அதிகம் பிரபலமாகாத இன்னொரு இளையராஜா பாடல், 1984ல் வந்தது என்று நினைவு. அப்பொழுது இளையராஜா தமிழ், தெலுகு, கன்னடம் மூன்று மொழிகளிலும் கொடிகட்டி பறந்து கொண்டிருந்த காலம். 1984ஆம் ஆண்டில் மாத்திரம் ராஜா ஐம்பத்திநான்கு படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். 1984-85 இரண்டே வருடங்களில் நூறு படங்களுக்கு மேல் இளையராஜாவின் இசையில் வெளி வந்திருக்கின்றன. இது இந்தியத் திரை வரலாற்றில் யாரும் செய்யாத சாதனை. அவருக்கு அடுத்தபடியாக வந்து உலகையே கலக்கிக் கொண்டிருக்கும் ரஹ்மானுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இதன் தீவிரம் புலப்படும். (இது எந்தவிதத்திலும் ரஹ்மானைக் குறை சொல்வதற்காக இல்லை. இளையராஜாவின் படைப்புத் திறமையை, அதன் வேகத்தை, ஒப்பிடுக் காட்டுவதற்காகத்தான்). ஒரு படத்திற்கு சராசரியாக நான்கு பாடல்கள் என்று கணக்கு வைத்தால் அந்த வருடத்தில் 200 பாடல்கள். அதாவது கிட்டத்தட்ட நான்கு நாட்களில் மூன்று பாடல்கள்! அந்த நாட்களில் பாலசுப்ரமணியம் ஒரே நாளில் பதினாறு பாடல்கள் வரை பதிவு செய்தார் என்று சொல்வார்கள். இதெல்லாம் நான் மிகவும் தீவிரமாக பாடல்களில் மூழ்கிக் கிடந்த நாட்கள்.

பாடல்: நீலக்குயிலே உன்னோடு நான்
படம்: மகுடி (1984)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி.

தொட்டதெல்லாம் பொன்னாகும் என்று சொல்வார்களே அப்படி அந்தப் பத்து வருடங்களுக்கு இளையராஜாவும், எஸ்.பி.பாலசுப்ரமணியமும் தொட்டதெல்லாம் பொன்னாகிக் கொண்டிருந்தது. அதுவும் இரண்டுபேருமாகச் சேர்ந்து தொட்டால் கேட்கவே வேண்டாம். இந்தப் பாடல் ‘மைக்’ மோகன் திரைப்படம். அந்தக் காலங்களில் கிராமத்து சாலைபோன்று குண்டும்குழியுமாக இருக்கும் முகத்தில் தொற்றுப்பல் தெரிய மோகன் திரையில் வந்தால் படம் நிச்சயமாக வெற்றிதான்.

எல்லா விதிகளுக்கும் விலக்குகள் உண்டு என்று காட்டுவதற்காக இந்தப் பாடல். இளையராஜா, எஸ்.பி.பி, எஸ்.ஜானகி, மைக் மோகன் எல்லோரும் இருந்தும் படம் படுதோல்வி (ஆயிரம் இருந்தும்ம்ம், வசதிகள் இருந்தும்ம்ம்… என்று சிவாஜி குரலில் சொல்லிப் பார்த்துக் கொள்ளவும்). கூடவே பாடலும் மறக்கடிக்கப்பட்டது. படம் முதலில் தெலுகில் வெளியிடப்பட்டு பிறகு தமிழில் டப் செய்யப்பட்டது, தெலுகில் ‘டப்பு’ செய்த படம், தமிழில் டப்பாவில் போய் உட்கார்ந்து கொண்டது. வழக்கம்போல நான் படம் பார்த்ததில்லை. தெருவில் இருந்த மோகன் பகதர் ஒருவர் மோகன் சொந்தக் குரலில் இல்லாமல் வேறு யாரோ பேசியதால்தான் படம் தமிழில் ஓடவில்லை என்று சொன்னார். உண்மையில் மோகனின் ‘சொந்தக் குரல்’ பாடகர் சுரேந்தருடையது.

இருபது வருடங்களாகியும் இப்பொழுதும் இந்தப் பாடல் கவர்ந்திழுக்கிறது. இதுவும் கர்நாடக இசையில் அமைக்கப்பட்டது (சக்ரவாஹம், ராகரஞ்சனின்னு எழுதினா சித்தூர்காரர் திட்டுவார்). அருமையான மிருதங்க பலத்தில் வயலின், வீணை, புல்லாங்குழல், இழைய பாடல் முழுவதும் அதிக சிக்கல்கள் இல்லாமல் தெளிவான நீரோடையைப் போன்ற மெட்டமைப்பு. இரண்டாவது இடையீடு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது. அற்புதமான வயலின்.