இரண்டு நாட்களுக்கு முன்பு நியூயார்க் டைம்ஸில் வந்த இந்தக் கருத்துப்பத்தி அதிர்ச்சியூட்டுவதாக இருக்கிறது. அமெரிக்காவின் இப்பொழுது மருந்து நிறுவனங்கள் விற்பனையாளர்கள் வேலைக்குப் பெரும்பாலும் பெண்களைத்தான் (அழகான, பொன்னிறத்தலைச்சிகளை) எடுக்கிறார்களாம். நான் பெண்கள் எல்லா வேலைகளையும் செய்வதையோ, அழகான பெண்கள் எல்லா வேலைகளையும் செய்வதையோ எதிர்ப்பவனல்லன். ஆனால் அழகு ஒன்றே காரணம் காட்டி மருந்தை விற்கும் தொழிலுக்குப் பெண்களை எடுப்பது வருத்தந்தருவதாக, எரிச்சலூட்டுவதாக இருக்கிறது.

இப்படி வேலை செய்பவர்களில் பெரும்பாலானவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் உற்சாகமூட்டும் குழுக்களைச் சேர்ந்தவர்கள்தாம் என்கிறாது நியுயார்க் டைம்ஸ். எனக்கு இந்த உற்சாகமூட்டாளினி க்லாச்சாரத்தை (அல்லது கலாச்சாரச் சீரழிவை)க் கண்டால் தாளமுடியாத எரிச்சல்வரும். இதை நான் அமெரிக்காவைத்தவிர வேறெங்கும் அதிகம் கண்டதில்லை. அமெரிக்காவின் கலாச்சாரத்திற்கு எனக்கு முதன் முதல் அறிமுகம் கிடைத்தபொழுது நான் கண்ட சில விஷயங்களின் மீது அப்பொழுதிருந்த எரிச்சல் இன்னும் மாறவில்லை. இவற்றுள் முக்கியமானவை இரண்டு; குத்துச் சண்டை என்ற பெயரில் ஒருவர்மேல் ஒருவர் (ஒன்றுக்கு மேற்பட்டவர்கள்கூட) எவ்வித விதிகளும் இன்றிப் பொருதும் WWF. இந்தக் காட்டுமிராண்டித்தனம் ஒருகாலத்தில் ஃபார்முலா 1, கால்பந்து (அமெரிக்கர்களின் கையால் ஆடும் கால்பந்தில்லை, நிசமான, நளினமான ‘உலகக்’ கால்பந்து) இவற்றைக் காட்டிலும் அதிக வருமானம் தரும் போட்டியாக இருந்ததை என்னால் ஒருக்காலத்திலும் சீரணிக்க முடிந்ததில்லை. இரண்டாவதானது இந்த ஆட்டவெல்லை உடற்குலுக்கற்ப் பெண்டிர்.

இது பெண்களைப் போகப் பொருள்களாக்குவதன் இன்னொரு பரிமாணம். ஆண்கள் உடலை வருத்தி, திறமை பயின்று விளையாடுவார்களாம், அந்த விளையாட்டு எல்லையில் நின்று இந்தப் பெண்கள் தங்கள் உடம்பைக் குலுக்கி அவர்களுக்கு உற்சாகமூட்டுவார்களாம். என்னவொரு அபத்தமான கருத்து இது. ஒவ்வொரு உயர்நிலைப் பள்ளி மாணவனுக்கும் நன்றாகப் பயிற்சி பெற்று தன் பள்ளியின் அணியில் இடம்பெற்று சாதனைகள் செய்யவேண்டும் என்ற கனவு துளிர்க்கும் அதே நேரத்தில் இந்தப் பெண்களுக்குப் பட்டினிகிடந்து இடைசிறுத்துக் கொள்ளவும், எடுப்பாக முலைகளைக் கூர்படுத்திக் குலுக்கவும் பள்ளிக்கூடங்களில் பயிற்சியளிக்கப்படுகிறது.

