மோகன்குமாரின் குவாண்டம் கணிப்பு குறித்த வலைப்பதிவில் என் பின்னூட்டத்தைப் பற்றி ரோசா வஸந்த இப்படி ஆச்சரியம் தெரிவித்திருக்கிறார்;

‘குவாண்டம் கணணி’ என்ற தலைப்பில் புத்தகம் எழுதிய வெங்கட் பதிவை ஒழுங்காய் படித்தாரா என்று தெரியவில்லை. படித்துவிட்டு பாராட்டியிருந்தால் ரொம்பவே கஷ்டம்தான். ஒழுங்காய் படித்திருக்க மாட்டார் என்று மிகவும் நம்புகிறேன். (அதனால் படிக்காமல் பாராட்டியிருந்தால் கொஞ்சம் குறைவான கஷ்டம் மட்டுமே).’…

…வெங்கட்டும் வந்து பாராட்டியிராவிட்டால் நான் எழுதியிருக்கவே மாட்டேன்…

…மோகன் எழுதியது அப்பட்டமான ஒளரல் என்பதை, ஏற்கனவே சொன்னதுபோல், வெங்கட் (படித்தோ படிக்காமலோ) பாராட்டிய காரணத்தால், சுட்டி காட்டுவது என் கடமை.

வஸந்த இவ்வளவு தீவிரமாக என்னைக் குறித்த அவரது எதிர்பார்ப்புகளை எழுதியிருப்பதால் அது குறித்து கொஞ்சம். (சுட்டிகள் இறுதியில்)

வஸந்த் – உங்கள் பதிவுக்கு நன்றி. முதலாவதாக அறிவியல் சமாச்சாரங்களில் ஒருவரை ஒருவர் தொடர்ந்து, விளக்கி எழுதுவதைப் பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இன்னும் பல அறிவியல் தகவல்களை இப்படியே விவாதித்தால் நாம் ஒரு ஆரோக்கியமானநிலையை உருவாக்க முடியும்.

சில விளக்கங்கள்; உங்கள் பதிவின் படி (0) நான் முழுக்கப் படிக்காமல் மோகனைப் பாராட்டி எழுதியிருக்கிறேன் (1) நான் படித்தும் புரிந்துகொள்ளாமல் பாராட்டியிருக்கிறேன். வஸந்த் – மீண்டும் ஒருமுறை மோகனின் பதிவில் என் பின்னூட்டத்தைப் படியுங்கள். அதிகபட்சமாக நான் எழுதியிருப்பது ‘மோகன்தாஸ், பதிவுக்கு நன்றி!’ மாத்திரம்தான். இதில் எங்கேயும் அவரைப் பாராட்டவில்லை. இதுமாதிரியான ஒரு விஷயத்தை எழுதியதற்கான ஒரு நன்றி மட்டுமே அது. நீங்கள் சொல்லியிருக்கும் எல்லா அரைகுறைகளை நானும் கண்டேன். ஆனால் உங்கள் அளவுக்கு அதைத் துல்லியமாகச் சுட்டி எழுத முயற்சிக்கவில்லை. எழுதியிருக்க வேண்டும் (நீங்கள் அதைச் செய்ததற்கு நன்றி). ஏனென்றால் அறிவியல் தகவல்களில் எந்தப் பிழையையும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று தீர்மானமாக நம்புபவன் நான். எழுதாததற்கு முதல் காரணம் – கிறிஸ்துமஸ் விடுமுறை, அதைத் தொடர்ந்து இந்தியப் பயணம் இவற்றால் கடைசி இரண்டு நாட்களில் வேலை நெருக்கடி. அதையும் விட முக்கியமானது என் தயக்கம்.

மோகன் இப்பொழுதுதான் இதுபோன்ற விஷயங்களை எழுதத் தொடங்கியிருக்கிறார். நான் ஏதாவது எழுதினால் இவர் மீது நான் பாய்வதாகப் பரப்பப்படும். இதைத் தவிர்க்க நான் விரும்பினேன். இதேமாதிரியான ஒரு தகவலை சுஜாதா போன்றவர்கள் எழுதியிருந்தால் நான் எப்படி விமர்சித்திருக்கக்கூடும் என்பதை நீங்கள் அறிவீர்கள். என்னுடைய அளவுகோல்கள் இவர்கள் இருவருக்கும் வெவ்வேறானவை. மோகனுடைய ஆர்வத்தைச் சிதைத்துவிடக்கூடாது என்ற கவனமும் கூட. அதே நேரத்தில் ஆரம்பத்திலேயே இதை அவருக்குச் சுட்டவேண்டியதும் முக்கியம்.

இன்னும் ஒரு சின்னச் சிக்கலும் இருக்கிறது. மோகன் சுஜாதாவை கிட்டத்தட்ட வழிபடுபவர். அவர் வார்ப்பில் அப்படியே எழுதத் துடிப்பது தெரிகிறது. இந்த நிலையில் இவரை நான் விமர்சித்தால் அது ஒருவிதக் குழுச்சண்டையாகப் (அண்ணாத்தே, நமக்குன்னு எந்தக் குழுவும் கெடயாதுங்கோ) பார்க்கக்கூடும். (தமிழ் லினக்ஸ் தகறாரில் ‘ழ’-வில் இருக்கும் சில இளைஞர்கள் அவர்கள் மீதான முறையான விமர்சனத்தை இப்படித்தான் எதிர்கொண்டார்கள்). இன்னொரு முறை அப்படியொரு விமர்சனத்திற்கு நான் இடம் கொடுக்க விருப்பமில்லை.

இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் சுஜாதாவின் மீதும் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. அவர் தரும் அரைகுறை / தவறான அறிவியல் தகவல்களை மாத்திரம்தான் விமர்சிக்கிறேன் (ஏற்கனவே சொன்ன தவறான அறிவியல் தகவற்பிழை குறித்த விசனம்). தன் மீதான் எந்த முறையான விமர்சனத்துக்கும் மதிப்பளிக்காதமை சில முறை எரிச்சலைத் தூண்டுவதால் வார்த்தைகள் என்னிடமிருந்து நீண்டிருக்கின்றன.

* * *

இதையெல்லாம் தவிர்க்கத்தான் நான் பொதுப்படையான சில தொடர்புள்ள சிக்கல்களைப் பற்றி மாத்திரமே எழுதிவிட்டு, தமிழ் வார்த்தைகளைக் கையாளுவதுபற்றிய ஒருவரி விசனத்தையும் தெரிவித்தேன். என்னுடைய கட்டுரையின் சுட்டியைத் தந்திருந்தேன். மோகன் அந்தக் கட்டுரையைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

என் நிலையை ஓரளவுக்கு விளக்கியிருக்கிறேன் என்று நம்புகிறேன்.

– – –

தொடர்புள்ள பிற வலைப்பதிவுகள்;

மோகன்குமாரின் பதிவு: குவாண்டம் கம்ப்யூட்டிங்கும் ஜல்லியடித்தலும்

ரோசா வஸந்தின் பதிவு: குவாண்ட உளறல்