அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்தியாவின் முதல் தளையறு மென்கலன் (Free – Open Source Software) மையம் நிறுவப்படவிருக்கிறது. மத்திய அரசு இதற்கென கிட்டத்தட்ட ஐந்து கோடி ரூபாய்கள் அண்ணாவிற்கு மானியம் அளித்திருக்கிறது. நண்பர் சரவணன் அவருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கே.பி. சந்திரசேகர் மையத்தின் தலைவர் திரு கிருஷணமூர்த்திக்கும் இடையில் நடந்த தகவல் பரிமாற்றத்தின் சில பகுதிகளை அனுப்பியிருந்தார். இது குறித்த செய்தி தி ஹிந்து நாளிதழிலும் வெளியாகியிருக்கிறது.

தகவல் நுட்பத்தின் முழுப்பயனும் ஆங்கிலம் தெரியாத பெரும்பகுதி பொதுமக்களைச் சென்றடைய விழையும் நோக்குடன் இந்த மையம் நிறுவப்பட்டிருக்கிறது. இந்த மையத்தில் முறையாகவும் முறைசாராத வகையிலும் பலரும் தளையறு மென்கலன் குறித்த பயிற்சிகளைப் பெற்று அதைப் பரப்புவார்கள் என்று துணை வேந்தர் பாலகுருசாமி சொல்லியிருக்கிறார். அவருடைய கூற்றுப்படி இந்தியாவிலேயே முதன் முறையாக அரசு ரீதியாக தளையறு மென்கலனை அங்கீகரித்திருப்பது தமிழகம்தான். இது பெருமையளிக்கிறது.

இந்த மையத்தில் தொழில்முனைவுப் பயிற்சியும் அளிக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்தியாவில் மென்கலன் உற்பத்திக்கு இருக்கும் பெரிய சந்தையில் இன்னும் நிறைய பேர் சுய தொழில் தொடங்கி முன்னேற முடியும், எனவே மாணவர்களுக்கு அடிப்படைக் கல்வியுடன் தொழில்முனைவுப் பயிற்சியும் முக்கியமானது. உள்ளூர் சந்தைக்கு ஏற்ற மென்கலன்கள் இன்னும் இந்தியாவில் தயாரிக்கத் தொடங்கவேயில்லை. இதுவரை நாம் மேற்கத்தியர்களின் தேவைக்கே நிரல் எழுதிக் கொண்டிருக்கிறோம். தளையறு மென்கலன் பயிற்சி கட்டாயம் உள்ளூர் தேவைகள் பக்கம் இளைஞர்களைத் திருப்பும்.

என்னைப் பொருத்தவரை இந்த மையத்தின் முதல் நடவடிக்கை நாளதுவரை தமிழ் லினக்ஸ், தமிழா! ழ-கணினி போன்ற தன்னார்வக் குழுக்கள் செய்த பணிகளை ஒன்று திரட்டி, அவற்றின் பின்னணியை வரையறுத்துக் கொள்ள வேண்டும். மீண்டும் பூச்சியத்திலிருந்து துவக்கி தங்கள் சக்தியையும் பணத்தையும் விரையமாக்கக் கூடாது. சரவணன் மையத்தின் தலைவர் பேரா. கிருஷ்ணன் இது குறித்த ஆலோசனைகளை வரவேற்பதாகச் சொல்லியிருக்கிறார். அவருடன் தொடர்பு கொண்டு இதுபற்றி நான் சொல்லியிருக்கிறேன்.

கொசுறு: செய்தியளித்த துணைவேந்தர் “The main problem with open source software applications is that security is not built-in,” said Prof. Balagurusamy. “We have to develop tools for security.”

என்று சொல்லியிருக்கிறார். இது பொத்தாம் பொதுவான உண்மையற்ற கூற்று. திறந்த ஆணைமூலங்கள் இன்றைக்கு வெகுவாக மதிக்கப்படுகின்றது என்றால் அதற்கு முக்கிய காரணம் அவற்றின் உள்ளார்ந்த பாதுகாப்பு திறமே. நிரலிகளின் மூலங்கள் பொதுவில் திறந்து காட்டப்படுவதால் அவற்றில் இருக்கும் குறைகள் மிக எளிதில் கண்டுபிடிக்கப்பட்டு களையப்படுகின்றன. (எரிக் ரேமண்ட் இதை மில்லியன் கழுகுக் கண்களின் பார்வையில் எந்தப் பிழையும் தப்பமுடியாது என்று சொல்வார்). நாஸாவின் விண்கலன்களை ஏவுவதிலிருந்து அமேசான்.காமின் மின்வணிகத்தை இயக்குவதுவரை எல்லாமே திறந்த ஆணைமூல நிரலிகள்தான்.