இடையில் கொஞ்சம் நாட்களாக விட்டுப் போன என்னுடைய இசைத்தெரிவு குறிப்புகளை மீண்டும் துவக்குகிறேன். (பிரகாஷ் ராஜா பாட்டோட திரும்ப வா-ன்னு சொன்னீங்கள்ள, ஒன்னுக்கு ரெண்டா. ரோஸா வஸந்தைத் திரும்ப வரவழைக்கவும்தான்).

1976 ஆம் ஆண்டு இந்தியத் திரையிசையுலகத்தில் ஒரு முக்கியமான வருடம். இளையாராஜா அன்னக்கிளி படத்தின் மூலம் அறிமுகமானது அந்த வருடம்தான் (ஆங்… இங்க இன்னும் என்னென்ன கேட்டுக்கேட்டுப் புளிச்சுப்போன பழைய புராணத்தை வேணும்னாலும் போட்டுகங்க)…பலருக்கும் அன்னக்கிளி பாடல்கள் தெரிந்திருக்கும். அதற்கு அடுத்தபடம்?

பாடல்: நான் பேச வந்தேன்..
படம்: பாலூட்டி வளர்த்த கிளி (1976)
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி
இசை: இளையராஜா
பாடல்: வாலி

அன்னக்கிளியின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இளையராஜாவிடமிருந்து நிறைய எதிர்பார்க்கப்பட்டது. பி.மாதவன் இயக்கத்தில் விஜயகுமார், ஸ்ரீப்ரியா நடிப்பில் வெளிவந்த படம். பி.மாதவனின் முந்தைய படங்களுக்கு ஜி.கே வெங்கடேஷ் இசையமைத்திருந்தார். இவரிடம் இளையராஜா உதவியாளராக இருந்தார். அப்பொழுது ஏற்பட்ட பழகத்தில் அன்னக்கிளி வெளியாவதற்கு முன்பே இளையராஜாவை தனது அடுத்த படத்திற்கு ஒப்பந்தம் செய்திருந்தார். வெளிவந்த சூட்டிலேயே டப்பாவில் போய்ப் படுத்துக்கொண்டது. ஆனால் இந்தப் படம் தமிழ்த் திரையுலகத்தைப் பல வருடங்களுக்குத் தங்கள் திறமையால் கட்டிப்போடப்போகின்ற ஒரு புது கூட்டணி உருவானது. “பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி; இசை: இளையராஜா”

என் மனதை மிகவும் கவர்ந்த பாடல் இது. எனக்குப் பொதுவில் ஜானகி (உட்பட பல உச்சப் பெண்குரல்கள் இந்தப் பட்டியலில் முதலிடம் லதா மங்கேஷ்கருக்கு, அப்புறம் ஜானகி, இன்னும் கொஞ்சம் தூரம் தள்ளி எம்.எஸ். சுப்புலெக்ஷ்மி,…) அவ்வளவாகப் பிடிக்காது. ஆனால் இந்தப் பாடலில் ஜானகி ரொம்பவே அடக்கி வாசித்திருப்பார். அற்புதமான துவக்கம், இனிமையான கிட்டார் பின்னணி, இழையும் எஸ்.பி.பி. எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல் இது.

பாடல்: ஒருநாள்… உன்னோடு ஒருநாள்
படம்: உறவாடும் நெஞ்சம் (1976)
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
இசை: இளையராஜா
பாடல்: பஞ்சு அருணாச்சலம்.

