நேற்று கார்த்திக்கின் கேள்விக்கு விடை சொல்வதாக நிறுத்திவிட்டுப் போனேன்.

ஆனாலும் ஒரே ஒரு கேள்விக்கு ஓரினர்கள் பதில் சொல்ல முடியாது. “பிறவியிலிருந்தே இப்படி உணர்ந்தீர்களா” என்கிற கேள்விதான் அது. ஏனெனில் இவ்வாறு பிறவியிலேயே அவ்வாறு இருந்திருக்க சாத்தியமில்லை என்பது அறிவியற்பூர்வமாய் ஏற்றுக் கொள்ளக்கூடிய உண்மையாம். அப்படியே இருந்தாலும் அது சற்றும் பொருட்படுத்தக் கூடிய விகிதத்தில் இருக்காது.

இந்தக் கேள்வியின் அடிப்படையே தவறு. இது தற்பால் நாட்டத்திற்கு உயிரியல் ரீதியில் அடிப்படை கிடையாது என்பதை அறுதியிட்டுத் தீர்மானமாக மொழிகிறது. (பிறப்பிலேயே இருக்காது என்பதில் இன்னும் உயிரியல் நிச்சயமாக விடை சொல்லமுடியவில்லை). பரிணாமத்தின் அடிப்படையில் தற்பால் நாட்டத்தை எளிதாக விளக்க முற்படுகிறேன்.

இதற்கு முதல் கட்டமாக எதிர்பாலின் மீதான நாட்டத்தைப் புரிந்துகொள்ள, ஏன், எப்படி, எவ்வளவு என்ற மூன்று கேள்விகளுக்கு விடைகாண முயற்சிக்கலாம். (ரிச்சர்ட் டாக்கின்ஸ்ஸின் The Selfish Gene, River out of Eden, Arndt von Hippel-ன் Human Evolutionary Biology Mark Ridley-ன் Evolution போன்ற புத்தகங்களைப் படித்திருப்பவர்களுக்கு என் கருத்துக்களின் அடிப்படை எளிதில் பிடிபடும்)

ஏன்? எதிர்பாலின்மீது ஏன் நாட்டம் வருகிறது? விடை மிகவும் எளிதானது, இது நம் மரபின் அடிப்படை. எல்லா உயிரினங்களுக்கும் ஜீன்கள் என்னும் மரபுக்கூறுகள்தான் ஆதாரம். ஒரு உயிரினம், ஜனித்து, வாழ்ந்து, இனப்பெருக்கம் செய்து, மடிந்துபோவது பத்திரமாக தன்னுடைய மரபுக்கூறைத் தொடர்ச்சியாக அடுத்த தலைமுறைக்குக் கடத்தத்தான். அந்த அடிப்படையில் இந்த வாழ்வின் அனைத்து கூறுகளையுமே விளங்கிக் கொள்ள முடியும். மனிதனில் இப்படி அடுத்த தலைமுறைக்கு மரபணுவைக் கடத்த இருபால் புணர்ச்சியே வழியாக இருக்கிறது (சில விலங்குகளிலும் தாவரங்களிலும் கலவியற்ற இனப்பெருக்கம் சாத்தியம் என்பதை நாம் அறிவோம்). கலவியின் பொழுது பெண்ணிடமிருந்தும் ஆணிடமிருந்தும் மரபணுக்கள் ஒன்று கலந்து அதன் மூலம் ஜனிக்கும் உயிருக்குத் தன்னிடம் இருக்கும் மரபணுவை அளித்து மரபுத் தொடர்ச்சியை நிச்சயம் செய்வதே ‘ஏன்’ என்ற கேள்விக்கு விடை.

எப்படி? எப்படியெல்லாம் எதிர்பால்மீதான் கவர்ச்சி வருகிறது? நம் இலக்கியங்களில் இருக்கும் ஈர்க்கிடை நுழையாத கொங்கைகள், அரசிலை அல்குல், மகரயாழின் குடமென இருக்கும் பிட்டங்களிலும் தொடங்கி, மெல்லிடை, நீளக் கூந்தல் என பெண்ணில் காணும் அழகு ஒவ்வொன்றுக்கும் அடிப்படை – அந்தப் பெண்ணுக்குத் தான் அளிக்கவிருக்கும் மரபுக்கூறைப் பத்திரமாக எடுத்துச் செல்லும் தகுதி (உடற்கூறியல் ரீதியாக) இருக்கிறதா என்ற நோட்டமே. அதாவது அழகு என்று ஆணின் கண்ணுக்குத் தெரிவதெல்லாம் அவன் விந்தினில் இருக்கும் குரோமோசோம்கள் சொல்லிக் கொடுப்பவைதான். பருத்த கொங்கைகள் – பிறக்கும் குழந்தைக்கு வஞ்சனையில்லாமல் பாலூட்ட, விரியாத அல்குலும், மெலிந்த இடையும் சிரமமின்றி பிள்ளையைப் பெற்றெடுக்க. நீள்விரி கூந்தலும் கயலன்ன மைவிழியும் பொதுவில் ஆரோக்கியத்தைக் காட்டுகிறன (குறிப்பாக புரோட்டீன்கள் குறைவின்மையை). இப்படி அடிப்படையில் மரபைச் சுமந்து செல்லும் திறமை வெளியில் பெண்ணழகாக மிளிர்கிறது.

