ஏப்ரில் மாத உயிர்மையில் கடவுளைக் கொல்பவர்கள் என்ற தலைப்பில் பிரேம்-ரமேஷின் கட்டுரை வெளியாகியிருக்கிறது. இந்த இதழ் மிகச் சமீபத்தில்தான் எனக்குக் கிடைத்தது. உயிர்மை தளத்திலும் தாமதமாகத்தான் போடுகிறார்கள். இந்தக் கட்டுரையைப் பற்றி தங்கமணி அவருடைய பதிவில் சுட்டியிருந்தார.

இந்தத் தொடரின் பிற கட்டுரைகளைப் போலவே, கடவுளைக் கொல்பவர்கள் கட்டுரையும் பல நல்ல விடயங்களைக் கொண்டது. பொருதும் மனிதர்களின் வெற்றி-தோல்வியில் அவர்கள் தொழுது நிற்கும் கடவுளர்களும் வெற்றியடைகிறார்கள் அல்லது தோற்றுப் போகிறார்கள். ஒரு வகையில் டார்வினின் வல்லவன் வாழ்வான் கொள்கையைப் போல வல்லவனின் கடவுளர்கள் வாழ்ந்துநிற்க தோற்றவனின் கடவுளர்கள் அடிமையாகிறார்கள் அல்லது வேறு வழிகளில் உள்வாங்கப்படுகிறார்கள். அதேபோல கடவுளைக் கொல்வதில் எல்லா மதத்தினரும் முனைப்புடன் ஈடுபடுகிறார்கள். அதாவது தான் தொழும் கடவுளின் மேன்மையத் தனக்குத்தானே நிரூபிக்க ஏனைய தெய்வங்களை நிர்மூலமாக்குவது ஆத்திகர்களின் தலையாய கடமையாகிறது. மறுபுறத்தில் எதையும் மறுப்பதாகத் தோன்றிய நாத்திகம் மனிதத்தையும் விலக்கி நிற்கிறது. பிரேம்-ரமேஷின் இந்தக் கட்டுரை ஒவ்வொரு ஆத்திகனையும் (நாத்திகனையும்) கூட தனது நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கத் தூண்டும்.

ஆனால் இந்தக் கட்டுரை முழுவதும் விரவிக்கிடக்கும் கருதுகோள்களில் பல முரண்பாடுகள் இருக்கின்றன. பல அடிப்படை உண்மைகள் எழுதுகின்ற விஷயத்திற்குத் துணைபோகத் திரிக்கப்பட்டிருக்கின்றன அல்லது நீர்க்கப்பட்டிருக்கின்றன. இன்றைக்கும் தெளிவில்லாமல், இன்னும் சர்ச்சைகளுக்கு உட்படும் பல விஷயங்கள் தீர்ந்த முடிபுகளைப் போலத் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. எல்லாவற்றையும்விட இந்தக் கட்டுரை அறிவியலைப் பற்றி மிகமிகத் தவறான புரிதலை முன்வைக்கிறது. இன்றைக்கு இறைநம்பிக்கை, சமயம், ஆத்திகமும் உள்ளுணர்வும் போன்ற விஷயங்களை எப்படிக் குழப்பியிருக்கிறார்கள் என்று எழுதுகிறேன். அடுத்ததாக, மிக முக்கியமாக அறிவியலைப் பற்றிய இவர்களது தவறான புரிதல் (அல்லது பொய்ப்பிரச்சாரத்தை??)ப் பற்றி எழுதுகிறேன்.

