கையில காசும் பக்கத்துல அரசியல் பலமும் இருந்தா என்ன செய்யலாம்? எல்லாத்தையும் நான்தான் செஞ்சதுன்னு சொல்லிடலாம். இந்த உலகத்தையே படைத்தவன் நான்தான் என்றாலும் நம்பக் கூட்டம் இருக்கும். ஆனால் சில சமயம் எல்லாமிருந்தாலும் நடப்பதை முழுவதுமாக நிச்சயிக்க முடியாதல்லவா?

இன்றைய பாடல் தெரிவு மிகவும் முக்கியமானது. இது காவடிச் சிந்து என்ற வெளியாகாத படத்திலிருந்து வருகிறது. பாடலுக்கு இசையமைப்பு (என்று சொல்லப்பட்டது) கே. பாக்கியராஜ்

பாடல் : யாரோ சொன்னாங்க
படம்: காவடிச் சிந்து
பாடியவர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி
இசை: கே. பாக்கியராஜ்

எண்பதுகளின் மத்தியில் தமிழகத்தில் இரண்டுபேர் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தார்கள். (இல்லை, பல இரண்டுபேர்கள் – ரஜினி-கமல், பிரபு-கார்த்திக்,…) இவர்களுடன் கூட முக்கியமான ‘இருவர்’ கே.பாக்கியராஜ்-ம் டி.ராஜேந்தரும். டி.ராஜேந்தரின் பிரவேசம் புயலாக இருந்தது. அவர் பங்கு பெற்ற முதல்படத்தில் (ஒரு தலை ராகம்) அவருடைய பங்கு வெளியில் சொல்லப்பட்டதைவிட அதிகமாக இருந்ததாகப் பலரும் நம்பினார்கள். முழுவதும் புதியவர்களால் உருவாக்கப்பட்ட இந்தப் படம் பட்டி தொட்டியெல்லாம் பட்டைகிளப்பியது. இயக்கம் – இப்ராஹீம் ராவுத்தர் என்று போட்டிருந்தாலும், இசை – ஏ.ஏ.ராஜ் என்று போட்டிருந்தாலும் இதிலெல்லாம் பின்னால் ராஜேந்தரின் பங்கு அதிகமிருப்பதாக விரைவிலேயே செய்திகள் வெளிவந்தன. பின்னர், அந்த இளைஞர் பட்டாளம் இரண்டாக, நான்காக வெடித்துச் சிதைந்துபோனது. அதில் மிஞ்சியவர்களில் மிகவும் முக்கியமானவர்கள் நடிகர் சந்திரசேகரும் டி.ராஜேந்தரும். (சொச்சம் – ரவீந்தர், ராஜீவ், ராபர்ட்-ராஜசேகர்). ராஜேந்தருக்குத் தங்கைக்கோர் கீததில் தொடர்ந்து தொடர்ச்சியாக வெற்றி. ஒவ்வொரு படத்திலும் கடைசி பெயராக ராஜேந்தரின் பெயரைப் போடுமுன் அவருடைய பங்கின் பட்டியல் நீண்டுகொண்டே போனது (நடிப்பு, சில சமயங்களில் இரட்டை வேடம், இசை, இயக்கம், பாடல், வசனம், திரைக்கதை, காமெரா, இத்யாதி). ஒரு கட்டத்தில் தனக்குத் திரையுலகிலிருந்து அரசியல் வாரிசு வேண்டிய எம்.ஜி.ஆர் முதலில் இவரைத்தான் அணுகினார். ஆனால் ராஜேந்தருக்கு அந்த நேரத்தில் தொட்ட இடமெல்லாம் பொன்னாக இருந்ததால் எம்.ஜி.ஆரின் நிழல் தேவையிருக்கவில்லை. ஒருபுறம் திரையுலகில் சக்திவாய்ந்த எம்.ஜி.ஆருடன் பகை, மறுபுறத்தில் குருவி தலையில் பனங்காய் என திரைப்படத்தின் எல்லா வேலைகளும் என்று இழுத்துவிட்டுக்கொண்டு விரைவிலேயே தன்னையும் தன் இரசிகர்களையும் தண்டித்தார். எம்ஜிஆரிடம் முறைத்துக் கொண்ட ராஜேந்தர் விரைவிலேயே திமுக என்ற ஜோதியில் ஐக்கியமானார். ஆனால் அங்கும் ஆஞ்சநேயர் வழிபாடு என்று திராவிடப் பாரம்பரியத்தை எதிர்த்து முறுக்கிக் கொண்டு நின்றார்.

