ஒன்றரை இலட்சம் தமிழ் மக்களுடன் இந்தியாவிற்கு வெளியே அதிகம் தமிழர்கள் வசிக்கும் மாநகரமாக மாறியிருப்பது டொராண்டோ. இவ்வளவு குறுகிய காலத்தில் புலம்பெயர்ந்து குறிப்பிடத்தக்க அளவிற்கான சமூகத்தை தமிழர்கள் ஒரே நகரில் உருவாக்கிய வரலாறு நானறிந்தவரை முன்னெப்பொழுதும் கிடையாது. ஒரு புறத்தில் புலம்பெயர்ந்தவர்களின் கஷ்டங்கள், இழப்புகள் போன்றவை இருந்தாலும் வந்தவர்களை வரவேற்றுக் குடியமர்த்துவதில் கனேடிய அரசாங்கமும் பல சிக்கல்களை எதிர்கொள்கிறது. நல்ல நோக்கங்களுக்குக்காக அகதிகளைக் குடிமர்த்தினாலும் இஸ்லாமிய, சீக்கிய (காலிஸ்தான்), தமிழ்த் தீவிரவாதிகளுக்கான தலைநகராக மாறியிருக்கிறது கனடா என்று பிற நாடுகளிலிருந்து, குறிப்பாக அமெரிக்காவிலிருந்து குற்றச்சாட்டு இருந்து வருகிறது (உண்மையில் செப்டம்பர் 11ல் பங்குபெற்ற தீவிரவாதிகள் யாரும் கனடாவழி போனவர்கள் அல்லர். அவர்கள் அமெரிக்காவின் உள்நாட்டுத் தயாரிப்புகள்).

ட்சூனாமிக்குப் பிறகு இலங்கையில் நடக்கும் உள்நாட்டுப் போர், தமிழர்கள் நிலை குறித்து கனடாவில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. பல ஊடகங்களிலும் அவ்வப்பொழுது இலங்கை பற்றிய செய்திகளும் தகவல்களும் ஒலிபரப்பாகின்றன. கனடாவின் அரசு மானியம் பெற்று இயங்கும் கனேடிய ஒலிபரப்புக் கழகத்தின் டொராண்டோ ரேடியோ 2 வானொலியில் சில வாரங்களுக்கு முன்பு இலங்கை குறித்த ஒரு தொடர் நிகழ்ச்சி ஒலிபரப்பானது. யாருடைய உண்மை (Whose Truth) என்று தலைப்பிடப்பட்ட இந்தத் தொடரில் ஆறு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாயின. ட்சூனாமிக்குப் பிறகு இலங்கையில் நடக்கும் உள்நாட்டுப் போர், தமிழர்கள் நிலை குறித்து கனடாவில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. பல ஊடகங்களிலும் அவ்வப்பொழுது இலங்கை பற்றிய செய்திகளும் தகவல்களும் ஒலிபரப்பாகின்றன. இந்த “யாருடைய உண்மை” தொடர் பல கோணங்களில் இலங்கைப் பிரச்சனையை அணுக முயற்சிக்கிறது. (பல நாட்களுக்கு முன்பு எழுதவேண்டும் என்று நினைத்து மறந்துபோன விஷயம்)

இவற்றை நேரடியாகத் தரவிறக்கிக் கேட்க எம்.பி3 வடிவில் இணைப்புகளைக் கொடுத்திருக்கிறேன்.

1. சிபிசி செய்தியாளர் பியா சட்டோபாத்தியாய் இலங்கையில், குறிப்பாக தமிழர்களின் பகுதிகளில் நேரடியாகக் கண்டவற்றைப் பற்றி விவரிக்கிறார்.

எம்.பி. 3

2. டொராண்டோவில் வசிக்கும் கிறிஸ்துவப் பாதிரியார் ப்ரான்ஸிஸ் சேவியர் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர். தன்னையே புலிகளில் ஒருவராக அடையாளம் காணுகிறார். இவர் இலங்கைக்குப் புலிகளால் மாத்திரமே தீர்வு ஏற்பட முடியும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

எம்.பி. 3

3. டொராண்டோவின் மெக்கின்ஸி இன்ஸ்டிட்யூட் தனியார் நிதியுதவி பெற்ற வர்த்தக நோக்கற்ற ஆய்வு நிறுவனம். இது அரசியல் நிலையின்மை மற்றும் திட்டமிட்ட வன்முறைகள் குறித்த விஷயங்களில் ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறது. இதற்கு உலக அளவில் சார்பற்ற நேர்மையான, திறமையான அரசியல் ஆய்வு நிறுவனம் என்ற பெயர் இருக்கிறது. இதன் ஜான் தாம்ஸன் கனடாவில் ஈழத்தமிழர்கள் வன்முறைகளில் ஈடுபடுவது, நிதி திரட்டுவது, திரட்டப்பட்ட நிதியை ஆயுதங்களுக்குப் பயன்படுத்துவது போன்ற விஷயங்களைப் பற்றிய கருத்துக்களைத் தெரிவிக்கிறார்.

எம்.பி. 3

4. டொராண்டோவில் வசிக்கும் தமிழ் பத்திரிக்கையாளர் டேவிட் ஜெயராஜ் புலிகள் தங்கள் வழிமுறைகள் நடவடிக்கைகள் குறித்த ஆத்மபரிசோதனையில் இறங்க வேண்டும் என்று கூறுகிறார். பத்திரிக்கையாளராக உண்மையை எழுத முற்பட்ட தன்மேல் தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் குறித்தும் கூறுகிறார்..

எம்.பி. 3

5. எல்லாவற்றையும் விட மிகவும் முக்கியமானதாக எனக்குத் தோன்றியது சமூக சேவகி “லக்ஷ்மி”யின் அனுபவங்கள். (இவர் பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஒருபுறத்தில் இலங்கை இராணுவம், மறுபுறத்தில் போராளிகள் இரண்டுக்கும் இடையில் அடிமட்டத்திலிருந்து பெண்களுக்கு எப்படி விடிவு கிடைக்கலாம் என்பதைப் பற்றி தெளிவான கருத்துக்களைச் சொல்கிறார்.

எம்.பி. 3

6. விடுதலைப் புலிகள் சிறுவர்களை இராணுவத்தில் பயன்படுத்துவது குறித்து லாயிட் ஆக்ஸ்வொர்த்தியின் எண்ணங்கள். ஆக்ஸ்வொர்த்தி முந்தைய ழான் க்ரெட்ச்யென் லிபரல் அரசின் வெளிவிவகார அமைச்சராக இருந்தவர். இவருடைய பெயர் சமாதானத்திற்கான நோபெல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. சிறுவர்களை வன்முறைகளில் ஈடுபடுத்துவது குறித்து புலிகளின் மீது கடுமையான விமர்சனங்களை மொழிகிறார்.

எம்.பி. 3

ஒலிக்கோப்புகள் ஒவ்வொன்றும் பத்து நிமிடங்களுக்குக் குறைவானவை. இறக்குவதில் பிரச்சினை இருந்தால் சொல்லுங்கள் கோப்புகளைப் பிளந்து இரண்டாக/மூன்றாக இடுகிறேன்.

நிலைசார்பற்று பிரச்சனையின் பல்வேறு கோணங்களையும் விவரிக்கிறது இந்தத் தொடர்.