இந்தியா இந்தியா
by வெங்கட் • December 30, 2005 • பொது • 5 Comments
நீண்ட நெடும்பயணத்தின் பின் பெங்களூர் வந்து கிட்டத்தட்ட மூன்று நாட்களாகப் போகின்றன. முன்னெப்போதும் இல்லாதவகையில் மிக மோசமான பயணக்களைப்பு தொடர்ந்துகொண்டிருக்கிறது. வேறெந்த பயண சாத்தியமும் இல்லாமற்போக பயந்துகொண்டே ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமானத்தில் வந்தாக வேண்டியிருந்தது. வாழ்க்கையின் மிக மோசமான விமானப் பயணம் இது (கிட்டத்தட்ட பிஹாரில் முன்பு ஒருமுறை மேற்கொண்ட இரயில் பயணத்தைப் போலவே). இதில் சில அற்புத நகைச்சுவை தருணங்களும் அடக்கம். மாஸ்கோ விமான நிலையம், ஏரோஃப்ளோட் விமானம் இவற்றையெல்லாம் பற்றி விரிவாக ஊர் திரும்பிதான் எழுதவேண்டும். முதலாவதாக ஐந்துவருட இடைவெளிக்குப் பின் பெங்களூரில் என்னுடைய முதல் எண்ணங்கள்; (இவற்றில் பல ஊர் வரும் வெளிநாட்டு வாசியின் கேணத்தனமான புலம்பல்களாக இருந்தாலும் உண்மையில் மனதுக்குத் தோன்றியதைப் நேர்மையாகப் பகிர்ந்துகொள்கிறேன்).
1. மிகச் சோகமான நிகழ்வு நான்வந்து சேர்ந்த சில மணிகளுக்குள்ளாக இந்திய அறிவியல் கழக வளாகத்தில் நடந்தேறியிருக்கும் தீவிரவாத வன்முறை. ஐஐஎஸ்ஸி-க்கு வரும் திங்கள்/செவ்வாய் செல்லும்பொழுது நண்பர்கள் மூலமாக சில நேரடித்தகவல்கள் கிடைக்கலாம். பேராசிரியர் பூரி குடும்பத்தின் இழப்பு மிக அதிகம். மத்திய, தில்லி மாநில அரசுகள் போதுமான வகையில் அவர் குடும்பத்திற்கு அனுதாபங்களைத் தெரிவிக்கவில்லை. துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட விஜய் சந்துரு-வை ஓரளவுக்குத் தெரியும் (இவர் சிம்ப்யூட்டர் கைக்கணினி வடிவமைப்பில் முக்கியப் பங்காற்றியவர்). விஜய் பிழைத்துக்கொண்டது குறித்து நிம்மதி.
2. சென்றமுறை பார்த்ததில் இந்த முறை காணாமல் போயிருப்பது: சாலைகள். அந்த இடத்தில் சில கற்களும் நிறைய குழிகளும் இருக்கின்றன. பெங்களூரில் வாகனங்கள் அளவிடமுடியாத வகையில் அதிகரித்திருக்கின்றன.
3. எங்கும் தூசிப் படலமாக இருக்கிறது. வந்து சேர்ந்து மூன்று நாட்களாக என் மனைவி தும்மிக்கொண்டே இருக்கிறார். அவருக்கும் எனக்கும் கண்கள் சிவந்தே இருக்கின்றன (தூசியினால் வரும் ஒவ்வாமை). மரங்களின் இலைகள் தூசிபடிந்து பெங்களூரே பழுப்பு நிறத்தில் இருப்பதைப் போலத் தோன்றுகிறது.
4. ஒரே ஒருமுறை எம்.ஜி. ரோட், கமர்ஷியல் ஸ்ட்ரீட் (இவற்றுக்கெல்லாம் கன்னடத்தில் எந்தப் பெயரும் கிடையாது) சென்றிருந்தேன். Bangalore seems to be in a great shopping orgy. ஒவ்வொரு கடையில் அநியாயத்திற்குக் கூட்டம். விலையைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. ஐந்து வருடத்திற்கு முன்னால் முன்னூறு முதல் ஐநூறு வரை கொடுத்த சுடிதார்கள் ஆயிரத்து ஐநூறு ஆகியிருக்கின்றன என்று மனைவி சொல்கிறாள். ஒரு காலத்தில் இலகுவான நடைபயின்று கடைகடையாக ஏறி இறங்கிய கமர்ஷியல் ஸ்ட்ரீட் தெரு இப்பொழுது மதுரை அழகர்கோவில் திருவிழாவின் பரபரப்புக்கு மாறியிருக்கிறது.
5. கஷ்டப்பட்டு கடைகடையாய் அலைந்து நண்பர்களின் விருப்பங்களை மனதில் கொண்டு தேடித்தேடி வாங்கிய Lindt, Tablerone, FR, ஸ்விஸ் சாக்லேட்கள் நில்கிரீஸ் சூப்பர் மார்க்கேட்டில் கொட்டிக்கிடக்கிறன; கிட்டத்தட்ட அதே விலை. இதைத் தவிர Rado, Tag Hauer, Citizen கடிகாரங்களில் துவங்கி, L’Oreal, Armani, Gucci என்று அழகுப் பொருட்கள் ஈறாக, Jockey Underwear வரை வெளிநாட்டு சாமான்கள் இறைந்து கிடக்கும் கடைகளில் புடவை கட்டிய தாயார்கள் பெண்களை ஷாப்பிங் செய்ய விட்டுவிட்டு பின்னால் பொறுமையாக நின்று கொண்டிருக்கிறார்கள். காசு கொட்டிக் கொடுத்து வாங்கிய வெளிநாட்டு உள்ளாடையைப் பிறருக்குக் காட்டியாக வேண்டிய கட்டாயத்தில் அந்தப் பெண்கள்.