முதலாவதாகக், கட்டுரையின் தொடக்கத்தில்

“… இறைநம்பிக்கை என்று கூறப்படும் ‘மன அமைப்பு’ சமூக அளவில் இறைமறுப்புக்குச் சற்றே முன்னானது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மொழி, சமூக விதிகள், பண்பாடு என்பவை ‘மனிதரின் நிலை’ என்பதற்கு அடிப்படையாக அமைவது போலவே இறை நம்பிக்கையும் ஒரு அடிப்படைக் கட்டமைப்பு… கடவுள் என்பது வேறொன்றுமில்லை, ‘சமூகமே’ என்று பழங்காலத்தே அறியப்பட்டுவிட்ட ஒன்றுதான்”

இது இன்னும் தீராத விஷயம். இந்த இடத்தில் சமயத்தையும் இறையுணர்வையும் குழப்புகிறார்கள். கட்டமைக்கப்பட்ட சமயங்களுக்குச் சமூகத்தின் இருப்பு தேவை. ஆனால் இறைநம்பிக்கை வேறுவழிகளில் தோன்றுகிறது.

இறைநம்பிக்கை முறைகளைத் தொல் நாகரீகங்களிலிருந்து ஆராயும் அறிஞர்களுக்குச் சமூகத்தின் பங்கைக் குறித்துத் தெளிவு பிறக்கவில்லை. ஆராய்ந்து நிகழ்வுகளின், விளைவுகளின் காரணங்களை உணர்ந்தபிறகுதான் மனிதனுக்கு இயற்கையிலிருந்த பெரும்பயமும் மரியாதையும் நீங்கின. அந்த அறிவு கிடைப்பதற்கு முன் மனிதன் மழையைக் கண்டு பயந்தான், காற்றை அஞ்சினான், ஒளியைப் போற்றினான், நெருப்பைக் கண்டு வெருண்டான். இந்த பயம், மரியாதை, வெருட்சி எல்லாம் அவனறியாத இயக்கு சக்திகளைத் தொழ வைத்தன. இந்த அடிப்படையுணர்வைத் திரட்டி சமயம் என்ற கட்டமைப்பாக்குவதற்குத்தான் சமூகம் தேவைப்பட்டது. (பலரும் ஒரேமாதிரியான பயத்தையும், மரியாதையையும் பகிர்ந்துகொள்ளுதல் அல்லது பலரிடத்தும் ஒரே பயத்தையும் நம்பிக்கையையும் விதைத்தல்). கடவுளுக்கு வடிவம் தருவதற்கும் இறையுணர்வுக்கும் இருக்கும் வித்தியாசம் இங்கே நீர்த்துப் போயிருக்கிறது. பகுத்தறியும் முன்னர் அவனுக்கு எல்லாமே தன் சக்திக்கு அப்பாற்பட்டவைதான், இந்தச் சக்திக்கு அப்பாற்பட்டதே கடவுள் என்பது எல்லா ஆதிமதங்களுக்கும் அடிப்படையான கருதுகோள். எனவே ஆத்திகம் எப்படிப் பிறந்தது என்று தெளிவாகச் சொல்ல முடியாமல் இருக்கிறது. சொல்லப்போனால் ஆதிமனிதன் அஞ்ஞானி (Agnost). அஞ்ஞானத்திலிருந்து விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒரே நேரத்தில் கிளைத்தன. ஆத்திகம், நாத்திகம், தோற்றம், படிநிலைகள், இடையில் விஞ்ஞானம் என்று விரித்துக்கொண்டு போகும் பிரேம்-ரமேஷ் அஞ்ஞானத்தை முழுவதுமாகத் தவறவிட்டிருக்கிறார்கள்.

மற்றபடி, இறையுணர்வு இறைமறுப்பிற்கு முன்னானது என்பதில் மறுகருத்துக்கு இடமில்லை. இல்லாத ஒன்றை எப்படி மறுக்கமுடியும்?

“… உள்ளுணர்வு’ என்ற வகையில் இறைநம்பிக்கைக்கு எந்த இடமும் இருப்பதில்லை. சமூக மனிதராதல், மொழியறிதல், மொழிக்குள் இடம்பெறுதல், அறிவு பெறுதல் என்ற செயல்பாட்டின் ஒரு கட்டத்தில்தான் இறைநம்பிக்கையும் இறையுணர்வும் வடிவம் பெறுகிறது”

இந்த வாதத்திற்கும் எந்த அடிப்படையுமில்லை. இறையுணர்வை மொழியுணர்வுக்கு முந்தையதாகத்தான் பல மானுடத்தோற்றவியலார் கருதுகிறார்கள். சமூகங்கள் உருப்பெறுவதற்கு முன், திரட்சியடையாத மொழிகளில் மனிதன் ஊடாடிக்கொண்டிருந்த காலங்களில் அவனில் முன் சொன்ன பயம், மரியாதை, வெருட்சி ஆகியவையே மேலோங்கி இருந்தன. அது இறைநம்பிக்கை நிலை. புதிர்கள் ஒவ்வொன்றாக அவிழும்பொழுதுதான் நாத்திகம் உருப்பெருகிறது. புதிர்கள் அவிழ்வதற்குப் பட்டறிவு மாத்திரம் போதாது, கற்றலும் அவசியம். கற்றல் சமூகத்தில்தான் சாத்தியம். நாத்திகத்தின் தோற்றத்தில் அறிவியல் முக்கிய பங்கை வகிக்கிறது. ஆனால் அதே அறிவியல் மறுபுறத்தில் தொடர்ச்சியாகக் கேள்விகளை உற்பத்தி செய்துகொண்டிருக்க அறியாதவற்றைப் பரம்பொருளின் கணக்கில் போட்டுவைக்கிறார்கள். இதுவே மாபெரும் விஞ்ஞானிகளில் சிலரைப் பழுத்த ஆன்மீகவாதிகளாக்குகிறது. மறுபுறத்தில் ஒரு நாளில் எல்லா புதிர்களும் அவிழ்ந்துவிடும் என்றெண்ணுபவர்கள் நாத்திகத்தைக் கைகொள்கிறார்கள். ஆனால் பலரின் சாய்வும் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டேயிருக்க அஞ்ஞானமே சமநிலையாகிப்போகிறது.

பிரேம்-ரமேஷ் பல இடங்களில் தெளிவில்லாத சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். உதாரணமாக, “எந்த ஒரு இறைநம்பிக்கையாளரும் மற்றொரு வகையில் இறைமறுப்பாளரே’ என்பது வெளிப்படை” … பிற தெய்வங்கள் என்ற வகையில் மறுப்பாளராக நாத்திகராகவே இருக்கிறார்.

இந்த இடத்தில் இறைநம்பிக்கை என்பது சமயநம்பிக்கை என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. முழுமையான இறைநம்பிக்கைக்கு மதங்கள் தேவையில்லை. பலர் தெய்வம் என்று எதைக் காட்டினாலும் தொழத்தயாராக இருப்பதைப் பார்க்கிறோம். இன்னும் சிலருக்குச் சமயங்களும் காலங்களுக்கேற்ப மாறிக்கொண்டே போகின்றன. வைதீக இந்துக்கள்கூட இடையிடையில் வேளாங்கன்னி போய்வருவதைப் பார்க்கலாம். நாத்திகம் என்பது இறைமறுப்பு. “பிற தெய்வங்களை மறுக்கும் நாத்திகர்கள்” என்று ஒரு பிரிவு கிடையாது.

இதே பத்தியில் “பிற தெய்வங்கள் அனைத்தும் கட்டுக்கதைகளாக, வெறும் புனைவுகளாக அவருக்கு இருக்கிறது. நாத்திகம் தொடங்கும் இடம் இதுதான்” என்று சொல்கிறார்கள். ஆத்திகத்தின் குழப்பமே நாத்திகத்தின் தோற்றம் என்பது சரியான/முழுமையான வாதமாகாது. அறிவியலின் தெளிவும் நாத்திகத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கிறது. மதங்களின் மீது அவநம்பிக்கை கொண்டவர்களுக்குக் கூட நாத்திகத்தைத் தழுவ அறிவியலின் உதவி அவசியமாகிறது. ஏனென்றால் மதங்கள் அனைத்தும் வெருட்டும் புனைவுகளைக்கொண்டவை, வெருட்சி நீங்க (மதக்) குழப்பம் ஒருநாளும் உதவாது, தெளிவே அதன் மருந்து.

(இன்னும் வரும்)