இனியும் அழவேண்டாம் சகோதரி – ஆவணப்படம்
by வெங்கட் • April 26, 2005 • கலைகள் • 21 Comments
ரஜினி திரணகம தனது முப்பத்தைந்தாவது வயதில் 1989ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். அப்பொழுது அவர் யாழ் பல்கலையின் உள்ளுடலியல் (anatomy) துறையின் பேராசிரியையாக இருந்தார். அவருக்கு இரண்டு பெண்குழந்தைகள். இவரைக் குறித்த No More Tears Sister ஆவணப் படம் National Film Board of Canada வால் தயாரிக்கப்பட்டு டொராண்டோவில் தற்பொழுது நடைபெறும் HotDocs என்ற ஆவணப்பட விழாவில் திரையிடப்படுகிறது.
சராசரி தமிழ்க் குடும்பத்தில் பிறந்த ரஜினி, மருத்துவம் படிக்கும்பொழுது தன்னுடைய சக மாணவரான தயபால திரணகம-வை மணந்தார். தயபால தீவிர இடதுசாரி சிந்தைனைகளின்பால் ஈர்க்கப்பட்ட சிங்களர். இரண்டு குழந்தைகளுக்குப் பிறகு இவர்களிடையே மனவேற்றுமை தொடங்கி மணமுறிவு ஏற்பட்டது. ரஜினியின் சகோதரி நிர்மலா விடுதலைப் புலிகளுடன் இணைந்து போராடியவர். இவரை இலங்கையரசு சிறையிலடைத்தது. 1983ல் காமன்வெல்த் மானியத்துடன் பிரிட்டனில் பட்டமேற்படிப்புக்காக வந்த ரஜினி தன்னுடைய சகோதரியின் நிலையை மேற்கத்திய ஊடகங்கள் மூலம் பிரச்சாரப்படுத்தினார். தொடர்ந்து அங்கிருக்கும்பொழுது விடுதலைப் புலிகளின் அரசியல் குழுவுடன் நெருக்கம் ஏற்பட்டது.
எல்லோரும் நாட்டைவிட்டு ஓடிக்கொண்டிருந்த காலத்தில் ரஜினி இலங்கை திரும்பி பல்கலைக்கழகத்தில் உள்ளுடலியல் துறையை மறுவுருவாக்க முனைந்தார். விடுதலைப் புலிகளுடன் நெருக்கம் ஏற்பட, அவர்களின் மனித உரிமை மீறல்கள் குறித்த அதிருப்தியே அவருக்கு அதிகரித்தது. யாழ் பல்கலையில் தன்னுடைய சக ஆசிரியர்களுடன் இணைந்து மக்களிடம் நேரடியாகப் பெற்ற வாக்குமூலங்களின் அடிப்படையில் The Broken Palmyra என்ற நூலை எழுதினார். இலங்கையின் பலதரப்பினரது உரிமை மீறல்களையும் குறித்த ஆவணப்படுத்தலான இந்தப் புத்தகம் வெளிவருவதற்கு முன்னதாக ஒரு நாள் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த ரஜினி சுட்டுக் கொல்லப்பட்டார்.
* * *
இனியும் அழவேண்டாம் சகோதரி என்ற ஆவணப்படத்தை இயக்கியிருப்பவர் ஹெலீன் க்ளோடாவ்ஸ்கி (Helene (Klodawsky), இந்தப் படம் க்யூபெக்கின் ‘பெண் கொரில்லாக்கள்’ (Femmes et la guerre) என்ற வானொலித் தொடரின் தொடர்ச்சியாக உருவாகியிருக்கிறாது. இதே ஆவணப்பட விழாவில் “பெண்களும் போரும்” என்ற கருத்தில் இன்னொரு படமாக Soraida, A Woman of Palestine, Tahani Rached இயக்கத்தில் வெளியிடப்படுகிறது.
ரஜினி குறித்த இந்தப் படத்தை எடுக்க அவரது சகோதரி நிர்மலா ராஜசிங்கம் பெரிதும் உதவியிருக்கிறார். இந்தப் படத்தின் தயாரிப்பு குறித்த தகவல்களை மிகவும் ரகசியமாக வைத்திருந்ததாக இயக்குநர் க்ளோடாவிஸ்கி கூறியிருக்கிறார். இலங்கையில் இருக்கும் பலருக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்துச் சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. ஆனால் முகத்தைக் காட்டிப் பேசுவதற்குப் பயமாக இருக்கிறது. “எங்களைச் சுற்றி முள்வேலி இருக்கிறது, இது கண்ணுக்குத் தெரியாமல் மூளையைக் கட்டிப்போடுகிறது” என்று படப்பிடிப்பில் உதவிய ஒருவர் இயக்குநரிடம் சொல்லியிருக்கிறார். “இந்த நிலையில் முற்றிலும் வெளியாளான மூன்றாவது மனிதர் ஒருவரால்தான் இது சாத்தியம், இது இலங்கை மக்களுக்குச் செய்யும் முக்கிய உதவி என்று கருதுகிறேன்” என்று இயக்குநர் சொல்லியிருக்கிறார்.
* * *
இரண்டு அமர்வுகளில் இன்றும் நாளையும் இப்படம் திரையிடப்படுகிறது. எனக்கு இதற்கான டிக்கெட் கிடைக்கவில்லை. இது கனேடிய திரைப்படக் கழகத்தினால் தயாரிக்கப்பட்டது என்பதால் விரைவிலேயே சிபிசி தொலைக்காட்சியில் காட்டப்படும் (அல்லது இதன் டிவிடி வெளியாகலாம்).
வேறு யாராவது பார்த்துவிட்டு எழுதினால் நல்லது.
* * *
தொடர்புள்ள தகவல்கள்:
No More Tears Sister – இணைய தளம்
இந்தத் திரைப்படம் குறித்து இன்றைக்கு The Globe and Mail நாளிதழில் வந்த கட்டுரை A Human Face on Tiger Tragedy
The Broken Palmyra – The Tamil Crisis in Sri Lanka: An Inside Account By Rajan Hoole, Daya Somasundaram, K.Sritharan and Rajani Thiranagama. Published by The Sri Lanka Studies Institute, Claremont, CA; April 1990 , pages 481. Library of Congress Catalog Card No. 90 – 61314
வெங்கட் இன்று இரவு 9:45 நான் பார்க்கப் போகின்றேன். ரிக்கெட் ஏற்கெனவே வாங்கியாகி விட்டது. சிலவேளைகளில் ரஷ் லைனில் ரிக்கெட் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. முடிந்தால் முயன்று பாருங்கள். படத்தைப் பார்த்து விட்டு விமர்சனம் எழுதுகின்றேன்.
[1] கறுப்பி – கொடுத்துவைத்தவர் நீங்கள். பார்த்துவிட்டு எழுதுங்கள்.
இரவு 9 மணி காட்சியைப் பார்த்துவிட்டு டவுன் டவுனிலிருந்து ஓக்வில் போய்ச் சேருவது கஷ்டம். இரண்டு பிள்ளைகளுக்குத் தகப்பன் ஆன காலத்திலிருந்தே இதெல்லாம் எனக்குச் சாத்தியமில்லாமல் போய்விட்டது.
வெங்கட் வணக்கம்.மிகவும் நன்றி வெங்கட்.இப்படியொரு சொல்லாத செய்தியைச் சொன்னதற்கு.இரஜினி திரணகம அவர்கள் உண்மையிலேயே மிகச் சிறந்த கல்வியாளரும்,மனிதநேசிப்பாளருமாவார்.இத்தகைய மனிதர்கள் பலர் இருளின்தூதுவர்களால் கொல்லப்பட்டார்கள்.இலங்கை மக்களின் எதிரிகள் யார் யாரென அடையாளங் காட்டிய அற்புதச்சிந்தனையாளர். இவரது சமூகஞ்சார்ந்த செயற்பாடுகளை ஒற்றைவரிகளில் விளக்கிடமுடியாது.தமது இருப்புக்கு ஆபத்தென்றறிந்த இருளின்தூதுவர்கள் இவரையும்போட்டுத்தள்ளித் தமது வர்க்க அரசியலைக் காத்துக்கொண்டார்கள்.ஈழத்தமிழ்பேசும் மக்கள் மத்தியிலுள்ள அநேகமான புத்திஜீவிகள் கொல்லப்பட்டுவிட்டார்கள்.சராசரியாக 80 வீதமான புத்திஜீவிகள் படுகொலை செய்யப்பட்டபின் இப்போது 'ஊரோடு ஒத்தோடும்; கூட்டம'; மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இரஜினியை வெளியுலகுக்குக் காட்டும் படம் நிச்சியம் ஜனநாயகத்துக்கான புதியபோரை ஈழத்தில் புதியவடிவில் தோற்றுவிக்கும்.இதை எந்த ஆயுதங்களாலும் தடுக்கமுடியாது.
