sensex_rain

மும்பையில் பேய் மழை அடித்து ஓய்ந்திருக்கிறது. தினசரி வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. வேலையிலிருந்து வீடு திரும்புபவர்கள் பள்ளி விட்டு வரும்சிறுவர்கள் இருபது மணி நேரம் வரை மழையில் சிக்கி முகமறியாதவர்களின் உதவியில் உயிர்பிழைத்திருக்கிறார்கள். வழக்கமான அனுதாபங்கள் எல்லாவற்றையும் ஒருபுறம் இருத்திவிட்டு கொஞ்சம் உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள இதை துணைக்கழைப்போம்.

மும்பை இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரமாகக் காட்டப்படுகிறது. மும்பை பங்கு சந்தையின் சென்ஸெக்ஸ் ஏற்ற இறக்கங்கள் இந்தியாவின் பொருளாதார நிலையைப் பிரதிபலிப்பதாகச் சொல்லப்படுகிறது. கடந்த வார பேய் மழையில் மும்பையில் 800 பேர் செத்திருக்கிறார்கள். ஒரே நாளில் 94 செ.மீ-க்கும் அதிகமாகப் பெய்த மழையில் சாவைத் தவிர மும்பையின் பாடல்பெற்ற சேரிகளில் இழப்புகள், காயங்கள், ஊனங்கள் மிக அதிகம்.

இத்தனைக்கும் இடையில் மும்பை சென்ஸெக்ஸ் அதே நாளில் 52 புள்ளிகளுக்கு மேலாக உயர்ந்திருக்கிறது. பினான்ஸியல் எக்ஸ்ப்ரஸ் இதை மும்பைக்கார்களின் வீரத்திற்கு உதாரணமாகக் காட்டுகிறது. பால், காய்கறி கிடைக்காத பொழுதும் பங்கு சந்தை உயர்ந்திருப்பதை மும்பையின் தாங்கு திறனுக்கு உதாரணமாகக் காட்டுகிறது. சத்தியமாக மும்பையின் சேரிகளில் பிணங்களுக்குக் காவல்கிடந்தவர்களுக்கு ரிலையன்ஸின் சாதனை அறிவிப்பு எந்த மகிழ்ச்சியையும் கொடுத்திருக்காது. அதேபோல் மும்பையின் பங்கு சந்தையில் இருந்த வியாபாரிகளுக்கு சேரிப்பிணங்கள் ஒரு பொருட்டாகவே இல்லை என்றும் தெரியவருகிறது.

பத்திரிக்கைகளில் செய்திகளைப் பார்த்தால் சாவுக்குக் கவலைப்படும் ஒவ்வொரு செய்திக்கும் எண்ணிக்கையில் சமமாக பன்னாட்டு நிறுவனங்களின் புழக்கடை அலுவலங்களின் நிலைமை பற்றியும் வந்திருக்கின்றன. எல்லா செய்திகளிலும் பொருளாதாரம் பற்றி ஒரு வரியாவது வருகிறது. நகரத்தின் சக மனிதர்கள் இறந்து கிடக்கும்பொழுது சரிக்குச் சரியாகப் பொருளாதாரம் பேச இவர்களுக்கு எப்படித்தான் மனமொப்புகிறதோ தெரியவில்லை. சிலரிடம் சொன்னால், “ஆமாம் ஸார், பேக் ஆபீஸ் ஒழுங்கா நடந்து வருமானம் வந்தாதான சேரியை எல்லாம் முன்னேத்த முடியும்” ரீதியில் பதில் கிடைக்கலாம். எனக்கென்னமோ இவை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாததைப் போலத்தான் தெரிகின்றன. ஆண்டாண்டுகாலமாக சேரிக்காரர்கள் இவர்களை வளர்த்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். இவர்களோ சேரியைப் பற்றிக் கவலைப்பட்டதைப் போலத் தெரியவில்லை. பேக் ஆபீஸ் வருமானத்தில் ஒரு சதவீதம்கூட குடிசைகளுக்குப் போகாது என்பது சர்வநிச்சயம்.

இன்னும் சொல்லப்போனால், மும்பையின் இந்தப் பெருமழை பாதிப்புக்கு முக்கிய காரணமே சேரிகள் என்றுதான் சிலர் சொல்கிறார்கள். அதாவது கண்ட கண்ட இடங்களில் முறையில்லாமல் குடிசைகளைக் கிளம்பவிட்டது தவறு. வெள்ளம் வரும்பொழுது வடிகால்கள் இல்லாமல் அடைத்தது இவர்கள்தான் என்று குற்றம் சாட்டுகிறார்கள். – விழித்துக் கொள்ளுங்கள் இதற்குத்தான் ஒன்றிணைந்த, ஒழுங்கமைந்த முன்னேற்றம் அவசியம். மும்பையின் சேரிகள் எண்ணிக்கை வளர்வது அங்கேயிருக்கும் பணக்காரர்களின் வளர்ச்சிக்கு நேர்விகிதத்தில்தான் இருக்கிறது. எனவே வாய்க்கால்களை அடைத்துவிட்டதாகச் சேரிகளைச் சுட்டுவதற்கு முன், அந்தச் சேரிகள் யாருடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய முளைக்கின்றன என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தல் அவசியம். சேரி மக்கள்தான் மும்பையில் பால், காய்கறி, டப்பாவில் மதிய உணவு என்று மும்பையின் இரத்த ஓட்டமாக இருக்கிறார்கள். மும்பையின் வளர்ச்சியில் இந்த சேரிகளின் முறையான பங்கு அடையாளம் காணப்பட்டு வருமானத்தில், நகர சேவையில் அவர்களுக்கு முறையான பங்கைத் தராதவரையில் இப்படித்தான் இருக்கும்.

வழக்கமாகவே மும்பையில் ஏழ்மையும் செல்வமும் ஒன்றுக்கருகில் ஒன்று, ஒன்றுடன் ஒன்று சம்பந்தமில்லாமல் வாழ்கின்றன என்று சொல்வார்கள். ஆனால் 800 உயிர்களின் இழப்புக்குப் பிறகும் மும்பை பங்கு சந்தையின் ஏற்றம் குறையாததைப் பார்க்கும் பொழுது இதன் அதீதம் சுடுகிறது. என்னால் சத்தியாமாகச் சொல்லமுடியும்; உலகின் வேறு எந்த நகரத்திலும் இப்படி நடக்காது. பத்து பேர் பூகம்பத்தில் செத்தால் டோக்கியோ மீண்டுவர மூன்று நாட்களாவது பிடிக்கும்.

எனக்கென்னமோ இது மும்பைக்கார்கள் பெருமையாக மார் தட்டிக்கொள்ளும் நிகழ்வாகத் தோன்றவில்லை. படிக்கையில் எரிச்சல்தான் வருகிறது.

இதற்குப் பெயர் வளர்ச்சியல்ல; வீக்கம். இது நாளாவட்டத்தில் மும்பையின், இந்தியாவின் உயிரைக் குடிக்கும். இது விழித்துக் கொள்ள வேண்டிய தருணம்.