வாத்தியார் அடிக்கடி பள்ளிக்கூடத்தில் சொல்லும் வாசகம் இது. ஆனால், எழுதி ஒட்டிக் கொள்ளச் சொல்லி இப்பொழுது ஒருவர் நெற்றியை வாடகைக்கு விட்டிருக்கிறார். ஈபே வழியாக தன்னுடைய நெற்றியில் விளம்பரங்களை எழுதிக்கொள்ள நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இதுவரை அதிகபட்சமாக ஒரு மாத்திற்கு $322 டாலர்கள் வாடகைக்குத் தர முன்வந்திருக்கிறார்களாம். பலான விளம்பரங்கள், வெறுப்பைத் தூண்டுபவை இவற்றைத்தவிர வேறு நேர்மையான எல்லா சமாச்சாரங்களுக்கும் என் நெற்றியில் இடமுண்டு என்கிறார்.

பிழைப்பதற்கு இப்படியரு எளிதான வழி. ம்ம்ம்.. இல்லை, இந்தப் பணத்தைத் தன் படிப்புக்குப் பயன்படுத்தப்போகிறாராம். நான் ஜப்பானில் இருந்தபொழுது வயதானவர்கள் (அறுபது, எழுபது வயதானவர்கள்) டோக்கியோ பெருநகர மையத்தில் இரவு நேரங்களில் முதுகிலும் மார்பிலும் இப்படி அட்டையைக் கட்டிக்கொண்டு விளம்பரங்கள் தாங்கி அலைவதைப் பார்த்திருக்கிறேன். (ஆமாம், பலான விளம்பரங்கள்தான்). ஜப்பானிய நண்பன் ஒருவன் இவர்கள் “மாமா” வேலை செய்பவர்கள் என்று சொன்னான். பார்க்கப் பாவமாக இருக்கும். இவர்களுக்கு வயதான காலத்தில் பிழைக்க வேறு வழி கிடையாது என்று சொல்வார்கள்.