• அஞ்சலி : கார்டினல் சின்

    by  • June 21, 2005 • பொது • 10 Comments

    கார்டினல் சின்
    பிலிப்பைன்ஸ் நாட்டின் கத்தோலிக்க மதத் தலைவரான ஜெய்ம் கார்டினல் சின் (Jaime Cardinal Sin) இன்று காலமானார். சில காலமாகவே பல்வேறு நோய்களால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த சின் தனது எழுபத்தாறாவது வயதில் மரணமடைந்தார்.

    ஏதோவொரு மூலையில் இருக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டின் இறந்துபோன மதத்தலைவரைப் பற்றி நான் ஏன் எழுதவேண்டும்? ஒரே ஒரு காரணம்தான் இருக்கிறது. 1986ஆம் ஆண்டு அங்கே நடந்த மக்கள் புரட்சியில் தன்னுடைய கத்தோலிக்கப் பேராலாயத்தைவிட்டு வெளியேவந்து கொடுங்கோல் அரசனுக்கு எதிராக மக்களை அணிதிரள அழைப்புவிடுத்து அந்த நாட்டின் தலைவிதியை மாற்றியெழுதியவர் கார்டினல் சின். என்பதுகளில் எனக்குப் பன்னாட்டு வானொலிகள் கேட்கும் பழக்கம் இருந்தது. அல்பேனியாவிலிருந்து ஆரம்பித்து ஜிம்பாப்வேவரை, நார்வேயிலிருந்து நியூஜிலாந்துவரை என்று உலகின் குறுக்கு நெடுக்கில் இருக்கும் பல ஒலிபரப்புகளைக் கேட்டிருக்கிறேன். அந்த காலத்தில் எனக்குப் பரிச்சயமானது பிலிப்பைன்ஸின் வெரித்தாஸ் வானொலி (இதில் ரபி பெர்னார்ட்ம் அவரது தகப்பனார் ஆரோக்கியசாமியும் வெரித்தாஸ் தமிழ்ச் சேவையில் வேலைசெய்துவந்தார்கள்).

    பிலிப்பைன்ஸ் நாட்டில் அப்பொழுது கொந்தளிப்பான சூழ்நிலை. இரண்டாம் உலகப்போரில் ஜப்பானை எதிர்த்துப் போரிட்ட மாவீரர், ஜனாதிபதி ஃபெர்டினாந் மார்க்கோஸ் (Ferdinand Marcos) ஒரு வெறியராக மாறிவிட்டிருந்தார். (இதில் அவரது மனைவி இமெல்டா மார்க்கோஸ்க்குப் (Imelda Marcos) பெரும்பங்குண்டு). அதியற்புத தேசியவீரராக அடையாளம் காணப்பட்ட மார்க்கோஸின் முதல் இரண்டு ஆட்சிக்காலங்கள் நல்லபடியாகத்தான் இருந்தன. மூன்றாவது முறை ஆட்சிக்கு வந்தவுடன் தன் உறவினர்களை முன்னிருத்துவது, தனிப்பட்ட நலனுக்காக அரசாங்கக் கருவூலத்தைக் கையாடியது என்று பல அபத்தங்களில் ஈடுபட்டார். இதற்குச் சிகரம் வைத்தாற்போல் எதிர்க்கட்சித் தலைவரான பெனிக்னோ அக்கினோவைக் (Benigno Aquino) கொலைசெய்தார். நாடுமுழுவதும் மார்க்கோஸ்க்கு எதிர்ப்பலை கிளம்பியது. பெனிக்னோவின் மனைவி கொரஸோன் அக்கினோவும், அப்பொழுதைய ராணுவ அமைச்சர் ஃபீடல் ராமோஸ்-ம் (Fidel Ramos) இணைந்து மக்களைப் புரட்சிக்குத் தூண்டினார்கள். அந்த நிலையில் கத்தோலிக்க மதகுருவான கார்டினல் சின் மக்களை அமைதியான முறையில் அரசுமாளிகையைச் சுற்றி வளையமிட்டு மறியல் செய்ய அழைப்புவிடுத்தார். (இதற்கு வெரித்தாஸ் வானொலியும் பெரிதும் பயன்படுத்தப்பட்டது). கடைசியில் ஃபெர்டினாந், இமெல்டா மார்க்கோஸ்கள் நாட்டைவிட்டு ஓட கொரஸோன் அக்கினோ பதவிக்கு வந்தார். இந்த சமயங்களில் கார்டினல் சின்-னின் பல உரைகளை நான் வெரித்தாஸ் வானொலியில் நேரடியாகக் கேட்டிருக்கிறேன்.

