பிரேம்-ரமேஷின் இந்தக் ‘கடவுளைக் கொல்பவர்கள’் கட்டுரையில் அறிவியலைக் குறித்த தவறான புரிதல்கள் விரவிக்கிடக்கின்றன. இது பிரேம்-ரமேஷிற்கு மாத்திரமான தவறான புரிதல் (அல்லது பொய்ப்பிரச்சாரம்) என்று சொல்ல வரவில்லை. நம்மிடையே அறிவியலைக் குறித்த அக்கறை அவ்வளவுதான் இருக்கிறது.

(கடவுளைக் கொல்பவர்கள் கட்டுரைப் பற்றி என் விமர்சனத்தின் முந்தைய பகுதி )

“இன்றைய அறிவியல் கடவுள் மறுப்பில் தொடங்கியது. உலகின், பிரபஞ்சத்தின் உள்ளார்ந்த விதிகளைக் கண்டறிய தெய்வீக விளக்கங்கள் பயன்படாது என்று கண்டவர்கள் மேற்குலக அறிவியலின் தொடக்கத்தைச் செய்தார்கள். வேதங்களும் சமய நூல்களும் மறைத்தவற்றைத் தேடி இவர்கள் வேறு திசையில் நடந்தார்கள். அரிஸ்டாட்டில் தொடங்கி ஐன்ஸ்டைன் வரை மறைக்கப்பட்ட தெய்வீக சந்தேகங்களைப் பிளந்து பார்க்கத் தொடங்கியவர்களே”

கட்டுரையின் நோக்கத்திற்காகத் திரித்துச் சொல்லப்படும் இவற்றில் சற்றும் உண்மை கிடையாது. இதைப் படிப்பவர்களுக்கு அரிஸ்ட்டாட்டிலும் ஐன்ஸ்டைனும் தங்கள் ஆராய்ச்சியின் துவங்கங்களாக சமய நூல்களைக் கொண்டார்கள் என்ற மாயபிம்பம் உருவாகும். ஏதோ ஆராய்ச்சி செய்யும்பொழுது அரிஸ்டாட்டிலின் இடக்கரத்தில் பைபிள் இருந்ததாகத் தோற்றமளிக்கும் வகையில் சொல்லப்பட்டிருக்கிறது. ஐன்ஸ்டைன் பிளந்து பார்த்தது தெய்வீக சந்தேகங்களையல்ல, அது அன்றளவின்பாற்பட்ட அறிவியல் புரிதல்களையே.

அறிவியலின் தொடக்கம் கடவுள் மறுப்பில் கிடையாது; அது கடவுளிலும் கிடையாது. அறிவியலின் ஒரே நோக்கம் மெய்காணல். இதற்கு ஆத்திகமும் நாத்திகமும் எந்த வகையிலும் துணைக்கு வராது. அறிவியலின் தொடக்கம் அறிவியல்தான். அவர்களை வழிநடத்துவது சந்தேகங்கள். சொல்லப்பட்ட எந்த ஒரு வாக்கியத்தையும் அவர்கள் சந்தேகக் கண்கொண்டு பார்க்கிறார்கள். மறுப்பு அவர்களின் பிறவிக்குணம். பூமி தட்டை என்று சொன்னால், முதலில் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அது தட்டையாக இல்லாமலிருக்க என்னென்ன காரணங்கள் இருக்கலாம் என்று பட்டியலிடுகிறார்கள். தாங்கள் பட்டியலிடும் அதே காரணங்களை அவர்கள் மறுதலித்து, சோதித்துப் பின்னர் தெளிவு பெற்றே ஏற்றுக்கொள்கிறார்கள். தொடர்ச்சியான இந்த நிலையில் பூமியின் உண்மை வடிவம் வெளிப்படுகிறது. அதையும் பல்வேறு காரணிகளின் மூலம் உறுதிப்படுத்திக்கொண்டு திரமான கோட்பாட்டை முன்மொழிகிறார்கள். இதுதான் அறிவியல் வழி. இதில் கடவுள் மறுப்பு எங்கிருந்து வருகிறது?

