராசைக்கு ஒரு எல்லையே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. இதை எதிர்க்க ஒவ்வொருவரும் நியாயமான முறையில் தங்களிடம் இருக்கும் தகவல்களை எல்லாவகையிலும் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

    16 Responses to இலவசம் என்பது கெட்டவார்த்தையாகிறது

    1. July 14, 2005 at 6:53 am

      //அப்புறம் தனியார் செக்யூரிட்டி நிறுவங்கள் இருக்கின்றன எனவே அரசாங்க போலீஸ் கூடாது என்பார்கள்.//
      :) )

      நல்ல கருத்து வெங்கட். இந்த RIAA போன்ற நிறுவனங்களின் அட்டகாசத்திற்கு ஒரு அளவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.

    2. July 14, 2005 at 7:09 am

      வெங்கட், நீங்கள் தரவிறக்கிய சிம்பொனிகளின் எம்.பி.3களை உங்கள் செர்வரில் போட முடியுமா. முடிந்தால் போடுங்கள் இறக்கிக் கொள்கிறேன்.

    3. July 14, 2005 at 7:40 am

      இந்தக் காப்புரிமை என்பதே சிலசமயங்களில் எரிச்சலூட்டக்கூடிய ஒன்று.

      பிபிஸியின் "Download disclaimer"-ன்படி வழங்கியில் போட்டு பொதுவில் வழங்க முடியாது போலுள்ளது. 'Transmit'என்பது மின்னஞ்சலைக் குறிப்பிடவில்லையெனில் (சந்தேகிக்கிறேன்), முடிந்தால் அக்கோப்புகளை அனுப்பித் தர இயலுமா? நன்றி!

    4. Padma Arvind
      July 14, 2005 at 8:42 am

      வெங்கட்
      உங்கள் கருத்துக்களுடன் நான் சில இடங்களில் மாறுபடுகிறேன். எனக்கும் என் கணவருக்கும் சில அறிவியல் காப்புரிமைகள் உண்டு. இவற்றினால் பயன் வரும் என்றோ அல்லது பொருளீட்டமுடியும் என்றோ இல்லை. ஆனால் இதை உப்யோகிப்பவர்கள் எங்களின் பல ஆண்டு கடின உழைப்புக்கு நன்றியாவது சொல்லி உபயோகித்தால் பரவாயில்லை. ஆனால் கலைகளில் Napsterபோன்ற இடத்தில் பல சமீபத்திய இசை தட்டுகளும் தரவிறக்கப்பட்டு வியாபாரம் படுத்துவிட்டது. நல்ல இசைக்கலைஞர்களுக்கு இந்த இழப்பு பரவாயில்லை ஆனால் தடுமாறி இப்போதுதான் வெளிச்சத்திற்கு வருபவர்களுக்கு?
      காப்புரிமை காலாவதியாகிவிட்ட பின்னும் இன்னமும் தங்களுக்கு வரும் ராயல்டி நம்பி வாழ்பவர்கள் உண்டு.
      என்னை கேட்டால் தொழில் நுட்பமும் அதைப்பற்றிய அறிவும் (தரவிறக்க கிடைக்கிறது) இருப்பவர்கள் அல்லாது மற்றவ்ர்கள் காசு கொடுத்தானே வாங்குகிறார்கள்.
      மேலும் எளிதாக இலவசமாக் கிடைக்கும் பொருளின் அருமை பலருக்கு புரிவதும் இல்லை.
      இதை மாறுபட்ட கருத்தாக மட்டுமே எடுத்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.

    5. July 14, 2005 at 11:23 am

      [2] [3]தனிப்பட்ட முறையில் சிலருடன் மாத்திரம் பகிர்ந்துகொள்ள எனக்குத் தயக்கமில்லை. இன்னும் இரண்டு நாட்களில் செய்கிறேன். அதற்குள் உங்களிருவருக்கும் தனியஞ்சல் வராவிட்டால் என்னைத் தொடர்புகொள்ளவும்.

    6. July 14, 2005 at 11:28 am

      [4] பத்மா – கருத்தாக மட்டுமே எடுத்துக் கொள்ளமாட்டேன். :) இது குறித்த முழு விவாதத்திற்கும் நான் தயார். இசைத் தொழில் நசிந்துபோய்விட்டது என்று சொல்வதெல்லாம் முழுப்பொய். ஜாக்ஸனோ, மடோனாவோ, டா பம்ப், இன்னும் யாரும் தெருவில் பிச்சையெடுக்கவில்லை.

      இசைத் தொழிலை இன்றைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி முழுமையாக வளராமல் தடுப்பவர்கள் (நசிப்பவர்கள் என்றும் படிக்கவும்) ரியா-காரர்கள்தான். இதில் உங்களுக்கு மாறு கருத்து இருந்தால் நான் விளக்கத் தயார்.