அன்புடன்
ப.வி.ஸ்ரீரங்கன்
இரஜினியைக் கொன்றவன் இப்போது செத்து விட்டான்.அவனோடு கூடப்போனவன்(இரஜினியைக் கொல்வதற்கு) இப்போதும் நோர்வேயிலிருக்கிறான்.இரஜினியைக் கொன்றது யாரென்ற கேள்வி இன்னும் பதிலற்ற கேள்வியாக இருப்பினும்,அது யாரென்பது பலருக்கும் தெரியாது.ஆனால் சிலருக்குத் தெரியும்.ஈழவரலாற்றை எழுதும் காலமொன்று கைக்கு வரும்போது நாமிதை மிகத்தெளிவான வடிவில் தொகுப்போம்,அதுவரையும் உயிரோடிருந்தால்.
பிரான்சில் இப்படியொரு அரிய வரலாற்றுத் தொகுப்பை வெளியிட முயன்று தனது உயிரையே இழந்தார் சபாலிங்கம். மார்டின் லூதர் கிங் கூறினார்:'கொடியவர்கள் இழைக்கும் தீங்குகளிலும்ம்பார்க்க, அவற்றை நல்ல மனிதர்கள் என்போர் அதிர்ச்சியூட்டுமளவிற்கு மௌனமாய்ச் சகித்துக்கொண்டிருப்பது பற்றியே நாம் இந்தத் தலைமுறையில் வருத்தமுறவேண்டும்.'
அன்புடன்
ப.வி.ஸ்ரீரங்கன்
உண்மைதாம்!
ஈழத்தில் நிலவுகின்ற சமூக எண்ணவோட்டமானது மிகக்கேவலமான சமுதாய உளவிற்றளத்தை உருவாக்கியுள்ளது.இது ஒரு மனிதரைக்கொன்றுவிட்டு,மோசமான காரணங்களைக்காட்டி நியாயப்படுத்தும் கொடுமையான அராஜகத்தைக் கொண்டுள்ள சமூக இயக்கப்போக்காகவேயுள்ளது.இந்தப்போக்கை எந்த நியாயப்படுத்தல்களாலும் சமனஞ் செய்யமுடியாது.இத்தகைய சூழலில்தாம் இரஜினி உயிரைவிட்டாள்,தான் நேசித்த மக்களுக்காக! அந்த மக்களோ அவளை மறந்துபோகும்படி பாரிய குறுந்தேசியவெறிக்குள் முடக்கப்பட இத்தகைய பெரும் தியாகச்சுடர்கள் காற்றடமற்றுக் காணமாற்போன நிலையில், இந்தப் படம் மிக முக்கியமானவொரு சமூகக்கடமையை நிறைவேற்றுமென நாம் எண்ணுகிறோம்.இது மக்கள் சார்ந்த மனித விழுமியங்களை மீளவும் மீட்டுவிடத்துடிக்கும் மனிதநேசிப்பாளர்களால் பெரிதும் மதிக்கப்படும்!
இறுதியாக, பேராசிரியர் என்.சண்முகரெட்னத்தின்(சமுத்திரன்) வார்த்தையிற் சொன்னால்:'ஈழத்தமிழர் போராட்டத்தின் முழுமையான வரலாறு என்றோ எழுதப்படத்தான் போகிறது.அங்கு தமிழ்ப்போராளிகளின் தியாகங்களைப்பற்றிமட்டுமல்ல இயக்கங்களுக்குள்ளே இடம்பெற்ற கொடூரங்கள்-இயக்கங்களுக்கிடையிற் நிகழ்ந்த அழிவுப்போராட்டங்கள் பற்றியும் அத்தியாயங்கள் எழுதப்படும்.இந்த வரலாற்றில் இத்தகைய(இரஜினி,சபாலிங்கம்…)தனிமனிதர்களுக்கும் ஒரு இடம் இருக்கத்தான் போகிறது.'-(தோற்றுத்தான் போவோமா? பக்கம்:10)
விடுதலையின் பெயரால் நசுக்கப்பட்ட ஜனநாயகத்திற்காகவும்,மண்ணின் பெயரால் மறுக்கப்பட்ட மனிதவிழுமியங்களுக்காவும்-இயக்க நலன்களுக்காக மறுக்கப்பட்ட மாற்றுச்சிந்தனைகளுக்காகவும்-மனித சுதந்திரத்துக்காகவும் நாம் கரங்களைக்கோற்போம்.