How drug ads rank
in ad spending

இந்த உடற்குலுக்குத் திறமை இப்பொழுது அடுத்த கட்டத்திற்குப் பாய்கிறது. அதிலும் இது மிகவும் ஆபத்தான இடம். உயிர்காக்கும் மருந்துகளைப் பரிந்துரைக்க மருத்துவர்களுக்கு விபரமளிக்கும் விற்பனையாளர். அமெரிக்க மருத்துவர்களின் முன் ஏற்கனவே இந்த நிறுவனங்கள் தொங்கவிடும் காரட்கள் நிறைய; கேளிக்கை விருந்துகள், அதிவிலை வைன்கள், கால்ஃப் மற்றும் கடற்பயண விடுமுறைகள், இத்யாதி. இப்பொழுது புதிதாக இந்த மருத்துவர்களின் முன்பு இதுவும் சேர்ந்திருக்கிறது. கடந்த வருடத்தில் மெர்க் நிறுவனம் அவர்களது பாடல் பெற்ற வயாக்ஸ் மருந்தை விளம்பரப்படுத்த 160 மில்லியன் டாலர்களைச் செலவிட்டிருகிறது (பிற முக்கிய மருந்துகளின் விளம்பர விபரம் இங்கே). இப்படி அதிக அளவு விளம்பரங்களுக்குச் செலவிட, மருந்து நிறுவனங்கள் அவர்களது ஆதாரமான புதுமருந்துகள் கண்டுபிடிக்கும் ஆராய்சித் துறைகளுக்குச் செலவிடும் பணம் சிலசமயம் இதில் பத்தில் ஒரு பங்குதான் இருக்கிறது.

இந்த உற்சாகமூட்டாளினி மருந்து விற்பனையாளர்கள் போனஸாக வருடத்திற்கு $40,000 – $60,000 வரைப் பெறுகிறார்களாம். பல சமயங்களில் இவர்களது சம்பளம் ஆறு இலக்கத்தைத் தாண்டுகிறதாம். ஒப்புநோக்க இருபத்தைந்து உயர்தர ஆராய்சித்தாள்களை வெளியிட்டபின் துவக்க நிலை துணைப்பேராசிரியராகச் சேரும் ஒரு இயற்பியல் முனைவர் பட்டம் பெற்றவர் அமெரிக்காவில் சராசரியாக $60,000 சம்பளமாகப் பெறுகிறார். இவருக்கு மேலதிக போனஸ் எதுவும் சாத்தியமில்லை. ஏன், அதே மருத்துவ நிறுவங்களில் மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பவருக்கான சராசரி சம்பளம் $80,000 தான் இருக்கும். சிலசமயங்களில் மருந்து விற்பனையாளருக்கான அடிப்படைத் தேவையான அறிவியல் பட்டமும் இந்த விஷயங்களில் விட்டுக்கொடுக்கப்படுகிறது என்று கூறுகிறார்கள்.

உற்சாகமுட்டாளிகள் பொதுவில் சரளமாகப் பேசுபவர்கள், அதிக உற்சாகத்துடன், தன்முனைப்பாக உரையாடல்களில் பங்குபெறுபவர்கள் எனவே இவர்களை விற்பனைத்துறையில் ஈடுபடுத்துவதில் எதுவும் வியப்பில்லை என்று நிறுவனங்கள் சப்பைக்கட்டு கட்டினாலும் உண்மையில் இவர்களை நாட அடிப்படைக் காரணங்கள் என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அமெரிக்காவில் நிறத்தின் அடிப்படையிலும் பால் வித்தியாசத்திலும் வேலை தராமல் ஒதுக்குவது சட்டப்படி குற்றம். ஆனால் அழகைக் காரணம்காட்டி வேலைக்கு எடுப்பது மறைமுகமாக இத்தகைய பிரிவினைப்படுத்தலாகத்தான் செயற்படுகிறது. இதை உண்ர்ந்து அமெரிக்க மருத்துவக் குழுக்கள் விரைவாக இந்த வியாதியைக் குணப்படுத்த முன்வரவேண்டும்.