வரும் நாட்களில் இந்தத் தலைப்பில் சில வலைப்பதிவுகள் என்னிடமிருந்து வரும். இப்பொழுது மைக்ரோஸாப்ட் அசைக்கமுடியாத இடத்தில் இருப்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் ஒரு (வர்த்தகப்) பேரரசின் அழிவிற்கான சாத்தியங்கள் முன்னெப்பொழுதையும்விட இப்பொழுது அதிகமாகக் காணப்படுகின்றன. இது தொடர்பாக சமீபத்திய நிகழ்வுகளையும் அவற்றின் பின்னணி, விளைவுகள் இவற்றையும் பட்டியலிட முயற்சிக்கிறேன். மைக்ரோஸாப்ட், ஆப்பிள், கூகிள், ஐபிஎம், நாவெல், ஹெச்பி, டெல் போன்ற நிறுவனங்களின் சமீபத்திய முடிவுகள், வால்ஸ்ட்ரீட் ஜர்னல், பார்ச்சூன் போன்ற வர்த்தக சஞ்சிகைகள் இவற்றின் கணிப்புகளை இந்தத் தொடரில் நான் பயன்படுத்திக் கொள்ள உத்தேசித்திருக்கிறேன்.

இன்றைய ராய்ட்டரில் இன்டெல் – ஆப்பிள் இரண்டு நிறுவங்களையும் மேற்கோள்காட்டி வெளியாகியிருக்கும் இந்தச் செய்தியின்படி விரைவில் ஆப்பிள் இன்டெலின் நுண்செயலிகளைப் பயன்படுத்தத் துவங்கலாம் . இதனால் மைக்ரோஸாப்ட்க்கு என்ன நஷ்டம்?

உலகின் மொத்த கம்ப்யூட்டர் விற்பனை வருடத்திற்கு 200 மில்லியன் என்று கணக்கிடப்படுகிறது. இதில் ஐபிஎம்-மின் நுண்செயலிகளின் அடிப்படையில் அமைந்த ஆப்பிள் மக்கின்டோஷ் கணினிகள் மூன்று மில்லியன் மாத்திரமே அடக்கம். அதாவது கிட்டத்தட்ட 1.5 சதவீதம். இந்த எண்ணிக்கையை உயர்த்த ஆப்பிளுக்கு இரண்டு விஷயங்கள் தேவைப்படுகின்றன. ஒன்று சக்திவாய்ந்த விலை குறைந்த நுண்செயலிகள், இரண்டாவது அடிக்கடி முன்னேற்றப்பட்டு வெளியாகும் நுண்செயலிகள். ஐபிஎம்-மின் PowerPC செயல்திறனில் மிகவும் முன்னேறியவை. ஆனால் ஐபிஎம் சமீபகாலத்தில் இதில் பெரிய அளவு முன்னேற்றம் எதையும் மேற்கொள்ளவில்லை. மாறாக அவ்வளவு உன்னதமற்ற இன்டெலின் கலவைக் கட்டளை தொகுதி கணிப்புச் செயலிகள் (Complex Instruction Set Computing – CISC) – பெண்டியம் ஏஎம்டியின் சமீபத்திய போட்டியின் காரணமாக தொடர்ந்த முன்னேற்றம் பெற்று வருகின்றன. இந்த நிலையில் சந்தையில் பரபரப்பாக விற்பனை செய்யப்பட ஆப்பிளுக்கு இன்டெல் அல்லது ஏஎம்டி இவற்றில் ஏதாவது ஒன்றுடன் இணைய வேண்டிய தேவையிருக்கிறது. சமீபகாலமாக இண்டெலைக் காட்டிலும் ஏஎம்டி நுட்பத்தில் தொடர்ச்சியாக வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் இன்டெலுக்கும் தன்னுடைய வழக்கமான மைக்ரோஸாப்ட் தளங்களுக்கான நுண்செயலிகளைத் தவிர பிறவற்றில் நுழையவேண்டிய அவசியம் இருக்கிறது. இந்தச் சமன்பாடுகள் ஆப்பிளையும் இன்டெலையும் எளிதாக இணைக்கின்றன.

சமீபகாலமாக ஆப்பிள் பரபரப்பான வளர்ச்சி பெற்றுவருகிறது. முதலில் தன்னுடைய இயக்குதளத்தை (லினக்ஸை ஒத்த) தளையறு மென்கலனான ·ப்ரீ பிஎஸ்டி (Free BSD) அடிப்படையில் மாற்றியமைத்து ஓஎஸ் – எக்ஸ்ஐ வெளியிட்டது. இது பெருத்த வரவேற்பைப் பெற்றது. ஒரு வகையில் இது ஆப்பிளின் தலைவிதியையே மாற்றியமைத்தது என்று சொல்லலாம். பின்னர் ஆப்பிள் ஐபாட் எம்பி3 இயக்கிகளை வெளியிட்டது. பொதுவில் ஆப்பிள் தன்னுடைய மையச் சந்தையான மேசைத்தளக் கணினிகளைத் தவிர பிற விஷயங்களில் கவனம் செலுத்துவதில்லை. ஆனால் ஐபாட் ஆப்பிளை கணினி தாண்டி டிஜிட்டல் பொழுதுபோக்கு நிறுவனமாக மாற்றியமைத்தது. ஐபாட் வருகைக்குப் பிறகு ஆப்பிளின் பங்குகளின் விலை மும்மடங்காக உயர்ந்திருக்கிறது.

