பொதுவிளக்கமும் நோக்கத் திரிப்பு மறுப்பும்: என்னுடைய இந்தப் பதிவு கம்பனை மாத்திரமே மனதில் கொண்டது. ஒரு படைப்பாளி, இலக்கியம் என்ற பார்வையில் மாத்திரமே.

சுந்தரின் பதிவு நல்ல சுவாரசியமானது. எழுதப்பட்ட எல்லா கதைகளையுமே மறுவாசிப்பு செய்வது சாத்தியமானதுதானென்று தோன்றுகிறது. மறுவாசிப்புகள் சுவாரசியமனாவையே என்றாலும் அவை படைப்பாளியின்மீது தீர்ப்பாகச் சாற்றப்படுவதில் எனக்கு மறுகருத்துகள் உண்டு.

அவர் முன்னிருத்தும் சில கருதுகோள்களுக்கு எனக்கு ஆதாரம் தெரியாது. நான் கம்பனை முழுதாகப் படித்தவனல்லன் (காலே அரைக்கால்வாசிகூட இல்லை). ராமரை வில்லனாக்குவதற்கும் தாடகையை உயர்த்திப்பிடிப்பதற்கும் அவளை உன்னதப் போராளியாகச் சித்தரித்திருக்கிறார். தாடகை போர் புரிந்தவள் என்பதால் போராளிதான். ஆனால் அவளுடைய போரில் உன்னதம் எங்கே என்று எனக்குத் தெரியவில்லை. தாடகை பூர்வகுடி என்றால் ராமன் பூர்வகுடி இல்லை என்று சொல்லப்படுவதன் அர்த்தம் புரியவில்லை. இன்னும் ராமன், தாடகை இதெல்லாம் குடிகளா அல்லது புனைவுகளா என்பதே சிலரைப்போல எனக்கு அறுதியாகத் தெரியவில்லை. குறைந்தபட்சம் இது சிற்றரசர்-பேரரசர் போராகத்தான் தெரிகிறது. இப்படியே என்றால் பேரரசின் எல்லைகளை விரிவுபடுத்தி எட்டாம் வகுப்பு சரித்திரப் பாடத்தில் நமக்குப் பத்து மதிப்பெண்களைப் பெற்றுத்தந்த சேர,சோழ, பாண்டிய இத்யாதிகளுக்கும் இதே தீர்ப்பு சாத்தியம். அதிக தூரம் போகமல், அதே சரித்திரத் தேர்வில் இன்னொரு பத்து மதிப்பெண் தந்த சர்தார் படேலுக்கும் நவ இந்தியாவுக்கும் இதே பஜனையைச் செய்யலாம்.

ஆனால் இதெல்லாம் இல்லாமலேயே வெறும் territorial imperative அடிபபடையில் மறுவாசிப்பு செய்தாலும் சுவாரசியமாகத்தான் இருக்கும். இது மறுவாசிப்புகளுக்கேயுரிய சுவாரசியம்.

சுந்தர் சொல்லும்

எப்படிக் கதை? இதை வாயப் பொளந்து நாம கேட்டுக்கிட்டு இருக்கோம். கம்பனுக்கு விழா எடுக்குறோம். ராமருக்குக் கோயில் கட்டுறோம். அதோட சேர்த்து எதைப் புதைக்கறோம்? ஒரு பூர்வ குடிப் போராளியை. ஆக்கிரமிப்பை மீறி அவள் தொடுத்த முதற் போரை. அவளையும் கொன்னு, அவளையே அரக்கியுமா ஆக்கிக்கிட்டோம். வெக்கமா இருக்கு.

என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இது எப்படிக் கம்பன் மீதான தீர்ப்பாக மாறுகிறது என்பது தெரியவில்லை. மறுவாசிப்புச் செய்யும்பொழுது நாம் ஒரு தொல்கதையை இன்றைய விழுமங்களில் பொருத்திப் பார்க்கிறோம். சமகால விழுமியங்கள் வாய்க்கப்பெறாத படைப்பாளியின் மீது தீர்வெனச் சுமத்தப்படுவது நேர்மையின்மையாகத் தோன்றுகிறது.

கவனிக்கவும். இந்த இடத்தில் நான் எப்படி இராமாயணம் ஒரு வழிபாட்டுக்குரிய காவியமாக மாறியது, எப்படி அதன் எதிர்மாந்தர்கள் தூற்றலுக்குரியவர்களானார்கள் என்பதைப் பற்றிச் சொல்ல முற்படவில்லை. ஏனென்றால் என்னைப் பொருத்தவரை ராமாயணத்திற்கு வழிபாட்டுத்தன்மையைத் தந்தவன் கம்பன் தனி ஒருவனேயல்லன். கம்பனும் அதற்குத் துணை என்று சொல்லலாம். ஆனால் தான் வாழ்ந்த காலத்தின் விழுமியங்களைத்தான் கம்பன் பிரதிபலித்திருக்கிறான் என்று தோன்றுகிறது. அந்தக் காலத்து இலக்கியங்களும் கலைகளும் ஒரு போக்கில் போய்க்கொண்டிருக்கக் கம்பன் மாத்திரம் இப்படி என்றிருந்தால் இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளலாம். அவனுக்கு வாய்க்கப்பட்டிருந்த புலத்தினுள்ளே, எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்த கதையைச் சுவாரசியமாக்கியவன் என்ற வகையில் கம்பனுக்கு நல்ல இலக்கியவாதிக்கான தகுதிகள் இருப்பதாகத்தான் நம்பமுடிகிறது.