    ஆமாம், இவ்வளவு தூரம் புரட்சி வரும்வரை கார்டினல் சின் என்ன செய்துகொண்டிருந்தார் என்று கேட்கலாம். இயன்றவரை அரசாங்கத்தில்தான் தலையிடக்கூடாது என்று சின் முயன்றார். ஆனால் இலஞ்சமும் ஊழலும் பெருத்துப் போகப்போக அமைதியாக அரசிடம் இதெல்லாம் நல்லதற்கில்லை, ஒழுங்காகத் திரும்பிவிடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருந்தார். பின்னர் தீவிர கத்தோலிக்கரான இமெல்டா மார்க்கோஸ் கார்டினல் சின்னை தங்கள் அபத்தங்களுடன் இணைந்துகொள்ள அழைப்புவிடுக்க, சின் உங்கள் வழிகளில் என்னால் வரமுடியாது என்று மறுத்துக் கூறினார். வேறுவழியில்லாமல் போக புரட்சிக்கு மக்களை அழைத்தார். இருந்தபோதும் கார்டினல் சின் வத்திகானின் அறிவுறுத்தலுக்கு எப்பொழுதும் தலைசாய்த்தவர். கார்டினல் சின் அரசியலில் ஈடுபடுவது வத்திகானுக்குப் பிடிக்கவில்லை (இந்த காலகட்டத்தில் வத்திகான் வானொலியின் வழவ கொழகொழ அறிக்கைகளையும் கேட்டிருக்கிறேன்).

    வழக்கம்போல இந்தக் கொடுங்கோலனுக்குப் பின்னால் உலகத்தின் ஒரே ஜனநாயக் காவலரான அமெரிக்க ஐக்கிய நாடுகள் துணையாக நின்றன. (சிலியின் அகுஸ்டோ பினாஷேயும் (Agusto Pinochet) நினைவில் வரவேண்டும்). பிலிப்பைன்ஸில் அமெரிக்க இராணுவதளம் அமைக்க வழிசெய்துகொடுத்துவிட்டதால் மார்க்கோஸ் ஜனநாயகவாதி. மார்க்கோஸ் ஆட்சி கவிழாமல் இருக்க அமெரிக்க அரசு இயன்றவரை எத்தனித்துப் பார்த்தது. அதன் ஒரு தாக்கம்தான் வத்திகான் கார்டினல் சின்னின் நடவடிக்கைகளைக் கண்டித்தது. ஆனால் சின் இதற்கெல்லாம் அஞ்சாமல் ஊழலுக்கு நான் எதிரி என்று நின்றார்.

    * * *

    மார்க்கோஸ் போய் அக்கினோ வந்தார், பின்னர் அக்கினோ போய் ஜேஸப் எஸ்ட்ராடா வந்தார். பழங்காலம் திரும்பியது. எஸ்ட்ராடா ஒரு ஊழல் பேர்வழி. மண்டும் இதில் கார்டினல் சின் தலையிட்டு எஸ்ட்ராடாவின் ஆட்சி கவிழ்ந்தது; க்ளோரியா மாக்கபாகல் அர்ரோயோ ஜனாதிபதியானார். தன்னால் இயன்ற அளவு, மதவாதி என்ற வரைமுறைக்குட்பட்டு அரசியலில் தலையிட்டு ஊழலை எதிர்த்து நின்றவர் கார்டினல் சின்

    சமீபத்தில் போப் ஜான்பால் இறந்தபிறகு, கார்டினல் சின்னின் பெயரும் அடுத்த போப்பிற்கு அடிபட்டது. ஆனால் விரைவிலேயே ஒரு பிலிப்பினோ போப் ஆகமுடியாது என்று தெரிந்துவிட்டது. சின்னும் இதற்கு ஆசைப்படவில்லை, அப்பொழுது அவரது உடல் நோய்வாய்ப்பட்டிருந்தார்.

    சின் நகைச்சுவையுணர்வு மிக்கவர். தன்னையே முன்னிலைப்படுத்தி நகைச்சுவையாகப் பேசுவார். அவரது வீட்டிற்குப் போகும் யாருக்கும் “Welcome to the house of Sin” என்று வரவேற்பு கிடைக்கும். “நானா? போப்பா?? – சின் என்ற பெயரே போப்பிற்குத் தகுதியில்லாது” என்று நகைத்துவிட்டுப் போனவர்.

    தன்னால் இயன்ற அளவு நேர்மையாக வாழ்ந்த மதவாதி கார்டினல் சின்.

    10 Responses to அஞ்சலி : கார்டினல் சின்

    1. -/peyarili.
      June 21, 2005 at 3:42 pm

      வெங்கட் அண்மையிலே இமெல்டா என்றொரு விவரணம். இமெல்டாவையே செவ்வி காண்பது உட்பட. அவர் நியாயப்படுத்துவதைப் பார்க்கவேண்டும்!

      வெரித்தாஸ் பற்றி 83 களிலே இலங்கையிலிருந்த மக்களைக் கேட்டால், பந்தி பந்தியாக எழுதுவார்கள்.

    2. June 21, 2005 at 4:08 pm

      [1] இமெல்டா நியாயப்படுத்தினால் அவரை அடிப்பதற்கு அவரிடமே நிறைய செருப்புகள் இருக்கின்றன :) ரொம்ப முக்கியமான காரியம்போல மார்க்கோஸ்களை ரேகன் பத்திரமாகக் கொண்டுவந்து ஹவாயியில் பொத்திவைத்துப் பாதுகாத்தார்.

