நேற்றைய வேதியியல் அறிவிப்பை ஒட்டி இன்று காலை செய்தித்தாட்களில் வந்திருந்த செய்தி எனக்கு வியப்பும் எரிச்சலும் கொடுத்தது. அல்ஸைமர், புற்றுநோய், மூட்டுவலி, தொடங்கி களைக்கொல்லி, ம்ருந்து, இன்னும் துணிக்கடை பை தயாரிப்பு என்று இனிமேல் எல்லாமே இதுதான் என்பதுபோல செய்திகள் சொல்லுகின்றன. சாயிபாபா கையிலிருந்து வரும் விபூதி, காஞ்சி சங்கராச்சாரியார் கமண்டல்த்திலிருந்து வரும் தீர்த்தம், போப்பாண்டவர் கொடுக்கும் வைன் இவற்றைப் போல இடமாற்ற வினையை சர்வரோக நிவாரணியாகக் காட்டியிருப்பது அளவிடமுடியாத கோபத்தைத் தருகிறது. இது அறிவியல் இல்லை.

இதுபோன்ற பல செய்திகள் ராய்ட்டரிலிருந்து பெறப்பட்டு பல நாடுகளிலும் உள்ளூர் பத்திரிக்கைகளில் வெளியிடப்படுகின்றன. ராய்ட்டர் செய்தியாளர் கட்டுரையில்

The research into molecule synthesis has laid the groundwork for the production of new drugs to treat illnesses like Alzheimer’s, Down’s Syndrome, HIV/AIDS and cancer, as well as having uses in agriculture, chemicals and plastics.

என்று வெளியாகியிருக்கிறது. இப்பொழுதெல்லாம் தினமும் அல்ஸைமருக்கும் எய்ட்ஸ்க்கும் ஒரு புதிய, மேலதிக வீரியமுள்ள மருந்து கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருக்க்றது (அல்லது அப்படிச் செய்திகள் வெளியாகின்றன). ஆனால் உண்மை நம் எல்லோருக்கும் தெளிவாகத் தெரிந்ததுதானே. ஒரு அளவுக்கு மேல் அறிவியல் பரபரப்பாக்கப்பட்டு வெளியாகும்பொழுது வாசிப்பதற்கு எரிச்சலூட்டுகிறது. நாளாவட்டத்தில் இது பொதுமக்களுக்கு அறிவியல் மீது இருக்கும் நம்பிக்கையை அடியோடு ஒழித்துவிடும் என்று பயமாக இருக்கிறது. உதாரணமாக ஹப்பிள் தொலைநோக்கியிலிருந்து ஒரு படம் வந்தால் “Hubble reveals cosmological secret” என்று தலைப்பிடப்படுகிறது. இன்னும் “California scientist unravels the myth of creation” “Number theorist cracks your credit card” “Quantum entanglement could make you disappear within microsecond” “Scientists surf at the heart of the cyclone” என்றெல்லாம் சர்வசாதாரணமாகத் தலைப்புகள் கொடுக்கப்படுகின்றன. தலைப்புகளில் மாத்திரம் என்றில்லாமல் செய்திக் கட்டுரைகள் முழுவதிலுமே இப்படி மசாலா நெடி மூக்கைத் துளைக்கிறது.

