மனிதனால் செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டு நிர்வகிக்கப்படுவது பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். செயற்கைக்கோள்களுக்கு பல பயன்கள் இருக்கின்றன. இவை மழைவருவதையும் இன்னபிற காலநிலைகளையும் கண்டறியப் பயன்படுகின்றன, புவியின் பரப்பையும், அதிலிருக்கும் உயிர்ப்பன்முகத்தையும் வரையறுக்கப் பயன்படுகின்றன. நிலத்தடி நீரின் இருப்பைச் சொல்லுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாகப் பெரும்பாலான நேரங்களில் உங்கள் வீட்டிலிருக்கும் தொலைக்காட்சியில் மிகமிக முக்கியமான விளம்பரங்களையும், திரைப்படங்களையும் காட்ட உதவுகின்றன. (இடைப்பட்ட நேரத்தில் சேதி சொல்லவும்தான்).

கிரிக்கெட் ஆட்டத்தில் தடுப்பாளர் பந்தைக் குச்சியில் எறிந்தவுடன் சந்தேகப்படும் நடுவர் காற்றில் கட்டம்வரைய பெட்டிக்குள்ளே உட்கார்ந்திருக்கும் அவரது சகா, மூன்றாவது நடுவர், தனக்கு முன்னேயிருக்கும் தொலைக்காட்சியில் நடந்தது என்ன என்று மெதுவேகத்தில் ஒவ்வொரு கட்டமாக ஆராய்ந்து பந்து குச்சியில் படும் நேரத்தில் மட்டையாளரின் காலோ, மட்டையோ உள்ளேயிருந்ததா அல்லது காற்றிலா என்று நுண்நொடி முடிவுகளை எடுக்கிறார். விசேடம் என்னவென்றால் முதலாவது நடுவர் கட்டம் வரைவதிலிருந்து மூன்றாவது நபர் தொலைக்காட்சியை ஓட்டும் இடைப்பட்ட சமயத்தில் தகவல் ஆட்டக்களத்திலிருந்து விண்வெளியில் சுற்றும் செயற்கைக்கோளுக்குப்போய் அங்கிருந்து திரும்ப மைதானத்திற்கு வருகிறது. மூன்றாவது நடுவர் இல்லாத கிரிக்கெட் ஆட்டம் கிடையாது. மூன்றாவது நடுவர் செயற்கைக்கோளின் உபயம். சொல்லப்போனால் செயற்கைக் கோள்கள் இல்லாத இன்றைய உலகைக் கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியவில்லை.

இத்தனையும் தாண்டி செயற்கைக் கோள்களுக்குப் புதிய பயன் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஐம்பத்தேழு நாடுகளை கொண்ட உலக இஸ்லாமியக் குழுமம் புதிய செயற்கைக் கோள் ஒன்றை ஏவவிருக்கிறது . இதன் முக்கிய பயன் நிலவைப் படங்கள் எடுத்துப் பூமிக்கு அனுப்பவதுதான். இதிலென்ன விசேஷம் என்கிறீர்களா? நாளதுவரை அப்படி வந்த படங்களை ஆராய்ந்து பல்வேறு உண்மைகளைக் கண்டறிய முயன்றவர்கள் விஞ்ஞானிகளாகத்தான் இருந்தார்கள். இந்த இஸ்லாமிய செயற்கைக்கோள் அனுப்பும் படம் இஸ்லாமிய மதகுருமார்களைக் கொண்ட குழுக்களால் ஆராயப்படும். ஆராய்ந்து எப்பொழுது இஸ்லாமிய நோன்புகளைத் துவக்குவது/முடிப்பது, எப்பொழுது பண்டிகைகளைக் கொண்டாடுவது போன்ற முடிவுகளை எடுப்பார்கள்.

பல சமயங்களில் மேகமூட்டத்தின் காரணமாக வானில் இருக்கும் பிறை குருமார்களின் வெற்றுக்கண் பார்வைக்குத் தெரியாமல் போயிருக்கிறது. அந்த நேரங்களில் ஆண்டவனின்மீது பாரத்தைப் போட்டு விரதத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். இன்னும் சில நேரங்களில் ஒரு குருவின் கண்ணிற்குத் தெரிவது இன்னொருவருக்குத் தெரிவதில்லை. இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் வருகிறது. இதையெல்லாம் தவிர்க்க இனிமேல் செயற்கைக் கோள் படங்களைப் பயன்படுத்தவிருக்கிறார்கள்.

ம்ம்ம்… தட்டை பூமியையும், ஆண்டவன் படைத்த ஆதாம் ஏவாளையும், புவியை மையமாகக் கொண்ட உலகையும் தொடர்ந்து இன்னொரு சமய நம்பிக்கை அறிவிலின் பக்கம் திரும்பவிருக்கிறது.