      எனக்கும் சில காப்புரிமைகள் இருக்கின்றன. (நீங்கள் சொல்லும் அதே ரீதியில்தான்). கண்டுபிடிப்புக் காப்புரிமைகளுக்கும் கலைத்துறை காப்புரிமைகளுக்கும், மென்கலன் காப்புரிமைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

      இன்றைக்குப் பின்னேரத்தில் மருத்துவத் துறைபற்றி ஒரு பதிவு எழுதவிருக்கிறேன். உங்களுக்கு ஆர்வமூட்டும் என்று நம்புகிறேன்.

    7. Padma Arvind
      July 14, 2005 at 12:53 pm

      வெங்கட்
      இசைத்தொழிலில் பிரபலமானவர்கள் யாரும் பணத்திற்காக கஷ்டப்படவில்லை என்பது சரியே. அதற்காக அவர்களின் படைப்புக்களை இலவசமாக பெற வேண்டுமா? இதைப்போல எடுத்துக்கொண்டால் திரப்படங்கள் கூட இலவசமாக பெற்றுக்கொண்டு பார்க்கலாம் அதை தடுக்க சட்டம் ஏன்?
      அண்மையில் வெளிவந்த திருவாசகம் கூட இலவசமாக் பெற தெரிந்தவர்கள் பெற்ருக்கொள்ளலாமே.அப்படி செய்தால் ஊக்கம் எங்கிருந்து வரும்?
      இதனால் அதிகம் பயன் பெறுபவர்கள் பொருள் செல்வழிக முடியாதவர்களாக இருந்தால் பரவாயில்லை. கலை எல்லாருக்கும் போய் சேருகிறது என்று நினக்கலாம்.இதை ஈடுகட்ட அப்பாவி மக்கள் அதிகம் விலை கொடுக்கிறார்களோ என்று தோன்றியது.
      நீங்கள் மருந்து தயாரிக்கும் நிறுவங்களில் காப்புரிமை பற்ரி எழுதினால் நன்றாக இருக்கும். ஏற்கெனவே பணமுதலைகளாக இருக்கும் இவை அதிலிருந்து இலாபம் வரும்வரை, காப்புரிமை கொண்டு தங்கள் விருப்பத்திற்கு விலை வைத்து பொருளீட்டவில்லையா? அவர்கள் whitehouseஇல் கூடாரமடித்து தங்கள் விருப்பத்தை பூர்த்தி செய்து கொள்கிரார்கள். தனிப்பட்ட இசைக்கலைஞர்கள் மட்டும் ஏன் விதிகளை தளர்த்த வேண்டும்.
      (உங்களைபோன்ற சிலரிடம் விவாதிக்க முடியும் என்று தெரிந்தாலும், இப்போதெல்லாம் சற்றே தயங்க வேண்டியிருக்கிறது).நன்றிகள்
      உங்கள் மருத்துவ கட்டுரைக்கு ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

    8. bb
      July 14, 2005 at 3:11 pm

      Venkat,
      1. This has nothing to do with the medium (downloading off the internet). The complaint would be the same had BBC chosen to distribute the songs through audio cassettes in its office for free. so, let's leave the medium alone.

      2. You got into the core of the matter here: முதலாளித்துவ நாடுகளில் தனியார் வியாபாரத்தைக் கெடுக்கும் எந்தச் செயலிலும் அரசாங்கமோ, அரசு ஆதரவு பெற்ற நிறுவனங்களோ ஈடுபடக்கூடாது என்று எழுதாத விதி இருக்கிறது.

      Yes, this is one of the main backbones of capitalistic practices. There is nothing wrong with that. If you choose to have a capitalistic economy, this is one of the main things. I am not sure whether it is an unwritten rule. My guess would be that it would be downright illegal.

      எனவே அரசுப் பள்ளிக்கூடங்கள் நடத்துவது கல்வி வியாபாரத்தைப் பாதிக்கிறது என்று இலவசக் கல்வியை நிறுத்துவார்கள். அப்புறம் தனியார் செக்யூரிட்டி நிறுவங்கள் இருக்கின்றன எனவே அரசாங்க போலீஸ் கூடாது என்பார்கள்.

      Govt endeavors like Postal System, Police, Schools are exceptions to the rule. They are govt sanctioned monopolies, if I may say that. Govt indulges in these, but not in all other businesses.

      This is NOT an open and shut case by any means. I will be interested in seeing how this turns out. My gut instinct says that the root question will not be addressed, but the legalese on the status of BBC and the particular performances will pave way for the ruling.

    9. df
      July 14, 2005 at 3:51 pm
    10. July 14, 2005 at 4:10 pm

      [8] பாலாஜி – களை கட்டியிருக்கிறது :)

      1. நான் அப்படி நினைக்கவில்லை. வழமையான விநியோக முறைகளில் ஒரு இலட்சம் காஸெட் அடித்து இலவசமாக பிபிஸி கொடுத்திருந்தால் இந்தக் கூச்சல் வராது. ஏனென்றால்

      (அ) தானம் வாங்கியவர்களோடு முடிந்துபோகும். இங்கே எம்பி3 டாரண்ட் வழியாகப் பரவும். ஒரு இலட்சம் ஒரே நாளில் ஒரு பில்லியனாக மாறும்.

      (ஆ)இவர்களது முக்கிய ஆட்சேபனை "இணையத்திலிருந்து இலவசமாகப் பெறுவதைத் தடுப்பது". அதாவது பொதுவில் இவர்கள் நியாயம் அநியாயம் முன்வைத்து தரவிறக்குவது தெய்வகுற்றம் ரீதியில் செய்துவரும் பிரச்சாரத்திற்கு இது பெரிய இடைஞ்சல். சில பாட்டை இலவசமாக இறக்கலாம் என்ற நிலைவருவதை இவர்கள் விரும்பவில்லை.

      2. இருக்கலாம். சில நாடுகளில் இது சட்டபூர்வமாகத் தடை செய்யப்பட்டிருக்கிறது என்றாலும் பெரும்பாலும் இது லாபிக்களின் மூலமாகச் சட்டத்திற்கு வெளியேதான் நிறைவேற்றப்படுகிறது.

    11. July 14, 2005 at 4:17 pm

      [8] அரசுக் கட்டுப்பாடுகள் என்பவை முதலாளித்துவ நாடுகளில் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தப்படும். சமீபத்தில் நாஸாவைத் தவிர பிறரும் விண்வெளிக்குச் செல்லாம் என்றானது. இது சூடு பிடித்தால் கட்டாயம் நாஸா அமெரிக்காவில் தனியார் தொழிலை நசிப்பதாக இழுத்து மூடப்படும்.

      இங்கே முக்கியமான விஷயம். நாஸா-வாக இருக்கும் வரைக்கும் இந்தியாகூட இதில் போட்டி போட முடியும். ஆனால் தனியார் நிறுவனம், முறையற்ற வர்த்தகம் என்றானால் இஸ்ரோ ஒழிந்துபோகும். கூடவே, விண்வெளியைத் தனியாரிடம் விடுவதில் இருக்கும் அபாயங்களும் இருக்கின்றன.

      பள்ளிக்கூடம், காவல்நிலையம், தீயணைப்புப் படை எதுவே முதலாளித்துவத்தின் முன் புனிதமானவையல்ல.

      இது ஒரு புறமிருக்க. அமெரிக்க முதலாளித்துவம் பிரிட்டிஷ் முதலாளித்துவம் இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கின்றன. இங்கே நடப்பது பிரிட்டிஷ் அரசியலமைப்பு ரீதியாக பாதுகாப்பு பெற்ற பிபிஸியின் மீது அமெரிக்க ரியா நடத்தும் தாக்குதல். சுவாரசியமான விஷயம்தான்.

    12. Padma Arvind
      July 14, 2005 at 5:54 pm

      venkat
      I wanted to also write that in USA, public schools are very good. They get very good funding and students are encouraged a lot. I have seen some very popular private schools and some public schools in best school district are very good. They also get very good attention from State.

    13. bb
      July 14, 2005 at 7:20 pm

      வழமையான விநியோக முறைகளில் ஒரு இலட்சம் காஸெட் அடித்து இலவசமாக பிபிஸி கொடுத்திருந்தால் இந்தக் கூச்சல் வராது.

      I don't care whether they would have cried foul or not, but the issue at heart will still be the same.

      அரசுக் கட்டுப்பாடுகள் என்பவை முதலாளித்துவ நாடுகளில் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தப்படும்.

      That is peripheral to the issue. This sector is already privatized. In that scenario, is it okay for Govt to undercut the private sector? That is the question.

      அமெரிக்க ரியா நடத்தும் தாக்குதல்.

      Is it the RIAA? I just noticed that you don't have a URL for this news. I doubt if RIAA even bothers about classical music albums. Probably it is a UK version or just a bunch of classical music record companies.

    14. July 14, 2005 at 9:40 pm

      [2] Narain, The file sizes of the Beethoven symphonies are quite large. I have downloaded it and I have it in my USB Stick. I will be in Chennai this weekend. In case you are interested in it, I can give it to. Just mail me at santhoshguru@gmail.com .

    15. July 14, 2005 at 9:55 pm

      After reading about these incidents I am afraid that the possibility of this http://www.gnu.org/philosophy/right-to-read.html… happenning is not far.

      venkat you should have linked to the slashdot story about this topic(I believe you read this from slashdot). It contains excellent comments including some of the arguments raised by you.

    16. Pingback: அமெரிக்க காங்கிரஸ் நூலகப் புகைப்படங்கள் ஃபிளிக்ரில்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *