கனேடிய ஒலிபரப்புக் கழகத்தில் வெளியான “யாருடைய உண்மைகள்” என்ற ஈழப்போராட்டம் குறித்த தொடர் நிகழ்ச்சியைப் பற்றி நான் எழுத அதன் பின்னாக எனக்கும் பத்ரிக்கும் இடையில் எழுந்த உரையாடலின் தொடர்ச்சி.

பத்ரி – நீங்கள் சொல்வதில் பல முரண்கள் இருக்கின்றன. இவற்றைப் பற்றி பின்னர்.

முதலில் – போராளிச் சிறுவர்களைப் பற்றிய என் கண்ணோட்டம் என் குழந்தைகளுக்குத் தகப்பன் என்ற பார்வையில். நேற்று மாலை பள்ளிக்கூடத்தில் ஓசி ஸ்கேட்போர்ட்டில் சறுக்கி இரண்டு காலிலும் முட்டியைப் பேர்த்துக்கொண்டு வந்தான் ஜேஷ்டபுத்ரன் – கிழிந்த புத்த்தம் புது Gap Pant ஊடாக ஷ்ரெக் படம் போட்ட பிளாஸ்டரைப் பெருமையாகக் காட்டிக் கொண்டு. ஆனால் கிழிசலின் வழியாக கீழோடிக் காய்ந்துபோன இரத்தம்தான் என் கண்ணில் தெரிந்தது. இதுதான் இந்த விஷயத்திலும் என் பார்வை.

இனி… முதலாவதாக , இந்த 17-19 என்பது விஷயத்தை நீர்த்துப்போகச் செய்யும் உத்தி. நான் சொல்வது 12 – 19. அதாவது கிட்டத்தட்ட இரண்டு பங்கு மூத்தவர்கள் இளையவர்கள் என்ற பாகுபாடு. மிக எளிதாகக் கோட்டுக்கு அந்தப்புறம் இந்தப்புறம் என்று மெல்லிய கோட்டை வரைகிறீர்கள். நான் காண்பது தளிர்களுக்கும் மரத்துக்கும் உள்ள இடைவெளியை.

>ஆனால் தற்காப்புப் படைகள் இந்த வரம்பைப் பின்பற்ற முடியாது. தன்னைத் தாக்கவருபவனை எதிர்த்துத் தாக்காமல் “எனக்கு 16 வயதுதான் ஆகிறது, அதனால் நான் அடி வாங்கிக்கொள்கிறேன்” என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

பத்ரி, நீங்களும் சொல்லிவிட்டீர்கள். பிரகாஷும் சபாஷ் சொல்லிவிட்டார் 🙂 நாம் இங்கே பேசுவது தற்காப்பைப் பற்றியல்ல. படைதிரட்டுவதைப் பற்றி. எனக்கு மேலே வன்னியன் பெருமையாகச் சொல்லும் கட்டுக்கோப்பான இயக்கத்தின் நடவடிக்கைகள் திட்டமிடாமல் அடிக்கவரும்பொழுது குழந்தைகளை அடிவாங்கச் செய்கிறதா? இதன் முரண் புரியவில்லை? இது தனது செயல்பாடுகளின்மீது தார்மீகப் பெருமைகொள்ளும் இயக்கம்.

>கடந்த ஆறு மாதங்களின் டொராண்டோவில் புலிகள் யாரையாவது கொன்றிருக்கிறார்களா? கை கால்களை உடைத்திருக்கிறார்களா? ஜெர்மனியில்? பிரான்சில்? பிரிட்டனில்?

அதென்ன ஆறுமாத வரையறை என்று புரியவில்லை 🙂 மெக்கின்ஸி இன்ஸ்டிட்யூட்டின் தளத்தில் கொஞ்சம் கனேடிய வரலாறு கிடைக்கும்.

இதில் ஒரு சிக்கலும் இருக்கிறது, எந்தத் தரவுகளையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள். தங்கமணி சொன்னதைப்போல ஹிந்துவுக்குச் சில மறைமுக நோக்கங்கள் இருக்கலாம் (கின்றன என்றுதான் நானும் நம்புகிறேன்). ஆனால் அம்னெஸ்டி? யுனிஸெஃப்? சேவகி ‘லெக்ஷ்மி’? பத்ரிக்கையாளர் ஜெயராஜ்? முன்னாள் போராளி புஷ்பராஜா? எழுத்தாளர் ஷோபா சக்தி? மக்கின்ஸி இன்ஸ்டிட்யூட்? கனேடிய அமைச்சர்?? யாரைத்தான் நம்புவது??

