Douglas Adams சந்தோஷம் தரும் செய்தியன்றை இன்றைக்குப் படித்தேன். விண்கல் (Asteroid) ஒன்றுக்கு அறிவியல் புனைகதை, (சரியாகச் சொல்லப்போனால் அறிவியல் ‘நகை’கதை என்றுதான் இருக்கவேண்டும்) எழுத்தாளர் மறைந்த டக்ளஸ் ஆடமின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

டக்ளஸ் நோயல் ஆடம் (DNA) சம்பந்தமான எல்லா விஷயங்களையும் போலவே இதுவும் சுவாரசியமாகத்தான் இருக்கிறது. விண்கற்கள் (பொதுவில் செவ்வாய்க்கும் ஜுபிடருக்கும் இடையில் விண்வெளியில் மிதந்துகொண்டிருக்கும் கற்கள்) விண்ணியலார் தொலைநோக்கியில் பார்க்கும்பொழுது காணக்கிடைக்கின்றன. இவற்றை அடையாளம் கண்டுபிடித்துப் பெயரிடுவது வழக்கம். இவற்றில் பலவற்றுக்குச் சரித்திரத் தொடர்பு இருக்கின்றன. உதாரணமாக, கொலம்பியா விண்கலம் வெடித்து அதில் சென்ற விண்வெளி நிபுணர்கள் மரித்துப் போனவுடன் அடுத்ததாகக் கண்டுபிடிக்கப்பட்ட தொகுதிக்கு அவர்கள் பெயரிடப்பட்டது. இன்னும் பெயரிடப்படாமல் வெளியில் பல விண்கற்கள் சுற்றிக்கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்டவைக்கு இன்னாரின் பெயர் வைக்கலாம் என்று யாரும் பரிந்துரை செய்யலாம் (ஐய்யய்யோ, தெரியாம சொல்லிட்டேனே, உடனே ஜெயா, கருணா, ராமதாஸ், கோபால் என்று பெயர்கள் அகில விண் கழகத்திற்குப் போகுமே!).

இப்படியான ஒன்றுக்கு டக்ஸள் ஆடமின் பெயரை வைக்கலாம் என்று சிலர் பரிந்துரைத்தார்கள் சிலர். தி ஹிட்ச் ஹைக்கர்ஸ் கைட் டு தி காலக்ஸி என்ற நகைச்சுவை ததும்பும் தொடர் அறிவியல் புதினங்களை எழுதியவர் டிஎன்ஏ. தன்னுடைய நாற்பத்தொம்பவதாவது வயதில் 2001ல் மாரடைப்பால் காலமானார். இவர் காலமான ஒரே வாரத்தில் ஒரு விண்கல்லுக்கு இவர் கதாபாத்திரங்களில் ஒன்றான Arthur Dent என்ற பெயரிடப்பட்டது. இருந்தும் ஆடமின் பெயரை வைப்பதில் விஞ்ஞானிகள், அறிவியல் புனைகதை வாசகர்கள் எல்லோருக்கும் விருப்பமிருந்தது.

இதற்குத் தோதாக, 2001 DA42 என்று குறீயீடு கொடுக்கப்பட்டு பெயரிடப்படாமல் இருக்கும் விண்கல் பற்றி தெரியவந்தது. அற்புதமான ஒற்றுமை. 2001 ஆம் ஆண்டில் இறந்த டக்ளஸ் ஆடம் (DA)-க்கு இது மிகவும் பொருத்தமானதுதானே. ஆனால் உண்மையில் பெரும் பொருத்தம் 42 என்ற எண்ணில்தான். அது டக்ளஸ் ஆடம் கதைகள் மூலம் அழியாத இடத்தைப் பெற்றது.

கதைப்படி பிரபஞ்சத்த்தில் பெருஞ்சாலை கட்டும் வழியில் இருக்கும் பூமி தகர்க்கப்படுகிறது. இந்தப் பிரபஞ்சப் பெருஞ்சாலை ஒரு சாக்குதான். உண்மையில் பூமி பிரபஞ்சத்தின் வேறு மூலையில் இருக்கும் அதிபுத்திசாலிகளால், உயிர், உலகம் மற்றெல்லாமும் (Life, Universe and Everything, title of the third book in the H2G2 series) பற்றிய ஆதாரக் கேள்விக்கு விடைகாண வடிவமைக்கப்பட்ட ஒரு அதிகணினிதான். பல மில்லியன் ஆண்டுகளாகியும் கிடைக்காத அந்தக் கேள்விக்கு வேறொரு அதிகணினி விடை கண்டுபிடித்துவிட்டது; அது 42. இவ்வளவு துல்லியமாகத் தரப்பட்ட விடை தவறாக இருக்கமுடியாது. எனவே அதைப் புரிந்துகொள்வதில் முனையப்போகும் விஞ்ஞானிகள், தத்துவவாதிகள் இவர்களுக்கு இடைஞலாக பூமி இருக்கக் கூடாது என்றுதான் அது தகர்க்கப்படுகிறது.

ஆக உயிர், உலகம் மற்றெல்லாமும் குறித்த டக்ளஸ் ஆடமின் விடையும் அதனுடன் சேர்ந்திருக்க இனியென்ன? அதிகார்வ பூர்வமாக அறிவித்துவிட வேண்டியதுதான் பாக்கி. அது நேற்றைக்கு நடந்திருக்கிறது.

இது டக்ளஸ் ஆடமிற்குத் தகுந்த மரியாதைதான்.

பின் குறிப்புகள்:

1. ராமன் (சி.வி. ராமன்), ராமச்சந்திரன் (ஜி என் ராமச்சந்திரன், முன்னால் ஐஐஎஸ்ஸி பேராசிரியர், மூலக்கூறு உயிர் இயற்பியல்), சந்திரா (சுப்ரமண்யம் சந்திரசேகர், விண்ணியல்), ராமானுஜன் (கணித மேதை) வெங்கடாசலம் (நூலகவியல் நிபுணர்), போன்றவை என் நினைவில் வரும் விண்கற்களின் பெயர்கள்.

2. டக்ளஸ் ஆடமின் ஒரு கட்டுரை என்னுடைய மொழியாக்கத்தில்; என் மூக்கு