நோபெல் பரிசு பெற்ற கண்டுபிடிப்பின் சுருக்கம் இதுதான்; நேரடியாக மூலக்கூறுகளை வினைக்கு உட்படுத்தாமல் சில வினையூக்கிகளின் துணையுடன் வினைக்கு முன் அவற்றின் பிணைப்பு அமைப்பை மாற்றியமைத்தன் மூலம் இதுவரை சாத்தியமில்லாத வேதிவினைகள் சாத்தியமாகின்றன. இதை வைத்துக்கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் (கற்பனையில்) என்றாலும் எல்லா வேதிவினைகளையும் போலவே இதற்கும் எல்லைகள் உண்டு. இயற்பியல் விதிகளை மீறி எந்தவிதமான புதிய மூலக்கூறு சேர்க்கையும் சாத்தியமாகாது. அறிவியலாளர்களின் பார்வையில் சொல்லப்போனால் – வேதிவினைகளை நடத்த சாத்தியமான எத்தனையோ வழிகளில் இதுவும் ஒன்று – அவ்வளவுதான். உதாரணமாக சாதாரணமாகப் பிணையாத இரண்டு மூலக்கூறுகள் சூடுபடுத்துவதன் மூலம் வினைபுரியத் தொடங்கும். இதனால் சுடுதண்ணீரிலிருந்து எயிட்ஸ்க்கு மருந்து என்று சொல்வது எவ்வளவு அபத்தமோ அதே அளவுதான் இங்கும். இதை எந்த சராசரி அறிவியலாளரும் இப்படிப் பரபரப்பாக்க மாட்டார்.

கொஞ்சம் பின்னால் போய் ராய்ட்டர் செய்தியாளரை இப்படி எழுதத் தூண்டியது என்ன என்று பார்த்தேன். நோபெல் பரிசு செய்தி வெளியீட்டில் மேலதிகத் தகவல்கள் என்று வெளியிடப்பட்டிருக்கும் நோபெல் செய்தியறிக்கையில் இப்படி வருகிறது;

The development of molecules that attack various bodily illnesses merits further mention, since researchers are now devoting themselves to the creation of pharmaceuticals candidates for treating such widely differing conditions as bacterial infections, hepatitis C, cancer, Alzheimer’s disease, Down’s syndrome, osteoporosis, arthritis, inflammation, fibrosis, HIV/AIDS, migraine, etc. Metathesis is thus an important weapon in the hunt for new pharmaceuticals for treating many of the world’s major diseases.

இதை எழுதியவரின் பெயர் தெரியவில்லை. இதற்குக் கொஞ்சம் முன்னால் போனால், ஆதாரமாக நோபெல் குழுவைச் சேர்ந்த Prof. Per Ahlberg, Professor of Organic Chemistry, Göteborg University, Member of the Nobel Committee for Chemistry எழுதிய அறிவியல் கட்டுரை கிடைக்கிறது. வழமையான அறிவியல் கட்டுரைகளைப் போல எழுதியவர் பெயர், அவரது விபரங்கள், கட்டுரையில் இருக்கும் முக்கிய விடயங்களுக்கு ஆதாரங்கள், புரிந்துகொள்ள மேலதிக வாசிப்புக்குப் பரிந்துரைகள் என்று வெளியாகியிருக்கும் இந்தக் கட்டுரையை சல்லடை போட்டுத் தேடினாலும் எய்ட்ஸ், அல்ஸைமர், பார்க்கின்ஸன், மூட்டுவலி, புற்றுநோய் இன்னும் ஜல்லியடி சமாச்சாரங்கள் எதுவுமே இல்லை. இந்த மூலக்கட்டுரைக்கு அடுத்ததாக யாரோ பெயர் தெரியாத ஒருவர் எழுதிய ‘பாமரர்களுக்கான வடிவத்தில்’ ஜல்லியடிகள் துவங்கிவிட்டன. இவை கொஞ்சம் கொஞ்சமாக செய்தி நிறுவனங்கள், முதல்தர பத்திரிக்கைகள், உள்ளூர் வாசிப்புக்கானவை என்று இறங்கிவரும்பொழுது ஊதிப் பெருப்பிக்கப்பட்டு கிசுகிசு செய்திகளாகிவிடுகின்றன.

பணம் பெருத்த மருத்துவம், உயிரியல் துறைகளில் இந்த ஜல்லியடியின் அளவு மிக அதிகம். கணிதம் போன்ற துறைகளில் இவை மிகக் குறைவு. ஆனால் பொதுவில் இவை சாதாரணர்களுக்கு அறிவியல் மீது இருக்கும் நம்பிக்கையை நீர்த்துப் போகச் செய்கின்றன.