இது இன்றைக்கு ரோசா வஸந்தின் பதிவில் பொடிச்சியின் இந்தக் கருத்தைப் படிக்க நேரிட்டது;

‘பார்ப்பாரப் புத்தி’ என்று திட்டுவதையும் ‘பறப் புத்தி’ என்று திட்டுவதையும் ஒரே தட்டில் வைத்துப் பார்த்தால் இரண்டுமே தவறாய்த் தெரியும். மிகவும் முற்போக்கான பார்ப்பனர்களே இந்த ‘திட்டுதலில்’ sensitive ஆய் இருப்பது ஆச்சரியமாய் இருக்கிறது…

… இங்கே அடிமைத்தளைகள் போனபின்னாலேயே இந்த நிலமை இருக்க, எமது ஜாதி வேறுபாடுகள் ‘இன்னும் இன்னும்’ அப்படியே இருக்கையில் ‘பார்ப்பானைத் திட்டினால் உறைக்காது ஆனால் மற்றவனைத் திட்டினால் உறைக்குது’ என வாதாடுவது ரெண்டுக்குமான வேறுபாடுகளை விளங்க விரும்பாமையின் விளைவுதான். பூஜை செய்பவன் என்று திட்டுவது அவமானமா? மலம் அள்ளுபவன் என்று திட்டுவது அவமானமா என்பதை அப்படி வாதாடுகிற ஒவ்வொரு நாகரீக நபர்களும் கேட்டுக்கொள்ளுங்கள்! அப்புறமும் இதே வாதங்கள் வந்தால் யாருமே உங்களை அசைக்க முடியாது.

இது நாராயணனின் பதிவில் நான் எழுதிய

மதி – ஜாதியை வைத்துத் திட்டுவது ஒரு புறமாக மாத்திரமில்லை. பாப்பார நாயே, பாப்பாரப் புத்தி, செட்டிப்புத்தி என்றெல்லாம் வசைகள் இருக்கின்றன. இது தம் குழுவினுள்ளே ஒருவனை அந்நியப்படுத்தி இழி செய்யும் முறை. இதில் மேல்-கீழ் வித்தியாசமில்லை.

தன்னில் நம்பிக்கை கொண்டவன் பிறரை இழிசெய்ய முயற்சிப்பதில்லை. அவன் வாயிலிருந்து வசவுகள் எளிதில் புறப்படுவதில்லை.

என்பதற்கான மறுமொழி எனத் தெரிகிறது. இதைப் படிக்கையில் எனக்கு வருத்தமாக இருந்தது. என்னுடைய கருத்தை அவர் மறுதலித்தால் அதே பதிவின் கீழ் (அல்லது அவரது சொந்தப் பதிவில்) மறுமொழி இடுவார் என்று நம்பியிருந்தேன். நான் முட்டாள்தனமாக எழுதியிருப்பதாகக் கருதினால் அதை நேரடியாக என்னிடம் சொல்லலாம். மாறாக அதை வேறிடத்தில் பயன்படுத்தியிருப்பது நான் சற்றும் எதிர்பார்க்காத ஒன்று.

பாப்பார நாயே என்று திட்டப்படும்பொழுது “நறுமணமும், அழகும் பொருந்திய மலர்களைக் கரங்களால் எடுத்துப் பூசிப்பவனே” என்பதாகச் சொல்வதன் அபத்தம் புலப்படுகிறதா? உண்மையில் அதற்குப் “பூசை செய்பவனே” என்றுதான் அர்த்தமா? இந்த அணுகுமுறை வியப்பளிக்கிறது.

தன்னெஞ்சறிய பொய்யற வகையில் பிறப்பால் இழிவதை மறுத்துவந்தாலும், அதற்குப் பரிகாரமாக இயன்றதைச் செய்துவந்தாலும், அதே பிறப்பால் நான் பல இடங்களில் பாப்பார நாயே, பாப்பார புத்தி என்றெல்லாம் திட்டப்பட்டிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் நான் sensitive ஆகத்தான் உணருகிறேன். காரணம், அந்த வார்த்தைகளுக்கு “உன்னுடைய பிறப்பால் மற்றவனை இழிவு செய்யும் ஈனனே” என்பதாகத்தான் அர்த்தம். மனதார நான் அப்படியில்லாத நிலையில், அப்படியிருப்பவர்க்ளை அருவருப்புடன் நோக்கும் நிலையில், என்னை ஒருவன் அப்படி விளிக்கும்பொழுது நான் வருத்தப்படும் (கவனிக்கவும், கோபமல்ல) உரிமையை எனக்கு மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

* * *

இது ஒரு பெரிய சுழற்சி. ஒரு காலத்தில் நானே என் தெருக்காரர்கள் “பறப்பயலே” என்று சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்டிருக்கிறேன். சிறுவயதிலிருந்தே அது இழிவு என்று போதிக்கப்பட்ட குடும்பம் எனது. பின்னாட்களில் நானும் என் சுற்றமும் எந்த நேரமும் ஒரு கொலையை எதிர்பார்த்துக் கழித்திருக்கிறோம் (மீண்டும் மனதார என் சுற்றமும் நானும் எந்தத் தீங்கும் செய்ததில்லை – இந்த இழிகுலத்தில் பிறந்த்தைத் தவிர). கொலை பயத்தை ஈழத்திலிருந்து வருபவர்களுக்கு நான் விளக்க வேண்டியதில்லை. ஒரு கோடை நாளில் வெளியில் கட்டிலில் படுத்திருந்தவரின் பூணுல் அறுக்கப்பட்டது. அடுத்த வாரம் திண்ணையில் தூங்கியவரின் வலதுகரம் வெட்டப்பட்டது. தெருவில் மரணத்தின் பயம். சக நண்பர்கள் சகஜமாக பள்ளி வரும் நேரத்தில் நானும் என் அண்ணன்களும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அலைந்திருக்கிறோம்.

கொலை நடந்தது! என் அடுத்த வீட்டில் வசித்த, எறும்புக்கும் தீங்கு நினைக்காத ஒரு சரித்திரப் பேராசிரியர் மதிய வேளையில் மிதிவண்டியிலிருந்து கீழே தள்ளப்பட்டு நெஞ்சில் குத்தப்பட்டு இரண்டு நாட்கள் அவதிக்குப் பிறகு மரித்துப் போனார். அந்தக் குடும்பம் சிதைவதை என் கண்ணால்
கண்டிருக்கிறேன். அந்தக் கொலைக்கு நீதி விசாரணைகூடக் கிடையாது. காரணம், இறந்தவருக்குப் புத்தகத்தையும் கோவிலையும் தவிர வேறெதையும் தெரியாது. அதற்குப் பிறகு என் தந்தை தீவிர பிராமண எதிர்ப்புக் கூட்டங்களுக்கு அழைத்துச் சென்றார். ஒரு அப்பாவியின் நெஞ்சில் கத்தியைச்
செருகுமளவிற்கு வன்மம் இருந்தால் அது உருவாகக் காரணமாக என்ன தவறிழைக்கப்பட்டது என்று எனக்குப் புரியவேண்டுமென்பது அவர் எண்ணம்.

புரிந்தது. கோபங்கொள்ள அவர்களுக்கு இருக்கும் தார்மீக உரிமை விளங்கியது. விளைவு – என் முன்னோர்கள் தவறுகளைச் செய்திருக்கச் சாத்தியமிருப்பதாக நான் முழுமனதாக நம்புவது. அந்த எண்ணம் எனக்குள் விளைவிக்கும் அருவருப்பும் அவமானமும். அதற்காக நான் செய்யக்கூடியது மனதார பாதிக்கப்பட்ட என் சகோதரனிடம் நான் மன்னிப்பு விழைவது. அதிலும் முக்கியமாக அவனுக்கு ஆகவேண்டியதைப் பற்றிச் சிந்தித்துச் செயல்படுத்துவது.

ஆமாம், இது ஒரு பெரிய சுழற்சி. இதற்கு ஒரே தீர்வு. இதைவிட்டு வெளியே வருவதான் என்று மனதார நம்புகிறேன். இதில் என்னாலானது கீழே இருப்பவனுக்குக் கைகொடுக்கும் அதே நேரம், மேலே இருப்பவனைக் கீழே தள்ள முயற்சிக்காமல் இருப்பது. எனவே எந்தவிதமான வன்முறையும், கொடுஞ்சொற்களும் எனக்கு ஒப்பானவை அல்ல. எனவேதான், அறிவாளிகளாக நான் நம்பும் ஒருசிலர் பாப்பார நாயே என்று சொன்னாலும், பற நாயே என்று சொன்னாலும் எனக்கு வருத்தமளிக்கிறது. அதேபோலவேதான் செருப்பாலடித்தலும், ஆண்குறி அறுக்க விடுக்கப்படும் அழைப்புகளும். அதையும் விடக் கொடுமையானது இதில் ஈடுபடாதவர்களை எல்லாம் If you are not with us, you are against us என்று புஷ்தனமாகப் பயமுறுத்துவது.

