இளையராஜா இசையமைத்த திருவாசகத்திற்கு அவர் குரல் பொருந்தியிருக்கிறதா என்பது தீவிரமாக விவாதிக்கப்பட்டுவரும் இன்னொரு விஷயம். நான் முதல் இரண்டு தடவைகள் கேட்டுவிட்டு அவர் குரலை இந்த இசைத்தொகுப்பின் குறைபாடாகச் சொல்லியிருந்தேன். இப்பொழுது இன்னும் பலதடவைகள் கேட்டும் அதே எண்ணம்தான் இருக்கிறது. கட்டாயமாக இந்தப் பாடல்களில் பல இடங்களில் இளையராஜாவின் குரல் ஒத்துழைக்கவில்லை. ஒரு சிலரைப்போல நான் இளையராஜாவின் குரலை வெறுப்பவனல்லன்; ஆராதிப்பவன். சில பாடல்களை இளையராஜாவைத் தவிர வேறு யாராலும் அப்படிப் பாடியிருக்க முடியாது என்பது எ.தா.அ. இதற்கு உச்சகட்ட உதாரணமாக நான் அவதாரம் படத்தின் பாடல்களைச் சொல்லுவேன். சந்திரரும் சூரியரும், அரிதாரத்தப் பூசிக்கொள்ள, தென்றல்வந்து பாடல்கள் ஒவ்வொன்றிலும் இளையராஜா சிகரங்களை எட்டியிருப்பார். அவதாரத்தில் எல்லா பாடல்களையும் இளையராஜாவே பாடியிருப்பதில் எனக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. இதேபோல நான் அவருடை ஆரம்பகால சாமக்கோழி கூவுதம்மா, என்ன பாட்டு பாட, போன்று பல பாடல்களை உதாரணம் காட்டமுடியும்.

ஆனால், இளையராஜாவின் படைப்பு அவருக்குத்தான் தெரியும், அவரைத் தவிர வேறு யாரலும் முடியாது, போன்ற முன்முடிபுகள் இல்லாமல் திறந்த மனதுடன் இந்தப் பாடல்களைக் கேட்டால் குரல் ஏமாற்றமாகத்தான் இருக்கிறது. அருள் சொன்ன

ராஜாவின் குரல் பற்றி. முதலில் இந்தப்பாடல்களையெல்லாம் பாட தமிழை தமிழாக உச்சரிக்க வேண்டும். சமஸ்கிருதம் போலவோ, தெலுங்கு போலவோ உச்சரித்தால் நான் கேட்கப்போவதில்லை. இளையராஜா போதும். அப்புறம் பாவம் வேண்டும். இது இரண்டிலும் மற்றவர்களுக்கு ராஜா எவ்வளவோ மேல். யாராவது ஓதுவார்கள் இன்னும் மிச்சம் இருந்தால் அவர்களும் சரியாக இருக்கலாம். மஹாராஜபுரம் சந்தானம் இருந்தால் அவர் வேண்டுமானால் பொருந்தலாம். மற்றவர்கள் மேல் எனக்கு நம்பிக்கையில்லை.

என்ற கருத்துடன் நான் முழுவதும் வேறுபடுகிறேன். தமிழைச் சரியாக உச்சரிப்பது ஒன்றுதான் இந்த இசைமுயற்சியின் குரலுக்குத் தேவையான ஒன்று (மற்றதெல்லாம் அப்புறம்தான்) என்று சொல்வது வியப்பாக இருக்கிறது. எப்பொழுது இது “மேற்கத்திய இசை அடிப்படையிலான திருவாசக முயற்சி ” என்று வரையறுக்கப்பட்டதோ அப்பொழுதே இதில் இசை முதல் முக்கியத்துவம் என்றானது. உண்மையில் இது மேற்கத்திய இசையைத் திருவாசகத்திற்குக் கொண்டுவந்து நம் மக்களுக்கு மேற்கத்திய இசையை அறிமுகப்படுத்தும் உத்தியாகத்தான் நான் அறிகிறேன். மேற்கத்திய இசையின் வீச்சைத் திருவாசகத்தின் ஆழத்திற்குப் பொருத்தி நம் மக்களுக்குத் தருவது. இதன் மறுதலையாக திருவாசகத்தின் ஆழத்தை அவர்களுக்குப் பரிச்சயமான இசைவடிவத்தில் உலகிற்கு எடுத்துச் செல்வதென்றால் கட்டாயமாக இந்த முயற்சி தமிழில் மேற்கொள்ளப்பட்டிருக்காது. மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கிலத்திலோ, ஜெர்மனிலோதான் செய்யப்பட்டிருக்கும். எனவே இசைதான் இங்கே முக்கியம், எனவே பிசிறில்லாத (இதுவரை யாரும் இளையராஜாவின் குரல் இங்கே அப்பழுக்கற்றதாக இருக்கிறது என்று சொல்லவில்லை, எல்லோரும் அதன் எல்லைகளை ஒத்துக்கொள்கிறார்கள்) குரலுக்கு நல்ல தமிழைச் சொல்லிக்கொடுத்து அழைத்து வந்திருக்கலாம்.