அறிவியலில் பயன்படுத்தப்படும் ‘மறுப்பு’ (refuting) என்ற ஒற்றைச் சொல் நாத்திகர்களின் பிரச்சாரத்திற்குத் துணைப்போகிறது. “அவ்வளோ பெரிய சயின்டிஸ்ட் அவரே சாமி கும்புடுறார்” என்று ஆத்திகர்கள் பரப்புவது எவ்வளவு தவறோ அதே அளவுக்கு “அறிவியல் நாத்திகத்தை உறுதி செய்கிறது” என்பதும் நாத்திகர்களின் சுயநலப் பொய்ப்பிரச்சாரம். அறிவியல் அதன் வழியில் உண்மைகளைக் கண்டறிந்துகொண்டே போகிறது. ஆத்திகர்களும் நாத்திகர்களும் அறிவியலை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள். இதில் ஒருவருக்கொருவர் சற்றும் குறைந்தவரல்லர்.

தொடர்ந்து அதே பத்தியில் கலிலியோவின், டார்வினின் கண்டுபிடிப்புகள் வைதீக நம்பிக்கைகளைக் கேள்விக்குறியாக்கியதைக் கூறும் பிரேம்-ரமேஷ் அறிவியலுடன் மறுமலர்ச்சி சிந்தனையாளர்களையும் கலைஞர்களையும் சேர்ப்பது வேடிக்கையாக இருக்கிறது. இவர்கள் எல்லோருமாக “..இறையிருப்பைக் கேள்விக்குள்ளாக்கியபடி மர்மங்களை உடைத்து வேறு மர்மங்களை உருவாக்கினார்கள்… கொல்லப்பட்ட, தண்டிக்கப்பட்ட தெய்வங்களை மீட்டு மீண்டும் தெய்வீகப் போர்க்களங்களைக் கட்டியெழுப்பினார்கள் இவர்கள்” என்று சொல்கிறார்கள் பிரேம்-ரமேஷ். இந்த இடத்தில் அறிவியலாளர்கள் ஏதோ மர்மங்களை உருவாக்குவதைப் போன்ற தவறான எண்ணம் விதைக்கப்படுகிறது. உண்மையில் அறிவியலாளர்கள் புனைகதையாளர்கள், ஓவியர்களைப்போலத் தங்களை இப்படியெல்லாம் பறைசாற்றிக் கொள்வதில்லை. அவர்களுக்கு மர்மம் எதுவும் கிடையாது சந்தேகங்கள்தான் இருக்கின்றன. அந்தச் சந்தேகங்களைக்கூட அவர்கள் உருவாக்க வேண்டியதில்லை; அவை அவர்களுக்குக் கிடைக்கும் விடைகளுடன் இலவச இணைப்புகளாக வருகின்றன.

உருவாக்குதல், அழித்தொழித்தல், மர்மங்கள் இவையெல்லாம் கலைஞனின் இறுமாந்த நிலையில் தோன்றும் அதீத உணர்வுகள். உண்மையான அறிவியலாளர்கள் இப்படியெல்லாம் ஒருபொழுதும் குன்றேறி நின்றுக் கூவுவதில்லை. உண்மையைக் கண்டறிந்துவிட்டதாகப், படைத்துவிட்டதாக அவர்கள் ஒருபோதும் மார்தட்டிக்கொள்வதில்லை. அவர்கள் உலகத்தில் ஒன்றுதான் நிரந்தரம் – அது சந்தேகம். அவ்வப்பொழுது வரும் தெளிவுகள் அவர்களின் நெடும்பயணத்தில் கிடைக்கும் சிறு நிழல்கள். அவர்கள் பயணம் தீராத நெடும்பயணம் என்ற தெளிவு அவர்களுக்கு எப்பொழுதும் உண்டு. ஒற்றை ஓவியத்தைத் தீற்றிவிட்டு, புனைவை எழுதிவிட்டு எய்தும் இறுமாப்பு அறிவியல் உலகிற்கு அந்நியமானது. புதுராகம் படைத்ததாலே நானும் இறைவனே – ரீதியான மார்தட்டல்களுக்கு அறிவியலில் இடமில்லை.

