அஞ்சலி – ராபர்ட் மோக்
by வெங்கட் • August 23, 2005 • இசை • 5 Comments

ராபர்ட் மோக் சென்ற ஞாயிறன்று (21.ஆகஸ்ட் 2005) காலமானார். இங்கே பலரும் இந்தப் பெயரை முதல் முறையாக இப்பொழுதுதான் கேட்கக் கூடும். டாக்டர் ராபர்ட் மோக் (Robert Moog, இந்தப் பெயரை Vogue என்பதுபோல உச்சரிக்க வேண்டும்). நவீன இசைக்கருவிகளின் உலகில் மோக்-கிற்கு அதிமுக்கிய இடமுண்டு. சிறுவயதிலிருந்தே இசைக்கருவிகளில் நாட்டம் கொண்டிருந்தவர் மோக் – இசையின் காரணமாக அல்ல, ஒலிகளை உற்பத்தி செய்யும் கருவிகள் என்ற அடிப்படையில். இவருடைய ஆரம்பகாலங்களில் தேராமின் (theremin) என்ற கருவியின்மீது நாட்டம் கொண்டிருந்தார். மின்சாரம் ஓடும் கம்பி வளையங்களுக்கும், ஆண்டனாக்களுக்கும் இடையில் கையை அசைத்து மீட்டப்படும் இந்தக் கருவி விசித்திரமானது (இங்கே எஙகள் இயற்பியல் துறையில் ஒருவர் வைத்திருக்கிறார்). அதாவது எதையுமே தொடாமல் காற்றில் கையை அசைத்து மீட்டப்படும் கருவி. ரஷ்யர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் கருவியில் சில மாற்றங்கள் செய்து விற்றுவந்தார்.
பின்னர் 1964-ல் இவர் அறிமுகப்படுத்திய மோக் ஸிந்தஸைஸர் நவீன ராக் இசையையே மாற்றியமைத்தது. முதன் முதல் மின்னணு இசைக்கருவி இதுதான். அந்த நாட்களின் தொழில்நுட்பத்திற்கு மிகவும் சிக்கலான இதற்கு கீ-போர்ட்களில் இருக்கும் உள்ளீட்டு அமைப்பைப் போன்ற மிக எளிமையான வடிவம் கொடுத்தார். பின்னர் இது மிகப் பிரபலமானது. எப்படி கிட்டார்கள் உலகில் ஃபெண்டர், லீ போன்ற எலெக்ட்ரானிக் கிட்டார்கள் முக்கியமானவையோ அதேபோல் இந்த ஸிந்தஸைசரும் மிகவும் முக்கியமானதாக இருந்தது. இதைக் கொண்டு மிகச் சிக்கலான, புதுமையான ஒலிகளை எளிதாக எழுப்பமுடியும்.
இது Analog Electronics அடிப்படையிலானது. பின்னாட்களில் டிஜிட்டல் ஸிந்தஸைசர்கள் வந்தவுடன் இதன் முக்கியத்துவம் குறையத் தொட்ங்கியது. ஆனால் இன்றைக்கும் இது பிரபலமாகவே இருந்துவருகிறது. இந்த ஒலிகள் டெக்னோ இசை (Techno Music) என்ற ஒரு புது இசைத்துறையையே உருவாக்கின. உங்களில் பலரும் க்ராஃப்ட்வெர்க் (Kraftwerk) என்ற இசைக்குழுவின் நவீன இசையைக் கேட்டிருக்க முடியும். இவர்கள் மோக் ஸிந்தஸைசரை நிறையப் பயன்படுத்தியதன் கூடவே தாங்களும் இன்னும் நிறைய எலெக்ட்ரானிக் கருவிகளையும் உருவாக்கினார்கள். பிறகு மோக் தன்னுடைய ஸிந்த் கருவியை இன்னும் எளிதாக்கி மினிமோக் என்ற கருவியையும் தயாரித்தார்.
மோக் ஸிந்த்-கள் Beatles (Abby Road), Pink Floyd (The Dark Side of the Moon), Kraftwerk (Autobahn), Stevie Wonder (Innervisions), The Who (Who’s next) போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த ராக்/பாப் ஆல்பங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இன்னும் Rolling Stones, Grateful Dead, Led Zapplin, Police, Genesis, U2 போன்ற குழுக்களும் இதை நிறையப் பயன்படுத்தினார்கள். குறிப்பாக பிங்க் ஃப்ளாய்ட்-டின் டார்க் ஸைட் ஆஃப் தி மூன் அற்புதமான ராக் இசையையும் மின்னணு இசையையும் இணைத்தது. The Who, Police, Genesis போன்ற திறமையான ட்ரம்மர்கள் கொண்ட குழுக்களில் ஸிந்தகள் அதியற்புத ரிதம்களைச் சேர்த்தன.
Emerson, Lake & Palmer என்ற இசைக்குழுவைச் சேர்ந்த கீபோர்ட் கலைஞர் கீத் எமர்ஸன் தன்னுடைய இசை நிகழ்ச்சிகளில் ராபர்ட் மோக்-கை முன்னுக்கு அழைந்த்து அறிமுகப்படுத்தினார். மோக் இல்லையென்றால் தன்னுடைய இசை இல்லை என்று எமர்ஸன் தன்னுடைய பல நிகழ்ச்சிகளில் சொன்னார். அந்தக் காலங்களில் இசைக்குழுக்கள் தாங்கள் மோக் ஸிந்த்-களைப் பயன்படுத்துகிறோம் என்று சொல்வதை கௌரவமாகக் கருதினார்கள்.
ராபர்ட் மோக் இயற்பியலும், மின் நுட்பத்திலும் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். பிறகு இசைகருவிகள் குறித்த ஆராய்ச்சிக்காக கார்னெல் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.
ராக் விசிறிகளிடையே மிகப் பிரபலமாக இருந்தபொழுதும் மோக் இந்தப் பிரபலத்திற்குக் கூச்சப்பட்டவர். “நான் அடிப்படியில் ஒரு கருவிகள் சமைக்கும் பொறியாளன், இசைக்கலைஞர்கள் என்னுடைய வாடிக்கையாளர்கள்” என்று தன்னடக்கத்துடன் சொல்லிக் கொள்வார்.
* * *
இசையையும் அறிவியலையும் விரும்பும் எனக்கு ராபர்ட் மோக் ஒரு குட்டித் தெய்வம்.
இந்தப் பெயரை முதல் முறையாக இப்பொழுதுதான் கேட்கக் கூடும்
ஆம்… நன்றி!
இன்றைய நியு யார்க் டைம்ஸ் அஞ்சலி: http://www.nytimes.com/2005/08/23/arts/music/23moog.html?th=&emc=th&pagewanted=print…
நேற்று பிபிஸியிலே இவரின் இறப்பினை வாசித்தபோது, உடனடியாக எனக்கு எழுந்த எண்ணம்:
"நாளை வெங்கட் இது குறித்து பதிவு இடுவார்; விரிவாக வாசிக்கலாம்"
//நேற்று பிபிஸியிலே இவரின் இறப்பினை வாசித்தபோது, உடனடியாக எனக்கு எழுந்த எண்ணம்:
"நாளை வெங்கட் இது குறித்து பதிவு இடுவார்; விரிவாக வாசிக்கலாம்"//
ditto
[2] I thought the same when i heard 11.00pm cbc news.
-Mathy
Is his music piece available in mp3 format? if so can you upload to you blog.
Cheers, Eswar