நான் கடந்த கிறிஸ்துமஸ் விடுமுறையின்போது துவக்கி, காலவரையறையின்றி ஒத்திப்போடப்பட்ட ஒரு திட்டத்தின் தொடர்பான விஷயங்களை பத்ரியும், ரவி ஸ்ரீனிவாஸ்-ம் தொட்டுப் பேசியிருக்கிறார்கள். அதிசயமான ஒற்றுமை என்னவென்றால் சென்ற ஞாயிற்றுக்கிழமையன்று இதைக் குறித்தும் தொடர்புள்ள இன்னொரு திட்டம் குறித்தும் இங்கே எழுத்தாளர் அ.முத்துலிங்கத்துடன் நீண்ட நேரம் கதைத்துக் கொண்டிருந்தேன். இது சமீபத்தில் இங்கே பரபரப்ப்பாக நடந்த இயல்விருது விழா, பத்னாப ஐயருடனான கூட்டங்கள், புத்தகக் கண்காட்சி போன்றவற்றால் புத்துயிர் பெற்ற நேரத்தில் பத்ரி இதைப் பற்றி இன்றைக்கு எழுதியிருக்கிறார்.

நான் பல நாட்களுக்கு முன்பு தமிழ்ப் புத்தகங்களுக்கான ஒரு விக்கியைத் துவக்கினேன். (அதன் முகவரி http://abbe.optics.utoronto.ca/tamilbooks/ ).

இதில் புத்தகங்கள், பதிப்பகங்கள், ஆசிரியர்கள், போன்ற விபரங்களைத் தொகுக்க உத்தேசம். உதாரணமாக, ஒரு புத்தகத்தின் தகவல் மையத்தில்

புத்தகத்தின் பெயர் : ஏழாம் உலகம்
ஆசிரியர் : ஜெயமோகன்
பதிப்பகம் : யுனைட்டெட் ரைட்டர்ஸ்
பக்கங்கள் : 304
முதல் பதிப்பு : டிசம்பர் 2003
தற்பொழுதைய பதிப்பு : முதல் பதிப்பு, 2003
விற்பனை நிலவரம் : விற்பனையிலுள்ளது
கிடைக்குமிடம் : காமதேனு

மேலதிக தகவல்கள்

போன்ற விபரங்கள் சேர்க்கலாம். இன்னும் மேலட்டை ஓவியம் யார், வடிவமைத்தது, அச்சகம், காகித விபரம், ISBN (மிகச் சில புத்தகங்களில்தான் இதைக் கண்டிருக்கிறேன், உதாரணமாக திலீப் குமாரின் கடவு). சொல்லத் தேவையில்லை, இதில் ஆசிரியர், பதிப்பகம் எல்லாம் இணைப்புகள். பதிப்பகத்தின் பக்கத்தில் முகவரி, வேறு பதிப்புகள் (உதாரணமாக தமிழினி, யுனைட்டெர் ரைட்டர்ஸ் இரண்டும் ஒரே நிறுவத்தின் இரு பிரிவுகள், கால்ச்சுவடு பதிப்பித்தலுடன் கூட சஞ்சிகையையும் நடத்துகிறது. கிழக்கு பதிப்பகம் காமதேனு என்ற இணையப் புத்தகக் கடையையும் நடத்துகிறது,… இப்படியாக மேலதிகத் தகவல்கள்).

ஆசிரியர் பக்கத்தில் சிறு குறிப்பு, புத்தகப் பட்டியல்கள் (இணைப்புகள்), விருதுகள், வேறு செயல்பாடுகள் (சுந்தரராமசாமி காலச்சுவடு சஞ்சிகையின் முன்னாள் ஆசிரியர்,…). ஆசிரியர் குறித்த பல்கலைக்கழ்க் ஆய்வுக் கட்டுரைகளையும் சேர்க்க வேண்டும்.

வரும் நாட்களில் புத்தகத்தின் மேலட்டை, ஆசிரியரின் படங்கள், விமர்சனங்கள் (அல்லது விமர்சனத்திற்கான சுட்டிகள்) போன்றவற்றையும் சேர்க்கலாம்.

* * *

இதற்கு முதல் உதாரணங்களாக நான் யுனைட்டெட் ரைட்டர்ஸ் பதிப்பகம், சுந்தரராமசாமி (பசுவய்யா), வெங்கட்ரமணன், ஏழாம் உலகம் போன்ற பிணைக்கப்பட்ட விபரங்களைப் போட்டிருக்கிறேன். இதெல்லாம் மூன்று நான்கு மாதங்களுக்கு முன்னால் துவங்கியவை. முதலில் என்னுடைய பல்கலைக்கழக வழங்கியில் போட்டு சோதித்துக்கொண்டிருக்கிறேன். இதை அப்படியே பெயர்த்தெடுத்த் வேறு தளத்திற்கும் மாற்ற முடியும்.

* * *

இந்த விபரங்களை எந்த வணிக நிறுவனங்களையும் சாராமல் தனியாக தன்னார்வ முயற்சியாகச் செய்வது நல்லது என்று தோன்றுகிறது. அப்படியிருந்தால் பல பதிப்பகங்களும் தாமாக முன்வந்து விபரங்களைச் சேர்க்கும். இன்னும் ஆர்வமுள்ளவர்கள் தங்கள் கைகளில் இருக்கும் புத்தகங்கள் பற்றிய தகவல்களைச் சேர்ப்பது நல்லது. உதாரணமாக அ.மார்க்ஸ் எழுதிய பெரியார் குறித்த புத்தகத்தைப் பலரும் படிக்க வேண்டும் என்று விரும்பும் ஒருவர் அந்தப் புத்தகத்திற்கான பக்கங்களைத் துவக்கலாம்.

இந்தத் தளம் விக்கி முறையில் இருப்பது நல்லது என்று தோன்றுகிறது. நம்மில் பலருக்கும் விக்கியில் பரிச்சயம் இருக்கிறது. அதிக தொழில்நுட்ப அறிவில்லாமல் கூட இதற்குப் பங்களிப்பது எளிது.

இந்த முயற்சியைப் பற்றிய உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். இப்படியாக வருங்காலத்தில் திரைப்படங்கள், நாடகங்கள், ஓவியங்கள் போன்றவ்ற்றுக்கும் தமிழில் தகவல் தளங்களைத் துவக்குவது நல்லது.