இளையராஜாவைத் தவிர வேறு யாருக்கும் தமிழ் வராது என்று சொல்வது அதீதம். தமிழைத் துல்லியமாக உச்சரிக்கும் பல நல்ல பாடகர்கள் இருக்கிறார்கள். இன்னும் தமிழைத் துல்லியமாக உச்சரிக்காத (அது வணிகக் கட்டுப்பாடாக அமைந்த்போனதால்) சங்கர் மகாதேவன் போன்ற செவ்வியல் இசைப்ப்யிற்சி கொண்ட பாடகர்களைக்கூட கொஞ்சம் “பெண்டு நிமிர்த்தி” பாடவைக்க முடியும். என்னைப் பொருத்தவரை குரல் வளம்தான் முதல் தகுதி, பாடலுக்குத் தேவையான உச்சரிப்பை மாத்திரம் தீவிரப் பயிற்சியுடன் நல்ல பாடகருக்குப் புகட்ட முடியும். மாறாக மேலெழும்பாத குரலை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது.

அப்புறம் ஸ்கேல், பிட்ச் எல்லாம் மேற்கத்திய சங்கீதத்துக்கு ரொம்ப அவசியம்தான். ஆனால் நம் கர்நாடக சங்கீதக்காரர்களுக்கு ஆர்க்கஸ்ற்றாவில் பாட தேவையான வாய்ஸ் கல்ச்சர் இருக்கிறதா? அவர்கள் நாட்டில் போய் தப்பான ஸ்கேலில் பாடி பாமரனாக காட்சியளிப்பதற்கு இளையராஜா முட்டாளா என்ன? மற்றவர்கள் பாடினால் பெரிதாக வித்தியாசம் இருக்காது என்றே அவர் நினைத்திருக்கலாம்.

அருள் – சில இடங்களில் இளையராஜா அபஸ்வரத்தில்தான் பாடியிருக்கிறார். உம்பர்கட்கரசே பாடலைப் பொறுமையாகக் கேட்டுப் பாருங்கள். இதில்தான் நிறைய அபஸ்வரங்கள் வருகின்றன.

கட்டாயமாக இளையராஜா முட்டாள் இல்லை. ஆனால் தீர்ந்த முன்முடிபுடன் நான்தான் பாடப் போகிறேன் என்று வைத்துக் கொண்டு, அவ்வப்பொழுது ட்யூன் போடும்பொழுது கூடவே பாடிப்பார்த்துக் கொண்டு தன் குரல் மேலெழும்பாத சமயங்களில் ஸ்கேலைத் தாழ்த்தியிருப்பார் என்றுதான் தோன்றுகிறது. இல்லையென்றால் கட்டாயமாக பல இடங்களில் உச்சத்திற்குச் செல்ல வேண்டிய பொழுது மத்யஸ்தாயியில் குரலும் அத்துடன் ஸ்கேல் பொருந்திவரும் இசையும் இருந்திருக்காது. மாறாக, இதில் இசைக்கு முக்கியவத்துவம் கொடுத்து தன்னுடைய ஸ்கோரை அவர் எழுதிவிட்டு, இந்த இடத்தில் நமக்குச் சரிவ்ராது என்று இன்னொருவரைப் பிடித்துப் போட்டிருந்தால் பாடல்கள் இன்னும் பிரமாதமாக வந்திருக்கும் என்பது எ.தா.அ.

முழுப்பாடலையும் (குறிப்பாகப் ‘பொல்லா வினையேன்’) தானே பாடாமல் இன்னும் ஒன்றிரண்டு பாடகர்களுடன் இணைந்து பாடியிருந்தால்கூட இன்னும் கொஞ்சம் உயர்வாக இருக்கும் என்பது என் நம்பிக்கை. ‘உம்பர்கட்கரசே’ வேறு யாராவது பாடியிருக்க வேண்டும்.

* * *

முக்கியமான விஷயம். இது துவக்கம்தான். இதே திருவாசகப் பாடல்களை வருங்காலத்தில் அவர் பிற சிம்பொனி ஆர்கெஸ்ட்ராக்களுடன் பாட வேண்டும். (அல்லது பிற சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ராக்கள் இதை இசைக்க வேண்டும்). அண்டானின் த்வோரக் (Antonin Dvorak) -ன் Rusalka வை ப்ராஹ் பில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ரா விஸ்தாரமாக இசைத்துக் கேட்டிருக்கிறேன். அதே ருஸால்காவை நியூயார்க் பில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ரா இசைத்துக் கேட்டிருக்கிறேன். இரண்டுக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் இருக்கும். வெவ்வேறு கண்டக்ட்ர்கள் அதன் பல பரிமாணங்களை வெளிக் கொணருவார்கள். அதே போல இதுபோன்ற விஸ்தாரமான இசை முயற்சிகள் பல வடிவங்களில் மறு உருவாக்கம் செய்யப்பட வேண்டும். அந்த சமயத்தில் இதுபோன்ற நம்முடைய “இப்படி இருந்திருக்கலாம், அவர் பாடியிருக்கலாம்” போன்றவற்றுக்கு விடை கிடைக்கும். அதுவரை “இது ஒன்றுதான் குரல் இதுதான் இந்த இசைத் தொகுப்பின் ஜீவன்” என்று சொல்பவர்களும் “குரல் சில நேரங்களில் தகராறு செய்கிறது” என்று சொல்பவர்களும் ரத்தம் சிந்தாமல் சமர்த்தாக அட்டைக்கத்தி சண்டை போட்டுக் கொண்டிருக்கலாம்.

* * *

இளையராஜாவின் இந்த இசைத் தொகுப்பை விமர்சனக் கண்ணோட்டத்தில் அணுகுவது மிகவும் கஷ்டம். ஏனென்றால் இது முழுக்க முழுக்க மேற்கத்திய செவ்வியல் இசை அல்ல. இது மேற்கத்திய செவ்வியல், கர்நாடக சங்கீதம், திராவிட நாட்டார் இசை கூடவே நம்பிக்கையுள்ள ஒருவரின் ஆத்மார்த்தமான பக்தி முயற்சி, போன்றவற்றின் கலவை. இது வடிவங்களைக் கடந்த முயற்சி. இதை இப்பொழுதைக்கு உணர்வுபூர்வமாக அணுகி “நல்லா இருக்கு” “இல்லை” என்றுதான் மொன்னையாகக் கருத்துச் சொல்ல முடியும்.

இசைப்பண்டிதர்களைப் பற்றி பலரும் சடாரென போகிற போக்கில் வேடிக்கையாகச் சொல்லிவிட்டுப் போகலாம். ஆனால் அந்த இசைப் பண்டிதர்கள் இதை அக்குவேறு ஆணிவேறாக அலச வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன். அப்பொழுதுதான் இது நமக்கேயான இந்த நூற்றாண்டின் புதிய இசைவடிவமாக பலமான அஸ்திவாரத்துடன் முன்னெடுத்துச் செல்லமுடியும். இல்லையென்றால் இதுபோன்ற மிகச் சிக்கலான ஆழ்ந்த இசை முயற்சிகள் நேர்மையாக எதிர்கொள்ளப்படாமல் ‘காற்றடித்து தென்னம்பழம்’ விழும் ஒற்றை நிகழ்வாக மறக்கப்பட்டுப் போய்விடும். எனவே இதைப் பலரும் பல விதமான கண்ணோட்டத்துடன் அனுக வேண்டும் என்பது என் ஆசை.

(தொடர்ந்து வரும்)