இன்றைக்கு வெளியாகியிருக்கும் அறிவிப்புப் படி மைக்ரோஸாப்ட் RSS (Really Simple Syndication) என்று அழைக்கப்படும் செய்தியோடை தரத்தைக் கையாண்டு நீட்டிக்கப்போகிறதாம் . உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். தமிழ்மணத்தின் ஆதார இதயமே இந்த RSS செய்தியோடை திரட்டிதான். வலைப்பதிவு பொதிகள் (ப்ளாகர், நியூக்ளியஸ், வேர்ட்ப்ரஸ், மூவபிள்டைப்,…) எல்லாம் பொதுவான தரக்கட்டுப்பாட்டின்கீழ் வரும் RSS அல்லது Atom முறைப்படி வலைப்பதிவுகளின் தலைப்பு, எழுதப்பட்ட நேரம், எழுதியவர், முதல் சில வாக்கியங்கள் என்று செய்தியோடைகளாகத் தருகின்றன. சுருக்கமாகச் சொல்லப்போனால் RSS என்பது வலைப்பதிவின் முன்னோட்டம். இந்த RSS செய்தியோடைகளைப் பல வகையில் படிக்க முடியும். தனித்தியங்கும் செய்திப்படிப்பிகள் (newsreaders) உலாவி அல்லது மின்னஞ்சல் கருவியுடன் சேர்ந்தியங்கும் திரட்டிகள் ( RSS Aggregators) என்று பலவகைகளில் இவற்றைப் படிப்பது சாத்தியம். தமிழ்மணத்தில் இந்த செய்தியோடைகள் திரட்டப்பட்டு முன்னோட்டம் தரப்படுகின்றன.

இந்த செய்தியோடை முறை நெட்ஸ்கேப்பினால் துவக்கப்பட்டது. அதேசம்யத்தில் யூஸர்லாண்ட் என்ற நிறுவனமும் எக்ஸெமெல் (XML) மொழியின் அடிப்படையில் இதன் பல கூறுகளை உருவாக்கின. 2002க்குப் பிறகு வலைப்பதிவுகள் பிரபலமானவுடன் இந்த RSS செய்தியோடை, படிப்பிகள், திரட்டிகள் போன்றவை மிகவும் பிரபலமாக ஆகத் தொடங்கின. இப்பொழுது என்னுடைய லினக்ஸ் மேசைத்தளத்திலேயே எழுதப்படும் வலைப்பதிவுகளின் முன்னோட்டம் ஓடுகிறது. இன்றைக்கு ராய்ட்டர், பிபிசி, உட்பட பல முன்னனி செய்தி நிறுவனங்கள், பங்குச் சந்தை நிலவரங்கள், வானிலை அறிவிப்புகள், இன்னும் விளையாட்டு வர்ணனைகள் என்று பலவிதமான இடங்களில் இந்த செய்தியோடைகள் பயன்படுத்தப்படுகின்றன.

மோஸிலா ஃபயர்ஃபாக்ஸ், ஆப்பிளின் சபாரி, இன்னும் லினக்ஸில் இயங்கும் பல உலாவிகளில் நேரடியாக வலைப்பதிவுகளின் செய்தியோடைகளைப் படிக்க முடியும். ஆனால் மைக்ரோஸாப்ட்டின் ஐஈ உலாவியில் இது சாத்தியமில்லை. அதேபோல தண்டர்பேர்ட் போன்ற பல மின்னஞ்சல் கருவிகளிலும் இவற்றைப் படிக்கமுடியும். ஆனால் மைக்ரோஸாப்ட்டின் அவுட்லுக் தொழில்நுட்பம் இன்னும் முன்னேற்வில்லை. இந்த நிலையில் இப்பொழுது மைக்ரோஸாப்ட் RSS செய்தியோடை முறையை தன்னுடைய அடுத்த இயக்குதள வெளியீடான லாங்க்ஹார்ன்க்கு ஏற்ற்வகையில் மாற்றியமைக்கப்போகிறார்களாம்.