சிறுவர்களுக்காகக் சொல்லப்படும் சிண்ட்ரெல்லா, ஸ்னோ ஒயிட், கதைகளில் கூட கதாநாயகச் சிறுமி வெள்ளையாகப் பேரழகியாக, அறிவாளியாகச் சித்தரிக்கப்படுவதாகவும், மாறாக வில்லன் பாத்திரங்கள், கறுப்பு, குரூபி, ஊனமுற்றவன் என்றும் சித்தரிக்கப்படுவதாகவும் வருகின்றன. இவற்றில் பெண்கள் அழகானவர்களாகவும், அவர்கள் பராக்கிரமசாலி ஆண்களை அடையும்பொழுது பிறவிப் பயனை எய்துவதாகவும் தோன்றுகின்றன. இன்றைக்கு என்னுடைய மகனுக்கு இந்தக் கதைகளைச் சொல்லும்பொழுது கூடவே அந்தக் காலத்தில் நடப்புகளையும், இன்றைக்கு நாம் போற்றும் விழுமியங்களையும் கூடச் சேர்த்துச் சொல்ல வேண்டியிருக்கிற்து. ஆனால் இதை ஹான்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்ஸனின் மீதான தீர்ப்பாகச் சொல்வது அபத்தமாகத் தோன்றுகிறது. இதைப்போலத்தான் இன்றைக்குக் கமபனுக்குப் போதாத காலம்.

செவ்வியல் இலக்கியங்களுடன் எப்படி உறவு கொள்ளலாம்?

1. பிடித்திருந்தால் காலத்தோணியில் ஏறிக் கனவுலகில் அவர்களுடன் கைகோர்த்து நடக்கலாம். (நம் நண்பர்கள் சிலருக்கு ரஜினி படத்தில் conservation of angular momentum பற்றி கேள்வி இல்லாததைப் போல்). புரவிகளின் மீதேறி ராஜகுமாரிகளைத் துரத்திச் சென்றால் “ஊத்திகினு படுத்துக்கலாம்” போன்ற உபாதை மருந்தகள் தேவையில்லாமல் போகலாம்.

2. இல்லையென்றால், இது தேவையில்லை என்று முற்றாக ஒதுக்கிவைத்துக் கண்ணால் காண்பதையும் காதால் கேட்பதையும் தவிர வேறெதன் மீது ஆர்வம் காட்டாமல் இருக்கலாம். இன்றைக்குத் தகவல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. பிறவிப் பெருங்கடலை மாத்திரம் நீந்தினால் போதும்.

3. முழுக்க முழுக்க அவைகளைப் புனைவுகளாக மாத்திரமே கொண்டு (அதாவது அன்றைய காலத்தின் கண்ணாடியல்ல என்று) சமகாலப் பார்வைகளுக்கு உட்படுத்தி மீள்வாசிப்புச் செய்யலாம். இப்படி செய்யும்பொழுது படைப்பாளிக்கு அந்த வாய்ப்பு இல்லை என்பதை அவ்வப்பொழுது நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

4. ஜீவனோபாயத்திற்கு இவர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைப்பவர்கள் இது போன்ற ஆராய்ச்சிகளில் ஈடுபடலாம். பழசை அப்படியெ எடுத்து உடுத்திக் கொள்வதால் வரும் உபாதைகளைச் சொல்லிப் பொதுமக்களைத் தெருட்டலாம்.

5. என்னாலானது என் பையனுக்கு இந்தக் கதைகளைச் சொல்ல நேரும்பொழுது “ஆமாம்பா, அந்தக் காலத்துல அப்படித்தான் இருந்தாங்க” “அப்படித்தான் நெனச்சுகிட்டு இருந்தாங்க” என்று கொஞ்சம் சேர்த்துக்கொள்கிறேன்.

6. இலக்கிய மாந்தரைத் தெய்வங்களாக வழிபடுவதைத் தவிர்க்கலாம். ஆனால் நாம் சமகாலத்திலேயே கதாநாயக வழிபாட்டை உச்சத்திற்கு எடுத்துச் செல்பவர்கள். குஷ்புவுக்குக் கோயில்கட்டி, ரஜினி படத்திற்குச் சூடம் ஏற்றி, கமல்ஹாசனுக்கு இரத்ததானம் செய்து, ஜெயேந்திரருக்கு நமஸ்காரம் பண்ணி, சாயிபாபாவிற்கு மெய்சிலிர்த்து, ஜெயலலிதாவுக்குக் காலில் விழுந்து, சோவை மானசீகமாக வழிபடுவது பரவாயில்லை என்றால் கூடவே இந்தத் தெய்வங்களையும் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம். More the merrier.

7. நேர்மையானவர் என்று நான் கருதும் என் தந்தையின் விழுமியங்கள் முழுவதுமாக எனக்கு உடன்பாடானவையல்ல. ஏனென்றால் அவர் காலம் வேறு. இந்த நிதர்சன உண்மையைக் கிடப்பில் போட்டு இன்றைக்கு நான் தூக்கிப் பிடிக்கும் விழுமியங்களுக்கு ஐந்து பத்து நூற்றாண்டுக்கு முன்னால் கதையெழுதிப் போனவனைக் காவுகொடுக்காமால் இருக்கலாம்.