புத்தகம்

கடந்த சில நாட்களாக புத்தகப்பேரிழை ஓடிக்கொண்டிருக்கிறது. அன்பு, சந்தோஷ்குரு, மாண்ட்ரீஸர் , போன்ற நண்பர்கள் என்னை அழைத்திருந்தார்கள். கடந்த வாரத்தில் நேரம் கிடைக்கவேயில்லை. என்னை மதித்துக் கேட்ட இவர்களுக்கு தாமதத்திற்காக என் மன்னிப்புகளைச் சொல்லியாக வேண்டும்.

புத்தகங்களைப் பற்றி பேசுவது எப்பொழுதுமே என் மனதுக்குப் பிடித்தமான ஒன்று. இது எந்த விதத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு பக்கம் ஆழ்ந்த விவாதங்கள், விமர்சனங்கள் போன்றவை இருந்தாலும், வெறுமனே நண்பர்களிடம் சென்றவாரம் நீ என்ன படித்தாய் என்று கேட்கும் வழக்கமும் உண்டு. எனவே எனக்கு இந்தப் பட்டியலிடல், தொடர் போன்றவற்றின் மீதும் ஆர்வம் இருந்தது. வேலை அதிகம் இருந்தாலும் 'புத்தகம்' என்று தமிழ்மணத்தில் தேடி யார் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதைப் படித்துக் கொண்டிருந்தேன். ஒருவிதத்தில் நண்பர் சுந்தரமூர்த்தி இதைப்பற்றி எள்ளலுடன் எழுதியிருந்ததைக் கண்டு வியப்பாக இருந்தது. விழுது பரப்பி விருட்சமாக நிற்பவனவற்றின் மீது என்ன ஆர்வமுண்டோ அதே ஆர்வம் விருட்சத்தினடியில் மழையில் எழும் காளான்களின் மீதும் எனக்குண்டு. ஒருவகையில் சுந்தரமூர்த்திக்கும் இப்படித்தான் இருக்கும் என்று யூகிக்கத் தோன்றுகிறது. தேர்ந்த புள்ளியியலாளனின் ஆர்வத்துடன் எல்லா காளான்களையும் கண்டறிந்து வகைப்பாடு செய்து, அதிகம் படிக்கப்படுபவர், அதிக விற்பனை, பெருவிருப்ப மொழிபெயர்ப்புகள் என்று எழுதப்பட்ட பதிவுகள் அத்தனையும் துருவி ஆராய்ந்தவர் அதை ஏன் இந்தத் தொனியில் வெளிப்படுத்த வேண்டும் என்று வியப்பாக இருக்கிறது. புத்தகத்தைப் பற்றிய எந்தப் பேச்சும் புத்தகங்களில் ஆர்வமுள்ளவர்களுக்கு சலிப்பைத் தரமுடியும் என்று தோன்றவில்லை. அப்படியாக சலிப்பு தோன்றினாலும் விலகி நிற்காமல் விமர்சித்து எள்ளுவதை என்னால் ஒருபோதும் புரிந்துகொள்ளமுடியாது. (இதையே இசை, ஓவியம், விளையாட்டு என்று நீட்டிகலாம்). இணையத்தின் பெரும் வசதியே இதுதான்; ஆர்வமில்லை என்றால் பேசாமல் ஒதுங்கி நிற்கலாம், யாரும் காலரைப் பிடித்து கருத்து சொல்லிவிட்டுப் போ என்று வற்புறுத்தமுடியாது.

சுந்தரமூர்த்தி இதற்காகத்தான் (வாசிப்பையும், புணர்தலையும் ஒப்பிட்டிருக்கும்) அந்த தெருச்சண்டையைச் சுட்டிக்காட்டியிருக்கிறார் என்று நினைக்கிறேன்: ஆனால், சாருநிவேதிதா சொல்லியதைப் போல வாசிப்பு எனக்குப் படுக்கையறை அந்தரங்கம் கிடையாது. (தன்னுடைய 'இன்னபிற' சாகசங்களைப் பற்றி தம்படமடிக்கும் சாருநிவேதிதாவுக்கு அந்தரங்கம் குறித்த மதிப்பீடுகளில் தீவிரக் குழப்பம் இருப்பதைப் போலத் தெரிகிறது). ஒளித்துவைத்துப் படிக்கும் புத்தகங்கள் என்று சிலவகை உண்டு; அதுவும் ஒரு வயதுவரைதான். சிலர் வளரமறுக்கிறார்கள்.