அடுத்தமுறை ரோட்டில் பிகரைப் பார்க்கும் பொழுது முப்பத்து மூன்றாவது குரோமோசோமை நினைத்துக்கொண்டு வாய்விட்டுச் சிரித்தாலோ, எழுதிய நிரலில் பூச்சிபிடித்துக் கொடுக்கும் சக நிரலினியைப் பார்த்து கண்மலரும்பொழுது நாணம் வந்தாலோ நான் பொறுப்பல்லன்.

அதேபோல தின்தோளும் திரண்ட மார்பும் பெண்ணின் சுயநலமிக்க மரபணுவின் விழைவுகள்தான். பிறக்கும் குழந்தைக்கும் குழந்தையைச் சுமக்கப்போகும் தனக்கும் ஆபத்துகளினின்று காப்பாற்றும் உடல்வலிமை இந்த ஆணுக்கு இருக்கிறதா என்ற தேட்டமே அவன் அழகின் வரையறைகளாகின்றன. தனக்கு உணவிடுவானா? தன்னைக் காப்பாற்றுவானா – அவன்தான் என் மனதிற்குப் பிடித்த அழகன்.

(பெண்ணியவாதிகள் கொஞ்சம் பொறுங்கள், மாறிவரும் இந்த வரையறைகளைப்பற்றி பின்னர் சொல்லுகிறேன்)

இதனுடைய வேற்றுவடிவம்தான் “தோள்ல தூக்கிப்போட்டு வளர்த்த” தங்கைக்கோர் கடிதம் டி.ராஜேந்தர் “கண் கலங்காம பாத்துக் கொண்ட” பாசமலர் சிவாஜி போன்றவர்கள். இன்றைக்கும் ராக்கி கட்டி தங்கைக்கு (தன் மரபில் பாதி) ‘பாதுகாப்பாக’ இருக்க முயலும் சேட்டுப் பசங்கள் சௌகார்பேட்டைக்கருகில் ஜர்தா பீடா போட்டுக்கொண்டு சைட் அடித்து அதே மரபுக்கு மாற்றுவழி வழிதேடிக்கொண்டிருப்பதைப் பார்க்க முடியும்.

எவ்வளவு? இந்த இடத்தில்தான் மரபணுக்கள் அற்புதமாக சமூக விழுமியங்களைச் செதுக்குவதைப் பார்க்க முடிகிறது. எளிதான ஏரணத்தின்படி கணக்கு வழக்கில்லாமல் புணர்ந்து தள்ளும் ஆணும், அதேபோல கணக்கற்றவர்களுடன் பிணைந்து தன் மரபை முன்னெடுத்துச் செல்லும் பெண்ணும்தான் உயிரியல்ரீதியாக மிகவும் வெற்றிகரமான விலங்குகளாக இருக்க வேண்டும். ஆனால், ஒரு தாரம், அளவோடு பெற்றெடுத்தல் என்பவைதான் உண்மையில் மரபணுக்கள் தங்களை வெற்றிகரமாகத் தக்கவைத்துக் கொள்ள கண்ட தீர்வுகள். ஏன்? அதிகம் பெற்றெடுத்தால் சாக்கடும் அதிகரிக்கும். அளவோடு பெற்றுவிட்டு, பின் பெற்றதை பேணி வளர்த்தெடுத்து அது அடுத்த தலைமுறைக்கும் தொடர்வதைப் பார்ப்பதில்தான் மரபணுக்களின் உண்மையான வெற்றி இருக்கிறது (இவளுக்குச் சாகறதுக்குள்ள ஒரு கல்யாணத்தப் பண்ணிவைக்கனும், போறதுக்குள்ள ஒரு பேரனை மடில எடுத்துக் கொஞ்சலேன்னா இந்தக் கட்ட வேகாது). எனவே உடனடி அடுத்த தலைமுறையைத் தாண்டி மரபின் தொடர்ச்சியை நிச்சயிக்க அளவோடு பெறுதல் முக்கியம். அதேபோல, பல இணைகளுடன் புணர்வதைக் காட்டிலும் ஒற்றைத் துணையே இந்த விளையாடில் இறுதிவரை வெற்றிபெற எளிதான வழி. தன்னுடைய கவனமும், சக்தியும் விரயமாகமல் எல்லாவற்றையும் ஒரே இடத்தில் குவித்து அதை வெற்றிகரமாக வளர்த்தெடுப்பதில்தான் மரபணுக்கள் ஆர்வமாக இருக்கின்றன.