'மனிதத்தை
துப்பாக்கி முனையில்
நடத்திச் சென்று
புதைகுழி விளிம்பில் வைத்துச் சுட்டுப்
புறங்காலால்
மண்ணைத் தள்ளி மூடிவிட்டு வந்து
தெருவோரச் சுவரில்
குருதியுறைந்து
நியாயம் சொல்கிறார்கள்
நியாயம்!' -கவிஞர் சேரன்.
அன்புடன்
ப.வி.ஸ்ரீரங்கன்
வெங்கட், நன்றி. படத்தை பின்னர் பார்க நேர்ந்தால் எழுதுங்கள். 'முறிந்த பனை' படித்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
/'மனிதத்தை
துப்பாக்கி முனையில்
நடத்திச் சென்று
புதைகுழி விளிம்பில் வைத்துச் சுட்டுப்
புறங்காலால்
மண்ணைத் தள்ளி மூடிவிட்டு வந்து
தெருவோரச் சுவரில்
குருதியுறைந்து
நியாயம் சொல்கிறார்கள்
நியாயம்!' -கவிஞர் சேரன்./
கனடாவிலிருந்தும் ஜேர்மனியிலிருந்தும்
வெங்கட், நீங்கள் மேலே எழுதியிருக்கும் ரஜனி திரணகம குறித்த வாழ்க்கைக்குறிப்பினை எங்கிருந்து பெற்றீர்கள் என்று சொல்ல முடியுமா?
மனித உரிமைப்போராளிகள் என்று காட்டிக்கொள்வது மிகச் சுலபம் – குறிப்பாக, கனடாவிலும் ஜேர்மனியிலும் எந்தச்சிக்கலுமில்லாமற் குந்திக்கொண்டு சொல்கையிலே. அமெரிக்காவிலே குந்திக்கொண்டு புஷ்ஷையும் அமெரிக்க அரசினையும் குறை சொல்வதிலும்விட, உவூல்பெற்றாலிலும் யோர்க் பல்கலைக்கழகத்திலிருந்தும் மனித உரிமைகளைப் பற்றிப் பேசுவது மிகவும் இலகு.
இனி ஒரு சட்டம் கொண்டு வரவேண்டும்; 1983 இலோ அதற்கு முன்னாலோ குறைந்த பட்சம் 1990 இற்கு முன்னாலோ, இலங்கையை விட்டு ஓடிய எந்தக்குஞ்சு குருமானும் (குறிப்பாக, அகதி அந்தஸ்துகோரி, பிரஜாவுரிமை பெற்ற குருமான்களும் குருமாடத்திகளும்) இலங்கைத்தமிழருக்கான மனித உரிமைகளைப் பேசக்கூடாதென்று.
ரஜனி திரணகம தொடக்கம் சபாலிங்கம் வரையான கொலைகளைத் திட்டவட்டமாக எதிர்க்கவேண்டும் – குறிப்பாக, அதைச் செய்தவர்களைத் தெரிந்திருக்கும் ஸ்ரீரங்கன் போன்றவர்கள் புலம்பெயர்ந்திருக்கும் அந்தக்கொலையாளிக்கு உடைந்தையாக இருந்தவனை, அவர் வாழும் நாட்டு நீதிமன்றத்துக்கு ஏற்றவேண்டும். அதன் காரணமாக அவர் வரலாற்றிலே மனித உரிமைப்போராளி என்று பேசப்படுவார்
கறுப்பி படத்தினைப் பார்த்துவிட்டு வந்து, ராஜினி- இந்திய அமேதிப்படை ஆகியவர்களுக்கிடையேயான தொடர்பு குறித்தும் ராஜினியின் முறிந்த பனைமரம் எழுதிய ஸ்ரீதரன், ஹூல் சகோதரர்கள் ஆகியோர் இன்று எவ்வாறு, எதற்காக இயங்குகின்றார்கள் என்று படத்திலே சொல்லப்பட்டிருக்கின்றதா என்று சொல்வதாகச் சொன்னார். பார்க்கின்றவர்களிலே வசதிப்பட்ட வெங்கட் போன்ற மற்றையவர்களும் சொன்னால், என்னைப் போன்றோருக்குப் பயனாக இருக்கும்.
கடைசிப்பந்தியிலே தவறிவிட்டது –
சோதனை
[7] வஸந்த் – முன்பு இங்கே புஸ்பராஜாவின் புத்தகத்தைக் குறித்த எனது வாசிப்பனுபவத்தை எழுதும்பொழுது எழுந்த கருத்துப் பரிமாற்றங்களில் மேலதிக வாசிப்பிற்கான புத்தகங்களுக்குப் பரிந்துரை வேண்டியபொழுது ரமணியும் ஈழநாதனும் 'முறிந்த பனை' யையும் பரிந்துரைத்திருந்தார்கள். உடனடியாக பல்கலைக்கழகத்தில் பதிவு செய்து பெற்றுப் படிக்கத் துவங்கினேன்.
புத்தகத்தில் 70% வாசித்தேன். காலக் கெடுமுடிந்து திருப்பிக் கொடுக்க வேண்டியதாயிற்று. பல தகவல்களை உள்ளடக்கிய அந்த புத்தகத்தின் பெரிய குறை அதை வாசிக்க மிகப் பொறுமை வேண்டும் (தாங்கள் புழங்கிய இடம், மனிதர்கள் என்பதால் ஈழத்து நண்பர்களுக்கு இது வேறுபடலாம்). வெற்றுச் சம்பவக் கோர்வைகளால் ஆனது அந்த நூல். 30% தாண்டியவுடன் சலிப்பு ஏற்ப்பட்டது. சம்பவ அடுக்குகளைக் குறைத்துக்கொண்டு, கொஞ்சம் பகுப்பாய்வுத்தளத்தில் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
[8] ரமணி – உங்கள் பரிந்துரைக்குப் பிறகு 'முறிந்த பனை' படிக்கத் துவங்கியவுடன் முதலில் பட்டது அந்த நூலின் முன்னுரையில் ராஜினி (இவர் பெயரின் சரியான உச்சரிப்பு என்ன? நானறிந்த வரையில் தமிழில் ராஜினி என்ற பெயரைக் கேள்விப்பட்டதில்லை, எனவேதான் ரஜினி என்று எழுதினேன்)பற்றிய செய்திகளால் கவரப்பட்டு இணையத்தில் கொஞ்சம் தேடிப்படித்தேன்.
நான் இங்கே எழுதியிருப்பவை, ஆவணப்படத்தின் தளத்தில் மற்றும் சுட்டப்பட்டிருக்கும் க்ளோப் அன் மெயில் கட்டுரைகளின் அடிப்படையில். அவற்றில் இல்லாதவை ஏதாவது இருந்தால் மேற்சொன்ன முந்தைய வாசிப்பில் என் மனதில் பதிந்தவையாக இருக்கலாம்.
தவறுகள் இருந்தால் சொல்லுங்கள், திருத்திக் கொள்கிறேன்.
[9]
ரமணி – >பார்க்கின்றவர்களிலே வசதிப்பட்ட வெங்கட் போன்ற மற்றையவர்களும் சொன்னால், என்னைப் போன்றோருக்குப் பயனாக இருக்கும்.
சுத்தமாகப் புரியவில்லை. பார்க்கின்றவர்களிலே 'வசதிப்பட்ட வெங்கட்' என்று எனக்குத் தனித் தகுதி ஏன் என்று தெரியவில்லை. நான் எந்த அர்த்தத்தில் 'வசதிப்பட்டவன்' என்று தெரியவில்லை.
/சுத்தமாகப் புரியவில்லை. பார்க்கின்றவர்களிலே 'வசதிப்பட்ட வெங்கட்' என்று எனக்குத் தனித் தகுதி ஏன் என்று தெரியவில்லை. நான் எந்த அர்த்தத்தில் 'வசதிப்பட்டவன்' என்று தெரியவில்லை./
வெங்கட், என் தமிழ் தந்த குழப்பத்துக்கு மன்னிக்கவேண்டும்; "அந்தப்படத்தினைப் பார்க்க வசதிப்பட/சந்தர்ப்பமுள்ள வெங்கட் போன்றவர்கள்" என்பதே சொல்ல வந்த விடயம்.