“சாத்தானின் பெருவலிமை வேர்களுக்குத் தேவைப்பட்டது. அதே சமயம் கடவுளும் சாத்தானும் தமது ரகசிய நிலவறையில் மது அருந்தியபடி சதுரங்கம் விளையாடிக் கொண்டிருப்பதை சாவித்துவாரத்தின் வழியே கண்டு மிரண்டுபோனார்கள். இவர்களின் அடுத்த முயற்சி புதிய தெய்வங்களை உருவாக்குவதில் முடிந்தது. ‘இறைமறுப்பு’ இவ்வகையாக காலனிய வரலாற்றைத் தொடங்கி வைத்ததுடன் புதிய வகை அழிவின் வலைப்பின்னலையும் உருவாக்கித் தந்தது. நவீன அறிவியலும், நவீன கொடுங்கோன்மையும் இவ்வாறாக இறைமறுப்பில் தொடங்கி மனித மறுப்பில் முடிந்தன”

இது அறிவியல் மீது சற்றும் உண்மையில்லாத குற்றச்சாட்டு. அறிவியலுக்கும் இறைமறுப்புக்கும் எள்ளளவும் தொடர்பில்லை என்பதைக் கண்டோம். நவீன அறிவியலை நவீன கொடுங்கோன்மையுடன் சேர்த்துவைப்பது மாபெரும் ஜல்லியடி. அறிவியல் குறித்த குறைந்தபட்ச தெளிவுள்ளவர்கள் யாரும் இப்படி ஒட்டுமொத்தக் குற்றச்சாட்டுகளை வைக்கமாட்டார்கள். நவீன, தொல் அறிவியல் எல்லாவற்றுக்குமாகச் சேர்த்து ஒரே ஒரு இலக்குதான் உண்டு; அது மெய்காணல். உண்மையை அறியும் முயற்சி தவிர வேறெந்த விஷயங்களும் அறிவியலாக மாட்டா. அறிவியலின் முடிபுகள் காலம் காலமாக அரசியல் வன்முறைக்கும், பொருளாதாரச் சுரண்டல்களுக்கும் பயன்பட்டு வந்தாலும், அறிவியலின் நோக்கங்கள் மீது எந்தக் குற்றங்களையும் சுமத்த முடியாது. இந்த நூற்றாண்டின் மாபெரும் அவலங்களான ஹிரோஷிமா, நகசாகியைத்தான் எல்லோரும் முதலாகச் சுட்டுவார்கள். இது ஆதிக்கப் போராட்டத்திற்கு அறிவியலின் உண்மைகளைப் பயன்படுத்திக் கொண்ட அரசியல் அவலம். இவர்களது அற்புதத் திறன் குண்டை வெடித்துவிட்டு அதை நவீன அறிவியலின் தலையில் சுமத்தும் பொய்பிரச்சாரத்தையும் வெட்கமின்றி மேற்கொள்வது. “ஐன்ஸ்டைனே வருந்தினார்” போன்ற வாதங்கள் இங்கே எடுபடாது. அணுவைப் பிளப்பதால் சக்தி உருவாதலைக் கண்டு ஐன்ஸ்டைன் வருந்தவில்லை.