ஒருவருடன் பேசும்பொழுதோ, அவர் எழுதியவற்றைப் படிப்பதன் மூலமோ இவர் சிறந்த புத்தகங்களைப் படிப்பவர் என்ற கருத்தை நான் உருவாக்கிக் கொள்கிறேன். (பிரமிப்பூட்டும் நோக்கத்துடன் சிலர் வெருட்டும் பட்டியல்கள் போட்டாலும் தொடர்ச்சியான வாசிப்பு அடையாளம் காட்டிவிடுகிறது). அந்தவகையில் பல புத்தகங்களைப் பிறர் சொல்லி நான் அடையாளம் கண்டிருக்கிறேன். என்னுடைய இந்தப் பட்டியல் யாராவது ஒருவருக்கு அப்படி உதவக்கூடும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. அந்த நம்பிக்கையுடன் கடலில் நான் கரைக்கும் பெருங்காயம் இதோ;

பிடித்த புத்தகங்கள் (நினைவில் வருபவை). ஆங்கிலப் புத்தகங்கள், பிழைப்புக்காகப் படிப்பவற்றைத் தவிர்த்து;

புனைவுகள்

1. மோகமுள் - தி.ஜானகிராமன் (குப்பைச் சந்தாக மாறிப்போன துக்காம்பாளையத் தெருவில் யமுனா நடந்த இடம் என்று பெருமிதத்தில் காலைத் தேய்த்துத் தேய்த்து நடந்திருக்கிறேன். புனைவைத் தாண்டி இது என்னூர் கதை என்ற நெருக்கமும் உண்டு).
2. ஏழாம் உலகம் - ஜெயமோகன் (நாம் காணமறுக்கும் உலகத்தின் யதார்த்தங்கள். என்னைப் பொருத்தவரை இந்த நாவல் தமிழில் போதுமான கவனம் பெறவில்லை. இதற்கு முக்கிய காரணம் இந்த நாவல் வெளியான சமயத்தில் ஜெயமோகனை வெறுப்பது பாஷனாகிப் போனது).
3. ஒரு புளிய மரத்தின் கதை - சுந்தர ராமசாமி
4. குறத்தி முடுக்கு, நாளை மற்றுமொரு நாளே - ஜி.நாகராஜன்
5. புதுமைப்பித்தன் சிறுகதைகள்
6. 18வது அட்சக்கோடு - அசோகமித்ரன்
7. முன்பு ஒரு காலத்தில் நூற்றியெட்டுக் கிளிகள் இருந்தன - ரமேஷ்:பிரேம்
8. பள்ளிகொண்டபுரம் - நீல பத்மனாபன்
9. வண்ணதாசன் சிறுகதைகள்
10. ஜெயகாந்தன் சிறுகதைகள்
11. அசோகமித்ரன் குறுநாவல்கள்
12. ஜெயமோகன் குறுநாவல்கள்
13. புலிநகக் கொண்றை - பி.ஏ. கிருஷ்ணன்
15. அம்மா வந்தாள் - தி. ஜானகிராமன்
16. ரத்த உறவு - யூமா. வாசுகி (இதுவும் எங்க ஊர் கதைதான்).

(தனித்தனியே வாசித்திருந்தாலும் புத்தகவடிவில் வெளிவராதா என்று காத்துக் கொண்டிருப்பது "சித்தார்த்த 'செ' குவேரா-வின் சிறுகதைகள். யோவ், காதுல விழுதா?).

புனைவிலிகள் (நிறைய உள்வாங்கப்பட்டு மறந்துபோயிருக்கின்றன. இவற்றைத் தவிர புத்தகவடிவில் வராத புனைவிலிகளும் நிறைய உண்டு).