/நான் இங்கே எழுதியிருப்பவை, ஆவணப்படத்தின் தளத்தில் மற்றும் சுட்டப்பட்டிருக்கும் க்ளோப் அன் மெயில் கட்டுரைகளின் அடிப்படையில். அவற்றில் இல்லாதவை ஏதாவது இருந்தால் மேற்சொன்ன முந்தைய வாசிப்பில் என் மனதில் பதிந்தவையாக இருக்கலாம்./
தவறு என்று சொல்லுமளவுக்கு எனக்கு அவரினை நேரே தெரியாதுதானே? அங்குமிங்கும் வாசித்தவை, அவரின் மாணவர்களாகவும் அதே அரசியற்போக்கும் கொண்டுமிருந்த இரு நண்பர்களூடாகத் தெரிந்தவை ஆகியனதான் என் தகவல் ஆவணங்கள். அவை போதாமை உடையவை. ஆனால், "விடுதலைப் புலிகளுடன் நெருக்கம் ஏற்பட, அவர்களின் மனித உரிமை மீறல்கள் குறித்த அதிருப்தியே அவருக்கு அதிகரித்தது" என்பதை நேரிலிருந்து கண்டதுபோலவே எழுதியதுபோல இருந்தது. அதற்கான சாத்தியம் குறைவு என்பதாலேதான், எங்கிருந்து பெற்றீர்கள் என்று கேட்டேன். தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.
"முறிந்த பனைமரம்" குறித்து நீங்கள் சொல்வது சரியே; தகவல்களின் ஆவணப்படுத்தல்களே அதிகம் (இப்போதும், அவருடைய பல்கலைக்கழக நண்பர்கள் அதே வகையிலேயே செய்கின்றனர்; ஆனால், அதன் நடுநிலைமை குறித்து எனக்குச் சொல்ல ஏதுமில்லை. இணையத்திலேயே அவர்களின் தளத்திலே அதைக் கண்டுகொள்ளலாம்). வாசிக்கும்போது, சோர்வு ஏற்படும்.
[15] ரமணி,
>"விடுதலைப் புலிகளுடன் நெருக்கம் ஏற்பட, அவர்களின் மனித உரிமை மீறல்கள் குறித்த அதிருப்தியே அவருக்கு அதிகரித்தது" என்பதை நேரிலிருந்து கண்டதுபோலவே எழுதியதுபோல இருந்தது. அதற்கான சாத்தியம் குறைவு என்பதாலேதான், எங்கிருந்து பெற்றீர்கள் என்று கேட்டேன். தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.
ராஜினி குறித்து நான் படித்தவைகளில் பெரும்பாலானவை (சொல்லப்போனால் அனைத்துமே) புலிகளுடன் நெருக்கமாக அவர் பணியாற்றியபொழுது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே அவரை இயக்கத்தினின்று வெளிபேறச் செய்தன என்றுதான் இருந்தன. மாற்று கருத்துகளை நான் பார்க்கவே இல்லை. இதற்கு நான் ஒருதரப்பு கருத்துக்களை மாத்திரமே தேடியதாக அர்த்தமில்லை, இயன்ற அளவு தேடியதில் இப்படித்தான் இருந்தது.
நான் நேரிலிருந்து கண்டதுபோல எழுதியிருப்பதாகத் தோன்றுவது தவிர்க்க முடியாதது. அப்படிச் சொல்லப்போனால் நேரில் பரிச்சயமில்லாத யாருடைய சரித்திரத்தையும் பற்றி, யாரும் எழுத முற்பட்டால் இபபடித்தானே தோற்றமளிக்கும். அல்லாமல்போனால், சரித்திரம் முழுவதுமே "சொன்னதாகச் சொன்னதாகச் சொன்னதாகச் சொல்வார்கள்" என்றுதான் எழுதவேண்டியிருக்கும். ஓரளவுக்கு நம்பகம் இருப்பதாகக் கருதினால் வாசிப்பு எளிமை கருதி நேரடியான நடையிலேயே எழுத முற்படுகிறேன். இது இங்கு மட்டுமல்ல எல்லா இடங்களிலும் பொருந்தும்.
ஐன்ஸ்டைனையும் அவரது மனைவியையும் பற்றி எழுத அவர்கள் படுக்கையறைக்குச் செல்லவேண்டும் என்ற கட்டாயம் இல்லையே.
/ஐன்ஸ்டைனையும் அவரது மனைவியையும் பற்றி எழுத அவர்கள் படுக்கையறைக்குச் செல்லவேண்டும் என்ற கட்டாயம் இல்லையே. /
நான் வாழும் நாட்டிலே – டெக்ஸாஸில்- அப்படியாகப் போய்த்தான் ஒரு தற்பாலுறவு இணையினைக் கைது செய்தார்கள்
நிற்க, இது குறித்து உங்களுக்குச் சில கிழமைகளுக்கு முன்னாலே எழுத எண்ணியிருந்தேன். Einstein's Wife என்ற இரு மணிநேர நிகழ்ச்சியினைச் சென்ற மாதம் பார்த்தேன். நீங்கள் பாத்திராவிட்டால், உங்கள் கட்டுரைக்கு மேலும் தகவலுக்கு உதவுமே என்று பட்டது. அந்த நேரம் பார்த்து, தற்காலிக ஓய்வென்று போய் விட்டீர்கள்.
இனி நம்பகம் குறித்து; யார் கொன்றதென்பது இன்னும் நிச்சயமாகத் தெரியாத நிலையிலேதான் இருக்கின்றது. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை இயக்கத்திலும்விட, தமிழீழ விடுதலைப்புலிகளே கொன்றிருக்க வாய்ப்புண்டு என்றுதான் பார்க்கும் பலருக்கும் தோன்றுகின்றது. கறுப்பியின் தளத்திலே அருவி சொன்ன முல்லைத்தீவு மாணவன் (அவர் பெயரையும் கேள்விப்பட்டிருக்கிறேன்; ஆனால், நிச்சயமின்றிச் சொல்லவிருப்பமில்லை) கொலைக்கு உடைந்தையாகக்கூட இருக்கலாம். ஆனால், உறுதியாக எதையுமே ஆதாரங்களுடன் எவரும் முன்வைக்கவில்லை. முறிந்தபனை பொதுவாக எல்லா ஈழ, ஸ்ரீலங்கா, இந்திய அரசு இயக்கங்களினையும் தாக்கியிருந்தது. அந்நிலையிலே, விடுதலைப்புலிகளுடன் அவர் அதிருப்தி கொண்டிருந்தார் என்பது விடுதலைப்புலிகளே கொலையாளிகள் என்று அறுதியிட்டுச் சொல்வதுபோல இருந்தது. PBS தயாரித்த இலங்கை குறித்த ஒரு விவரணத்திலும் ஒரு பக்கச்சார்பே இருந்தது. அந்நிலையிலே, விவரணத்தயாரிப்பாளரின் பக்கத்திலிருந்து விவரத்தினைக் கொள்வது தரவினைக் கோணலாக்குமென்பதாகவே தோன்றுகிறது.
Einstein's Wife
http://www.pbs.org/opb/einsteinswife/…
ரமணி – இந்தக் கட்டுரையை நான் ஏற்கனவே எழுதி முடித்து இயற்பியல்:2005 தளத்தில் இருக்கிறது. இது உயிர்மையிலும் பதிப்பானது.
பிபிஎஸ்ஸின் அந்த டிவிடி என்னிடம் இருக்கிறது.
[17] ரமணி – மேலே இருக்கும் என்னுடைய விவரணப்படத்தைப் பற்றிய செய்தியில் யார் கொலை செய்தார் என்ற சிக்கலில் நான் நுழையவில்லை. ஆனால் நானறிந்த வரையில் ராஜினிக்கு சில காலங்களுக்குப் பின் புலிகளின் மீது அதிருப்தி இருந்தது. எனவேதான் அதை எழுதியிருக்கிறேன்.
படத்தைப் பார்த்துவிட்டு கட்டாயம் விபரமாக எழுதுவேன். ஆனால் எனக்கென்னமோ புலிகள், ஈபிஆரெலெஃப், போன்ற விபரங்களில் அவர்கள் நுழைந்திருக்க மாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்றைக்குப் போராளிகள் என்றாலே புலிகள் என்றான நிலையில் வெளிநாட்டு இயக்குநருக்கு இதையெல்லாம் தெளிவாகச் சொல்கிறேன் என்ற பெயரில் ஆவணத்தை விரிப்பதில் நம்பிக்கையிருக்கும் என்று நான் நினைக்கவில்லை.
என்ன இருந்தாலும் பார்த்துவிட்டுத்தான் முடிவு செய்ய வேண்டும்.
[19] வெங்கட், உங்கள் கட்டுரையை உயிமையிலும் இணையத்திலும் பார்த்திருக்கிறேன். ஆனால், இந்த விவரணம் உங்களிடம் இருக்குமோ இல்லயோ என்று தெரியாது; அதனாலேயே, விபரம் தந்தேன்.