> தந்தை இல்லாத வீட்டில், மூத்த பிள்ளை – 18 வயதுக்குக் கீழே இருந்தாலும் – ஏதோ வேலை பார்த்து தன் தம்பி தங்கைகளைக் காப்பதில்லையா?

என்ன ஒரு முரண்? உடலை வருத்தி வேலை செய்வதையும் உடலைப் பணயம் வைத்துக் கேடயங்களாக்குவதையும் ஒரே தட்டில் போட்டுப் பார்க்கிறீர்களே?

>அவர்களையும் போராட்டத்தில் இணைத்து அதன்மூலம் ஓரளவுக்கு அடுத்து வரும் சந்ததிகள் வாழ வழி செய்வது விரும்பத்தக்கதல்லவா?

பத்ரி? சரியாகத்தான் சொல்கிறீர்களா? யாரைப் பணயம் வைத்து யாரைக் காப்பாற்றுவது? நாம் சொல்வது எந்த சமூகத்தின் விழுமியங்களை??

>”There is a contradiction here.” அதாவது ஒருவர் ஒரே நேரத்தில் பாதிரியாராகவும், புலிகள் ஆதரவாளராகவும் இருக்க முடியாது என்பதே மறைபொருள். இந்த வரியின் மூலம் சேவியரின் வாக்குமூலத்தை சற்றே நீர்த்துப்போகச் செய்கிறார் ஒருங்கிணைப்பாளர்.

இதை எப்படி நீங்கள் முழுமையாக புலிகளுக்கு எதிரான பேச்சு என்று கொள்கிறீர்கள்? அவர் காட்டும் முரண் “இறைதூதரின் கருணையைப் போதிக்கும் ஒருவர் ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்குத் துணை நிற்பது” குறித்த வியப்பு. சமீப உலக வரலாற்றில் ஆர்ச் பிஷப் டெஸ்மன் டுடூ, கார்டினல் ஸின் போன்றவர்களின் அமைதியான மக்கள் எழுச்சி ச் செயல்பாட்டுடன் ஒப்பிடும்பொழுது தோன்றும் முரண்தான் இங்கே சுட்டப்படுகிறது. நீங்கள் புலிகள் அதிமுக்கியமானவர்கள் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள். கனேடியர்களுக்கு இவர்களைக் கடந்து அல் கைடா, காலிஸ்தான், அபு முகை, இன்னும் ஐ.ஆர்.ஏ என்று பல அகதிச் சிக்கல்களில் ஒன்று. எனவே முன்முடிபுடன் சொல்லவேண்டிய அவசியம் கிடையாது. அதேபோல வலிந்து புலிகளைத் தூக்கிப் பிடிக்கவும்.

> டேவிட் ஜெயராஜோ, ‘லக்ஷ்மி’யோ, புஷ்பராஜாவோ, யாராயிருந்தாலும் புலிகளுக்கு எதிரானவர் என்றால் அவர்கள் உயிர் எப்பொழுது வேண்டுமானாலும் போய்விடலாம் என்பது உண்மை நிலையா அல்லது வெறும் propagandaவா என்பது எனக்குத் தெரியவில்லை.

இன்னும் கொஞ்சம் தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். எனக்கு நண்பர் இரமணி பரிந்துரைத்த Broken Palmyrah, மற்றும் புஷ்பராஜா, கோவிந்தன் புத்தகங்களும் நானாகத் தெரிந்துகொண்ட ஈழ வரலாறும், இங்கே அகதியாக வந்தவர்களுடன் கதைத்ததும் கொஞ்சம் உதவின.

>அதைப்போல முழு அமைதி இருந்தால் … நம் படைகளில் குழந்தைப் போராளிகளையும் ஒழிக்கலாம். Survival என்று வந்துவிட்டால் நாகரிக நாடுகளின் சட்ட திட்டங்கள் அனைத்தும் காற்றில்தான் பறக்கவேண்டும். These are wars fought in extraordinary circumstances. There cannot be any rules in guerilla warfare. Unfortunately.

இது போரைத் தவிர வேறெந்த தீர்வுமே இல்லை என்ற தீர்க்கமான முடிவுக்கு நீங்கள் வந்துவிட்டதைக் காட்டுகிறது. உண்மையில் இதுதான் உங்கள் தீர்வா என்று புரியவில்லை. இதுதான் என்றிருக்கும் பட்சத்தில் எனக்கு மேற்கொண்டு பேச ஒன்றுமில்லை. என்னுடைய கண்ணோட்டத்தில் சமாதானத்திற்கு இன்னும் சில வழிகள் இருக்கின்றன. அது அபரிமிதமான புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையைக் கொண்டு பல நாடுகளின் நிர்ப்பந்த்தத்துக்கு இலங்கையை ஆளாக்குவது. கனடாவிலிருந்து பார்ப்பவன் என்ற முறையில் தமிழர்களின சக்தி இங்கு பயன்படுத்தப்படவில்லை என்றுதான் தோன்றுகிறது.

> போரே கூடாது என்ற நிலையே நான் விரும்புவது.

என்று சொல்லும் நீங்களா சிறுவர்களையும் அதற்கு அனுப்பவதை நியாயப்படுத்துவது? ஒருக்கால் அடி ஒன்றுதான் உதவும் என்று சொல்லியிருந்தால் உங்கள் தர்க்கங்களுக்கு நியாயம் புலப்படும். இங்கே முரண்தான் மிஞ்சுகிறது.

துரதிருஷ்டவசமாக இருபத்தைந்து வருட போர் வரலாற்றில் தீர்வே இல்லையே? போராலும் முடியாது அமைதியாலும் முடியாது என்றிருந்தால்கூட Give peace a chance!

* * *

>விடுதலைப் புலிகள் பல்வேறு காரணங்களால் வயது குறைந்தவர்களைத் தங்கள் படைகளில் வற்புறுத்தியே சேர்த்திருக்கலாம். அதையும் நான் குறை கூற மாட்டேன்.

இந்த ஒற்றைவரியே எனக்கு ஆசுவாசத்தைத் தருகிறது. என்னால் ஒரு நிலையிலும் இதைச் சொல்ல முடியாது.

நான் முதலில் சொன்னதைப் போல ஒரு தகப்பனின் பார்வை மட்டுமே எனக்கு எல்லாவற்றையும் தாண்டி மேலெழும்புகிறது.

இதெல்லாவற்றையும் தாண்டி என் எழுத்து “மேல்தட்டு நியாயம்” என்று வேறு முத்திரை குத்தப்படும்பொழுது anguish க்கு என்ன சொல்லாம்? ம்ம்.. மன உளைச்சல் மேலிடுகிறது.

* * *

நிற்க. வானொலி நிகழ்ச்சி நான் ஏற்கனவே சொன்னதுபோல் முழுமையானது இல்லை, ஆனால் நல்ல துவக்கமாக ஆக்குவது சாத்தியம். பல போராளிக் குழுக்களைப் பற்றிய ஒலிபரப்புகளைக் கேட்டிருக்கிறேன். அவற்றுடன் ஒப்பிட்டுத்தான் இதுவும் நேர்மையானது என்று சொன்னேன். எனக்கென்னமோ பல தரப்புகளையும் பங்களிக்க வைத்தது சரியாகப் படுகிறது. விட்டுப் போனது ஒரு கனடாவில் வசிக்கும் புலி என்று சொல்லிக்கொள்ளும் ஒரு பிரதிநிதி. ஆனால் அவரைப் பேச வைப்பதில் இருக்கும் சங்கடம் தெரியும்தானே) சில தவறுகள் தென்படுவது கண்கூடு. உண்மையில் ஜெயராஜ் assholes என்று சொன்னதை எடிட் செய்யாமல் அப்படியே விட்டது உட்பட. இதெல்லாவற்றையும் அவர்கள் தளத்தில் எழுதி அவர்களைத் தெருட்ட வேண்டியது நம் கடமை. (நான் நிகழ்ச்சி நடந்து பல நாட்களுக்குப் பிறகுதான் இதை எதேச்சையாகக் கண்டுபிடித்தேன்). ஆனால் தமிழர்கள் யாரும் அங்கே போகவில்லை. உண்மையில் இதுதான் நிலை – தங்களின் அவலத்தை உலகெங்கிலும் இன்னும் சரிவர எடுத்துச் சொல்லவில்லை.

பின்புலம்

வானொலி நிகழ்ச்சிகள் குறித்த என் தொகுப்பும் பத்ரியின் கருத்தும்

பத்ரியின் கருத்துக்களை முன்வைத்து நான் சொல்லியவை

பத்ரியின் தொடர் கருத்துக்கள்.