பா.வ.கிளி வெளியாகி மிகக் குறைந்த இடைவெளியிலேயே இளையராஜாவின் மூன்றாவது படம் வெளியானது. இந்த முறை அன்னக்கிளியின் இளையராஜா, பஞ்சு அருணாச்சலம், தேவராஜ்-மோகன் கூட்டணி திரும்ப வந்தது. இன்னும் பெரிய எதிர்பார்ப்பு. இன்னும் பெரிய தோல்வி. பா.வ.கி முதலில் வெளியாகியிருந்தாலும் இளையராஜா இசையில் எஸ்.பி.பி முதலில் பாடியது இந்தப் பாடல்தான். திரைக்கு வருவதற்கு முன்னரே ராஜாவும் எஸ்.பி.பியும் நெருங்கிய நண்பர்கள். இருந்தாலும் அன்னக்கிளியில் எஸ்.பி.பியைப் பாடவைக்க இளையராஜா முயலவில்லை. முதல் காரணம், அன்னக்கிளியில் இருந்த ஒரே ஆண் குரல் பாடல் (அன்னக்கிளி உன்னத்தேடுதே…) சோகத்தைப் பிழியும் பாடல். அந்தக் காலங்களில் பாலசுப்ரமணியம் ஒரு ஜாலியான பாடகர் (சந்திரபாபு போன்றவர்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாவிட்டால் ‘ஒரே’ ஜாலியான பாடகர் என்றும் சொல்லலாம்). அவரை வைத்து இந்தப் பாடலைப் பாடவைக்கும் துணிவு ராஜாவுக்கு இல்லை. அதற்கும் மேலாக ராஜாவுக்கே அந்தப் பாடலில் திருப்தி இல்லை என்று சொல்லியிருக்கிறார். தான் எஸ்.பி.பியைப் பாடவைத்தால் அற்புதமான இசையமைப்புடன் கூடிய இனிமையான பாடலைத்தான் என்று இளையராஜா நினைத்து அதை டி.எம்.எஸ் தலையில் கட்டினார்.

முதலாவது பட வெற்றிக்குப் பிறகு அடுத்ததாகப் பதிவு செய்த முதல்பாடல் இதுதான். இந்த முறை தைரியமாக எஸ்.பி.பி வேண்டும் என்று பஞ்சு அருணாச்சலத்திடமும் தே.மோ இரட்டையரிடமும் கேட்க முடிந்தது.

எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல் பட்டியலில் இதற்கு முக்கிய இடம் உண்டு. இதில் வரும் இசையமைப்பு அந்தக் காலங்களில் தமிழ்த் திரையுலகிற்குப் புதுமையானது. இதே முறையைப் பின்னால் பருவமே.. புதிய பாடல் பாடு (நெஞ்சத்தைக் கிள்ளாதே), ஓம் நமஹா.. (இதயத்தைத் திருடாதே) போன்ற படங்களில் ராஜா பயன்படுத்தியிருக்கிறார். (உறவாடும் நெஞ்சம், நெஞ்சத்தைக் கிள்ளாதே, இதயத்தைக் திருடாதே தலைப்பு ஒற்றுமை எதேச்சையாகத்தான் இருக்க வேண்டும்). பாடலின் முதல் இடையீட்டில் வரும் வயலின் இசை பின்னாட்களில் இளையராஜாவின் முத்திரைப் பாணியாக அமைந்துபோனது.

ஆமாம், ஒரு மாபெரும் வெற்றி. இரண்டு தோல்விகளுக்குப் பிறகு ராஜா என்ன செய்தார்? நிமிர்ந்து நின்றார். படம் – பத்ரகாளி. இந்த முறை புதிதாக (அப்பொழுது கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த) யேசுதாஸ் கண்ணன் ஒரு கைக்குழந்தை-யைப் பாடினார். இந்தப் பாடலில் முதன் முறையாக பி.சுசிலாவும் ராஜாவின் இசையில் சேர்ந்தார். இது மூலைமுடுக்கெல்லாம் ஒலித்தது. அந்தப் படத்தின் கேட்டேளே அங்கே, ஒத்தரூவா ஒனக்குத்தாரேன் பாடல்களும் பிரபலமாயின. அப்புறம் 1977ல் பதின்மூன்று படங்களுக்கு ராஜாங்கம்தான். இதில் கவிக்குயில், பதினாறு வயதினிலே, காய்த்ரி, புவனா ஒரு கேள்விக்குறி, தீபம் எல்லாம் அடக்கம்.