எம்.ஜி.ஆரின் இரண்டாவது தெரிவு பாக்யராஜ். முருங்கைக்காய் போல விரைப்பாக ராஜேந்தரை எதிர்த்து நின்றவர் பாக்யராஜ்தான். தூறல் நின்னு போச்சு, முந்தானை முடிச்சு என்று தொடர்ச்சியாக வெற்றிப்படங்களைத் தந்துகொண்டிருந்தார் அப்பொழுது. ஆனால் அவர் துவக்கம் ஒன்றும் அவ்வளவு புரட்சிகரமாக இருக்கவில்லை. பாரதிராஜாவிடம் கதாசிரியராக இருந்தவர் ஓரத்தில் ஒரு சீன் அரை சீன் என்று தலையைக் காட்டிக் கொண்டிருந்தார். பின்பு மெதுவாகப் பிரபலமடைந்தார். எம்ஜிஆரின் பார்வை பட்டதும் இன்னும் ஜொலிக்கத் துவங்கினார். இவரும் கொஞ்சம் கொஞ்சமாகக் கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு என்று நீட்டித்துக் கொண்டே போக விரைவில் கொம்பு சீவிவிடப்பட்டு ராஜேந்தருடன் ஒப்பிட்டுக் கொள்ளத்துவங்கினார். அந்த நேரத்தில்தான் இளையராஜாவுடன் பிணக்கு வந்தது. ஒரு படத்திற்கு சங்கர்-கனேஷ் இசை என்று போட்டுவிட்டு அடுத்த படத்தில் தானே இசை என்று துவங்கினார் (எங்க சின்ன ராசா – 1987, இது நம்ம ஆளு – 1988). (அப்புறம் எம்.ஜி.ஆர் செத்துப்போய், ஐயா ஜானகியம்மா பின்னால் போய், ஜெயலலிதா மேலே போய், பாக்கியராஜ் கீழே போய், பிறகு இளையராஜாவிடமே திரும்பப் போய்,…). இன்னும் பழைய ஒப்பீடு போகவில்லை, இப்பொழுதும் ராஜேந்தரின் பையன் மன்மதன் என்றால் பாக்கியாரஜின் பெண் காதலுக்குத் தலைவணங்கு-கிறார்.

காவடிச் சிந்தின் ஒலிநாடா ஏவிஎம்-மால் வெளியிடப்பட்டது. அப்பொழுதைய நிலவரத்தை மீறி மிக மலிவாக (இருபது ரூபாய் என்று நினைவு) காவடிச் சிந்து படத்தின் ஒலிநாடா விற்பனைக்கு விடப்பட்டது. அமோக விற்பனை. அப்பொழுது திரையுலகத்தைப் பீடித்திருந்த வியாதியைப் போல பாக்கியராஜ்ம் ‘என் இனிய தமிழ் மக்களே’ ஸ்டைலில் காஸெட்டில் தன் இரசிகர்களுடன் பேசினார். (இந்த வியாதி பின்னாட்களில் வீரப்பன் காஸெட்டில் பேசத்துவங்கியபின்தான் குணமானது). ஆனால், அந்த அறிமுகப் பேச்சுதான் ஒப்புதல் வாக்குமூலம். அவரை இசையில் குளிப்பாட்டி, ஞானப்பால் ஊட்டி வளர்த்ததற்கு எம்.எஸ். விஸ்வநாதன் தொடங்கி, சங்கர்-கணேஷ் வரை நன்றி சொல்லியிருப்பார் (முந்தானை முடிச்சு, தூறல் நின்னுபோச்சு இளையராஜாவைத் தவிர). கூடவே மாஸ்டர் தனராஜ் என்றொரு பெயர்வரும். அவர்தான் படத்திற்கு உண்மையான இசையமைப்பாளர் என்று உள்வட்டங்கள் சொல்லின. தனராஜ் மாஸ்டர் தமிழ்த் திரையிசை உலகில் முக்கியமான ஆனால் வெளியில் வராத பெயர். மாஸ்டர் தனராஜைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். (எல்லாம் வாய்வழி வாக்குமூலங்கள்தான்) அதிகம் பத்திரிக்கைகளில் வந்ததில்லை. இளையராஜா ஒருவர்தான் இவரை எல்லா இடங்களிலும் ஆசையுடன் நினைவுகூறுகிறார். (இவர் பெயரில் ஒரு அறக்கட்டளைகூட இளையராஜா நிறுவியிருக்கிறார் என்று ஞாபகம்). இளையராஜா, ரஹ்மான், வித்யாசாகர், மஹேஷ், உட்பட பலர் இவரிடம் மேற்கத்திய இசை பயின்றதாகச் செய்தி. மேற்கத்திய செவ்வியல் இசையில் மெட்டமைப்பதில் மிகச் சிறந்தவர் என்று சொல்லியிருக்கிறார்கள்.

எனக்கு நினைவு தெரிந்து காவடிச் சிந்து படத்தில் எட்டு பாடல்கள் இருந்தன. ஊரில் கேஸட் கிடக்கும். இங்கே என் கைவசமிருப்பது ஒரு பாடல்தான். இதுதான் கேஸட்டில் முதல்பாடல் என்று நினைவு. இதைத் தவிர ஒரு பூ பூத்தாட, என்று இன்னொரு பாடல் நினைவிருக்கிறது. பொதுவில் எல்லா பாட்டுக்களுமே நன்றாக இருக்கும். இனிமையான மெட்டுக்களும் தேர்ந்த இசைக் கோர்ப்பும் கொண்டவை. இந்தப் பாடல்களுக்கு இசை பாக்கியராஜ் என்றால் யாருக்கும் சந்தேகம் வரும்.

காவடிச் சிந்து படம் பெட்டியிலேயே முடங்கிப் போனதுதான் poetic justice.