poisonous butterfly
சென்ற வார இறுதியில் என் நண்பர் அமெரிக்க நீண்ட வாரயிறுதியைக் கழிக்க ஸ்டோனிப்ரூக்கிலிருந்து என் நண்பர் குடும்பம் வந்திருந்தது. அவர்களுடன் நயாகரா (இன்னொரு முறை) போனோம். படகில் சென்று நீர்வீழ்ச்சிக்கு அருகில் பார்ப்பது, அருவிக்குப் பின்னால் சென்று பேரிரைச்சலைக் கேட்பது போன்ற விஷயங்களில் என் பையன்களுக்கு ஆர்வம் போய்விட்டது எனவே நண்பரும் அவர் குடும்பமும் படகில் பயணிக்க நாங்கள் அருகிலிருக்கும் வண்ணத்துப்பூச்சிகள் உலகத்திற்குச் சென்றோம். குழந்தைகளுக்கு அற்புதமான அனுபவம் கிடைத்தது (எங்களுக்கும்தான்). கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் அந்தப் பலவண்ண சிறகடிக்கும் உல்லாச உலகில் கழிக்க முடிந்தது. கட்டாயம் அடுத்த இரண்டு மாதங்களில் திரும்பப் போவோம்.

வண்ணத்துப்பூச்சிகள் உலகமெங்கும் இருக்கின்றன. இருந்தாலும் நிலநடுக்கோட்டு அருகிலிருக்கும் வெப்பமும் ஈரப்பதமும் கூடிய இடங்களில் இவை மிக அதிகமாகக் காணப்படுகின்றன. பல வண்ணச் சிறகடித்து பட்டாம்பூச்சிகள் பறக்கும் காலம் சராசரியாக இரண்டு வாரங்கள்தான். அமெரிக்கக் கண்டத்தின் ‘மோனார்க்’ வகைப் பட்டாம்பூச்சிகள் இதற்கு விதிவிலக்கு. இவை கிட்டத்தட்ட ஆறுமாதம் உயிர்வாழ்கின்றன. கோடையில் கனடாவிலும், பிறகு குளிர் குறையும் நாட்களில் தெற்கு நோக்கிப் பயணித்து அமெரிக்கா, பின்னர் மெக்ஸிகோ என்று பல நூறு கிலோமிட்டர்கள் பயணிக்கும் இவை உள்ளூர்-இரண்டு வார வண்ணத்துப்பூச்சிகள் உலகில் ஒரு விதிவிலக்கு.

முட்டை, புழு, கூட்டுப்புழு, பறக்கும் பூச்சி என்று வளர்சிதைமாற்றம் அடையும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கைச் சுழலை அருகிலிருந்து பார்ப்பது ஒரு அனுபவம். கிராமத்தில் வசிக்கும்பொழுது குண்டுமணிச் செடி என்று ஒன்று இருக்கும் (இதன் காய்கள் மிகச் சிறியதாக, கோழி முட்டை வடிவில், கறுப்பு-சிவப்பு நிறமாக இருக்கும் – சின்ன வயசில் இதை நாங்கள் திமுக செடி என்று அழைப்போம்). இந்தச் செடியில் பட்டாம்பூச்சிகள் நிறைய முட்டையிடும். இலையின் கீழ்ப்புறத்தில் முட்டைத் தொகுதிகளைப் பார்க்க முடியும். பின்னர் புழுவாக இலைகளை அரித்துக் கொண்டிருக்கும். தொடர்ந்து சின்னதாக ஒரு ஒன்பெட்ரூம் வீடு கட்டிக்கொண்டு உள்ளே போய் தூங்கிவிடும். இதையெல்லாம் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரு முறைகூட கூட்டுப்புழுவிலிருந்து பட்டாம்பூச்சி வெளிவருவதைப் பார்த்ததில்லை. இந்த அனுபவம் ஜப்பானில் இருக்கும்பொழுது எதேச்சையாகக் கிடைத்தது. கூட்டை உடைத்துக்கொண்டு சிறகைவிரித்துப் பறப்பதைப் பார்த்தது என் நினைவில் எப்பொழுதும் பசுமையாக இருக்கும்.