1. பண்பாட்டு அசைவுகள் - தொ. பரமசிவன்
2. என் சரித்திரம் - உ.வே.சாமிநாத ஐயர்
3. விரிவும் ஆழமும் தேடி - சுந்தர ராமசாமி
4. கணையாழியின் கடைசிப்பக்கங்கள் - சுஜாதா

பிடித்த மொழிபெயர்ப்புகள்

1. சிக்கவீர ராஜேந்திரன் - மாஸ்தி வெங்கடேச ஐயங்கார்
2. கவர்மெண்ட் பிராம்மணன் - அர்விந் மாளஹத்தி -தமிழில் பாவண்ணன்
3. தோட்டியின் மகன் - தகழி - தமிழில் சுந்தர ராமசாமி
4. பொழுதுபோக்கு பௌதீகம் - யா. பெரல்மான் - தமிழில் ??
5. மீதிச் சரித்திரம் - பாதல் சர்க்கார் - தமிழில் ஆர். பானுமதி

மனதுக்குப் பிடித்த செவ்வியல் இலக்கியங்கள்

1. சிலப்பதிகாரம்
2. கலிங்கத்துப்பரணி
3. நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்
4. குறுந்தொகை
5. கம்பராமாயணம்

கடைசியாக முடித்த ஐந்து புத்தகங்கள்

1. மொழியினால் அமைந்த வீடு - மணி வேலுப்பிள்ளை
2. Science and Society - Edited by Martin Moskovits
3. காலச்சுவடு சிறப்பிதழ் (1991)
4. வைணவ வேதம் - முல்லை ச முருகன்.
5. The Art of the Novel - Milan Kundera.

படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்கள் (ஒரே சமயத்தில் ஐந்தாறு புத்தகங்களை வாசிப்பது உண்டு. நாய் வாய் வைச்சாமாதிரி என்று என் அண்ணன் சொல்வான்).

1. Snow White - Donald Barthelme
2. Crab Walk - Gunter Grass
3. Life & Times of Michael K - J.M. Coetzee
4. The fabric of reality - David Deutsch
5. The Scientist as Philosopher - Philosophical Consequences of Great Scientific Discoveris - Edited by Friedel Weinert
6. கதாகாலம் - தேவகாந்தன்
7. கண்ணில் தெரியுது வானம் (ஊருக்கு வந்திருக்கும் பத்மநாப ஐயரின் அன்பளிப்பு)

இப்படியான ஒரு புத்தகத்தை எழுத தனிமனிதனுக்குச் சாத்தியமுண்டா என்று கடந்த பதினைந்து வருடங்களாக நான் கேட்டுக்கொண்டிருக்கும் புத்தகம் ஒன்று உண்டு. அது Douglas Hofstadter எழுதிய Godel, Escher, Bach : An Eternal Golden Braid. இப்படியான ஒரு புத்தகத்தை நான் கண்டேனில்லை.

* * *

வாழ்க்கையின் பெருங்கனவு என்று ஒன்று உண்டு. பல வருடங்கள் தமிழகத்தின் காடுகளிலும் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் அலைந்து அங்கிருக்கும் அற்புதமான பூந்தாவரங்களைப் பற்றிய விரிவான புத்தகம் எழுதவேண்டும் (குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருக்கும் எண்ணற்ற ஆர்க்கிட்களை பற்றி). இந்தப் புத்தகத்தை முதலில் தமிழில் எழுதி பின் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும். நம் மொழியில் தாவரங்களையோ, விலங்குகளையோ, கட்டிடங்களையோ பற்றி யாரும் எழுதுவதில்லை. நம்மூர் எருமைமாட்டையோ, காட்டுப்பன்றியையோ வெள்ளைக்காரன்தான் ஆங்கிலத்தில் எழுதி நமக்குத் தெரியவைக்க வேண்டியிருக்கிறது.

சாத்தியமேயில்லை என்று நினைத்த பல கனவுகள் நடந்தேறியிருக்கின்றன. எனவே இதன் மீதான நம்பிக்கை வலுத்துவருகிறது.

22 Replies to “புத்தகம்”

 1. இப்படியான ஒரு புத்தகத்தை எழுத தனிமனிதனுக்குச் சாத்தியமுண்டா என்று கடந்த பதினைந்து வருடங்களாக நான் கேட்டுக்கொண்டிருக்கும் புத்தகம் ஒன்று உண்டு. அது Douglas Hofstadter எழுதிய Godel, Escher, Bach : An Eternal Golden Braid. இப்படியான ஒரு புத்தகத்தை நான் கண்டேனில்லை.

  ஆமாம் ஆமாம்.அதையும், அவரது இன்னொரு நூலையும்,
  metamagical themas, அவரும் டேனியல் டென்னட்டும் பதிப்பித்த மைண்ட்ஸ் ஐ யையும் ஒரு சேர படித்துவிட்டு பிரமிப்பில் மிதந்த காலமும் உண்டு. என்னை வியப்பில் ஆழ்த்தியவர்களில் கென் வில்பரும் ஒருவர்.இவர் நூல்களை படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறேன்.நான் படித்தவை ஒரு சிலவே, அதுவும் முன்னர் எழுதியவை. என்னுடைய பட்டியலில் சொல்லாமல் விட்டது அதிகம், சொன்னது மிகக் குறைவு.டேவிட் கார்வி, காதரீன் கைலெஸ், மானுவல் காஸ்டெல்ஸ் என்று ஆரம்பித்தால் அது இன்னொரு புறம் ஸ்டீபன் ஜெ கோல்ட்,ஸ்டீவ் ரோஸ் என்று எங்கெங்கோ சென்றுவிடும்.இன்னும் சிலர் இருக்கிறார்கள் - இவர்கள் எப்படித்தான் எழுதித்தள்ளூகிறார்கள் என்று மலைப்பினை தரும் வகையில் எழுதுபவர்கள்- சட்டம்-பொருளாதாரம் குறித்து எழுதும் ரிச்சர்ட் போஸ்னர் ஒரு உதாரணம்.

 2. //நம்மூர் எருமைமாட்டையோ, காட்டுப்பன்றியையோ வெள்ளைக்காரன்தான் ஆங்கிலத்தில் எழுதி நமக்குத் தெரியவைக்க வேண்டியிருக்கிறது. //

  அவன் காட்டை வென்றான் கிடைத்தால் படித்து பாருங்கள் வெங்கட். அது ஒரு நல்ல புத்தகம்.

 3. வெங்கட்,

  உங்கள் பதிவுக்கு நன்றி.

  நீங்கள் படித்துள்ள, அனுபவித்துள்ள பத்தகங்களை எல்லாம் கேள்விப்பட்டபின், இந்த ஒரு ஜென்மம் போதுமா என்ற சந்தேகம் வருகிறது. ஏற்றுக் கொண்ட விஷயங்களை செய்து முடித்துவிட்டு, எனக்கென்று ஏழு வருடம் எடுத்துக் கொண்டு கண்காணாது போய் உட்கார்ந்து கொண்டுதான் இதையெல்லாம் செய்ய இயலுமோ..??

  சுந்தரமூர்த்தி வேறு தளத்தில் இருந்து பேசுகிறார். ஆனால் அதை சொன்ன விதம் பிரச்சினையாகிவிட்டது. அவருடைய சமீபத்திய பதிவு படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். It is always better to have contradicting friends around. இல்லாவிடில் வாழ்க்கை சவ சவத்துப் போகும்.

  என்றென்றும் அன்புடன்

 4. கலிங்கத்து பரணி எனக்கும் பிடித்தமான ஒன்று. விருட்சங்க்ளுக்கும் காளான்களுக்கும் இடையில் செடிகளும் கொடிகளும் உண்டு. தனியாய் எழுத எண்ணம் உண்டு.

 5. வெங்கட்,
  மூக்கன் குறிப்பிட்ட என் இரண்டாவது பதிவைப் படித்தீர்களா? முதலில் எழுதியது புத்தக விளையாட்டைத் தொடர முடியாத ஒருவித சலிப்பில் எழுதியது. பிடிக்காத பண்டமென்றால் புறக்கணித்துவிட்டுப் போய்விடலாம். பிடித்த பண்டத்தை மீண்டும், மீண்டும் பறிமாறிக்கொண்டிருந்தால் எவ்வளவு தான் சாப்பிட முடியும். அதுவும் ஒன்றையே. கொஞ்சம் கூட சாப்பிட்டதில் குமட்டல் வந்துவிட்டது.

  ஒரேயடியாக ஒரே மாதிரியாக எழுதப்பட்ட இத்தனை பட்டியல்களின் உபயோகம் என்ன என்பது எனக்கு இன்னும்கூட பிடிபடவில்லை. வெறும் பெயர்களை மட்டும் வைத்து என்ன செய்வது? சில பட்டியல்களில் புத்தகங்களைப் பற்றிய குறைந்தபட்ச தகவல்களான ஆசிரியர் பெயர், எழுத்துவகை (நாவலா, கவிதையா என்பது போன்ற), மூலமா, மொழிபெயர்ப்பா, மொழிபெயர்ப்பாளர் பெயர், மூலமொழி, போன்றவைகூட இல்லை.

  (தொடரும்)

 6. (தொடர்ச்சி)
  இந்தத் தொடரில் கூட ஏற்கனவே குறிப்பிட்ட புத்தகங்களின் பெயர்களை மீண்டும் குறிப்பிடக்கூடாது என்ற விதியை சேர்த்திருந்தால் இவ்வளவு பேர் எழுதியதற்கு ஒரு நீண்ட பட்டியல் உருவாகியிருக்கும். எல்லோரும் 100, 200 புத்தகங்கள் இருப்பதாக எழுதினார்கள். ஆனால் பட்டியல்களைப் பார்த்தால் திரும்பத் திரும்ப அதே தலைப்புகள். அதே எழுத்தாளர்கள். தி.ஜா. 'மோகமுள்' தவிர இன்னும் சில நல்ல நாவல்களை எழுதியுள்ளார். மோக முள்ளைத் தான் சிலபேர் எழுதிவிட்டார்களே, மரப்பசு, அம்மா வந்தாள், நடந்தாய் வாழி காவேரி பயண நூல் என்று ஏதாவது குறிப்பிடலாம் என்று ஒருவருக்கும் தோன்றாதது ஆச்சரியம் மட்டுமில்லை எரிச்சலும் ஊட்டியது. இன்று காலைதான் 'அம்மா வந்தாள்' ஐ முதன் முதலில் மாண்ட்ரீஸரின் பட்டியலிலும், பிறகு உங்கள் பட்டியலிலும் பார்த்தேன். இதே போல் இன்னும் பல எழுத்தாளர்களின் ஒரே நாவல் திரும்பத் திரும்ப. நாஞ்சில் நாடன், சம்பத், பூமணி, வெங்கட்ராம் போன்றவர்கள் முதல் முறையாக மாண்ட்ரீஸரின் பட்டியலில் எட்டிப்பார்த்துள்ளார்கள்.
  இன்னும் பல எழுத்தாளர்கள் பெயரே வரவில்லை (சண்முகசுந்தரம், க.நா.சு., கரிச்சான் குஞ்சு, சி.சு. செல்லப்பா, சா. கந்தசாமி, ந. முத்துசாமி, அ. மாதவன், சிவகாமி, பெருமாள் முருகன் செ. யோகநாதன், தளையசிங்கம் என்று ஒரு பெரிய்ய்ய பட்டியல்). இது நாவலாசிரியர்கள் மட்டும்.

  உள்வட்டம் என்று குறிப்பிட்டதை, சில பகடிப் பதிவுகள் வந்ததிலிருந்தும், பல பின்னூட்டங்களிலிருந்தும் புரிந்துகொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.

 7. வணக்கம் வெங்கட்
  உங்கள் பதிவு கிட்டத்தட்ட என் மனநிலையை ஒத்ததாகவே உள்ளது. புத்தகம் பற்றிப் பேசுவது எனக்கும் கூட மிகவும் ஆனந்தமானது.
  இப்போ சில தினங்களுக்குள் நேரம் கிடைத்த போதெல்லாம் புத்தகங்கள் பற்றி ஒவ்வொருவரும் எழுதியதை மிகுந்த மனவிருப்பத்தோடு வாசித்தேன். ஒவ்வொருவரும் என்னென்ன புத்தகங்களை வாசித்திருக்கிறார்கள்.. அவர்கள் வாசிப்பனுபவம் என்று மிகச்சுவாரஸ்யம்.

 8. [2] முழு விபரங்களைத் தரமுடியுமா?

  [1] நன்றி! சில புத்தகங்கள் நம்மை தீராத வியப்பிலாழ்த்துகின்றன. என்னைப்பொருத்தவரை கோடல், ஈஷர், பாக் அவற்றுள் முதலிடத்தில் இருக்கிறது.

 9. [3]
  >எனக்கென்று ஏழு வருடம் எடுத்துக் கொண்டு கண்காணாது போய் உட்கார்ந்து கொண்டுதான் இதையெல்லாம் செய்ய இயலுமோ..??

  இல்லை சுந்தர். இது மிகவும் கஷ்டமான காரியம் (குறைந்தபட்சம் என்னைப்பொருத்தவரை). காரணம் என்னுடைய விருப்பங்கள் பரவலானவை. ஒரு கணத்தில் புத்தகங்களைப் பற்றிய இப்படியான சிந்தனை வரும்பொழுதே மறுகணம் என் படிப்பு, வேலை எல்லாவற்றையும் உதறிவிட்டு கிராமத்துக்குப் போய் துவக்கப்பள்ளியில் சொல்லிக் கொடுக்கவேண்டும் என்று தோன்றும். மறுநொடி, நல்ல கர்நாடக இசைக்கலைஞரிடம் போய் முறையாக மிருதங்கம் வாசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தோன்றும். We are spreading ourselves too thin - sadly.

 10. //நம் மொழியில் தாவரங்களையோ, விலங்குகளையோ, கட்டிடங்களையோ பற்றி யாரும் எழுதுவதில்லை. நம்மூர் எருமைமாட்டையோ, காட்டுப்பன்றியையோ வெள்ளைக்காரன்தான் ஆங்கிலத்தில் எழுதி நமக்குத் தெரியவைக்க வேண்டியிருக்கிறது.// வாஸ்தவம்தான். அப்படியே யாரேனும் ஒன்றிரண்டு எழுதினாலும் பரவலாக அறியப்படுவதில்லை; காட்டாக மெய்யப்பன் தமிழாய்வகம் வெளியீடுகளான தமிழ்நாட்டுப் பறவைகள், தமிழ்நாட்டுத் தாவரங்கள் போன்றவை.

 11. [7]சுந்தரமூர்த்தி - ஒரு விஷயம், இங்கே இன்னும் பலர் வாசிப்புத் துவக்கநிலையில் இருக்கிறார்கள் என்பதும் அதனால் பிரபலங்களின் பெயரே அதிகம் வரும் என்பதும் முக்கியமான விஷயங்கள்.

  இதைத்தவிர பிடித்த புத்தகங்கள் என்று எழுதச் சொன்னால், என்னதான் பெருவிருப்பச் சிம்மாசனத்தில் இருக்கிறது, பலருக்கு அலுத்துப்போனது, பலர் சொல்கிறார்கள் என்றிருந்தாலும்கூட என்னால் மோகமுள்ளைத் தூக்கி எறிந்துவிட முடியாது. இதற்குப் பல காரணங்கள் உண்டு, முக்கியமாக இது என் மண்ணின் கதை, இதன் பாபுவையும் யமுனாவையும் நான் இரத்தமும் சதையுமாக என் அண்டையில் கண்டிருக்கிறேன். அத்துடன் கூடவே படைப்பின் பிற உன்னதங்களும் இணையும்பொழுது என் விருப்பப்பட்டியலில் அது இன்னும் முதலிடத்தில்தான் இருக்கும். இதே காரணம்தான் ரத்த உறவுக்கும். கடந்த சில வருடங்களில் வந்த மிக முக்கியமான நாவல் எது என்று கேட்டால் நான் ரத்த உறவைத்தான் சொல்வேன். நிகழ்களத்தில் வாழ்ந்தவன் என்பதால் அந்தப் படைப்பின் உக்கிரம் என்னை வலிந்தே தாக்குகிறது.

  ஒருவிதத்தில் பார்க்கப்போனால் எல்லோருக்கும் ஜி.நாகராஜ்னின் முக்கியத்துவம் தெரியும் இருந்தாலும் நீங்களே மாண்ட்ரீஸரை ஏன் அவரைப்பற்றிச் சொல்ல ஒன்றுமில்லையா என்று கேட்டீர்கள். இதைப் போலத்தான் நான் மோகமுள்ளை எழுதாமல் போனாலும் கேள்வி வரும். எழுதும் ஐந்து/பத்து நூல்களில் இவற்றின் முக்கியத்துவம் கட்டாயம் அதிகம்தான் இருக்கும். கூடவே இது ஆரம்ப நிலை வாசிப்பாளனுக்கு இன்னும் பயனுள்ளதாக இருக்கும். எனக்கு இதைப்பற்றி தெரிந்திருந்தால் நான் "ம். சரி.." என்று சொல்லிவிட்டு ஒதுங்கிவிடுவேன்.

 12. பத்மா, அன்பு, சந்திரவதனா, ராதாகிருஷணன் - நன்றிகள்.

  ராதா - அந்தப் புத்தகங்களைப் பற்றி முழுவிபரமும் தருகிறீர்களா? இப்படியான நாடுகளில் வசிப்பதில் ஒரு இழப்பு "அரிய, பிரபலமாகாத, சுவாரசியமான புத்தகங்களைத் தவற்விடுவது. இதே நான் சென்னையில் இருந்தால், ஒரு நாள் புக்லேண்டில் ஓரமாக நின்று பத்து பக்கத்தைப் படித்துப் பார்த்து வாங்கியிருக்கக் கூடும்.

 13. புத்தகங்களைப் பற்றிய மிக அருமையான பதிவு இது. நன்றி!

 14. //வாழ்க்கையின் பெருங்கனவு என்று ஒன்று உண்டு. பல வருடங்கள் தமிழகத்தின் காடுகளிலும் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் அலைந்து அங்கிருக்கும் அற்புதமான பூந்தாவரங்களைப் பற்றிய விரிவான புத்தகம் எழுதவேண்டும் //

  நல்ல கனவு. எனக்கும் இப்படி ஒரு எண்ணம் உண்டு. அதனோடு சித்த/ ஆயுர்வேத மருத்துவக் குறிப்புகளை சேர்க்கவேண்டும் என்ற எண்ணமும் உண்டு. முன் முயற்சியாக IISc வளாகத்தில் இருந்த பூந்தாவரங்களை படமெடுத்து தொகுக்க எண்ணினேன். ஆரம்பித்து அதை விடவேண்டியதாயிற்று. இங்காவது அதை செய்யலாமா என்று பார்க்கிறேன்.

  உங்கள் கனவு நனவாக வாழ்த்துக்கள்!

 15. வாழ்க்கையின் பெருங்கனவு என்று ஒன்று உண்டு. பல வருடங்கள் தமிழகத்தின் காடுகளிலும் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் அலைந்து அங்கிருக்கும் அற்புதமான பூந்தாவரங்களைப் பற்றிய விரிவான புத்தகம் எழுதவேண்டும்

  hope they survive till you do that.

 16. வெங்கட், நான் குறிப்பிட்ட இரண்டு புத்தகங்களும் மெய்யப்பன் தமிழாய்வகம், 53 புதுத்தெரு, சிதம்பரம்-608001 ஆகியோரால் வெளியிடப்பட்டவை.

  தமிழ்நாட்டுப் பறவைகள் - க.ரத்னம், முதற்பதிப்பு 2002, விலை ரூ.225. இப்புத்தகத்திற்கான ஒரு மதிப்புரையைக் காண http://www.hindu.com/br/2004/02/10/stories/2004021000841500.htm...
  ஒன்றிரண்டு பக்கங்களை வருடி எடுத்து (scan) மின்னஞ்சல் செய்கிறேன்.

  தமிழ்நாட்டுத் தாவரங்கள் - ச.சண்முகசுந்தரம், 2002, விலை தெரியவில்லை. (சில மரங்களைப் பற்றிய புத்தகங்களுடன் இப்புத்தகத்தையும் தெரியப்படுத்தியவர் இராம.கி.; சுட்டி:http://groups.yahoo.com/group/tamil-ulagam/message/30162) இனிமேல்தான் நானும் வாங்கவேண்டும்.

 17. [15] தங்கமணி - முன்னெப்போதும் இல்லாத அளவில் பலரும் சேர்ந்து மின்னூடகங்கள் வழியே இவற்றையெல்லாம் செய்வது இப்பொழுது சாத்தியமாகியிருக்கிறது. பார்க்கலாம் உருப்படியாக ஏதாவது செய்யவேண்டும்.

 18. [18] ராதா - நன்றிகள். இந்தப் புத்தகங்கள் நான் ஊருக்குப் போய்த் தேடும்வரை மறைந்துபோகாமல் இருக்க வேண்டும்.

 19. Sir, இந்த புத்தகம் "அவன் காட்டை வென்றான்" தெலுங்கு. ஆர் கேசவ ரெட்டி, தமிழாக்கம் எதிராஜுலுசென்னையில் எங்கு கிடைக்கும் என்று சொல்ல முடியுமா..? pls

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *