இதன் முதல் பகுதி

சென்ற வாரம் நபோ இந்தியாவின் க்ளென்மார்க் நிறுவனத்துடனும், இதற்கு முன்னால் சீனாவின் ஏஷியாஃபார்ம் நிறுவனத்துடனும் ஒப்பந்தங்களைச் செய்திருக்கிறது. இதன் மூலம் உள்ளூர் சந்தைகளின் வகையறிந்த கூட்டாளிகள்கிடைக்கிறார்கள். மக்கள் தொகை அதிகமுள்ள இந்த நாடுகளின் பெரிய சந்தையை இலக்கு வைப்பதன்மூலம் அதிக அளவில் உற்பத்தி செய்து, விலையை உள்ளூர் சந்தைகளுக்கு ஒப்ப குறைவாக வைத்து விரைவாக விற்கமுடியும் என்ற நம்பிக்கை இவர்களுக்கு இருக்கிறது.

இந்த முறை ஒரு சிலருக்குக் கவலை அளிக்கலாம். அதாவது அமெரிக்காவின் தேசிய மருந்துக் கழகம் போன்ற உறுதியான தரக்கட்டுப்பாட்டைத் தவிர்க்கவே நேபோ இந்தியாவிற்கு சீனாவிற்கும் நேரடியாக வருகிறது என்ற தோற்றமளிக்கலாம். அல்லது அமெரிக்காவின் தரக்கட்டுப்பாடைத் தாக்குபிடிக்க முடியாமல் தரம் குறைந்த (அல்லது வெளியில் தெரியாத பக்கவிளைவுகளைக் கொண்ட) மருந்தொன்றை இந்தியர்களின் தலையில் கட்டுகிறது என்ற பயம் எழலாம். இதில் நியாயமும் இருக்கிறது.

உண்மையில் நபோ அமெரிக்காவின் எந்தத் தரக்கட்டுப்பாட்டுச் சோதனையிலும் தோற்கவில்லை. பணமில்லாத காரணத்தினாலேயே பரவலான களப்பரிசோதனையை அமெரிக்காவில் இவர்களால் மேற்கொள்ள முடியவில்லை. சொல்லப்போனால் இப்பொழுது இவர்கள் அமெரிக்காவின் டிரைன் பார்மசூடிகல்ஸ் என்ற நிறுவனத்துடனும் இணைந்து Irritable Bowel Syndrome என்ற வியாதிக்கு மாத்திரமாக இந்த மருந்தை முன்வைக்கிறார்கள். ஆனால் வியாபார உத்தியில் சீனா, இந்தியாவிற்குப் பிறகுதான் அமெரிக்க சந்தை இலக்கு என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த மருந்தின் அடிப்படை மூலிகை சில நூறு வருடங்களாக அமேசான் குடியினரால் தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒருவகையில் இதுவும் நீட்டிக்கப்பட்ட களப்பரிசோதனையைப் போலத்தான்.

ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில் மருந்துகள் இல்லாமல் தினந்தோறும் பலர் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களைப் பொருத்தவரை நாளைக்கு வரும் பக்கவிளைவை விட இன்றைய உயிரிழப்பைத் தடுத்து நிறுத்த வேண்டியது முக்கியம். சொல்லப்போனால் அபாயமான பக்கவிளைவுகளைக் கொண்டவை என்று தீர்மானிக்கப்பட்ட பல மருந்துகள் பணக்கார நாடுகளில் கூட உயிர்க்காப்பு நிலையில் பயன்படுத்தப்படுகின்றன. ஒருவகையில் வயிற்றுப்போக்கிற்கான இந்த மருந்தையும் அப்படித்தான் பார்க்க வேண்டும்.

இந்த வியாபார உத்தி வெற்றி பெற்றால் மருந்துச் சந்தையே மாற்றியமைக்கப்படும் என்பது உறுதி. பல முன்னணி நிறுவனங்கள்கூட இதே முறையைக் கைக்கொண்டு வளர்ந்துவரும் நாடுகளை முதலில் அடைய முயற்சிக்கும். அந்த நிலையில் விலைச்சரிவு ஏற்பட்டு மருந்துகள் எல்லாரையும் சென்றடையச் சாத்தியமிருக்கிறது. எனவே நபோவைத் தவிர பிற நிறுவனங்களும் இந்த முயற்சியை ஆவலுடன் அவதானிக்கின்றன. இந்த முறை வெற்றியடைந்தால் கழித்துக் கட்டப்பட்ட பழைய மருந்துகள் என்றில்லாமல் புத்தம்புதிய கண்டுபிடிப்புகள்கூட ஏழைகளைச் சென்றடையும். இதன் மூலம் எயிட்ஸ் போன்ற நோய்களுக்கான மருந்துகள்கூட விரைவில் சந்தைப்படுத்தப்படலாம் என்று கருதுகிறார்கள்.

பொதுவில் அமெரிக்கர்களுக்கான தரக்கட்டுப்பாடுகள் இந்தியர்களுக்குத் தேவையில்லை. இதுபோன்ற இடங்களில் கண்மூடித்தனமாக அதே தரத்தை வலியுறுத்தாமல் உள்ளூர் நோய் நிலவரம், தேவைகள், வாய்ப்புகள், பொருளாதாரம் இவை எல்லாவற்றையும் கைக்கொண்டு சம்பந்தப்பட்ட நாடுகள் தம்மளவில் முடிவெடுத்து சோதனைகளையும் வியாபாரத்தையும் அனுமதிக்க வேண்டும். ஒருவகையில் நிறுவனங்களுக்கும் இது முக்கியமானது என்பதை நம்ப வேண்டும். அதாவது இன்றைக்கு ஆப்பிரிக்காவில் ஒரு தவறான மருந்தைக் கொடுத்து அதன் மூலம் ஆயிரக்கணக்கானவர்களைச் சாகடித்தால் நாளைக்கே மெர்க்கின் பன்னாட்டுச் சந்தை சரியும் என்பதை அவர்கள் அறிவார்கள். இப்படி உள்ளார்ந்த தரக்கட்டுப்பாடு இருப்பதை மறுக்க முடியாது.

மருந்து மோசமானால் உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு இலஞ்சம் கொடுத்து வெளியில் தெரியாமல் முழுவதுமாக மறைக்க சாத்தியங்கள் இருக்கின்றன. ஆனால் மருந்து வியாபாரம் கறாரான போட்டியைக் கொண்டது. எதிரி நிறுவனங்கள் அதே அளவிற்க்கு இலஞ்சம் கொடுத்து உண்மையை அம்பலப்படுத்த முயல்வார்கள். மருந்து என்பதே ஏழைகளுக்குக் கைக்கெட்டாத நிலையில் இருக்கும்பொழுது இந்த முறையையும் கொஞ்சம் அனுமதித்து நாளைக்குச் சாக இருப்பவனுக்கு இன்னும் கொஞ்சம் நாள் உயிர்கொடுக்கலாமே என்ற எண்ணம்தான் மிஞ்சுகிறது. இந்த் ஒரே காரண்த்திற்காக நபோவின் சோதனை வெற்றியடைய வேண்டும் என்று விழைகிறேன்.