இது வழக்கமாக மைக்ரோஸாப்ட் செய்யும் அயோக்கியத்தனம்தான். உருப்படியாக எந்த ஒரு பொதுத் தரத்தையும் மைக்ரோஸாப்ட் உருவாக்கியதில்லை. ஆனால் செயல்முறையில் இருக்கும் பொதுத்தரங்கள் ஓரளவுக்குப் பிரபலமானவுடன் அதில் தங்கள் கையைவைத்து அதை உருப்படாமல் செய்வார்கள். உதாரணமாக html உலாவி மொழி பொதுத்தரமாக இருந்தது, பின்னர் மைக்ரோஸாப்ட் அதில் சில நீட்டிப்புகளைச் செய்து இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தவிர பிற உலாவிகளில் தெரியாமல் செய்தார்கள். அதாவது மைக்ரோஸாப்ட் உலாவிக்கு மாத்திரமே புரியும் கட்டளை உள்ளடக்கச் செய்து ஆவணங்களை உருவாக்க வைப்பது, இந்த ஆவணங்களுக்காகவே அவர்கள் உலாவியை மாத்திரமே பயன்படுத்தும் அடிமைகளாக சராசரி பயனரை அடக்கிவைப்பது. இதன் மூலம் போட்டிகளை ஒழிப்பது.

இப்படி மைக்ரோஸாப்ட் தன்னுடைய “பங்களிப்பை” html, java, xml, என்று பல இடங்களில் செய்திருக்கிறது. இவற்றைத்தவிர அவர்களுடைய கோப்பு அமைப்புகள் பல பொதுவிலிருந்து எடுக்கப்பட்டு நீட்டிக்கப்பட்டு மைக்ரோஸாப்ட் பொதிகளுக்கு மாத்திரமே புரியும்படி செய்யப்பட்டவை. இந்த நிலையில் இப்பொழுது செய்தியோடையின் மீது மைக்ரோஸாப்ட்டின் கனிவான பார்வை விழுந்திருப்பதை நினைத்தால் பயமாக இருக்கிறது. இன்னும் மைக்ரோஸாப்ட்டுக்கு வலையில் இருக்கும் கணினிகள் பேசிக்கொள்ளும் TCP/IP நடைவரை (நடைமுறைக்கு வரையறை – Protocol) மின்னஞ்சல் பரிமாறும் POP நடைவரை இப்படிப் பல தரங்களின் மீது கண் இருக்கிறது.

உதாரணமாக, நம் மக்கள் வருங்காலத்தின் பயன்படுத்த எளிதாக இருக்கின்றது (சோம்பேறித்தனம் என்றும் படிக்கலாம்) “மைக்ரோஸாப்ட் செய்தியோடை தரும் வலைப்பதிவுகளைப்” பயன்படுத்துவார்கள். பிறகு பெரும்பாலானவர்களுக்காக என்று தமிழ்மணமும் அந்தமாதிரி ஓடைகளை மாத்திரமே திரட்டத்தொடங்கும். பின்னர் தமிழில் எழுதப்படும் வலைப்பதிவுகளை லினக்ஸிலோ ஆப்பிளிலோ படிக்கமுடியாமல் போகும். – இதுதான் மைக்ரோஸாப்ட்டின் விளையாட்டு உத்தி. உருப்படியாக ஒன்றும் கண்டுபிடிக்க மாட்டார்கள். ஒன்று பிரபலமாகத் தொடங்கினால் அதில் த்ங்கள் கையைவைந்த்து வளைத்துப் போடுவார்கள்.

எங்க ஊரில் ஆமை புகுந்த வீடு என்று சொல்வார்கள். கணினி உலகைப் பொருத்தவரை மைக்ரோஸாப்ட் கைவைத்த தரம் என்றும் சொல்லலாம்.