கவனிக்கவும், இப்படி ஒன்றிரண்டு பெறுவது கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் நடைமுறைக்கு வந்த உத்தி, இதற்குமுன் டஜன் கணக்கில் பெற்றெடுத்துக் காய்ச்சலிலும் கழிவிலும் சாகக் கொடுத்துப் புலம்பிக்கொண்டுதான் இருந்தார்கள். நவீன அறிவியல் இதைப் பெரிதும் மாற்றியிருக்கிறது. சிசுச்சாக்காடு, பிணி இவற்றைக் குறைப்பதிலும், வாழ்நாளை நீட்டிப்பதிலும் நவீன மருத்துவத்தின் வெற்றிகளின் அடிப்படையில் ஒன்றிரண்டே பெற்று அவற்றை நல்லபடியாக வளர்ப்பது சமீபத்தில் தன் விளையாட்டு உத்தியை மாற்றிக்கொண்ட மரபணுக்களின் புத்திசாலித்தனம்.

இந்த ஒருதாரம், கற்பு, சிறு குடும்பம் இப்படித் தனி மனிதனைக் கடந்த சமூக விழுமியங்களையும் மனிதனுக்குள்ளே இருக்கும் 23 சோடி குரோமோசோம்கள் வரையறுப்பவைதான். இதையே கொஞ்சம் நீட்டித்தால் பொய்யாமை, கள்ளுண்ணாமை, பொச்சாவாமை, சுற்றம் தழால் என்று எல்லா வள்ளுவ சமாச்சாரங்களையும் பத்திரமாக அடுத்த தலைமுறைக்குத் தாம் தொடர வழி என்ன என்று மரபனுக்கள் கண்டவை என்று எளிதில் தெரிந்துகொள்ளலாம்.

* * *

இப்படி எல்லாமே மரபுச் சமாச்சாரம்தான் என்று ஒட்டுமொத்தமாகச் சொல்லியாகிவிட்டது, இனி இவற்றின் மாற்றங்களையும் மரபுக்கூறுகளைக் கொண்டு நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்திற்கு வந்துவிட்டேன். இப்பொழுது பெண்ணியவாதிகளைச் சமாதானப்படுத்த கொஞ்சம் திண் தோளர்களை நையப் புடைக்கலாம். மாறிவரும் விழுமியங்கள், சமூக நடைமுறைகளுக்கு ஏற்ப இப்பொழுது தனக்கான உண்டியையும் உறையுள், பாதுகாப்பையும் பெண்கள் தாமாகவே பெற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டார்கள். இந்த நிலையில் காப்பாற்ற வேண்டும், சோறிட வேண்டும் போன்ற கட்டாயங்களைக் கடந்துவிட்ட நிலைகளில் பெண்களின் ‘பார்வையிலும்’ மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இல்லாவிட்டால் என்னைப் போன்று வாங்கிய பம்பரங்களையெல்லாம் பிறருக்கு ஆக்கர் அடிக்கக் கொடுத்துவிட்டு, முட்டியால் கோலிதள்ளிக் காலம் கழித்த சோப்ளாங்கிகளுக்குக் கன்னி கழிய கட்டாயம் விடிவு கிடையாது. (மறுபுறத்தில் வெற்றி குத்துப்படாத பம்பரத்தில் இல்லை, குவாண்டம் மெக்கானிக்ஸ்க்கு மாறிவிட்டது என்று மரபும் விழித்துக் கொள்வதைப் பாருங்கள்).

விளையாட்டின் விதிகளைப் பெண்கள் மாற்றிக் கொண்ட அளவுக்கு ஆண்கள் ஏன் மாற்றவில்லை? விடை ரொம்ப எளிது; மாற்றிக்கொள்ள அவர்கள் கையில் சரக்கில்லை. நீர்த்துப் போகாமல் சுக்கிலத்தை நிறைவடையச் செய்வதில் பெண்ணின் பங்கு இன்னும் அப்படியேதான் இருக்கிறது. எனவே, ஆண்கள் இன்னும்

பெண்ணாகி வந்தொரு மாயப்பி சாசும் பிடித்திட்டென்னைக்
கண்னால் வெருட்டி முலையால் மயங்கிக் கடிதடத்துப்
புண்ணாங் குழியிடைத் தள்ளி என்போதப் பொருள்பறிக்க

என்று பட்டினத்தார்போல அவ்வப்பொழுது புலம்பினாலும், அடுத்த நொடி குரோமோசோம்கள் “மாதர் இளமுலைகள் வாழ்க” என்று செயங்கொண்டார் ஸ்டைலில் விசிலடித்துப் பீறிடுகின்றன.

உயிர்த்திருத்தலுக்கான தேவைகள் மாறுபட, மாறுபட அழகின் வரையறைகளும் மாறுவதைப் பார்க்கமுடியும். ஈர்க்கிடை நுழையாக கொங்களுக்க்கான தேவை போய், “உங்கள் பட்டுப்பாப்பா விரும்பிடுமே இந்த பாரக்ஸை” என்று புஷ்டியெல்லாம் புட்டியிலேயே கிடைக்கத் தொடங்கியவுடன் தானே ஈர்க்காக மாறிப்போன சிம்ரனைக் கண்டு குரோமோசோம்கள் சிலிர்த்துக் கொள்கின்றன. அதேபோல ‘விண்ணோடும் முகிலோடும்’ என்று முழங்கிக் கொண்டிருந்த ஆண்மகன் இப்பொழுது “ஹேய் அஸைந்தாடும் காற்றுக்கும் அழகான நாற்றுக்கும் காதலா, காதலா” அதிகம் அலட்டிக்கொள்ளாமல் ஈனஸ்வரத்தில் முனகியே பெண்களைக் கவரமுடிகிறது.

டஜன் கணக்கில் பிள்ளைகளைப் பெறுவதை நிறுத்தி “இரண்டுக்குப் பிறகு இப்பொழுது வேண்டாம்; மூன்றுக்குப் பிறகு வேண்டவே வேண்டாம்” என்ற அறுபதுகளைக் கடந்து, “நாமிருவர் நமக்கிருவர்” எண்பதுகளைத் தொடர்ந்து “ஒரு குடும்பம் ஒரு குழந்தை” தொன்னூறுகள் போய், “நாமே குழந்தை; நமக்கேன் குழந்தை” என்று சொல்லும் காலம் வந்து கொண்டிருக்கிறது. இப்படிப் பிள்ளை பெறுவதற்காகப் புணர வேண்டிய தேவை குறையக் குறைய, புணரும் வழக்கத்தை அடியோடு மறந்துவிடாமல் இருக்க குரோமோசோம்கள் செய்த உபாயம் – கலவியை இன்பமாக மாற்றி அந்த விளையாட்டை வழக்கொழியாமல் காப்பாற்றியது. அதாவது மரபுக்கடத்தலுக்கான அத்யாவசியமான கலவியின் தேவை குறைந்துவிட்டது, ஆனால் அது அடியோடு நின்று போய்விடாமல் இருக்கப் புணர்தலில் மாத்திரம் இன்பமில்லை, புணர்தல் நிமித்தத்திலும் இன்பம் என்று ‘அந்த சமாச்சாரத்தை’விட்டு கொஞ்சம் வெளியே வரவைத்தது.

இப்படிப் புணர்தல் நிமித்தத்தின் பங்கு அதிகரிக்க அதிகரிக்க, அந்தத் துளை மாத்திரம் எதுக்கு எந்தத் துளையும் இன்பத்தின் வடிகாலே என்று நீட்டிக்கப்பட்டது. சமூக மாற்றங்களுக்கேற்ப குழந்தை பெறுவது (நம் சமூகத்தில் திருமணம் என்று கொள்ளவும்) தள்ளிப்போக, கொஞ்சம் நாள் பொறு தலைவா-க்கள் தன் கையே தனக்குதவி என்று வஞ்சிக் கொடிவரும்வரை காலத்தைக் கழிக்க வேண்டியிருக்கிறது. இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக ‘ஆதி இன்பத்தின்’ தேவை மாறிப்போனவுடன் பாதி இன்பங்கள் இயற்கையாகிப்போயின. கொஞ்சம் கொஞ்சமாக இது எங்கே செல்கிறது என்று தெரிகிறதா?

