சமீபத்தில் கலிஃபோர்னியா இர்வைன் பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை மருத்துவ, லேசர், கணினி உலகில் சமீபத்தில் நடந்த முக்கிய முன்னேற்றங்களில் ஒன்று. இர்வைன், தெற்குக் கலிஃபோர்னியா, குவீன்ஸ்லாந்து (ஆஸ்திரேலியா) என்று மூன்று வேறு இடங்களில் மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் ஒன்றிணைந்து ஒரே சமயத்தில் இணையத்தின் வழியே லேசர் அறுவை ஒன்றை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார்கள். தெற்குக் கலிஃபோர்னியாவில் இருந்த லேசர் நுண்ணோக்கியின் கட்டுப்பாடுகளை இணையத்தில் இணைக்கப்பட்ட கணினி வழியே இயக்கி செல்களில் கிட்டத்தட்ட் ஒரு மைக்ரான் விட்டமே உள்ள பல துளைகளைக் கொண்ட வடிவத்தை அறுவை செய்திருக்கிறார்கள். இதற்கான லேசர் நுட்பம் இர்வைன் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.

இதைத் தவிர ஒளிப்பொறி ( Optical Trap) என்ற அதிநுட்பத்தினால் இயக்கத்தில் இருக்கும் விந்து ஒன்றை இணையத்தின் மூலம் தொலைவிலிருந்து பிடித்திருக்கிறார்கள். இது முதலில் சொன்ன செல்லில் துளையிடுதலைவிடச் சிக்கலானது. ஒளிப்பொறி நுட்பம் கடந்த பத்து வருடங்களில் லேசரில் நடந்த மிகவும் முக்கியமான முன்னேற்றங்களுள் ஒன்று. ஒளி மின்காந்த அலைகளால் ஆனது என்பது நமக்குத் தெரியும். ஒளிக்கதிரில் இருக்கும் மின்புலமோ, காந்தப் புலமோ மிகவும் திறம் குறைந்தவை. ஆனால் லேசர் கதிர்களில் இவற்றின் திறம் அதிகம். எனவே லேசரில் இருக்கும் மின்புலத்தைப் பயன்படுத்தி தனி அணுக்களைப் பிடிக்க முடியும், நகர்த்த முடியும். (கிட்டத்தட்ட ஒரு தாளின் மேற்புறத்தில் இருக்கும் குண்டூசிகளை தாளின் அடியில் காந்தத்தை வைத்து நகர்த்துவதைப் போன்றதுதான் இது). இந்த முறையைப் பயன்படுத்தி பல அடிப்படைச் சோதனைகளைச் செய்திருக்கிறார்கள். உதாரணமாக ஒரு புரோட்டின் சுருளின் விசை மாறிலியை (Force Constant) அளப்பது, விந்துக்களின் இயக்கத்தைத் தடுத்து நிறுத்தத் தேவையான சக்தியை அளப்பது (இதன் மூலம் விந்துக்களின் இயங்கு திறனை அளக்க முடியும்) எனப் பல அற்புதமான சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. எனக்குத் தெரிந்த ஆய்வகம் ஒன்றில் டி.என்.ஏ-வின் இரண்டு இழைகளையும் பிரித்து லேசர் இடுக்கி முலம் பிரித்தெடுக்கும் ஆய்வுகள் நடக்கின்றன.

ஒளிப்பொறி ஆய்வுகள் மிகச் சிக்கலானவை. நேரடியாக ஆய்வகத்தில் நடத்துவதே கடினமானது. இந்த ஆய்வைத் தொலைவிலிருந்து இணையத்தின் வழியே நடத்தியிருப்பது மாபெரும் சாதனைதான். இப்படித் தொலைவிலிருந்து நடத்துவதற்கு முன்னேறிய தகவல் நுட்பமும் பெரிதும் உதவுகிறது. கவனிக்கவும், அசைந்து கொண்டிருக்கும் விந்தின் நுண்ணோக்கிப் படம் இணையத்தின் வழியே சென்று அதை அங்கே இருக்கும் விஞ்ஞானி பார்த்து அதை எப்படிப் பிடிக்க வேண்டும் என்ற கட்டளையை அவருடைய கணினி வழியே அனுப்பி அது மறுபுறம் வந்து செயல்படுத்தப்படுவதுவரை மிக விரைவாக நடந்து முடியவேண்டும். இல்லாவிட்டால் அசைவிலிருக்கும் விந்தின் இருப்பிடம் மாறிப்போகும். இந்த ஆய்வில் பொறியியல், கணினி, தகவல் நுட்பம், லேசர், உயிரியல்/மருத்துவம் என்று பல துறைகளின் உச்சங்கள் ஒன்றாக இணைந்து செயல்படுகின்றன.

இந்த முறை வெற்றி பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. இதன் மூலம் இணைந்து பங்காற்றும் வெவ்வேறு சோதனைக் குழுக்கள் நீண்ட தூரம் பயணம் செய்யாமல் இணையத்தின் வழியே ஊடாடி ஒரே சமயத்தில் ஒரே சோதனையை இயைந்து நடத்த முடியும். இந்த நுட்பம் முதிர்ச்சியடைந்தால் மருத்துவ வசதியில்லாத நாடுகளில் தொலைவிலிருந்து நிபுணர்களின் உதவியுடன் அறுவை சிகிச்சைகள் சாத்தியமாகும்.