* * *

இப்பொழுது வலைப்பதிவுகளில் வசவுகாலம் என்று தோன்றுகிறது. ஒரு வகையில் தோழமையும் நேயமும் இதனால் பாதிக்கப்படுகிற அச்சம் எழுகிறது. வசவுகளின் உளவியல் பற்றி நாராயணன் எழுதும்பொழுது இந்த வக்கிரங்களின் தோற்றுவாயைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆவல் எழுகிறது. அது
ஒன்றுதான் என் மனதில் வக்கிரங்களுக்கு இடம்கொடாமல் நான் தூய்மைகாக்க உதவும் வழி என்று தோன்றுகிறது.

ஆனால் மறுபுறம் பழகியவர்களுக்குள்ளே ஒருவரையொருவர் குறிவைத்துச் சொல்லப்படும் சொற்கள் அச்சத்தை விளைவிக்கின்றன. நானூறு பேர் மாத்திரமே எழுதும் தமிழ் வலைப்பதிவுலகம் மிகவும் சிறியது. இங்கே இது தவிர்க்கப்பட வேண்டியது.

* * *

இதனால் நான் கோபங்களை வெளிப்படுத்தும் உரிமையை மறுப்பவனல்லன். ஒரு எல்லைக்குள் நின்று சினத்தை வெளிப்படுத்துவோம். என் வேண்டுகோள்கள் எல்லாம் கோபங்களே தீர்வாக மாறிவிடமுடியாது. சமூகத்திற்கு நம்மாலானது நிறைய இருக்கிற்து. நம்பிக்கையுடன் இருப்போம்.

சினத்தை வெளிப்படுத்த படிப்பறியா என் தாழ்த்தப்பட்ட சகோதரனுக்கு உரிமையிருக்கிறது. ஆனால் அறிவாளிகளாய் அவர்களில் உயர்ந்து நிற்பவர்கள் இந்தச் சேர்ந்தாரைக் கொல்லியைத் தவிர்த்து, சகோதரனுக்கு வழிகாட்ட வேண்டியது அவசியம்.

* * *

என்னால் முடிந்த அடியெடுத்துத் தருகிறேன். இன்னும் இருபது, ஏன் ஐம்பது வருடங்களில் சாதியற்ற சமூகத்தை நாம் நம்மில் காணவேண்டுமென்றால் அதற்கான வழிமுறைகளாக உங்கள் மனதில் தோன்றுவதை எழுதுங்கள். உங்கள் தரவுகளில் பிழையிருக்கலாம், நீங்கள் முன்வைக்கும் திட்டங்களில்
ஓட்டையிருக்கலாம். அவற்றையெல்லாம் பேசித் தீர்த்துக் கொள்ளமுடியும். ஆனால் உங்கள் இலக்கு உயர்ந்ததாக இருக்கட்டும்.

இருபதோ, ஐம்பதோ வருடங்கள் என்பது கனவாக இருக்கலாம். அதை இருநூறாகத் நீட்டிக் கொள்ளுங்கள். ஆனால் இலட்சியக் கனவுகாணாத சமூகம் முன்னேறுவதில்லை. ஆக வேண்டியதைச் சிந்தித்து தீர்வுகளை முன்மொழியுங்கள்.

இது கற்பனாவாதமாகத் தெரியலாம். இல்லை, வரலாற்றில் இதற்கெல்லாம் முன்மாதிரிகள் இருக்கின்றன. யூதர்களிடமிருந்தும் ஜப்பானியர்களிடமிருந்து முப்பது வருடத்திற்குள்ளாக மேலெழுந்து வருவதைக் கற்க முடியும்.

இதை நானே துவக்கி வைக்கக்கூடத் தயார். ஆனால் உண்மையில் தம்மைப் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணுபவர்கள்தான் இதற்கு மேலும் தகுதியானவர்கள் என்று நான் நம்புவதால் இதை வேறிடத்திலிருந்து துவங்க ஆசைப்படுகிறேன்.

சுழலை விட்டு வெளியே வர நாம் ஒருவருக்கொருவர் உதவவேண்டியது முக்கியம்.