Atlas Moth
நயாகரா வண்ணத்துப்பூச்சி உலகில் கிட்டத்தட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பூச்சிகள் இருக்கின்றன. ஐம்பதுக்கும் மேற்பட்ட வகைகள் இருப்பதாகச் சொன்னார்கள். சில மிக மிகச் சிறியவை. அட்லாஸ் மாத் என்று சொல்லப்படும் பட்டாம்பூச்சி (மலேஷியாவில் இருப்பது) உலகிலேயே மிகப் பெரிய அளவிற்கு வளரக்கூடியது. (அருகில் இருக்கும் படத்தில் அட்லஸ் மாத்). அடிக்கடி மக்கள் கூட்டத்தைப் பார்ப்பதாலோ என்னமோ கொஞ்சமும் கூச்சமின்றி நம் தோளிலும் உள்ளங்கையிலும் வந்து உட்காருகின்றன.

வண்ணத்துப்பூச்சிகளின் நிறம் பல விதங்களில் அவற்றுக்குப் பயன்படுகிறது. பெரும்பாலான சமயங்களில் இவை தங்கள் சூழலின் நிறத்துடன் தாங்களும் இயைந்து தற்காத்துக் கொள்ளப் பயன்படுகின்றன. கிழே இருக்கும் மூன்று வண்ணத்துப்பூச்சிகளும் எந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து உட்காருகின்றன என்று பாருங்கள். சில மிகப் பிரகாசமான வண்ணம் கொண்டவை நச்சுத்தன்மை கொண்டவை. இப்படி தங்கள் நிறத்தையும் அதன்கூடவே நச்சுத்தன்மையையும் பறைசாற்றிக் கொண்டு அவைகள் தங்களைக் காத்துக் கொள்கின்றன. இன்னும் சிலவகை வண்ணத்துப்பூச்சியின் இறகுகளில் ஆந்தையின் கண்களைப் போன்ற வடிவம் காணப்படும்; இவையும் தற்காப்பு உத்திகளே.

<%image(20050531-butterfly_panorama.jpg|576|144|butterfly panorama)%>

எல்லாவற்றையும் விட நாங்கள் மிகவும் அசந்துபோனது. சிறகடிக்கும்பொழுது சிறகின் கோணத்திற்கேற்ப நிறம் மாற்றிக் காட்டும் வண்ணத்துப்பூச்சிகளைக் கண்டுதான். என் நல்ல விடியோ காமெரா எடுத்துச் செல்ல மறந்துவிட்டேன். ஆனால் டிஜிட்டல் காமெராவில் இருக்கும் சிலநொடி சலனப்பட வசதியைப் பயன்படுத்தி ஒரு சிறிய படத்தை எடுத்தேன்.

இந்த இடத்தை அற்புதமாக வடிவமைத்திருக்கிறார்கள். முழுவதும் பூமத்திய வெப்பநிலையைக் கொண்ட இந்த பச்சில்லத்தில் (Greenhouse) நம்மூர், மலேஷியா, மத்திய அமெரிக்க நாடுகளின் பசுமை நிறைந்த தாவரங்கள் அழகாக வளர்க்கப்பட்டிருக்கின்றன. ஓடைகளில் ஆமைகள், நத்தைகளும் இருக்கின்றன. கூடவே பட்டாம்பூச்சிகளைப் பிடித்துத் தின்பதற்காக ஒரு சுண்டெலியும் அலைந்துகொண்டிருந்தது. குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்க அற்புதாமான இடம். பார்த்துவிட்டு வந்து இரண்டு நாட்களாக பிள்ளைகள் இருவருக்கும் ஒரே வண்ணத்துப்பூச்சி கனவுதான்.

* * *

வண்ணத்துப்பூச்சி உங்கள் வீட்டிற்கு வரவேண்டுமா? இந்தியாவில் இதற்கு உத்தரவாதமாக ஒரு வழி இருக்கிறது. காஸ்மோஸ் என்று சொல்லப்படும் பூச்செடியை வீட்டுக் கொல்லையில் வளருங்கள் (கொல்லை இல்லாதவர்கள் பால்கனியில் தொட்டியில் வளர்க்கலாம்). மிக எளிதாக வளரக்கூடிய இந்தப் பூச்செடியை அடர்த்தியாக வளர்ப்பதன் மூலம் பல வண்ண பட்டாம்பூச்சிகளைக் கவரமுடியும். கூடவே செடிக்கு அருகில் ஒன்றிரண்டு அழுகிய திராட்சைப் பழங்களைப் போட்டு வையுங்கள். உத்தரவாதமாக வீட்டில் வந்து விளையாடும். இது நான் பெங்களூரில் வசித்தபொழுது அனுபவபூர்வமாகக் கண்டுபிடித்தது.

என்னுடைய படத்தொகுப்பில் இன்னும் பல வகை பட்டாம்பூச்சிகளின் படங்களைப் போட்டுவைத்திருக்கிறேன். அவற்றை இங்கே பார்க்கலாம்.