நேற்று டிஸ்கவரி இணைய தளத்திலிருந்து குழந்தைகளுக்கு ஏதாவது புதிய அறிவியல் சம்பந்தமான விளையாட்டுக் கருவிகள் வந்திருக்கின்றனவா என்று தேடிக்கொண்டிருந்தேன். எதேச்சையாகக் கண்ணில் பட்டது இந்த் உயர்தர யோகாசனப் பாய்.

யோகாசனத்திற்குத் தேவையான மேலதிக இழுவை கொண்டது. (எசகுபிசகாக காலை முடிச்சுப் போட்டுக்கொண்டிருக்கும் பொழுது முதுக்கு அடியில் பாய் விலகித் தடம்புரளாமல் இருக்க உத்தரவாதம்). இரண்டடிக்கு ஐந்தடி பரப்பும் காலங்குலத் தடிமனும் கொண்டது. இதன் கூடுதல் தடிமன் யோகாசனத்தின்பொழுது உங்கள் உடலுக்கு மென்மை தருகிறது. சுருட்டி எடுத்துச் செல்ல வசதியானது. விலை கொள்ளை மலிவு முப்பதே டாலர்கள்தாம்.

இத்துடன் கூடவே யோகாசனக் கட்டை (பாலிமரால் ஆனது!) ஒன்றும் பதின்மூன்று டாலருக்குக் கிடைக்கிறது. பாய் வாங்கியப் பேரன்பர்கள் இந்தக் கட்டையையும் வாங்குவதாக டிஸ்கவரி மின்கடை பரிந்துரைக்கிறது. யோகாசனம் செய்யும் பொழுது தேவைக்கு ஏற்றபடி உங்கள் கை, தலை, கால் அல்லது பிருஷ்டத்தின் அடியில் முட்டு கொடுக்கப் பயன்படுத்த ஏற்றது. சொல்லத் தேவையில்லை; இதுவும் உயர்தர அதி நெகிழ்திறன் கொண்ட பாலிமரால் ஆனது.

யோகாசனம் இப்பொழுது கனடாவில் பரபரப்பாக விலைபோகிறது. டொராண்டோ நடுநகரில் மூலைக்கு மூலை யோகாசனப் பயிற்சி மையங்கள். உடற்பயிற்சிக் கூடங்களில் யோகாசனப் பிரிவுகள். இன்னும் எங்கள் ஊர் அரசாங்கப் பொது உடற்பயிற்சிக் கூடத்தில் கூட யோகாசன வகுப்புகள் நடக்கின்றன. இந்த இலையுதிர்காலத்திற்கான உடற்பயிற்சி வகுப்புகளுக்குப் பதிவு செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தபொழுது நான் கண்டது – ஆகக் கூடி அதிக பிரபலமான உடற்பயிற்சி யோகாசனம்தான். இதெல்லாம் சில வருடங்களாகவே பிரபலமாக இருந்தாலும் இப்பொழுது பயிற்சிக் கடைகள் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கின்றன. வெறும் யோகா என்று சொன்னால் விலை போவதில்லை; ஹதயோகா, குண்டலி யோகா, ஹஸ்தாங்க யோகா, கமல யோக, என்று துல்லியமாக வரையறை செய்வது வியாபாரத்திற்கு அத்தியாவசியம். இன்னும் பிக்ரம் யோகா, அய்யங்கார் யோகா என்று ட்ரேட்மார்க் யோகங்களும் உண்டு. இதைத் தவிர கைகாலை அசைக்காமல் கனவான்களும் நாரிமணிகளும் சேர்ந்தோ தனித்தனியாகவோ ஜல்லியடிக்க என்று சில வகைகள் உண்டு; ராஜ யோகம், பக்தி யோகம், மார்க்க யோகம், மந்திர யோகம்.

* * *

மந்திரம் என்று சொன்னால் அடுத்தபடியாக வரவேண்டியது தந்திரம். இது இப்பொழுது எங்கள் ஊர் அரட்டை வானொலிகளில் (Talk Radio) இரவு பத்து மணிக்கு மேல் மிகவும் பிரபலமான விஷயம். (மத்த நேரங்களில் கிடையாது என்றில்லை, மதியம் மூன்று மணிக்குக் கூட சாம்பிராணியைப் போட்டுவிட்டு சட்டையைக் கழற்ற வேண்டுமா இல்லை சட்டையைக் கழற்றிவிட்டு சாம்பிராணியா என்று அணல் பறக்க விவாதிப்பதைக் கேட்க முடியும்). இதை ஷ்டைலாக உச்சரிக்க வேண்டும் – ட்டண்ட்ரா ஸெக்ஸ். (tan-tra sex).

சிறார் கலவியில் மாட்டிக் கொண்ட பிஷப்புகளுக்கு பெயில் எடுக்கக் கோர்ட்டுக்கு அலையும் நேரம்போக , வைதீக கிறிஸ்துவப் பாதிரிகள் அடுத்த வீட்டான் பெண்டாட்டியைப் பார்க்கதே, அகஸ்மாத்தாக உறை பிசகிப்போனால் கலைக்காதே என்றெல்லாம் படுக்கையறையை மாத்திரமே இலக்காகக் கொண்டு போதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவனுக்கு ஒருத்தி என்பது தேவநியதி. ஒருவனுக்கு ஒருத்தன் என்றெல்லாம் இதைப் படிக்க முடியாது என்று முரண்டுகொண்டிருக்கிறார்கள். இன்னொரு புறத்தில் இஸ்லாம் என்றாலே துப்பாக்கி என்று ஊடகங்களில் பரவிப் போனாதால் அதை வைத்துக் கொண்டு எதையும் விற்க முடியாது. இந்த நிலையில் இங்கே அதியற்புத வர்த்தகக் கருவிகளாக இந்து மதமும் பௌத்தமும் மாறியிருக்கின்றன.

முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னால் ஹிப்பிகள் காலத்தில் பிரபலமாக இருந்த காமசூத்ரா மறுபடி தூசி தட்டியெடுக்கப்பட்டிருக்கிறது. எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் ஆண்பால், பெண் பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என்று எல்லாவிதமான சேர்க்கைகளும் கலப்புகளும் வடிக்கப்பட்டிருக்கும் இந்தியச் சிற்பங்களும் ஓவியங்களும் எப்பொழுதுமே வெள்ளைக்காரர்களுக்கு ஈர்ப்பானதாகத்தான் இருந்திருக்கிறன. எத்தனை நாட்களுக்குத்தான் ஸ்காண்டிநேவியப் பொற்த்தலைச்சிகளின் குதிரையேற்றத்தையே அகண்ட திரையில் பார்த்துக் கொண்டிருப்பது. ஸ்துலமான சிற்பங்களும் ஓவியங்களும் கூடுதல் கலையழகு கொண்டவையல்லவா?

அந்தக் காலங்களில் காமசூத்ராவின் படங்கள் மாத்திரமே போதுமானதாக இருந்தது. இப்பொழுது கூடுதல் வசனங்களும் சேர்ந்துகொண்டிருக்கின்றன. இதையெல்லாம் ஒட்டு மொத்தமாக ட்டண்ட்ரா என்று வரையறுத்திருக்கிறார்கள். கணவன்-மனைவி உறவில் சிக்கல், கணவன்-அடுத்த வீட்டுக்காரன் மனைவி உறவில் சிக்கல் என்பதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருந்த வானொலி தொலைக்காட்சி பாலியல் நிபுணர்களின் வாயில் இப்பொழுது கலவி என்ற வார்த்தைக்கு அடுத்தபடி அதிகமாக வருவது ட்டண்ட்ரா-தான். நண்பனுக்கு நான் போதுமானவனாக இல்லை, பரிமாணக்குறைபாடு இருக்கிறது, செயல்பாட்டில் காலவழு என்றெல்லாம் யார் கவலைப்பட்டுக் கொண்டாலும் இந்த நிபுணர்கள் பரிந்துரைப்பது ட்டண்ட்ராவைக் கையாளச் சொல்லித்தான். இதற்காக ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் செயல் விளக்கப் பட்டறைகள் நடக்கின்றன. பொருட்காட்சிகளில் கடைகள் Tools for Tantra Sex என்று விற்றுத்தீர்க்கிறார்கள். கோடைகளில் மாத்திரமே நடக்கும் விவசாயிகள் சந்தையில் ஒரு மூலையில் சாக்கு விரித்து சாம்பிராணியும் அத்தரும் விற்கிறார்கள். நடுநடுவே ரிச்சர்ட் கியர், மடோனா, ஸ்டீவன் ஸீகால் என்று கொஞ்சம் ஹாலிவுட்டம்மாக்களும் ஐயாக்களும் வந்து ஊதிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

அடுத்த வீட்டு அமெரிக்கக்காரர்கள் பாலைவனத்தில் குண்டு போட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் கனடாவில் அமைதியாக ஒரு புரட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதை உங்களுக்கு அறியத் தருவது என் கடமை.