இந்தப் டிஜிட்டல் பொழுதுபோக்கு சந்தையை மைக்ரோஸாப்ட் முற்றாகத் தவறவிட்டிருக்கிறது. பரபரப்பாக பிரபலம் பெற்றுவந்த எம்பி3க்கு மாறாக, வழக்கம்போல் தன்னிடம் வாடிக்கையாளர்களை அடிமையாக்கும் நுட்பங்களைக் கொண்ட விண்டோஸ் மீடியா என்ற இசைவடிவை மைக்ரோஸாப்ட் முன்னிருத்தியது. இதில் பெரும் தோல்வி. இப்பொழுது ipod எம்பி3 இயக்கிகள், iMovie இல்ல டிவிடி படங்கள், iPhoto டிஜிட்டல் படங்கள் என்று ஆப்பிள் அசைக்கமுடியாத முதலிடத்தில் நிற்க மைக்ரோஸாப்ட் இந்த வண்டியைத் தவறவிட்டு நடுத்தெருவில் நிற்கிறது.

இந்த நிலையில் விலை குறைந்த, அதிக தயாரிப்புத் திறனைக் கொண்ட இண்டெல் நிறுவனத்தின் பெண்டியம் நுண்செயலிகளுக்குத் தன்னை மாற்றிக்கொள்வதன் மூலம் மைக்ரோஸாப்ட்டின் ஆதார விற்பனையின் ஆப்பிள் கைவைக்க முயல்கிறது. அற்புதமான வடிவமைப்பு, பயன் எளிமை, உறுதியான அதிகம் பிரச்சனைகளற்ற (·ப்ரீ பிஎஸ்டி அடிப்படையிலான) இயக்குதளம் விலை குறைந்த நுண்செய்லிகளில் கிடைத்தால் இப்பொழுது மைக்ரோஸாப்ட்டின் பிரச்சனைகள் மிகுந்த, கட்டுப்பாடுகள் நிறைந்த எக்ஸ்பியை விட்டுப் பலரும் இதற்குத் தாவுவார்கள். சுண்டியிழுக்கும் அற்புத வடிவமைப்பும் பயன் எளிமையும் ஆப்பிளின் அசைக்க முடியாத சொத்துக்கள்.

இதனால் ஆப்பிள் ஐபிஎம் ரிஸ்க் நுண்செயலிகளை அடியோடு விட்டுவிடும் என்று நான் நம்பவில்லை. இண்டெலையும் கூடச் சேர்த்துக் கொண்டு சந்தையைப் பெரிதாக்குவார்கள் என்றுதான் தோன்றுகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட மாக்-மினி கணினிகள் முதல்கட்டமாக பெண்டியத்திற்கு மாற்றப்ப்படலாம். இதில் கூடவே இன்னொரு சந்தையும் ஆப்பிளுக்குச் சாத்தியமாகிறது. இப்பொழுது உலகம் முழுவதும் புழக்கத்திலிருக்கும் மைக்ரோஸாப்ட் அடிப்படையிலான பழங்கணினிகளை வைத்திருப்பவர்கள் கூட ஆப்பிளுக்கு எளிதாக மாற முடியும். இந்த மாபெரும் இயக்குதள சந்தை இண்டெலின் நுண்செயலிகள் மூலம் ஆப்பிளுக்குச் சாத்தியமாகிறது. ஆப்பிளின் உள்நடவடிக்கைகளைப் பற்றித் தெரிந்தவர்கள் ஆப்பிள் எப்பொழுதும் தன்னுடைய இயக்குதள வெளியீடுகளை அவ்வப்பொழுது இண்டெலின் நுண்செயலிகளுக்குப் பெயர்த்து (port) வைப்பது வாடிக்கை என்று சொல்கிறார்கள். அந்தவகையில் இதற்காக ஆப்பிள் எப்பொழுதுமே தயாராகத்தான் இருக்கிறது.

மைக்ரோஸாப்ட்டிற்கு மாற்றாக பலரும் லினக்ஸைத்தான் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் லினக்ஸின் பலங்களே அதன் பலவீனங்களும் கூட. எவ்வளவுதான் எளிமைப்படுத்தப்பட்டாலும் லினக்ஸில் இருக்கும் சில சிக்கல்களே பெரிதாகச் சொல்லப்படும். உதாரணமாக செயல்பாட்டிலிருந்த ஒரு ஒலியட்டை (sound card) வேலை செய்யவில்லை என்றால் அதை லினக்ஸ் கணினியில் மாற்றுவதற்கு என்னென்ன சிக்கல்கள் இருக்கின்றனவோ அதே அளவு சிக்கல் விண்டோஸில் இருந்தாலும் பலரும் லினக்ஸே கஷ்டமானது என்றுதான் சொல்வார்கள். இந்த மனப்போக்கு இப்பொழுது விதைக்கப்பட்டு இறுகிப்போயிருக்கிறது. மாறாக ஆப்பிளுக்கு இந்தப் பிரச்சனைகள் குறைவு. ஆப்பிள் என்றாலே எளிமை என்பதும் விதைக்கப்பட்டு வேறூன்றிப்போன கருத்து. இது ஆப்பிளின் கூடுதல் பலம்.

இன்டெலின் இயக்குதளங்களுக்கு ஆப்பிள் ஓஎஸ்-எக்ஸ் மாற்றியமைக்கப்பட்டால் அது மைக்ரோஸாப்ட்டின் ஆதார சந்தையான இயக்குதள விற்பனைக்குப் பெறும் பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும்.

(பின் குறிப்பு : கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்னர் நான் இதன் சாத்தியத்தை எழுதியிருந்தேன்).