எங்கள் ஊரில் (கும்பகோணம்) மங்களாம்பா விலாஸ் என்ற பிரபலமான ஹோட்டல் ஒன்று இருந்தது. அங்கிருந்த பாத்திரங்களிலெல்லாம் “மங்களாம்பா விலாஸில் திருடியது” என்று பொறித்து வைத்திருப்பார்கள். டம்பளர் டபராவில் ஆரம்பித்து (அந்த நாட்களில் ஸ்பூனை வாயில் நுழைத்துக்கொண்டு சாப்பிடும் வழக்கமெல்லாம் கிடையாது, எனவே மிகச் சிறிய பாத்திரம் டம்ளர்தான்), அண்டா, இட்லிச்சட்டி வரை எல்லாவற்றிலும் அப்படி எழுதியிருக்கும். சாப்பிட வந்தவர்கள் நல்ல கனமான பித்தளையில் இருக்கும் பாத்திரங்களை ‘லவுட்டி’ வேட்டியில் கட்டிக்கொண்டு போய்விடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

இப்பொழுது அதிநவீன கணினி உலகிலும் இப்படி இருப்பதை இன்றைக்குத் தெரிந்துகொண்டேன். ஆப்பிள் நிறுவனத்தின் அழகிய குறும்படங்களை ஒரு நிறுவனம் திருடி விற்கப் போக பின்னர் அவர்களின் தயாரிப்பில் இரகசியமாக “Stolen from Apple” என்று உள்ளே ஒரு சங்கேததைப் பதிந்ததார்கள் என்று இந்த செய்தி சொல்கிறது.

இதைப் படித்தவுடன் இன்னும் சில விஷயங்கள் நினைவுக்கு வந்தன. கும்பகோணம் திரையரங்குகளில் ஒரு தகர ட்ரம்மில் தண்ணீர் வைத்திருப்பார்கள் (இன்னும் அப்படித்தானா என்று தெரியவில்லை) அத்துடன் ஒன்றிரண்டு அலுமினியத் தம்ளர்களையும் வைப்பார்கள். அந்த நசுங்கிப் போன அலுமினியத் தம்ளர்களை ஒரு இரும்புச் சங்கிலியுடன் இணைத்திருப்பார்கள். தம்ளரின் விலை அன்றைய நடப்பில் ஒரு சினிமா டிக்கட்டின் மதிப்புகூட பெறாது. அதை டம்ளரின் விலையைக் காட்டிலும் ஐந்து மடங்கு நீளமுள்ள நாய்ச் சங்கிலியின் பிணைத்திருப்பது வேடிக்கையாக இருக்கும். ஒருவர் குடித்துக் கொண்டிருக்கும்பொழுதே அவசரமாக இன்னொருவர் சங்கிலியை இழுக்க நீர் சட்டையில்தான் கொட்டும் வாயில் போகாது. ஒரே ஆள் இரண்டாம் முறை தண்ணீர் எடுத்தால் அடிக்க வருவார்கள். இந்த சோகத்தில் பல முறை நான் ஒரு சொட்டு தண்ணீர்கூட கிடைக்காமல் வந்திருக்கிறேன்.

இதுபோன்ற சங்கிலி பிணைப்பு சமாச்சாரம் எதாவது ஆப்பிளில் உண்டா என்று பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் இதை ஸ்டீவ் ஜாப்ஸ் காதில் போட்டு வைத்தால் அடுத்த முறை உள்ளங்கை அளவு ஐபாட்-நானோவிற்கு ஏதாவது சங்கிலி விற்கக்கூடும்.

* * *

அது கிடக்க; மங்களாம்பா விலாஸ் நொடித்துப் போனது. பின்னர் Acquisition and Merger முறையில் கற்பக விலாஸ் செட்டியார் இதையும் வளைத்துப் போட்டார். மங்களாம்பா மாமா Asset Transfer செய்யும் முன்னர் ஒரு பத்து டம்ளரை வீட்டில் கொண்டு வந்து போட்டார். பெண் பார்க்க வந்தவர்களுக்கு அதில் காப்பிக் கொடுக்கப் போக அவர் பெண்ணுக்கு கல்யாணம் தடைப்பட்டது என்று கும்பகோணத்தில் வதந்தி உலவும்.

நாளை ஒருநாள் இதேபோல கஷ்டம் வந்து ஆப்பிள் நிறுவனமும் திண்டாடுமோ?