இன்றிலிருந்து நியூயார்க் டைம்ஸ் ஒரு புதிய பத்தியைத் துவங்கியிருக்கிறது. தன்னுடைய பதிப்புகளில் வெளியாகும் தவறுகள் (சிறிய தட்டான்கள் – நடுவாந்திர உளறல்கள் – , முற்றுமுழுதான மலைமுழுங்கிப் பொய்கள் என்று எவையாக இருந்தாலும்) இனிமேல் நியூயார்க் டைம்ஸின் “For the Record” பகுதியில் வெளியிடப்பட்டு நிரந்தரமாக்கப்படும்.

நவீன தகவல் உலகில் தவறான தகவல்களின் இடம் மிகவும் முக்கியமானது. நியூஸிலாந்தில் வெளியாகும் ஒரு உள்ளூர் செய்திப்பத்திரிக்கையின் இணையவடிவை ஒட்டி வெனிசூலாவில் முதன்மை நாளேட்டில் ஒரு கட்டுரை வெளியாகிறது. இது செய்திகளைப் போலவே தவறுகளையும் எளிதில் பரப்புகிறது. மேற்கொண்டு தேடல் இயந்திரங்கள், தகவல் கிடங்குகள் என்று தவறு நிரந்தரப்பட்டுப்போகிறது. இந்த நிலையில் எங்கெல்லாம் தவறுகள் தெரியவருகின்றனவோ அங்கே அவற்றை உடனடியாக அங்கீகரித்தல் முக்கியம். இந்த வகையில் நி.யா.டை-யின் இன்றைய துவக்கம் பாராட்டப்பட வேண்டியது.

நம்மூரில் இன்னும் இதெல்லாம் பற்றி கவலையில்லை. தடாலடியாக அமெரிக்கர்களின் தன்னலத்தைப் பற்றி எழுதிவிட்டுப் போய்விடலாம். இந்தியாவின் தந்தை ரஜீவ் காந்தி என்று எழுதிவிட்டு பாதிதானே பிழை என்று தோளைக் குலுக்கிவிட்டுப் போகலாம், அல்லது சுட்டிக் காட்டுபவர்களைப் பற்றி “வேலை வெட்டியில்லாமல் அமெரிக்காவில் கம்யூட்ட்ர் முன்னாடி உட்கார்ந்துகொண்டு நான் எழுதும் ஒவ்வொரு வரியிலும் பிழை தேடி அலைகிறார்கள்” என்று தன்னுடைய ஈகோவிற்கு சந்தனம் தடவிக் கொள்ளலாம்.