இன்றைய நியூ சயின்டிஸ்ட் சஞ்சிகையில் வெளியாகியிருக்கும் தகவலின் படி பாக்டீரியங்களைக் கொண்டு படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அடர்வாக செறிக்கப்பட்ட ஈ.கோலை என்ற பாக்டீரியத்தில் பறக்கும் ஸ்பகெட்டி ராட்சதன் (Flying Spaghetti Monster) ஒன்றின் படம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கலிஃபோர்னியா (சான் பிரான்ஸிஸ்கோ) பல்கலைக்கழகத்தின் கிரிஸ் வாய்ட் (Chris Voigt) குழுவினரின் இந்த முயற்சி அதிவேகமாக வளர்ந்துவரும் உயிரியல் அடிப்படையிலான நானோநுட்பத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க சோதனை முடிவு என்று சொல்லலாம்.

மரபு மாற்று நுட்பத்தினால் ஒளிச்சேர்க்கை செய்யக்கூடிய நீலப்பச்சை பாசி (Blue-green Algae) ஒன்றின் மரபுக்கூறை ஈ.கோலை (E-Coli) என்ற பாக்டீரியத்துள் புகுத்தியிருக்கிறார்கள். இந்த மரபுக்கூறு பாக்டீரியத்தை ஒளியினால் மாற்றமடையக்கூடியதாகச் செய்கிறது. (குறிப்பாக சிகப்பு அலைநீளம் கொண்ட ஒளி). கிட்டத்தட்ட ஒரு எதிர்படலத்தினுள் (negative) ஒளியைப் பாய்ச்சி புகைப்படத் தாளில் அச்செடுப்பதுபோல இந்த செறிவாக்கப்பட்ட பாக்டீரியத் தொகுதியில் படத்தைப் பதிவு செய்ய முடிகிறது. ஒருமுறை இப்படிப் பதிவானவுடன் இன்னொரு மரபுக்கூறு மேலதிக ஒளியால் பாதிக்கப்படாத தன்மையை வழங்குவதால் பதிவு செய்யப்பட்டது நிரந்தரமாகிப்போகிறது. இந்தப் பதிவு முறையில் ஒரு சதுர அங்குலத்தில் 100 மெகாபிக்ஸல்கள் அடர்த்தி கொண்ட படத்தைப் பதிவு செய்வது சாத்தியமாகியிருக்கிறது. கவனிக்கவும் – பதிவு செய்யப்பட்ட பின்னும் இவை உயிருள்ள பாக்டீரியங்கள்.

இந்த முறையால் புகைப்படத் துறையில் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. மாறாக நானோநுட்பத் துறையில் ஆர்வத்தைப் பரப்பி உயிர் அடிப்படையிலான பல தயாரிப்பு முறைகள் உருவாகக் கூடும். உதாரணமாக, படத்தைப் பதிவு செய்வதற்குப் பதிலாக வேறொரு வகையில் மரபு மாற்றத்தின் மூலம் மெல்லிய உலோக இழைகளைப் பிண்ணும் முறை உருவாகலாம். இது நானோ அலகுகளே கொண்ட மின்னணுச் சில்லுகளில் இணைப்பை உருவாக்கப் பயன்படலாம்.

* * *

ஆமாம். அது கிடக்கட்டும். இதென்ன Flying Spaghetti Monster என்று கேட்பவர்களுக்கு; அமெரிக்காவில் கான்ஸாஸ் மாநிலத்தில் (சற்றும் அறிவியல் அடிப்படை இல்லாத)சேதன வடிவாக்க (Intelligent Design) முறையை பரிணாமக் கோட்பாடுகளுடன் (Evolutionary Theory) கூடவே பள்ளிகளில் அறிவியல் வகுப்பில் போதிக்க எடுத்த முடிவைப் (என்னுடைய பழைய பதிவு) பகடி செய்ய உருவாக்கப்பட்ட புதிய மதம் இது. இதைப் பற்றி விரிவாக இன்னொரு நாள். இப்போதைக்கு இந்த விக்கிப்பீடியா கட்டுரையில் இதைப் பற்றிய மேலதிக விபரங்களை அறியலாம்.

இப்போதைக்கு பல்கலைக்கழகங்களில் ஆர்வத்துடன் கதைக்கப்படும் இந்த பகடி வடிவத்தைத்தான் சான்பிரான்ஸிஸ்கோ மாணவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். நகைச்சுவை உணர்வுக்கு என் பாராட்டுக்கள்.