தன்னுடைய கண்டுபிடிப்புகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைக் கண்டு எந்த அறிவியலாளனுக்கும் வருத்தம் தோன்றுவது இயற்கையே. அவர்களுக்கே உண்மையில்லை என்று தெரிந்தாலும் “ஏதோ ஒருவகையில் நானும் காரணமாகிவிட்டேனே” என்று சகமனிதனின் துக்கத்திற்கு வருந்துவதை இவர்கள் திறமையாகத் தங்கள் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதைச் சொல்லும்பொழுது ஐன்ஸ்டைனுக்கே தெரியும்; தானில்லாவிட்டால் இன்னொரு விஞ்ஞானி இதைக் கண்டறிந்திருக்க முடியும்.

இந்த இடத்தில் அறிவியலுக்கு எதிராக அரசியலும் பிற விளம்பரத்துறைகளும் எப்படித் திறமையாகச் செயல்படுகின்றன என்று பார்க்கலாம். அரியலூர் இரயில் விபத்திற்குத் தான் முழுக்காரணமில்லாவிட்டாலும் தன் பதவியைத் துறந்த லால்பஹதூர் சாஸ்திரியை உத்தமர் என்று போற்றுவார்கள் (மன்னிக்கவும் தற்கால அரசியலில் எனக்கு உதாரணங்கள் கிடைக்கவில்லை). இதை அரசியல் நேர்மை என்று பாராட்டுவார்கள். மறுபுறத்தில் அதேபோல் தான் காரணமில்லை என்று தெரிந்தும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் புலம்பினால் அதையே ஒப்புதல் வாக்குமூலமாக மாற்றி அறிவியலின் மீது கோடரியைப் பாய்ச்சுவார்கள். காலம் காலமாக அறிவியலுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமை இது. இதே போல இன்றைய சிக்கல்களான உலகளாவிய சூடேற்றம், மாசுப்படுத்தல், உயிர்ப்பன்முகக் குறைவு, நவீன நோய்கள், நவீன போர்நுட்பங்கள் இப்படி எல்லாவற்றுக்கும் பழியைத் திறமையாக அறிவியலின்மீது போட்டுவிட்டு, அரசியல்வாதிகளும் வர்த்தகர்களும் தாங்கள் செய்யும் ஏமாற்றல்களைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். உலகைக் கட்டிக் காப்பதாகக் கூறும் கலைஞர்களோ புரிதல் சற்றுமின்றி அவர்களது வர்த்தகத்திற்கு இலவச விளம்பரங்களைச் செய்வதைத் தங்கள் பிறவிக்கடனாகக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரது ஒட்டுமொத்த பிழைப்பிற்கு அறிவியலைப் பலிகொடுக்க யாரும் தயங்கமாட்டார்கள்.

{பின்குறிப்பு : சமூகத்தில் அறிவியலைக் குறித்த பிரக்ஞையின்மைக்கு அறிவியலாளர்களும் ஒருவகையில் முக்கிய காரணம். அறிவுத்தேட்டம் கொண்ட ஒவ்வொருவருக்கும் அறிவுப்பரவலாக்கம் முக்கியமானதாக இருக்க வேண்டும். தம்மாலான அளவு சிறிய அளவில் கூட கற்றவர்களில் பலர் பிற்ருக்கு எடுத்துச் சொல்வதில்லை. இவர்களுக்கு நேரமில்லை என்பது ஒரு முக்கிய கூப்பாடாக இருக்கிறது. ஐன்ஸ்டைன், ஃபெய்ன்மான், லினஸ் பாவ்லிங், ப்ரான்ஸிஸ் கிரிக், ரிச்சர்ட் டாக்கின்ஸ், மாக்ஸ் டெல்ப்ரூக் என்று பல அதியுன்னத விஞ்ஞானிகளுக்கெல்லாம் இதற்கு நேரமிருந்திருக்கிறது என்பதை இவர்கள் மறந்துபோகிறார்கள். வர்த்தகமும், அரசியலும், கேளிக்கையும் நிறைந்த இந்த உலகில் அறிவியலின் குரல் ஒடுக்கப்பட்டே ஒலிக்கிறது).