அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் ஒரு மாவட்டத்தில் இதுநாள்வரை சார்ல்ஸ் டார்வினின் பரிணாமக் கொள்கையை அறிவியல் இல்லை என்று சொல்லிவந்ததை நீதிபதி கண்டித்திருக்கிறார். காப்ஸ் கவுண்டி பள்ளிகளின் இதுநாள்வரை அறிவியல் புத்தகங்களில் “இந்தப் புத்தகத்தின் பரிணாமத்தைப் பற்றிய பாடங்கள் இருக்கின்றன, பரிணாமம் ஒரு கோட்பாடு மாத்திரமே, நிறுவப்பட்ட அறிவியல் உண்மையில்லை, எனவே இந்தப் பாடங்களைப் படிக்கும்பொழுது இதற்குப் புறம்பான விஷயங்களையும் மாணவர்கள் திறந்த மனதோடு அணுகவேண்டும்” என்று ஒட்டி வந்துள்ளார்கள். இதை எதிர்த்து ஒரு மாணவரின் தந்தை வழக்கு தொடுத்திருக்கிறார். இந்த வழக்கின் தீர்ப்பில் நீதிமன்றம் இதுபோன்று ஒட்டியிருப்பதை நீக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறது.

அபரிமிதமான சான்றுகள் இருந்தாலும் சில வைதீக கிறிஸ்துவர்களால் பரிணாமக் கொள்கையை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. மனிதனைப் போன்ற புத்திசாலி உயிரினம் ஒரு செல் உயிரிகளிலிருந்து பரிணாம வளர்ச்சி மூலம் படிப்படியாக உருவாகியிருக்கிறது என்பதை அவர்கள் மறுத்து வருகிறார்கள். மனிதனை கடவுள் நேரடியாகப் படைத்தார் என்றும் அப்படிப் படைப்பதற்கான திறமை அவருக்கு மாத்திரமே உண்டு என்றும் சொல்லிவருகிறார்கள். மனிதன் படைக்கப்படாதவன், பரிணாம வளர்ச்சியின் ஒரு நிலையே என்றால் அவன் கடவுளின் போதனை(களாகச் சொல்லப்படுபவை)களுக்குக் கட்டுப்பட்டாக வேண்டிய நிர்ப்பந்தம் இல்லாமல் போய்விடும் என்று அவர்கள் அச்சப்படுகிறார்கள். இதை எதிர்க்கவே, பரிணாமம் ஒரு அறிவியல் உண்மை கிடையாது; அது பெரும்பாலான அறிவியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கோட்பாடே என்று திரித்துக் கூறுகிறார்கள்.

இதில் எந்த வியப்புமில்லை, புவிமைய உலகம் (சூரியன் உட்பட பிற கிரகங்கள் பூமியை மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றன), பூமி தட்டையானது போன்ற விஷயங்கள் அறிவியல் பூர்வமாக மறுதலிக்கப்பட்ட நிலையிலும் பல சமயங்கள் இவற்றைப் போதித்து வந்தன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு பல தண்டனைகளை சாதாரண மனிதர்கள்மீதும் அறிவியலாளர்கள் மீதும் சுமத்தியிருக்கின்றன. பின்னர் சத்தம்போடாமல் இவற்றை ஒத்துக் கொண்டுவிட்டன.

எல்லாவிதங்களிலும் பரிணாமம் ஒரு முழுமையான அறிவியல் உண்மையே. தீர்க்கமான சோதனைகள், கண்டறிதல்கள் மூலம் நிறுவப்பட்டு, மறுதலித்தல்கள், நீட்டித்தல்கள் போன்றவற்றின்மூலம் நிரூபிக்கப்பட்டது பரிணாமம். அறிவியல் வழிமுறைகளில் பரிச்சயமுள்ள எவரும், நம்பிக்கையுள்ள எவரும் படைத்தல் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

* * *

இது ஒரு புறமிருக்க, இந்து சமயத்தின் புராணக் கதையாடல்களில் பரிணாமம் தொடர்பான ஒன்றின்மீது எனக்கு எப்பொழுதுமே ஒருவிதக் கவர்ச்சி இருந்து கொண்டிருக்கிறது.

மஹாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களை வரிசைப்படுத்திப் பார்த்தால்; மஸ்தய-கூர்ம-வராஹ-நரஸிம்ஹ-வாமன-பரசுராம-ராம-பலராம-கிருஷ்ண-கல்கி என்று வருகிறது. அதாவது;

  • மஸ்த்யம் – மீன் (நீர்வாழ் உயிரி)
  • கூர்மம் – ஆமை (நிர்நில உயிரி)
  • வராஹம் – பன்றி (நிலவாழ் உயிரி, நிலத்தில் பரிணாமத்தின் ஆரம்ப கட்டம்)
  • நரஸிம்ஹம் – மனித உடல், சிங்க முகம் (விலங்குக்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட கட்டம்)
  • வாமனம் – குள்ள மனிதன்
  • பரசுராமன் – மூர்க்க மனிதன்

இப்படியாக விரிவடைகிறது. கட்டாயமாக இவற்றுக்கு எந்தவித அறிவியல் தொடர்பும் கிடையாது என்பது நிச்சயம். ஆனால், பரிணாமத்தின் வளர்நிலைகளை மிகமிக அருகில் ஒத்திருப்பது இந்த தசாவதார வரிசை. இப்படியரு கதையைக் கட்டமைக்க நம்முடைய முன்னோர்களுக்கு பரிணாமத்தின்மீது ஓரளவு பரிச்சயம்/நம்பிக்கை இருந்திருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. (இது டார்வினுக்குப் பல நூறுவருடங்களுக்கு முந்தைய கதையாடல்). அறிவியல், நம்பிக்கை, கற்பனை, புனைவு, இவற்றைத் தனித்தனியே பிரித்து வைக்கத் தெரியாதவர்கள் நம்மவர்கள்.