      ஆமாம் எனக்கும் எண்பதுகளின் துவக்கத்தில் ஈழம் குறித்து வெரித்தாஸில் கேட்ட பல விடயங்கள் நினைவிருலிருக்கின்றன. வேடிக்கையான விஷயம் – Deutsche DXers Network (DDN) என்று சொல்லப்படும் சிற்றலை செவிமடுப்போருக்கான ஆர்வலர்கள் குழுவின் 1984ன் ஆண்டு மலர் எனக்கு என் ஜெர்மன் சிற்றலை நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார். அதில் Clandestine Radios என்ற தலைப்பின் கீழே Radio Veritas, Manila – Unofficial mouthpiece of LTTE என்றிருந்தது :) .

      சிற்றலை ஆர்வலர்களிடையே இப்படி முறைசாராமல் இயங்கும் வானொலிகள், பரீட்சார்த்த ஒலிபரப்புகள் இதெல்லாம் கேட்டு QSL (Reception Report Verification) வாங்குவது ஒரு பெரிய விஷயம். எனவே ஜெர்மனியில் அப்பொழுது வெரித்தாஸ் தமிழ் சேவையைத் தேடியலைந்த ஜெர்மன் நண்பர்கள் பலரைத் தெரியும் :) (இதெல்லாம் இப்பொழுது நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது). நானும் என் பங்கிற்கு புலிகளின் குரல், ஈழத்தின் குரல் இதற்கெல்லாம் QSL கேட்டு எழுதியிருக்கிறேன். கிடைத்ததென்னமோ திருகோணமலை வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவின் பரிட்ச்சார்த்த ஒலிபரப்பிலிருந்துதான்.

      அந்த நாட்களில் ரேடியோ ஜப்பான்கூட இலங்கையிலிருந்து மறுஒலிபரப்பு என்று பேச்சு அடிபட்டது.

    3. June 21, 2005 at 4:36 pm

      படிக்க ஆரம்பித்ததுமே //ஏதோவொரு மூலையில் இருக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டின் இறந்துபோன மதத்தலைவரைப் பற்றி நான் ஏன் எழுதவேண்டும்? // என்ற கேள்வி எழ, அதையும் நீங்களே கேட்டு எழுதிவிட்டீர்கள். புதிய தகவல்கள்; இப்பொழுதுதான் தெரிகிறது.

    4. ரோஸாவசந்த்
      June 21, 2005 at 9:19 pm

      நல்ல பதிவு.

      ராசாவின் திருவாசகம் வெளிவந்துவிட்டதாக அறிகிறேன். கேட்டு அது குறித்து எழுத முடியுமா?

    5. மாவுருண்டை
      June 22, 2005 at 3:49 am

      [4] ரோசா

      திருவாசகம் ஜூன் 30 தான் வெளியிடு. அது வரை இதைக்கேட்டு மகிழுங்கள்..மே 2004 ராஜா இதாலியில் இசைத்த நிகழ்ச்சி தொகுப்பு
      http://www.agimusic.com/Ilayaraja's%20music%20journey.htm…

    6. மீண்டும் மாவுர
      June 22, 2005 at 3:52 am
    7. June 22, 2005 at 2:36 pm

      [4] வஸந்த் – இதுவரை வந்ததாகத் தெரியவில்லை. நானும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்.

    8. June 22, 2005 at 2:37 pm

      [6] மாவுருண்டை – தகவலுக்கு நன்றி. முன்னோட்டங்களைக் கேட்டுப் பார்த்தேன் சுவாரசியமாக இருக்கிறது. முழு சிடியும் எங்கே கிடைக்கும்? இந்தியாவில் விற்கிறதா?

    9. ரோஸாவசந்த்
      June 22, 2005 at 4:17 pm

      மாவுருண்டை, தகவலுக்கு நன்றி. வலைப்பதிவில் அரைகுறையாய் மேய்ந்ததில் வெளி வந்துவிட்டதாக நினைத்துவிட்டேன். இத்தாலி நிகழ்ச்சி பற்றி செய்தி மட்டுமே படித்திருக்கிறேன். சுட்டிக்கு நன்றி. இனிதான் கேட்கவேண்டும்.

    10. மாவுருண்டை
      June 22, 2005 at 10:19 pm

      வெங்கட்
      அமெரிக்கா மற்றும் கனடா வாசிகளுக்கு ராஜா இதாலி நிகழ்ச்சி இங்கே கிடைக்கின்றது
      squidco.com
      அதில் 3-1, காப்பி மூட் (தும்பிவா/சந்தக்கவிகள்), என்னுள்ளில் எங்கோ, இளங்காத்து வீசுதே ,ஆசைய காத்துல எல்லாம் அருமை.
      மேலும் இந்நிகழ்ச்சியில் பாடிய சின்மயின் நிகழ்ச்சி பற்றிய பதிவு
      [a href =http://chinmayisripada.blogspot.com/2005_05_01_chinmayisripada_archive.html] சின்மயின் பதிவு [/a]
      scroll down to Tuesday, May 17, 2005
      -மாவுருண்டை

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *