அடுத்தபடியாக வேதியியல் நோபல் பரிசும் இப்பொழுது அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிரான்ஸைச் சேர்ந்த யூவே ஷாவன் ஈவ் ஷோவென் (Yuves Chauvin), கால்டெக் (கலிபோர்னியா)-வைச் சேர்ந்த ராபர்ட் க்ரப்ஸ் (Robert Grubbs) மற்றும் எம்.ஐ.டி-யைச் சேர்ந்த ரிச்சர்ட் ஷ்ராக் (Richard Schrock) மூவரும் பரிசைச் சமமாகப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

இவர்களுடைய கண்டுபிடிப்பு வேதிப்பொருள்கள் (குறிப்பாக கரிம வேதிப்பொருட்கள்) தயாரிப்பு முறையையே அடிப்படையில் மாற்றியமைத்திருக்கிறது. உங்களுக்குத் தெரிந்திருக்கும் உலகில் இருக்கும் வேதிப்பொருள்களில் பெரும்பாலானவை கரிமப் பொருட்கள். இதற்குக் காரணம் பிற அணுக்களுடன் பிணை சேர்ந்து மூலக்கூறுகளை உருவாக்குவதில் கார்பன் அணுவிற்கு இருக்கும் அற்புதத் திறன். அதிலும் மேலாக உயிர்ப் பொருட்களில் 90% க்கும் மேலானவை கார்பன் அடிப்படையிலானவைதான். கார்பன் நான்கு வெவ்வேறு அணுக்களுடன் இணைந்து மூலக்கூறுகளை உருவாக்கும். சில சமயங்களில் நான்கிற்கும் குறைவான அணுக்களுடன் ஒரு சில இடங்களில் இரட்டைப் பிணைவைக் கொண்டு மூலக்கூறுகள் உருவாகும். சில சமயம் ஒரு அணுவுடன் மூன்று பிணைவுகளும் சாத்தியமே.

இடமாற்ற வினை (Metathesis) என்ற கருத்துருவாக்கத்தைக் கண்டுபிடித்ததற்கு ஷோவெனுக்கும் உற்பத்தியைச் செயல்படுத்திக் காட்டியமைக்கு மற்ற இரண்டு அமெரிக்கர்களுக்கும் இந்த வருடத்திய நோபெல் பரிசு தரப்படுகிறது. இந்த முறையில் சில வினையூக்கிகளின் உதவியுடன் வேதிவினைக்கு முன் கார்பனின் இயற்கை பிணைவு அமைப்புகள் இடமாற்றி யமைக்கப்படுகின்றன. இதனால் இயல்பாக பிணைசேரும் வழிகளைக் கடந்து புதிய வகைகளிலும் பிணைகள் உருவாதல் சாத்தியமாகிறது. இப்படி மாற்றி அமைக்கப்பட்ட பிணைவுகள் முன்பு சாத்தியமல்லாத வேதிவினைகளையும் சாத்தியமாக்குகின்றன. ஒரு வகையில் இது சோடி சேர்ந்து நடனமாடும்பொழுது ஆட்டத்தின் பாதியில் தன்னுடைய இணையிலிருந்து விடுபட்டு வேறு ஒருவருடன் கைகோர்த்துக் கொள்வதைப் போலத்தான். விரிவாக பின்னர்.