தற்பால் நாட்டம். தன் நேரடி மரபு இல்லாவிட்டாலும் தன்னைச் சார்ந்த மரபு விருத்தியாகிக் கொண்டே போகிறது என்ற தீர்மானமான நம்பிக்கையின் வெளிப்பாடே ஓரினப் புணர்ச்சி. மனிதர்களை விடுத்த பிற உயிரிகளும் இந்த விளையாட்டில் ஈடுபடுவது விஞ்ஞானிகளால் நிச்சயிக்கப்பட்டுள்ளது. (கட்டாயம், இவைகள் எதுவுமே காமசூத்ரா புத்தகங்களை படிக்கவில்லை, குறை சொல்லப்பட்டும் நவீன தொலைக்காட்சிகளைப் பார்ப்பதில்லை, எல்லாவற்றுக்கும் மேலாக இவற்றுக்கு peer pressure கிடையாது). இருபால் கலவி மரபு நீட்டிப்பின் அடிப்படைத் தேவை என்று இருந்தாலும், ஒரு சமூகத்தைச் சேர்ந்த எல்லோரும் இதில் ஈடுபடுவதைவிட சிலர் ‘விட்டுக்கொடுப்பது’ பொதுவில் அந்தச் சமூகத்தின் மரபுத் தொகுதிக்கு நல்லது. இதன் மறுவெளிப்பாட்டைத் தேனிக்களிடம் காணமுடியும், ஒற்றை இராணித் தேனிக்கு ஓராயிரம் சேவகர்கள் இருப்பது மரபுப் போட்டியைக் குறைக்கவே. எனவே, தற்பால் நாட்டம் கொண்டவர்கள் இயற்கைக்கு மாறானவர்கள் என்ற கூற்றில் எந்தவிதமான நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை. உண்மையில் உங்கள் விளையாட்டில் தலையிடாமல் “என் வழி தனி வழி” என்று போகும் அவர்களுக்கு நீங்கள் கடமைப்பட்டவர்கள்.

இனி தற்பால் நாட்டம் பிறவியிலேயே வருவதா அல்லது பிறரைப் பார்த்து கற்றுக் கொள்வதா? இந்தக் கேள்விக்கு நவீன அறிவியல் இன்னும் தீர்மானமாக விடைகாணவில்லை. ஆனால் எப்படியிருந்தாலும் இது இயற்கைக்கு மாறானதல்ல என்பதில் அறிவியல் உறுதியாக இருக்கிறது. மாறிவரும் சமூக, பொருளாதாரக் காரணிகள், கூடவே மாறிவரும் மரபுப் போட்டியின் விதிகள் இவை எல்லாமாக தற்பால் நாட்டத்தை இயற்கையிலேயே சிலரிடம் விதைக்கின்றன. செயற்கை முறை சினையூட்டல், சோதனைக் குழாய் கருத்தரித்தல், இதையெல்லாம் இயற்கையாக ஒத்துக்கொண்டுவிட்டோம் (சாத்தான் என்று பெயர் வாங்கிய சோதனைக் குழாய் டாக்டரம்மா, ‘புள்ள இல்லாம இருந்த எம்பொன்னுக்குப் பிச்சைபோட்ட மகராசி’ என்று தொழப்படும் மாற்றத்தை யோசித்துப் பார்த்தீர்களா? இதையெல்லாம் மட்டும் வெள்ளகாரனப் பாத்து, தொலைக்காட்சியைப் பாத்து என்று ஏன் பொங்கியெழுவதில்லை). எனவே, இதை உடல்ரீதியான குறைபாடாகவோ, சமூகநோயாகவோ தற்பால் நாட்டத்தைச் சித்தரிப்பது எந்தவிதத்திலும் நியாயமானதில்லை.

தற்பால் நாட்டம் கொண்டவர்களை யார் தீவிரமாக எதிர்க்கிறார்கள் என்று பார்த்தால் புரியும். வைதிக மதவாதிகள் – கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் குருமார்கள், பஜ்ரங்க்தள் வகையறா தீவிரவாதிகள். இதே குழுக்கள் எல்லோரும் அதேபோல் கருக்கலைப்பையும் தீவிரமாக எதிர்ப்பார்கள். ஏன், கலையும் கருக்களாலும், தற்பால் புணர்ச்சியாலும் இனப்பெருக்கம் குறைந்துபோய் தங்கள் மதத்தின் பரப்பு குறைந்துவிடுமோ என்ற அச்சம். ஆனால் உண்மையில் மாறிவரும் விளையாட்டின் விதிகளைப் புரிந்து கொள்ளாமல் இவர்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.