‘எங்க ஊரு’க் கவிஞர் திருமாவளவன். இவரது கவிதைத் தொகுப்புகளான ‘பனிவயல் உழவு’, ‘அஃதே இரவு, அஃதே பகல்’ இரண்டும் முக்கியமானவை. (இவரது கவிதைகளைப் பற்றி விரிவாக எழுதவேண்டும் என்று நினைத்துப் பலநாட்களாக ஒத்திப்போட்டு வருகிறேன். சில சமயங்களில் என் சோம்பேறித்தனத்தின் மீது எனக்கே சலிப்பாக இருக்கிறது). டொராண்டோவிலிருந்து வெளிவந்த ‘ழ’கரம் சிற்றிதழின் இணையாசிரியராகவும் இருந்திருக்கிறார்.

இன்று காலை என்னை அழைத்து vezhi.com பாருங்கள் என்றார். அறிவுப்புகள் ஏதுமில்லாமல், அழகான வடிவமைப்புடன் ‘வெளி’ இணையதளம் உருவாக்கப்பட்டிருக்கிறது. சேரன், செழியன், இளங்கோ, தேவேந்திர பூபதி, றஷ்மி இவர்களின் கவிதைகள், திலகபாமாவின் சிறுகதையும், செழியனின் நாடகத் தொகுப்பின்மீது வெங்கட் சாமிநாதனின் விமர்சனமும் உண்டு. ‘அஃதே இரவு, அஃதே பகல்’ தொகுப்பிலிருக்கும் கடற்கோள் என்ற கவிதையை அண்மையில் நேரிட்ட ட்சூனாமிக்குப் பிறகு படைப்பாளரின் மறுவாசிப்பாக திருமாவளவனின் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.

வாழ்நாளில் கடற்கோளைப் பார்த்தவன் அல்ல. கடலுக்கு போனவர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். ஆனால் எனக்கு தெரிந்த காலத்தில் கடல் எழுந்து ஊருக்குள் வந்தது இல்லை.

அறுபதாயிரம் உயிர்கள் வரையில் காவு கொண்ட யுத்தத்தின் படிமமாக என் கண் முன் கடலே தோன்றியது. எந்தவித சிரமமும் இல்லாது முற்றிப் பழுத்த இலையன்று மரத்திலிருந்து இறங்குவது போல மிக இயல்பாகவே இறங்கியது இக் கவிதை. செப்டம்பர் 27, 2002 எழுதப்பட்ட கடற்கோள் கவிதை என் அஃதே இரவு அஃதே பகல் கவிதைத் திரட்டில் பதிவாகியிருக்கிறது.

இதற்குப்பின் இரண்டாண்டுகள் கழித்து இன்று உண்மையிலே பெரும் கடற்கோள் தோன்றியதும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை ஒரு நொடியில் காவு கொடுத்ததையும் பார்க்கும் போது மனம் துயரத்தில் விம்முகிறது. இக் கடற்கோளின் வியாபகத்தை அதன் கொடூரத்தை, அழிவை, அலை அள்ளிக் கொண்டு சென்ற எம்மவர் வாழ்வைச் சொல்வதற்கு வேறு படிமம் தோன்றுமா? தெரியவில்லை.

உண்மைதான் மனிதன் தானாக விதைத்துக் கொண்ட அவலங்களின் ஆசுவாததைக் கட்டிலடங்காத இயற்கையின் சீற்றங்களுடன் ஒப்பிடல் காலம்தோறும் நடந்துவந்திருக்கிறது. மறுபுறத்தில், கண் முன்னே இயற்கை அவலத்தை அள்ளித் தெளிக்கும்பொழுது நாமெல்லாம் வார்த்தைகளின்றி வாயடைத்துத்தான் நிற்கவேண்டியிருக்கிறது.

தளத்தில் கருணாவின் கடற்கோள் ஓவியமும் இருக்கிறது. தளத்தின் வடிவமைப்பே ஓவியர் கருணாவினுடையதுதான். எளிமையாகவும், நிறைவாகவும் செய்யப்பட்ட வடிவமைப்பு கவர்ச்சியாக இருக்கிறது. திருமா-விடம் பாமினிக்குப் பதிலாக யுனிகோடு எழுத்துருக்களில் மாற்றிவிடுங்களேன் என்று சொன்னேன். கருணாவிடம் கலந்தாலோசிப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

வெளி இணையத்தில் திருமாவளவனின் இன்னும் சில கவிதைகளும் உண்டு. திருமாவளவனுக்குள்ளே இருக்கும் பத்திரிக்கையாசிரியர் மீண்டும் உயிர்பெற்று எழுந்திருக்கிறார். அதிகம் இட்டு நிரப்பாமல் தெரிந்தெடுக்கப்பட்ட மிகச் சில ஆக்கங்களை மாத்திரமே கொண்டு மாதந்தோறும் புதுப்பிக்கவிருப்பதாகச் சொல்கிறார் திருமாவளவன். அந்த வகையில் இன்னும் அதிகம் எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது வெளி.