சற்று நேரம் முன்னர் இன்று அறிவிக்கப்பட்ட வேதியியல் நோபெல் பரிசு பற்றி எழுதியிருந்தேன். இப்பொழுது படித்த ஒரு செய்தியின் படி (மூலம் ஜெர்மன் மொழியில், இதன் ஆல்டா விஸ்டா ஆங்கில மொழியாக்கம் இங்கே . படிப்பவர்களுக்கு இயந்திர மொழிபெயர்ப்பின் தமாசுகள் மேலதிக போனஸ்) பரிசைப் பகிர்ந்துகொள்ளும் பிரெஞ்சு விஞ்ஞானி ஈவ் ஷோவென்.

இந்த வருடத்திய நோபெல் பரிசு இடமாற்ற வினை என்ற கருத்தாக்கத்திற்காக பிரான்ஸைச் சேர்ந்த ஈவ் ஷோவெனுக்கும் அதை ஆய்வகத்தில் செயல்படுத்தியமைக்காக ரிச்சர்ட் ஷ்ராக்-கிற்கும் ஆய்வகத்திற்கு வெளியே இதை நிகழ்த்திக் காட்டியமைக்காக ராபர்ட் க்ரப்ஸ்-க்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இதில் ஷொவெனின் கண்டுபிடிப்பு 1971-ல் நிகழ்ந்தது. இப்பொழுது அவருக்கு 74 வயதாகிறது. ஓய்வு பெற்று நிம்மதியாக இருக்கும் காலத்தில் தான் பரபரப்புக்கு ஆட்பட விரும்பவில்லை என்றும் நேரில் சென்று பரிசு பெறப்போவதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். மற்ற இருவரும் பரிசு பெற்றதில் பெரும் மகிழ்ச்சி என்று ஷோவன் அறிவித்திருக்கிறார். என் கண்டுபிடிப்பை செயல்படுத்திக் காட்டிய அவர்களுக்கு நன்றி என்று சொன்னார். மற்ற இரண்டு அமெரிக்க வேதியியலாளர்களும் நேரில் சென்று பரிசைப் பெறுவார்கள் என்று தெரிகிறது.

நோபெல் பரிசை அறிவித்த உயிலில் ஆல்ப்ரெட் நோபெல் “The interest… shall be annually distributed in the form of prizes to those who, during the preceding year, shall have conferred the greatest benefit to mankind.” என்று சொல்லியிருக்கிறார். ஆனாலும் அறிவியலில் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டு அவை உறுதியாக்கப்பட்டு அதன் பயன்கள் கண்டறியப்பட்டு அதன் உன்னதம் பிடிபட பல வருடங்களாகின்றன. இருந்தபோதும் பல சமயங்களில் இந்தப் பரிசுகள் மிக மிக தாமதமாக வழங்கப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. தனக்குப் பரிசு கிடைப்பதில் இருந்த தாமதம் ஷோவெனை வருத்தமுறச் செய்திருக்கிறதா இல்லை பொதுவில் நிம்மதியான ஓய்வு வாழ்க்கை நடத்தும் தனக்கு ஏனிந்த ஆர்ப்பாட்டம் என்று ஒதுங்கியிருக்க முயற்சிக்கிறாரா என்று தெரியவில்லை.