6. பெண்களின் உடைகளில் கை காணமல் போயிருக்கிறது. டி-ஷர்ட்டும் சுரிதாரும் – செயலிழந்தால் தேவையில்லாமப் போகும் பரிணாமக் கோட்பாடுகளுக்கு ஏற்றபடி – கைகளில்லாமல் ஆகியிருக்கின்றன. மூன்று வரிசைகள் கொண்ட சல்வார் கடைகளில் 75%-த்தில் கை கிடையாது என்பதால் என் மனைவியின் தெரிவுக்கு சாத்தியமில்லாமல் ஷாப்பிங் அதிவிரைவாக முடிந்தது.
7. பிரிகேட் ரோட் ரங்கநாதன் தெருவைவிட அதிக நெருக்கடி கொண்டதாக இருக்கிறது. (வித்தியாசம் – பெங்களூர் என்பதால் இதை வாகனங்களைத் தடைசெய்து நடைத் தெருவாக மாற்றுவது சாத்தியமில்லை). ஆட்டோக்கள் தடை செய்யப்பட்டிருந்தாலும் கார்கள் தோள்களை உரசிக் கொண்டு செல்கின்றன.
8. வீட்டின் எதிரில் புழுதி பறக்கும் தெருவில் புதிதாக பன்றி இறைச்சிக்கடை வந்திருக்கிறது. அங்கே வாங்கிச் சாப்பிடுபவர்களின் சுகாதாரத்தைப் பற்றி விசனப்பட வேண்டிருக்கிறது.
9. உலகத்திலேயே மிகத் துரிதமான, எளிதான அந்நியச் செலாவணி மாற்றுச் சேவை மும்பை விமான நிலையங்களில்தான் இருக்கின்றது. முகத்தில் நிறைய பயணக்களைப்பும் உடையில் எங்காவது அந்நியத்தன்மையும் தென்பட்டால் காலை, இடுப்பை, பிறகு கழுத்தைப் பிடித்து டாலர் மாற்றச்சொல்லி வற்புறுத்திக் கொஞ்சிக் கெஞ்சுகிறார்கள். ஒரு காலத்தில் என் மாமாவின் வங்கி இரும்புப் பெட்டியில் மாத்திரமே பார்த்ததைவிட அதிகப் பணம் அவர்கள்இடதுகையில் திமிறுகிறது.
10, ஒற்றைக் கைப்பையை எடுத்துக் கொண்டு ஓடிவந்து டிக்கெட் வாங்கிக் கொண்டு விமானம் ஏறி பயணிக்கும் புதிய ஜாதி உருவாகியிருக்கிறது.
முதலில் பகலில் தூங்கி இரவில் விழித்துக்கொள்வது நின்றால் தேவலாம் போலிருக்கிறது. கண்களைக் கசக்கிக் கொண்டு பெங்களூரை நன்றாகப் பார்க்க வேண்டும்.
வெங்க்ட், சுரிதாரின் கை தனியாய் பின் குத்தப்பட்டு இணைக்கப்பட்டிருக்கும். தேவை என்றால் கையை இணைத்துக் கொள்ளலாம்.
சென்னையிலும் இதே கதைதான். ஆனால் வூட்டு காரம்மா கிட்ட சொல்லுங்க, பாண்டிபஜார்ல எழுநூறு, எண்ணூறு ரூபாய் போட்டா, சூப்பர் குவாலிட்டில, சூப்பர் டிசைன்ல அள்ளிடலாம்
காட்டன் பிடிக்கும் என்றால் மிக நல்ல தரமானவை கிடைக்கின்றன.
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
Dear Venkat
Thanks for first report from B'lore. Look forward to more in the next few days.
Hoping to visit B'lore by end of 2006! Lets see how it goes.
Murali
வெங்கட் நல்லபடியாக ஊருக்கு திரும்பிவர வாழ்த்துக்கள். திடமான மனநிலையில் செலவு கணக்கைப் பார்க்கவும் வாழ்த்துக்கள்.
Hello Venkat,
Usha is right…the hands are normally available on request…We have many things in common…our love for tamil language..and the next is I am also planning to come to Canada in few months time…thru PR…with my husband. I would like to discuss more on this with you sometime. But how do I write in Tamil here? means comment in Tamil? I didn't see any feature…please enlighten.
Coming to B'lore, yes it is no longer the green city…its gone to ruins…atleast Mr. Narayanamurthy and Dr. Dr. Kiran Mazumdar-Shaw are doing their job by screaming out loud…something should hopefully come out of this…
Have a great year ahead!
Best Regards,
Maha
வெங்கட் எங்க இருக்கீங்க,
இந்தியாவில்தானே?
தமிழர் திருநாளாம் விவசாயிகளின் நன்றித் திருநாளான பொங்கல் நாளில்..உங்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துகள்.
உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மகிழ்ச்சியும்,அன்பும் மற்றும் எல்லா வளங்களும் பொங்கல் போல் என்றும்
பொங்கட்டும்.
அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா.