கடந்த சில நாட்களாக புத்தகப்பேரிழை ஓடிக்கொண்டிருக்கிறது. அன்பு, சந்தோஷ்குரு, மாண்ட்ரீஸர் , போன்ற நண்பர்கள் என்னை அழைத்திருந்தார்கள். கடந்த வாரத்தில் நேரம் கிடைக்கவேயில்லை. என்னை மதித்துக் கேட்ட இவர்களுக்கு தாமதத்திற்காக என் மன்னிப்புகளைச் சொல்லியாக வேண்டும்.

புத்தகங்களைப் பற்றி பேசுவது எப்பொழுதுமே என் மனதுக்குப் பிடித்தமான ஒன்று. இது எந்த விதத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு பக்கம் ஆழ்ந்த விவாதங்கள், விமர்சனங்கள் போன்றவை இருந்தாலும், வெறுமனே நண்பர்களிடம் சென்றவாரம் நீ என்ன படித்தாய் என்று கேட்கும் வழக்கமும் உண்டு. எனவே எனக்கு இந்தப் பட்டியலிடல், தொடர் போன்றவற்றின் மீதும் ஆர்வம் இருந்தது. வேலை அதிகம் இருந்தாலும் ‘புத்தகம்’ என்று தமிழ்மணத்தில் தேடி யார் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதைப் படித்துக் கொண்டிருந்தேன். ஒருவிதத்தில் நண்பர் சுந்தரமூர்த்தி இதைப்பற்றி எள்ளலுடன் எழுதியிருந்ததைக் கண்டு வியப்பாக இருந்தது. விழுது பரப்பி விருட்சமாக நிற்பவனவற்றின் மீது என்ன ஆர்வமுண்டோ அதே ஆர்வம் விருட்சத்தினடியில் மழையில் எழும் காளான்களின் மீதும் எனக்குண்டு. ஒருவகையில் சுந்தரமூர்த்திக்கும் இப்படித்தான் இருக்கும் என்று யூகிக்கத் தோன்றுகிறது. தேர்ந்த புள்ளியியலாளனின் ஆர்வத்துடன் எல்லா காளான்களையும் கண்டறிந்து வகைப்பாடு செய்து, அதிகம் படிக்கப்படுபவர், அதிக விற்பனை, பெருவிருப்ப மொழிபெயர்ப்புகள் என்று எழுதப்பட்ட பதிவுகள் அத்தனையும் துருவி ஆராய்ந்தவர் அதை ஏன் இந்தத் தொனியில் வெளிப்படுத்த வேண்டும் என்று வியப்பாக இருக்கிறது. புத்தகத்தைப் பற்றிய எந்தப் பேச்சும் புத்தகங்களில் ஆர்வமுள்ளவர்களுக்கு சலிப்பைத் தரமுடியும் என்று தோன்றவில்லை. அப்படியாக சலிப்பு தோன்றினாலும் விலகி நிற்காமல் விமர்சித்து எள்ளுவதை என்னால் ஒருபோதும் புரிந்துகொள்ளமுடியாது. (இதையே இசை, ஓவியம், விளையாட்டு என்று நீட்டிகலாம்). இணையத்தின் பெரும் வசதியே இதுதான்; ஆர்வமில்லை என்றால் பேசாமல் ஒதுங்கி நிற்கலாம், யாரும் காலரைப் பிடித்து கருத்து சொல்லிவிட்டுப் போ என்று வற்புறுத்தமுடியாது.

சுந்தரமூர்த்தி இதற்காகத்தான் (வாசிப்பையும், புணர்தலையும் ஒப்பிட்டிருக்கும்) அந்த தெருச்சண்டையைச் சுட்டிக்காட்டியிருக்கிறார் என்று நினைக்கிறேன்: ஆனால், சாருநிவேதிதா சொல்லியதைப் போல வாசிப்பு எனக்குப் படுக்கையறை அந்தரங்கம் கிடையாது. (தன்னுடைய ‘இன்னபிற’ சாகசங்களைப் பற்றி தம்படமடிக்கும் சாருநிவேதிதாவுக்கு அந்தரங்கம் குறித்த மதிப்பீடுகளில் தீவிரக் குழப்பம் இருப்பதைப் போலத் தெரிகிறது). ஒளித்துவைத்துப் படிக்கும் புத்தகங்கள் என்று சிலவகை உண்டு; அதுவும் ஒரு வயதுவரைதான். சிலர் வளரமறுக்கிறார்கள்.

ஒருவருடன் பேசும்பொழுதோ, அவர் எழுதியவற்றைப் படிப்பதன் மூலமோ இவர் சிறந்த புத்தகங்களைப் படிப்பவர் என்ற கருத்தை நான் உருவாக்கிக் கொள்கிறேன். (பிரமிப்பூட்டும் நோக்கத்துடன் சிலர் வெருட்டும் பட்டியல்கள் போட்டாலும் தொடர்ச்சியான வாசிப்பு அடையாளம் காட்டிவிடுகிறது). அந்தவகையில் பல புத்தகங்களைப் பிறர் சொல்லி நான் அடையாளம் கண்டிருக்கிறேன். என்னுடைய இந்தப் பட்டியல் யாராவது ஒருவருக்கு அப்படி உதவக்கூடும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. அந்த நம்பிக்கையுடன் கடலில் நான் கரைக்கும் பெருங்காயம் இதோ;

பிடித்த புத்தகங்கள் (நினைவில் வருபவை). ஆங்கிலப் புத்தகங்கள், பிழைப்புக்காகப் படிப்பவற்றைத் தவிர்த்து;

புனைவுகள்

1. மோகமுள் – தி.ஜானகிராமன் (குப்பைச் சந்தாக மாறிப்போன துக்காம்பாளையத் தெருவில் யமுனா நடந்த இடம் என்று பெருமிதத்தில் காலைத் தேய்த்துத் தேய்த்து நடந்திருக்கிறேன். புனைவைத் தாண்டி இது என்னூர் கதை என்ற நெருக்கமும் உண்டு).
2. ஏழாம் உலகம் – ஜெயமோகன் (நாம் காணமறுக்கும் உலகத்தின் யதார்த்தங்கள். என்னைப் பொருத்தவரை இந்த நாவல் தமிழில் போதுமான கவனம் பெறவில்லை. இதற்கு முக்கிய காரணம் இந்த நாவல் வெளியான சமயத்தில் ஜெயமோகனை வெறுப்பது பாஷனாகிப் போனது).
3. ஒரு புளிய மரத்தின் கதை – சுந்தர ராமசாமி
4. குறத்தி முடுக்கு, நாளை மற்றுமொரு நாளே – ஜி.நாகராஜன்
5. புதுமைப்பித்தன் சிறுகதைகள்
6. 18வது அட்சக்கோடு – அசோகமித்ரன்
7. முன்பு ஒரு காலத்தில் நூற்றியெட்டுக் கிளிகள் இருந்தன – ரமேஷ்:பிரேம்
8. பள்ளிகொண்டபுரம் – நீல பத்மனாபன்
9. வண்ணதாசன் சிறுகதைகள்
10. ஜெயகாந்தன் சிறுகதைகள்
11. அசோகமித்ரன் குறுநாவல்கள்
12. ஜெயமோகன் குறுநாவல்கள்
13. புலிநகக் கொண்றை – பி.ஏ. கிருஷ்ணன்
15. அம்மா வந்தாள் – தி. ஜானகிராமன்
16. ரத்த உறவு – யூமா. வாசுகி (இதுவும் எங்க ஊர் கதைதான்).

(தனித்தனியே வாசித்திருந்தாலும் புத்தகவடிவில் வெளிவராதா என்று காத்துக் கொண்டிருப்பது “சித்தார்த்த ‘செ’ குவேரா-வின் சிறுகதைகள். யோவ், காதுல விழுதா?).

புனைவிலிகள் (நிறைய உள்வாங்கப்பட்டு மறந்துபோயிருக்கின்றன. இவற்றைத் தவிர புத்தகவடிவில் வராத புனைவிலிகளும் நிறைய உண்டு).

1. பண்பாட்டு அசைவுகள் – தொ. பரமசிவன்
2. என் சரித்திரம் – உ.வே.சாமிநாத ஐயர்
3. விரிவும் ஆழமும் தேடி – சுந்தர ராமசாமி
4. கணையாழியின் கடைசிப்பக்கங்கள் – சுஜாதா

பிடித்த மொழிபெயர்ப்புகள்

1. சிக்கவீர ராஜேந்திரன் – மாஸ்தி வெங்கடேச ஐயங்கார்
2. கவர்மெண்ட் பிராம்மணன் – அர்விந் மாளஹத்தி -தமிழில் பாவண்ணன்
3. தோட்டியின் மகன் – தகழி – தமிழில் சுந்தர ராமசாமி
4. பொழுதுபோக்கு பௌதீகம் – யா. பெரல்மான் – தமிழில் ??
5. மீதிச் சரித்திரம் – பாதல் சர்க்கார் – தமிழில் ஆர். பானுமதி

மனதுக்குப் பிடித்த செவ்வியல் இலக்கியங்கள்

1. சிலப்பதிகாரம்
2. கலிங்கத்துப்பரணி
3. நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்
4. குறுந்தொகை
5. கம்பராமாயணம்

கடைசியாக முடித்த ஐந்து புத்தகங்கள்

1. மொழியினால் அமைந்த வீடு – மணி வேலுப்பிள்ளை
2. Science and Society – Edited by Martin Moskovits
3. காலச்சுவடு சிறப்பிதழ் (1991)
4. வைணவ வேதம் – முல்லை ச முருகன்.
5. The Art of the Novel – Milan Kundera.

படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்கள் (ஒரே சமயத்தில் ஐந்தாறு புத்தகங்களை வாசிப்பது உண்டு. நாய் வாய் வைச்சாமாதிரி என்று என் அண்ணன் சொல்வான்).

1. Snow White – Donald Barthelme
2. Crab Walk – Gunter Grass
3. Life & Times of Michael K – J.M. Coetzee
4. The fabric of reality – David Deutsch
5. The Scientist as Philosopher – Philosophical Consequences of Great Scientific Discoveris – Edited by Friedel Weinert
6. கதாகாலம் – தேவகாந்தன்
7. கண்ணில் தெரியுது வானம் (ஊருக்கு வந்திருக்கும் பத்மநாப ஐயரின் அன்பளிப்பு)

இப்படியான ஒரு புத்தகத்தை எழுத தனிமனிதனுக்குச் சாத்தியமுண்டா என்று கடந்த பதினைந்து வருடங்களாக நான் கேட்டுக்கொண்டிருக்கும் புத்தகம் ஒன்று உண்டு. அது Douglas Hofstadter எழுதிய Godel, Escher, Bach : An Eternal Golden Braid. இப்படியான ஒரு புத்தகத்தை நான் கண்டேனில்லை.

* * *

வாழ்க்கையின் பெருங்கனவு என்று ஒன்று உண்டு. பல வருடங்கள் தமிழகத்தின் காடுகளிலும் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் அலைந்து அங்கிருக்கும் அற்புதமான பூந்தாவரங்களைப் பற்றிய விரிவான புத்தகம் எழுதவேண்டும் (குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருக்கும் எண்ணற்ற ஆர்க்கிட்களை பற்றி). இந்தப் புத்தகத்தை முதலில் தமிழில் எழுதி பின் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும். நம் மொழியில் தாவரங்களையோ, விலங்குகளையோ, கட்டிடங்களையோ பற்றி யாரும் எழுதுவதில்லை. நம்மூர் எருமைமாட்டையோ, காட்டுப்பன்றியையோ வெள்ளைக்காரன்தான் ஆங்கிலத்தில் எழுதி நமக்குத் தெரியவைக்க வேண்டியிருக்கிறது.

சாத்தியமேயில்லை என்று நினைத்த பல கனவுகள் நடந்தேறியிருக்கின்றன. எனவே இதன் மீதான நம்பிக்கை வலுத்துவருகிறது.